தீவிரமடையும் கோவிட்-19 : எதிர்வரும் பிரச்சினைகளைக் கையாளுவது எப்படி?

By செய்திப்பிரிவு

கோவிட்-19 நோய்த்தொற்று நாடெங்கிலும் தீவிரமடைந்துவருகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் சொந்த மாநிலம் திரும்ப தற்போது நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெளிநாட்டில் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விண்ணப்பிக்கலாம் என்று விரைவில் அறிவிக்கப்படலாம். ஏற்கெனவே நிலைமை தீவிரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து பலர் திரும்புவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் எழும். அதை எப்படி எதிர்கொள்வது?

இந்தியாவிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்றவர்கள், வேலை பார்ப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், குறுகிய காலப் பயணமாக வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு காரணமாகவோ, தொழில் தொடர்பாகவோ, சுற்றுப்பயணமோ பலர் சென்றிருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் உடனடியாகத் திரும்ப நினைக்கிறார்கள்.

ஆனால் நம் நாட்டிலும், பல்வேறு வெளிநாடுகளிலும் லாக்டவுன் - ஊரடங்கு இருப்பதாலும், விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டதாலும் இப்போது அவர்களால் உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை. விரைவில் நம் நாட்டிலும், பல்வேறு வெளிநாடுகளிலும் லாக்டவுன் தளர்த்தப்பட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை நீக்கப்படும். அப்போது இவர்கள் இந்தியா வர முனைவார்கள்.

எங்கிருந்து வருவார்கள்?

இவர்களில், பெரும்பாலோர் அமெரிக்காவில் இருந்து வரப்போகிறார்கள். அங்கு கோவிட்-19 தாக்கம் எப்படி இருக்கிறது என்பதையும், அங்குதான் அதிக இறப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம். அடுத்து இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகம் பேர் வரக் காத்திருக்கிறார்கள். இதேபோல் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் இந்தியா வர பலர் யத்தனிப்பார்கள்.

ஏற்பட உள்ள பிரச்சினைகள்

லாக்டவுன் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ தளர்த்தப்பட்டாலும், நம் நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை குறையப் போவதில்லை. இப்போதுள்ள நிலையில் தொடரும், பெரும்பாலும் அதிகரிக்கவே சாத்தியம் அதிகம். இந்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வர இருக்கிற பல லட்சம் பேரில் பெரும்பாலானோருக்கு இந்தத் தொற்று இருக்கும். ஆகவே, உள்நாட்டு நோயாளிகளின் எண்ணிக்கையுடன் வெளிநாட்டிலிருந்து வந்த நோயாளிகளின் எண்ணிக்கையாலும் நமது நாடு மிகவும் சிரமப்படும்.

இவர்களை விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்வது கடினம். இவர்கள் வரும்போது காய்ச்சல்/ ஜுரம் இருக்கிறதா என்று ஸ்கேனர் கருவி கொண்டு பார்க்கப்படும். அதில் பலருக்கும் காய்ச்சல் இல்லாமல் இருக்கலாம். இதனால் அவர்கள் நோயற்றவர்கள் என்று கணிக்கப்படுவார்கள். காய்ச்சல் இருப்பவர்களில் சிலரும், பாராசிட்டமால் போன்ற மருந்துகளை உட்கொள்வதால் காய்ச்சல் குறைந்து ஸ்கேனர் பரிசோதனையில் தெரியாது.

அத்துடன் நாடு திரும்பும் எல்லோருக்கும் தொற்றை உறுதிசெய்யும் பரிசோதனையை (RT-PCR) விமான நிலையத்திலேயே செய்ய முடியாது. அப்போது என்ன செய்வது? அவர்கள் அனைவரையும் தனியாக முகாம் அமைத்துக் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பெரும் பொருள் செலவும், இடமும் தேவைப்படும். அப்படியே அவர்கள் நாடு திரும்பினாலும்கூட உடனடியாக நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க முடியாது.

அது மட்டுமல்ல கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 80-90% பேருக்கு, ஏன் 98% பேர் வரைகூட எந்தவித வெளிப்படையான உடல் தொந்தரவுகளும் அறிகுறிகளும் இல்லாமல் இருப்பார்கள். ஆக, தொந்தரவுகள் இல்லாமல் இருப்பவர்களை நீண்ட நாட்கள் பராமரித்து நேரத்தையும் பொருளையும் வீணாக்கப்போகிறோமா?

இப்படியில்லாமல் அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி கண்காணிக்கலாம். அதில் என்ன பிரச்சினை என்றால், வீட்டில் எவ்வளவுதான் ஒருவர் தனிமைப்படுத்திக்கொண்டாலும் மனைவியையும் பிள்ளைகளையும் கண்டிப்பாகப் பார்க்க வாய்ப்பு அதிகம். இதைப் போன்றே எந்தப் பெற்றோரும் நீண்ட காலம் கழித்து, வெகு தூரத்திலிருந்து வரும் தங்களின் மகளையோ மகனையோ நேரில் பார்க்க 14 நாட்கள் காத்திருக்க மாட்டார்கள்.

