நவீன தமிழக வரலாற்றில் பண்டிதர் அயோத்திதாசர் மிக அரிதான ஆளுமை. தமிழ் இலக்கியம், வரலாறு, சமூகம், சமயம், சித்த மருத்துவம், தமிழ் பவுத்தம், அரசியல், இதழியல், பண்பாடு என பல தளங்களிலும் தீர்க்கமாகப் பணியாற்றியவர். அவரது வாழ்வும் செயல்பாடுகளும் மட்டுமல்லாமல் வரலாற்றில் அவர் விஸ்வரூபம் எடுத்து நின்ற விதமும் ஆச்சரியம் தரக்கூடியது.
சரியாக 175 ஆண்டுகளுக்கு முன்னால் 1845-ல் பிறந்த அயோத்திதாசர் 1914 மே 5-ம் தேதி மறைந்துவிடுகிறார். அவரது 69 ஆண்டுகள் கால வாழ்க்கையில் கடைசி 7 ஆண்டுகள் குறித்த தகவல்கள்தான் வரலாற்றில் கிடைக்கின்றன. அதுவும் அவர் நடத்திய 'தமிழன்' இதழின் எழுத்துகள் வாயிலாக மட்டுமே. அதற்கு முந்தைய 62 ஆண்டுகால வாழ்க்கை பற்றிய தகவல்கள் பெரிதாகக் கிடைக்காத போதும், 7 ஆண்டுகால செயல்பாடுகள் தந்த அதிர்வே நூற்றாண்டைக் கடந்தும் நீடிக்கிறது.
வரலாற்றின் வழிநெடுகிலும் அயோத்திதாசர் பல்வேறு ஆளுமைகளால் பெருமையோடு நினைவுகூரப் பட்டிருக்கிறார். குறிப்பாக, அவரைப் பின்பற்றியவர்கள், ஓர் அரிய பொக்கிஷத்தைப் போல தம் ஞானகுருவை காலம் முழுவதும் சுமந்து வந்திருக்கின்றனர். சமூக நீதி அரசியலில் பாபாசாகேப் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் இன்னபிற தலைவர்களுக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார் அயோத்திதாசர்.
இவை அனைத்தையும் கண்டு வியந்த முனைவர் ஞான.அலாய்சியஸ் 'தமிழன்' இதழைச் சேகரித்து நீண்ட காலம் ஆய்வு செய்தார். 'அயோத்திதாசர் சிந்தனைகள்' என்ற பெயரில் 3 தொகுதிகளை சுமார் 2000 ஆயிரம் பக்கங்களுக்குத் தொகுத்திருக்கிறார். ஆங்கிலத்தில் 'Iyothee Thassar & Tamil Buddist Movement, Dalit - Subaltern Self - Identifications Iyothee Thassar & Tamizhan' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். “இன்னும் அயோத்திதாசரை பற்றி ஆயிரம் பக்கங்களுக்கு தொகுக்கத் தரவுகள் இருக்கின்றன” என்கிறார் மற்றொரு ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
எழுத்துகள் வாயிலாகவும், அவரைப் பின்பற்றியவர்களின் வார்த்தைகள் வாயிலாகவும் அயோத்திதாசரைப் பார்க்கும் போது ஒரு தீர்க்கத்தரிசியைப் போலத் தோன்றுகிறார். அவரது வரலாற்றுப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும், பவுத்த செயல்பாடும் மாபெரும் தத்துவ ஞானிகளை நினைவுபடுத்துகிறது. அவர் மரணத்தை எதிர்கொண்ட விதம், சாதாரண மனிதனால் இப்படி எதிர்கொள்ள முடியுமா என வியப்பை ஏற்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்துவைப் போல தம் இறப்பு நெருங்குவதை அயோத்திதாசர் உணர்ந்துகொண்டார். சென்னை ராயப்பேட்டையில் 1914 ஆண்டு மே மாதம் 4 -ம் நாள் செவ்வாய்க்கிழமை தன்னுடைய கடைசி இரவை பண்டைய பவுத்தத் துறவிகள் எதிர்கொள்வது போலவே எதிர்கொண்டார். படுக்கையில் படுத்திருந்த பண்டிதர் தன் குடும்பத்தினரையும், சங்க உபாசகர்களையும் அழைத்து நிலையை எடுத்துக்கூறியதாக கௌதம சன்னா தன் நூலில் குறிப்பிடுகிறார்.
பண்டிதரைச் சூழ்ந்து நின்றிருந்தவர்கள் செய்வதறியாது கண்ணீர் விட்டுத் துக்கித்துக்கொண்டு இருந்தனர். அவர்களின் சலசலப்பு தமக்குத் தொல்லை தருவதாக இருந்ததால், அனைவரையும் அமைதியாக இருக்கும்படி பணித்தார். மீண்டும் சில மணிநேரத்துக்குப் பின், “என் உயிர் பிரியும் நேரம் இது. அனைவரும் அமைதியாக இருங்கள்” என மெல்லிய குரலில் கூறியிருக்கிறார். இறுதியாக, “நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. உங்களுடைய தருமமும், கருமமுமே உங்களைக் காக்கும்” என அழுத்தமாகச் சொன்னார்.
பின்னர் தன் மகன் பட்டாபிராமனை அருகில் அழைத்து, ''எனக்குப் பிறகு உன்னால் 'தமிழன்' இதழைத் தொடர்ந்து நடத்த முடியுமல்லவா?” எனக் கேட்டதற்கு அவர், “முடியும்” என சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்தார்.
தன் சங்க உபாசகர்களை அழைத்து தனது, 'புத்தரது ஆதி வேதம்' நூலை வழிகாட்டியாகக் கொண்டு சங்கத்தை முன்னெடுங்கள் என சில ஆலோசனைகளைக் கூறினார். பின், ''இந்த தேகத்தைக் கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்'' எனக் கைகளைக் கூப்பி திரிசரணங்களை உச்சரித்தார். மறுநாள் காலை 5 மணிவாக்கில் அவரது உயிர் பிரிந்தது.
மரண வேளையிலும் தன் இதழையும், அது வழிநடத்திய சமூகத்தையும் நினைத்துக் கவலைப்பட்டிருக்கிறார் என்றால் பண்டிதரின் உயிர் உண்மையில் எதன் மேல் இருந்திருக்கிறது என்பதை நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது.
(பண்டிதரைப் படிப்போம்...)
இரா.வினோத் - தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago