உழைப்பாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!  - இன்று மே தினம் 

By வி. ராம்ஜி

’உலகத் தொழிலாளர்களே... ஒன்று கூடுங்கள்’ என்று ஒருகாலத்தில் முழங்கப்பட்டது. இன்றைக்கு உலகம் மொத்தமும் உள்ள மனிதர்கள் ’கரோனா’வால் சிந்தனையாலும் செயலாலும் ஒன்று கூடியிருக்கிறோம். காலம்... ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் நம்மை ஒன்றுசேர்த்துக்கொண்டே இருக்கும்.

உழைக்காதவர்கள் என்பவர்கள் மிகச்சிலரே. ‘படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை’ என்று பொருமினாலும் ஏதேனும் ஒருவேலையில் புகுந்துகொண்டு, உழைத்துக்கொண்டிருக்கிற இளைஞர்கள் ஏராளம். ‘செஞ்ச வேலைக்கு உரிய சம்பளம் எங்கேங்க கிடைக்குது?’ என்று அலுத்துக் கொண்டாலும், அவர்களின் உழைப்பு ஒருபோதும் குறைந்துவிடுவதில்லை.

’உழைப்பே உயர்வு தரும்’ என்று நம் பாட்டன்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். உண்மையாக உழைத்தால், உயர்வு நிச்சயம். இதில் உயர்வு என்பது பொருள் சார்ந்தது மட்டும்தானா? குணம் சார்ந்ததாகவும் அமைகிறது. அந்த குணம் உயர்வைத் தருகிறது. ஆக, உழைப்புக்குள் நேர்மையும் இருக்கவேண்டும்.
உழைக்கவேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் உழைக்கவேண்டும். நாலுகாசு சம்பாதித்து வீட்டில்கொடுக்கவேண்டும்.

முப்பதுவருடங்களுக்கு முன்பு, என் நண்பனின் அண்ணன் காளமேகம் என்பவர் இருந்தார். அந்த அண்ணன், எந்த வேலைக்குக் கூப்பிட்டாலும் முதல் ஆளாக நிற்பார். சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கும் செல்வார். டேங்க் கழுவும் வேலைக்கும் ஓடுவார். லாரியில் லோடு ஏற்றவேண்டும், இறக்கவேண்டும் என்று கூப்பிட்டாலும் தட்டாமல் செய்வார். யாரேனும் வீடு மாற்றவேண்டும் என்றால், சாமான்களையெல்லாம் கோணிப்பையில் அழகாகக் கட்டி, ஏற்றி, இறக்கி, அடுக்கிவைத்துத் தருவார். கட்டட வேலையில் எல்லா வேலைகளும் அண்ணனுக்கு அத்துபடி.


ஒருமுறை அந்த அண்ணனிடம், ‘எதுனா ஒருவேலைக்கு மட்டும் போகலாம்ல?’ என்று யாரோ கேட்க, அதற்கு அண்ணன் இப்படிச் சொன்னார்... ‘’நானென்ன கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல, ஃபேனுக்குக் கீழேயே உக்கார்ந்து வேலைக்குப் போறேன். இப்ப, சுண்ணாம்பு அடிக்கிற வேலை மட்டும் பாக்கறேன்னா, வருஷம் 365 நாளுமா ஒவ்வொருத்தர் வீட்லயும் சுண்ணாம்பு அடிக்கப்போறாங்க. ஏதோ நல்லநாள் பெரியநாள், பொங்கல் பண்டிகை, துஷ்டின்னு நடந்தாத்தானே சுண்ணாம்பு அடிக்கக் கூப்புடுவாங்க. மீதிநாள் வவுத்துக்கு என்ன பண்றது? எந்த வேலையா இருந்தாலும் செய்யணும். திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது. அவ்ளோதான்’’ என்றார் காளமேகம் அண்ணன். பச்சக்கென்று மனதில் பதிந்தது.


உழைத்துக் கொண்டே இருப்பவர்களை நான்குநாள் சும்மா இருக்கும்படி செய்தால் போதும்... பித்துப் பிடித்துவிடும் அவர்களுக்கு!
வசந்தா அக்காவும் காளமேகம் அண்ணன் மாதிரிதான்.

பெட்டிக்கடை வைத்திருக்கிறார். தினசரிகளும் வாரப் பத்திரிகைகளும் விற்பனை செய்கிறார். பக்கத்தில் மருத்துவமனை என்பதாலும் லாட்ஜ்கள் இருப்பதாலும் தேங்காய் எண்ணெய், சீப்பு, சோப்பு, ஷாம்பு என்று முக்கியத்துவம் கொடுத்து விற்கிறார். போதாக்குறைக்கு, வெள்ளைச்சட்டை வேட்டிகளை பளிச்சென்று வெளுக்க, பாரிமுனைக்குச் சென்று ஏதேதோ துவைக்கும் பொருட்களை வாங்கி, அதைக் கலந்து திரவமாக்கி, பாட்டிலில் அடைத்து விற்கிறார். ’’என் புருஷன் குடும்பத்துக்கு நான் வந்து நாப்பது வருஷமாச்சுங்க. மொடாக்குடி. தெனமும் தண்ணிப்போடுவார்னு சொல்லக்கூடாது. எப்பவுமே தண்ணிலதான் மிதப்பாரு. அதான் சீக்கிரமே மேலேபோய்ச்சேந்துட்டாரு. நண்டும்சிண்டுமா மூணு பசங்க. மூணையும் கரையேத்துறதுக்கு, எந்த வேலை கிடைச்சாலும் ஓடினேன். பொட்டிக்கடை பொழப்பு நிரந்தரம். அந்த ஹோட்டல், இந்த வீடுங்கன்னு பத்து இடத்துல தெனமும் கூட்டி சுத்தம் பண்ற வேலையும் பாக்கறேன். ரெண்டு பொண்ணையும் கட்டிக்கொடுத்துட்டேன். பையனுக்கு கண்ணாலம் பண்ணியாச்சு. இத்தினி வருசத்துல, ‘இந்தா வசந்தா வைச்சுக்கோ’னு பத்துகாசு யார்கிட்டயும் வாங்கினதில்ல. சொல்லப்போனா, இந்தப் பொட்டிக்கடைதான் எனக்கு புருஷன்’’ என்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் வசந்தாக்கா, ஆச்சரியம்தான்.


இப்படித்தான், மயிலாப்பூரில் ஆட்டோ ஏறினேன். அந்த ஆட்டோவின் பின்னே, ரமேஷ்வரன் பி.எஸ்.சி, வினோதினி பி.ஏ., தீபிகா பி.பி.ஏ. என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ‘உங்க பசங்களாண்ணே?’ என்றேன். ஆமாம் என்றார். ‘பரவாயில்லையே... மூணு பேரையும் டிகிரி படிக்கவைச்சிருக்கீங்க. சூப்பர்ணே’ என்றேன்.


‘இதுல என்ன சார் சூப்பர். நம்ம பசங்களை ஒருநிலைக்குக் கொண்டு வரணும். அது நம்ம கடமை இல்லீங்களா?எனக்கு ஆரணி பக்கத்துல பூர்வீகம். அப்பா சினிமா ஆசைல இங்கே குடும்பத்தைக் கூட்டியாந்தாரு. நடிக்கணும் நடிக்கணும்னு நாயா அலைஞ்சாரு. திடீர்னு மனசு திருந்தி எதுனா வேலைக்குப் போவாரு. அப்புறம் பழையபடி சான்ஸ் தேடுவாரு. என் தாய்மாமாதான் அப்பப்ப, அரிசி பருப்பு, ஸ்கூல் ஃபீஸ்னு தருவாரு.எனக்கு காலேஜ் படிக்கணும், டிகிரி வாங்கணும்னு ஆசை. முத வருஷம் சேர்ந்து படிச்சேன். காசு இல்ல, நிறுத்தியாச்சு. அப்பாவும் பக்கவாதத்துல விழுந்துட்டாரு. அப்பலேருந்துதான் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்.


காலைல ஏழு மணிக்கு வீட்லேருந்து கிளம்புவேன். டிபனும் மத்தியான சாப்பாடும் கட்டிக்கொடுத்துரும் பொஞ்சாதி. கடைல டீ குடிக்கறது, சிகரெட், பாக்கு எந்தப் பழக்கமும் இல்ல. நைட் எட்டுமணிக்குத்தான் வீட்டுக்கு திரும்புவேன். அன்னிய காசை அப்படியே அவகிட்ட கொடுப்பேன். மூத்தவ ஏழாவது படிக்கும்போதே, அவ காலேஜ் முத வருஷத்துக்கு தேவையான பணத்தை சேர்க்க ஆரம்பிச்சேன்னா பாருங்க. வீட்டு செலவு போக, மீதமுள்ள பணத்தை மூணு பசங்களுக்கும் பிரிச்சு உண்டியல்ல போட்ருவேன். பத்துநாளைக்கு ஒருதடவை பேங்க் அக்கவுண்ட்ல போட்ருவேன். பசங்களும் கண்ணும் கருத்துமா படிச்சாங்க.


பையன் வேலைக்குப் போய் காசு தர்றான். அதை அப்படியே பெரியபொண்ணு கல்யாணத்துக்கு உண்டியல்ல போட்டுக்கிட்டே வரேன். நம்ம வயித்துக்கு ஆட்டோ இருக்கு. உழைப்பு இருக்கு. அதுபோதும்ங்க’’ என்று சொன்ன அந்த ஆட்டோ டிரைவரின் வாழ்க்கை, ஸ்மூத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது.


படித்த இளைஞர்களும் பலரும் குளுகுளு ஏ.ஸி.யில் அமர்ந்துகொண்டு மூளையாலும் அதே படித்த இளைஞர்களும் இன்னும் பலரும் ஏரியா ஏரியாவாக டூவீலரில் சுற்றுகிற உடல் உழைப்பாலும் விற்பனை பிரதிநிதிகளாக, மார்க்கெடிங்கில் உள்ளவர்களாக, கடலைமிட்டாய், முறுக்கு, சிப்ஸ் பாக்கெட்டுகள் போடுபவர்களாக, பைபாஸ் சாலைகளில் கரும்புச்சாறு கடை, இளநீர்கடை, தொப்பி, கூலிங்கிளாஸ் விற்பவர்கள், வண்டியில் காய்கறிகள் அடுக்கி தள்ளிக்கொண்டு விற்பவர்கள், தட்டு ரிக்‌ஷா ஓட்டும் அண்ணன்கள், கீரையும், வாழைக்காயும், வெற்றிலையும் விற்கிற பாட்டிகள், பூக்கள் தொடுத்து விற்கும் வயதான பெரியம்மாக்கள், எட்டு டூ ஒன்பது ஒரு வீடு, ஒன்பது டூ பத்து ஒருவீடு, பத்து டூ பதினொன்று இன்னொரு வீடு... மீண்டும் இந்த நான்குவீடுகள் என பத்துப்பாத்திரம் தேய்த்து, துணியை வாஷிங்மெஷினில் அலசி காயவைத்து, வீடு பெருக்கி, ’மாப்’ வைத்து துடைத்து... என உழைத்துக்கொண்டே இருக்கிறவர்கள் இங்கே நிரம்பிக்கிடக்கிறார்கள்.


வேலூரில் அதிகாலையில் ரயிலேறி ஆறுமணிக்கு சென்ட்ரலில் இறங்கி, முகம் கழுவி, தலைவாரி, பொட்டிட்டுக் கொண்டு, இங்கே எட்டாயிரத்துக்கும் பதினைந்தாயிரத்துக்கும் வேலைக்குப் போகிறவர்களை... ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டு, துயரம் மறப்பவர்களை பார்க்கலாம்.
ரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டே, மொத்தமாக ராமநாதபுரத்தில் இருந்து கருவாடு வாங்கி, அதை உள்ளங்கை சைஸ் பாக்கெட்பாக்கெட்டாக போட்டு, நூற்று ஐம்பது கடைகளுக்கும் மேல் சப்ளை செய்யும் நண்பன், உழைப்பின் உன்னதத்தை உணர்த்திக் கொண்டே இருக்கிறான்.


நெற்றி நிறைய பொட்டு வைத்த முகமும் சிரிப்புமாக அந்த 65 வயது அம்மாவிடம் புத்தகங்கள் வாங்குவேன். அவரின் கணவருக்கு இரண்டு காலிலும் பூச்சிவெட்டுக் காயங்கள். புண்ணாகி புரையோடிவிட்டன. போதாக்குறைக்கு சர்க்கரைவியாதி குண்டக்கமண்டக்க என்றிருக்க, யாரையேனும் அனுப்பி நான்குநாளைக்கு ஒருமுறையாவது ஒரு குவார்ட்டர் தள்ளிவிடுவார் அந்த ஐயா. சுத்தமாக முடியாமல், படுத்தபடுக்கையாக கிடக்கிறார். பேச்சின்றிக் கிடக்கிறார். ‘காலைல கெளம்பும்போது, அவருக்கு பேண்டீஸ் போட்டுவிட்டு, உடம்பெல்லாம் துடைச்சி விட்டு, கஞ்சி ஆகாரம் குடுத்துட்டு, கடைக்கு வருவேன். ராத்திரி எட்டுமணிக்கு வீட்டுக்குத் திரும்பறதுக்குள்ளே, நூறுதடவையாவது குலசாமியை வேண்டிக்குவேன்... ‘அவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாது’ன்னு!


இத்தனைக்கும் ரெண்டு பசங்க. ரெண்டுபேருமே எட்டுப்பத்து கிலோமீட்டர்லதான் இருக்காங்க. நம் கையே நமக்கு உதவி. இதான் நான் இந்த ஒலகத்துல கத்துக்கிட்ட பாடம்’’ என்று சொல்லிவிட்டு கண்ணீர் துடைத்து வழக்கம் போல சிரிக்கிற பெரியம்மாவுக்காக பிரார்த்தனை ஓடியது உள்ளே!


‘உழைச்சு உழைச்சு ஓடாத் தேய்ஞ்சதுதான் மிச்சம்’ என்று புலம்பிக் கொண்டே, மிச்ச வாழ்க்கைக்கும் உழைக்க ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் உழைப்பாளிகள்.
உழைத்துக் களைத்து, கொஞ்சம் ஓய்வெடுத்து, மீண்டும் மீண்டும் சளைக்காமல் உழைத்துக் கொண்டே இருக்கும் அத்தனை பேருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.


உலகின் ஒட்டுமொத்த உழைப்பாளர்களுக்கும் ஒரு சல்யூட்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்