இப்படி தனிமைப்படுத்தியவரை அவர்கள் பார்க்கும்போது, நோவல் கரோனா போன்று வேகமாகப் பரவும் வைரஸால் அவர்களுக்கும் தொற்று ஏற்படும். அடுத்து அவர்கள் மூலம் பலருக்கும் தொற்று கொத்துக்கொத்தாக பரவிவிடும். இதன் விளைவாக அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும், பராமரிக்க வேணடும், பரிசோதனை செய்ய வேண்டும். இப்படிப்பட்ட பரவலால், எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத காட்டாறுபோல் பெருகிக்கொண்டே போகும்.

இவ்வளவு நாட்கள் லாக்டவுனில் இருந்து, பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுடன் கஷ்டப்பட்டும்கூட, அதற்குப் பலன் இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

மத்திய அரசு என்ன செய்யலாம்?

இதற்கு மத்திய அரசு முக்கியத் திட்டம் ஒன்றைத் தீட்ட வேண்டும். இதற்கு வெளிநாட்டில் தற்போது சிக்கிக்கொண்டிருக்கும் இந்தியர்களின் ஒத்துழைப்பும் அவசியம். முதலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும். அவர்களில் எவ்வளவு பேர் லாக்டவுன் முடிந்த பிறகு, இந்தியா திரும்ப விருப்பப்படுகிறார்கள் என்பதைப் பட்டியலிட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தப் பணியைச் செய்யலாம்.

நாடு திரும்ப விரும்புகிறவர்களுக்குத் தொந்தரவு, அறிகுறி இருக்கிறதோ இல்லையோ அனைவருக்கும் அந்தந்த நாடுகளிலேயே, நமது தூதரக உதவியுடன் பரிசோதனைகளைச் செய்து முடிக்க வேண்டும். மத்திய அரசு சீரிய திட்டம் தீட்டி, உடனடியாகச் செயலாற்ற வேண்டும்.

அதன்பிறகு தொற்று இல்லாதவர்களை தனி விமானத்தில் அழைத்துவர வேண்டும். தொற்று உள்ளவர்கள் அங்கேயே உரிய சிகிச்சை பெற ஏற்பாடுசெய்ய வேண்டும். தொற்று நீங்கியவுடன் மற்றவர்களையும் அழைத்து வரலாம். இப்படிப் படிப்படியாக அழைத்துவருவதே சிறந்தது.

தொற்று பாதிப்பு மோசமாக இருந்து தீவிர சிகிச்சையில் இருப்பவர்களைக் கண்டிப்பாக அழைத்து வர முடியாது. லேசான தொற்று பாதிப்பு இருப்பவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். சிகிச்சைகள் எல்லா நாட்டிலும் ஒன்றுபோலத்தான் இருக்கும். தொற்று உள்ளவர் வெளிநாட்டில் இருந்தாலும், உள்நாட்டில் இருந்தாலும் யாரையும் பார்க்க முடியாது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

கிடைக்கும் பலன்கள்

இந்த முறைப்படி முதலாவதாக, தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் உறுதிப்படுத்த முடிகிறது.

இரண்டாவது, இந்தியா வந்தால் அவர்கள் மூலம் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர் என யாருக்கும் தொற்று பரவப் போவதில்லை என்ற உத்தரவாதம் கிடைக்கிறது.

மூன்றாவது, அவர்களை தேவையில்லாமல் தனிமைப்படுத்தத் தேவையில்லை.

நான்காவது, அவர்களுக்குத் தனி முகாம், மருத்துவமனை, பரிசோனை, பராமரிப்பு, உணவு வழங்குதல் போன்ற செலவுகளும் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.

ஐந்தாவது, அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் உடனடியாக அவர்களைக் காண முடியும்.
தேவைப்பட்டால் அவர்கள் இந்தியா வந்த பிறகு, 5-வது நாள் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தியா திரும்பும் ஒவ்வொருவரும் இந்தியாவிலுள்ள எவருக்கும் புதிதாகத் தொற்று ஏற்படப் போவதில்லை என்ற உறுதியுடன் இருக்கலாம். நிம்மதியாகவும் இருக்கலாம்.

கர்நாடக மாநிலம் தும்கூரு பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் பாஷா என்பவரின் மகன் சாஹில் உசேன், சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர். சீனாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது, பல மாணவர்களும் நாடு திரும்ப முயன்றனர். அப்போது நான் இந்தியாவிற்குச் செல்ல விரும்பவில்லை. என் மூலமாக என் தாய்நாட்டில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படக்கூடாது என்று கூறியதையும், அவரது நாட்டுப்பற்றையும் மறந்துவிடக் கூடாது. இந்தியா வர முனையும் ஒவ்வொருவரும், அந்த இளம் மாணவனின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

முத்துச்செல்லக்குமார்,

மருத்துவப் பேராசிரியர்,

தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்