வெற்றிக்குத் தன்னையும் தோல்விக்கு அடுத்தவரையும் காரணமாகச் சொல்லி தப்பிக்கிற உலகில், தன் வெற்றிக்கும் தோல்விக்கும், ஏற்ற இறக்கங்களுக்கும் தானே காரணம் என்பதை மன ஆழத்தில் இருந்து சொல்லும் நடிகர் சிவசந்திரன், வித்தியாசமாகத்தான் தெரிந்தார்.
‘இந்து தமிழ் திசை’யின் Rewinwithramji எனும் வீடியோ நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவரது வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :
‘’’பட்டினப்பிரவேசம்’ படத்துக்குப் பிறகு நடிக்கவே வேணாம் என முடிவு செய்தேன். அமெரிக்கா போகலாம் என நினைத்து வேலையில் இறங்கினேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் படங்களே ஒத்துக்கொள்ளவில்லை. முக்கியமாக, பாரதிராஜா சார், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் என்னை நடிக்க அழைத்தார். ‘நீதான் ஹீரோ’என்றார். அதையும் ஏற்கவில்லை. ‘ஸாரி சார்’ என்று மறுத்துவிட்டேன்.
அமெரிக்கா செல்வதும் தடையாகிக்கொண்டே இருந்தது. அவர் கேட்டு இரண்டு மாதங்கள் கழித்து அவரைச் சந்திக்கச் சென்றேன். ’அட என்னப்பா நீ? நாளைலேருந்து ஷூட்டிங் வைச்சிருக்கோம்பா. தெலுங்குப் பையன் ஒருத்தனை (சுதாகர்) போட்டிருக்கேன். நம்ம எம்.ஆர்.ராதா பொண்ணுதான் (ராதிகா) ஹீரோயின். இப்ப வந்து சொல்றியேப்பா’ என்றார். சரியென்று வந்துவிட்டேன்.
பிறகு ‘நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்ற கருப்பு வெள்ளைப் படத்தில் ஹீரோவாக நடித்தேன். பிறகு, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் நடித்தேன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர், ஸ்ரீப்ரியாவுடன் ‘என்னடி மீனாட்சி’ படத்தில் நடித்தேன். இதற்கு இடையிலேயே ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’. கமல், ரஜினி, நான், ஸ்ரீப்ரியா எல்லோரும் நடிச்சோம். அதுல ‘உறவுகள் தொடர்கதை’ பாட்டு மிகப்பெரிய ஹிட்டாச்சு. எனக்கும் நல்லபேர் கிடைத்தது.
இந்த ‘உறவுகள் தொடர்கதை’ பாட்டு, ஒரே நைட்டில் எடுக்கப்பட்ட பாட்டு. இதைப் படமாக்குவதற்கு உண்டான லோகேஷன் உள்ளிட்ட எல்லாவற்றையும் செய்துகொடுத்தேன். பியானோவும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். இப்படி நட்பாவே எடுத்த படம்தான் ‘அவள் அப்படித்தான்’.
சிவகுமார் சாரோட நான் நடிச்ச படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அது அவருக்கு 100வது படம். பயந்துக்கிட்டேதான் போனேன். ஆனா அவர் ரொம்ப இயல்பா, வாப்பா வாப்பான்னு அன்போட கூப்பிட்டுப் பேசினார். சிவகுமார் சாரை நிறையபேர் புரிஞ்சுக்கறது இல்லை. அவர் அப்படியொரு தங்கமான மனிதர். சிவகுமார் சார், நல்ல விஷயங்களைத்தான் பேசுவார். நல்ல அறிவுரையாத்தான் சொல்லுவார். இப்படியெல்லாம் இருக்கணும், இப்படி இருக்கக் கூடாது, உணவுல கவனம் வேணும், நல்லாத் தூங்கணும், சரியான நேரத்துக்கு வரணும்னு ஒரு நடிகனுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் சொன்னார். நல்ல மனிதர்.
அப்புறம், சிவகுமார் சாரோட ‘என்னடி மீனாட்சி’, ‘வண்டிச்சக்கரம்’னு படங்கள் பண்ணினேன். ‘வண்டிச்சக்கரம்’ படத்துல மென்மையான கேரக்டர். புரபஸர் கேரக்டர். ஒருதலையாக சரிதாவை லவ் பண்ற கேரக்டர். நல்ல பேர் கிடைச்சது. இந்த நல்லபேரெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துதான் ஸ்ரீதர் சார் படத்துல வாய்ப்பு கிடைக்கக் காரணமா இருந்துச்சு.
ஸ்ரீதர் சார் ஒருபடம் எடுக்கப்போகிறார் என்ற தகவல் தெரிந்து, அவரைச் சென்று பார்த்தேன். ஸ்ரீதர் சார் எவ்ளோ பெரிய இயக்குநர். அவரையெல்லாம் போய்ப் பார்க்கக் கூட அருகதை இருக்கா இல்லியானு தெரியாது. ஆனா போயிருவோம்னு போய்ப் பாத்தேன். ’சொல்றேன்’னு சொன்னார். அப்புறம் ஒருநாள் கூப்பிட்டுவிட்டார். போனதும் ‘உங்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?’ன்னு கேட்டார். ’சரி சொல்லிவிடுறேன்’னார்.
அப்புறம்... அவர் எங்கெல்லாம் இருக்காரோ அங்கெல்லாம் போயிருவேன். ஏவிஎம்ல ரிக்கார்டிங்னு தெரிஞ்சு, அங்கே போய்ப் பாப்பேன். மியூஸிக் டைரக்டரோட ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்போட இருப்பார். எட்டி நின்னு பாப்பேன். ஜாடைலயே வணக்கம் சொல்லுவேன். அவரும் கையைக் காட்டி, அப்புறமா சொல்லிவிடுறேன்னு சொல்லுவார். வந்துருவேன்.
இப்படி தொடர்ந்துகிட்டே இருந்தப்ப, ஒருநாள் கூப்பிட்டு, ‘நீ நடிக்கிறேப்பா’ என்றார். ‘ஆனா, நீ ஹீரோவா வில்லனான்னு தெரியாது’ன்னார். ‘ஏதோ ஒண்ணு. ஸ்ரீதர் சார் படத்துல நடிக்கறதுன்னா சும்மாவா?’ன்னு நினைச்சிக்கிட்டேன். அப்புறமா பத்திரிகைல விளம்பரம் வந்துச்சு. பாத்தா... அதுல எம்பேர்லாம் இல்ல. தெலுங்குல கிருஷ்ணா நடிக்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் ஸ்ரீப்ரியா நடிக்கிறாங்கன்னு செய்தி இருந்துச்சு. என்னடா இதுன்னு நினைச்சேன். படப்பிடிப்பு அமெரிக்கால நடக்குதுன்னு வந்துருந்துச்சு.
அமெரிக்கால வேலைக்குப் போகணும்னு நினைச்சோம். அதான் முடியலை. இப்போ, இந்தப் படம் மூலமாவாவது போகலாம்னு இருந்துச்சு. இதுவும் இல்லை போல இருக்கே...னு யோசனையாவே இருந்துச்சு. ஸ்ரீதர் சார் கூப்பிட்டு, ‘நீதான் ஹீரோ’ன்னு சொன்னபிறகுதான் அப்பாடான்னு இருந்துச்சு. அந்தப் படம் ‘செளந்தர்யமே வருக வருக’.
அமெரிக்கால ஒருமாசம் ஷூட்டிங். வில்லனா சத்தார்னு ஒருத்தர் நடிச்சார். அவர் பாக்கறதுக்கு என்னை மாதிரியே இருந்தார். பிரகாஷ்னு ஒரு டான்ஸ் மாஸ்டர்தான் செகண்ட் ஹீரோ. பாட்டு எல்லாம் நல்லா இருந்துச்சு. ஆனா என்னன்னா... படம் பேர் ‘செளந்தர்யமே வருக வருக’. ஸ்ரீதர் சார் படம். லவ் சப்ஜெக்ட்டா இருக்கும்னு ஆடியன்ஸ் எதிர்பார்த்தாங்க. ஆனா, ஆக்ஷன் படமா எடுத்திருந்தார் ஸ்ரீதர் சார். அதனால அது சரியாப் போகலை.
அப்புறமென்ன... திரும்பவும் ஒரு கேப். படங்களே வரலை.
இந்த சமயத்துலயாவது நான் என்ன பண்ணிருக்கணும். ஃபைட், டான்ஸ்னு கத்துக்கிட்டிருக்கணும். எதுவுமே கத்துக்கலை. இப்படிக் கத்துக்கணும்னு தெரியல. அப்படியே காலத்தை ஓட்டினேன்.
அப்போதான் முக்தா பிலிம்ஸ்லேருந்து போன். ‘பொல்லாதவன்’னு ஒரு படம் எடுக்கிறோம். கொஞ்சம் வர்றீங்களா ஆபீஸுக்கு’னு கூப்பிட்டாங்க. ஹீரோவா, வில்லனா எதுவும் தெரியாது எனக்கு. போனேன். ‘வில்லன் ரோல்’னு சொன்னாங்க. ஹீரோவா நடிச்சா ஹீரோவா இருக்கலாம், வில்லனா நடிச்சா, அந்தக் கேரக்டரே தருவாங்கன்னெல்லாம் எதுவுமே தெரியல எனக்கு. சரின்னு சொல்லிட்டேன்.
இதேகாலகட்டத்துல, நிறைய படங்கள்ல நடிச்சேன். ஹேமமாலினி தயாரிச்ச ஒரு படத்துல நடிச்சேன். அது வரலை. கிருஷ்ணன் பஞ்சுவோட படம். கே.ஆர்.விஜயா நடிச்சாங்க. அதுல மெயின் ரோல் பண்ணினேன். அப்பதான் ‘பொல்லாதவன்’ படம் வந்துச்சு. ‘யார் ஹீரோ’ன்னு கேட்டேன். ‘ரஜினி’ன்னு சொன்னாங்க. ‘சரி, நம்ம நண்பர்தானே’ன்னு நடிச்சேன். நூறுநாள் ஓடுச்சு.
அடுத்தாப்ல கமலோட ‘ராம் லக்ஷ்மண்’ படத்துல வில்லனா நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. ஆக, அப்போ கமலும் ரஜினியும் பெரிய ஹீரோ. அவங்களுக்கு வில்லனா நடிச்சதால, வில்லன்னே முத்திரை குத்தி நடிக்க வைச்சிட்டாங்க.
எனக்கும் இதெல்லாம் பெருசா தெரியல. அப்பாவும் ரிடையர்டாயிட்டார். குடும்பத்துக்கு நாலு காசுகொடுக்கணும். குடும்பம் ஓடணுமே. மிடில் கிளாஸ் கவலை. கிடைக்கறதுல நடிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் நல்ல நல்ல கேரக்டர் ரோலும் வந்துச்சு. சிவகுமார் அண்ணனோட ‘ஆனந்த ராகம்’ படத்துல நல்ல ரோல் கிடைச்சிச்சு. அப்புறம் ஜி.என்.ரங்கராஜன் சாரோட ‘ராணித்தேனீ’ங்கற ஒருபடம். அதுலயும் நல்ல கேரக்டர். அந்தப் படத்துல என் நடிப்பைப் பாத்துட்டுதான் சிவாஜி சார், ‘இவன் நல்லா நடிக்கிறான்யா’ன்னு சொன்னாரு. அவர் மூலமாத்தான் ‘வெள்ளை ரோஜா’ல பிரபுவுக்கு வில்லனா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிச்சு.
‘வெள்ளை ரோஜா’ படத்தின் மூலமா பிரபு கூட நல்ல நட்பு கிடைச்சது. நல்ல நண்பர்களானோம். சிவாஜி சார் மேல மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு எனக்கு. அவருடைய ரசிகன் நான். அவருடைய மகன் பிரபு... எப்பேர்ப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் ரொம்ப சிம்பிளாப் பேசினார். பழகினார். அதனாலேயே பிரபு மேல தனி பிரியம் எனக்கு. இன்னொரு விஷயம்... சிவாஜி சார் வீட்டுக்குப் போனால், சாப்பிடாமல் அனுப்பவே மாட்டார்கள். சிவாஜி சார் வீட்டு ஸ்பெஷல் இது. அப்படி கவனித்து கவனித்துப் பரிமாறுவார்கள்.
சிவாஜி சார் வீட்டுக்குள்ளே நாம நுழைவோமான்னு நினைச்ச காலமெல்லாம் உண்டு. எப்போ போனாலும் சரி, சிவாஜி சார் சொல்ற முதல் வார்த்தை... ‘வாடா சாப்பிடுடா’ என்பதுதான். அவர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமில்லை. மிக அற்புதமான மனிதரும் கூட. கிரேட்... கிரேட்... கிரேட்!’’ என்று சிவாஜி குடும்பத்தைச் சொல்லும்போது நெகிழ்ந்து போகிறார் சிவசந்திரன்.
- நினைவுகள் தொடரும்
சிவசந்திரன் வீடியோ பேட்டியை முழுமையாகக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago