கரோனா பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். அரசு, நிவாரணங்களை அறிவித்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இணையம் வழியே ‘ஒன்றிணைவோம் வா’ என்றொரு இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் முடிந்தவரையில் பொதுமக்களுக்கு உதவி வருகிறார். இதையும் அரசியலாக்கிப் பார்க்கும் சிலர், ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்தில் மக்கள் பணியில் இருக்கும் திமுகவினரிடம் குதர்க்கமான கேள்விகளையும் சாத்தியமில்லாத உதவிகளையும் கேட்டு, நல்ல நோக்கத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.
‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்துக்காக ஸ்டாலின் அறிவித்திருக்கும் அலைபேசி எண்ணில் தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் உதவி கேட்டுப் பேசி வருகிறார்கள். இப்படி உதவி கேட்பவர்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் திமுக செயலாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாவட்டச் செயலாளர்கள், உதவி கோரியவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர திமுக செயலாளர்களுக்கு அந்த விவரங்களை அனுப்பி வைக்கிறார்கள்.
ஒன்றிய, நகர திமுக செயலாளர்கள் அந்தப் பட்டியலை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை வீடு தேடிச் சென்று அவர்கள் கேட்கும் உதவிகளைச் செய்து கொடுத்துவிட்டு அதன் விவரங்களை தலைமைக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். இப்படி தினமும் ஒவ்வொரு பொறுப்பாளரும் குறைந்தது நூறு பேருக்காவது அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்கி வருகிறார்கள். இப்படி உண்மையிலேயே நிவாரண உதவிகளை கேட்கும் மக்களுக்கு மத்தியில் சில குதர்க்க புத்திக்காரர்களும் திமுக தலைமைக்கு போன்போட்டு ஆங்காங்கே கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றிரண்டு சம்பவங்கள்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர திமுக செயலாளர் குணசேகரன் தினமும் திமுக தலைமைக்கு உதவி கேட்டு போன் செய்பவர்களில் சுமார் நூறு பேருக்கு 500 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் காய்கனிகளை வழங்கிவருகிறார். அப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு, காட்டுத் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த நூர்தீன் என்பரின் அலைபேசி எண்ணை திமுக தலைமையிலிருந்து அனுப்பி, அவர் கேட்கும் நிவாரண உதவியைச் செய்துகொடுக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதையடுத்து குணசேகரனின் உதவியாளர், நூர்தீனுக்கு போன் போட்டு, “நீங்கள் தலைவர் ஸ்டாலினின் ‘ஒன்றிணைவோம் வா’ எண்ணுக்கு போன் போட்டு உதவி கேட்டீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார். “ஆமாம்” என்று சொல்லியிருக்கிறார் நூர்தீன். “உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கள்... செய்து தருகிறோம்” என்று உதவியாளர் கேட்க, “எனக்கு எல்லாம் இருக்குங்க... வெளியில போய்ட்டு வர்றதுக்கு ஒரு கார் வேணும்; வாங்கிக் குடுங்க” என்று கூசாமல் சொல்லியிருக்கிறார் நூர்தீன்.
மிரண்டு போன உதவியாளர், “ஏங்க... நீங்க என்ன கேக்குறீங்கன்னு தெரிஞ்சுதான் கேக்குறீங்களா?” என்று பதறியிருக்கிறார். அப்போதும் அசராத அந்த மனிதர்,”நல்லா தெரிஞ்சுதான் கேக்குறேன்... ‘எது வேணும்னாலும் கேளுங்க’ன்னு உங்க ஸ்டாலின் சொல்லியிருக்காருல்ல... எனக்கு இப்ப கார் வேணும்; கேட்டு வாங்கிக் குடுங்க” என்று கொஞ்சமும் சிரிக்காமல் கேட்டிருக்கிறார்.
நூர்தீன் கலாய்க்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட நகரச் செயலாளரின் உதவியாளர், “காருக்கு இப்பத்தான் சேஸ் எடுத்து விட்டிருக்கோம். ஒரு வாரத்துல பாடி கட்டி வந்ததும் சொல்லி அனுப்புறோம்; வந்து எடுத்துட்டுப் போங்க” என்று பதிலுக்குக் கலாய்த்துவிட்டு இணைப்பைப் துண்டித்திருக்கிறார்.
இதேபோல் காரைக்குடி நகரின் இன்னொரு பகுதியில், கரோனா பரவலைத் தடுக்க 160 குடும்பங்கள் வசிக்கும் பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அந்தப் பகுதிக்குள் இருந்தவர்கள் வெளியில் வராமல் இருப்பதற்காக அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் தன்னார்வலர்களும், அதிகாரிகளும் செய்துகொடுத்தனர். இந்த நிலையில், தடுப்புப் பகுதிக்குள் இருந்த ‘சீனியர் சிட்டிசன்’ ஒருவர், “எனக்கு ஒரு கட்டு பீடி வேணும்; வாங்கிக் குடுங்க” என்று மல்லுக்கு நின்றிருக்கிறார்.
‘கடையெல்லாம் மூடிக்கிடக்கு... பீடி கிடைக்காது, சிகரெட் வேணும்னா வாங்கி தரவா” என்று தன்னார்வலர்களும் அதிகாரிகளும் சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். “அதெல்லாம் முடியாது எனக்கு பீடிதான் வேணும். உங்களால முடியாட்டி என்னைய வெளியில விடுங்க... நான் போய் வாங்கிக்கிறேன்” என்று பயமுறுத்தி இருக்கிறார் சீனியர் சிட்டிசன். இதனால் வேறுவழியின்றி, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஒருகட்டு பீடியுடன் வந்து சேர்ந்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
திமுக தலைவர் ஸ்டாலினைப் போலவே இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ‘உதவிகள் வேண்டுவோர் எங்கள் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளலாம்’ என கட்சிப் பொறுப்பாளர்களின் அலைபேசி எண்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த ஒரு நபர், தனக்கு மருந்து - மாத்திரைகள் வாங்க வேண்டும் என போன்போட்டு உதவி கேட்டிருக்கிறார்.
இந்த நபரின் அழைப்பு, மாவட்ட திமுக அமைப்பாளர் நாகனி செந்தில்குமாருக்குப் போயிருக்கிறது. உடனே சிங்கம்புணரியில் உள்ள மருந்துக்கடை ஒன்றுக்கு போன் போட்ட செந்தில்நாதன், உதவி கேட்ட நபருக்கான மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு ரசீதை வாட்ஸ் அப்பில் தனக்கு அனுப்பும்படி சொல்லியிருக்கிறார். சற்று நேரத்தில் வாட்ஸ் அப்பில் வந்த ரசீதைப் பார்த்துவிட்டு மிரண்டே போனார் செந்தில்குமார்.
ஆம், அந்த நபர் மொத்தமாய் 7,890 ரூபாய்க்கு மருந்து வாங்கிக் கட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டவர், “ஏம்பா... இவ்ளோ ரூபாய்க்கு குடுத்துருக்கீங்க... என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா?” என்று மருந்துக் கடைக்கு போன்போட்டு கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், “ஆமாண்ணே... அவரு கேக்குறதக் குடுக்கச் சொன்னீங்க. அவரு மூணு மாசத்துக்கான மருந்து - மாத்திரைகளை தரச் சொன்னாரு. நாங்களும் குடுத்துட்டோம்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தத் தொடர் சம்பவங்களை அடுத்து, இன்றைக்கு யாரிடம் சிக்குவோமோ என்ற திகிலிலேயே சிவகங்கை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் திக் திக் என்று உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு மாவட்டத்திலேயே இத்தனை கூத்துகள் என்றால் எஞ்சிய மாவட்ட திமுக பொறுப்பாளர்களின் நிலையை நினைத்தால் நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago