சர்வாதிகாரம் என்று சொல்லுக்குப் புதிய இலக்கணம் படைத்த ஹிட்லர் மறைந்து இன்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மனிதனுக்கு இனவெறியும் குரூர எண்ணமும் ரத்த வேட்கையும் ஏற்பட்டால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு வரலாறு நெடுக உதாரணங்கள் உள்ளன. இதன் விளைவான சர்வாதிகாரம், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் சக்தி உடையது. உலகில் சர்வாதிகாரி என்றால் நம் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும் பெயர், ஹிட்லர்!
ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த இவருடைய சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்து பல நாடுகளை சுனாமியாகச் சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். தன்னை வெல்ல யாரும் இல்லை இறுமாப்பில் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போருக்குப் பாதை ஏற்படுத்திக்கொடுத்தார். 20-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ரத்த சரித்திரம், 1946 ஏப்ரல் 30 அன்று முடிவுக்கு வந்தது. ஹிட்லர் இறந்து இன்றோடு 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஜெர்மனி - ஆஸ்திரிய எல்லையான பிரானோவில் 1889 ஏப்ரல் 20 அன்று பிறந்தவர் அடால்ப் ஹிட்லர். அவருடைய தந்தை அலாய்ஸ் ஹிட்லர். தாய் கிளாரா. குட்டிப்பையன் ஹிட்லர் ரொம்பவே சாது. ஓவியனாவதே அவனுடைய கனவு. ஆனால், சிறுவயதிலேயே அடுத்தடுத்து பெற்றோரை இழந்த ஹிட்லரின் வாழ்க்கை திசை மாறியது. பிழைப்புக்காக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்குச் சென்றார். தினக்கூலி சாயப்பட்டறை வேலை. வாழ்த்து அட்டைகளுக்கு ஓவியம் வரைவது என ஹிட்லர் செய்யாத வேலைகளே கிடையாது.
அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். ஆஸ்திரியாவிலும் யூதர்கள் முக்கியத்துவம் பெற்று விளங்கினார்கள். மண்ணின் மைந்தர்களைவிட யூதர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஹிட்லருக்கு அறவே பிடிக்கவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்ற நடைமுறையும் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்துக்கும் மேல்மட்ட அளவில் நிறைந்துள்ள யூதர்களே காரணம் என்று எண்ணினார் ஹிட்லர்.
1914-ல் முதல் உலகப் போரின்போது வியன்னாவில் இருந்து வெளியேறி ஜெர்மனி சென்ற ஹிட்லர், ராணுவத்தில் இணைந்தார். போரில் ஜெர்மனி அடிவாங்கியது. ஆனால், அகண்ட ஜெர்மனி கனவு ஹிட்லருக்குள் புகைந்துகொண்டேதான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தொழிலாளர் கட்சி யூத எதிர்ப்பைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கட்சியில் மக்களைக் கவரக்கூடிய அளவில் பேச்சாளர்கள் எவரும் இல்லை. இந்தக் கட்சியில் சேர்ந்த ஹிட்லர், குறுகிய காலத்திலேயே பேச்சுத் திறமையால் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்றார். கட்சியின் பெயரை தேசிய சோஷலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி என மாற்றினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘நாஜி’.
1928-ல் ஜெர்மனியில் நடந்த தேர்தலில் நாஜிக்கள் தோல்வியைத் தழுவினர். 1933-ம் ஆண்டில் அரசுக்கு எதிராக மக்களைப் புரட்சி செய்ய நாஜிக்கள் தூண்டினர். இதில் ஹிட்லர் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த ஹிண்டன்பக் அந்தப் புரட்சிக்கு தலைவணங்கி ஹிட்லரை பிரதமராக அறிவித்தார். துரதிர்ஷ்டவசமாக அடுத்த சில மாதங்களிலேயே ஹிண்டன்பக் இறந்துபோக, அதிபர் பதவியையும் கைப்பற்றினார் ஹிட்லர். அந்த நொடி முதலே ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்து தன்னை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அறிவித்தார் ஹிட்லர்.
ஹிட்லர் சர்வாதிகாரியாக ஆனதுமே யூதர்கள் எதிர்ப்பு அரசின் திட்டத்திலேயே இடம் பெற்றது. 1935-ம் ஆண்டில் நியூரெம்பர்க் சட்டத் திருத்தம் மூலம் யூதர்களுக்கு வழங்கப்பட்ட எல்லா சலுகைகளையும் அதிரடியாகப் பறித்தார். யூதர்கள் இரண்டாம் கட்ட குடிமக்களாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களுடைய சொத்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. ஜெர்மானியர்கள் யூதரைத் திருமணம் செய்யத் தடை என நித்தம்நித்தம் அதிரடியில் இறங்கினார் ஹிட்லர். இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை ஹிட்லருக்கு எல்லாமே சாதகமாகத்தான் இருந்தது. முடிந்தவரை யூதர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று இனவெறியும் ரத்த வேட்கையும் ஹிட்லரை ஆட்டிப்படைத்தது. இக்காலகட்டத்தில் மட்டும் கொலைக்களங்களை அமைத்து விஷவாயுக்கள் உள்பட பல துன்புறுத்தல்களை அரங்கேற்றி 57 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக ஆய்வாளர்களின் பதிவுகள் சொல்கின்றன.
அதோடு முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க நினைத்தார் ஹிட்லர். முன் அறிவிப்பு ஏதுமின்றி போலந்து மீது போர் தொடுத்தார். இதுதான் இரண்டாம் உலகப் போருக்கான அச்சாரமாக அமைந்தது. ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை ‘நேச நாடுகள்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. இன்னொருபுறம் ரஷ்யாவும் ஜெர்மனி மீது போர் தொடுத்தது. இது இரண்டாம் உலகப் போராக உருவெடுத்தது. ஆனால், பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய ‘நேச நாடு’களிடம் ஹிட்லரின் சாகசங்கள் பலிக்கவில்லை. ஜெர்மனியை இந்த நாடுகள் வளைத்தன.
1945 ஏப்ரல் 20, ஹிட்லருக்கு 56-வது பிறந்த தினம். தொடர்ந்து வந்த தோல்விச் செய்திகளால் உற்சாகமே இல்லாமல் இருந்தார் ஹிட்லர். ஏற்கெனவே இருவரை திருமணம் செய்திருந்த ஹிட்லர், ஏப்ரல் 28 அன்று 3-வது காதலி ஈவா பிரானை திடீர் திருமணம் செய்துகொண்டார். ஏப்ரல் 30 அன்று ரஷ்யப் படைகள் பெர்லினில் புகுந்தன. அனைவரிடம் இருந்தும் விடைபெறுவதாகக் கூறி ஓர் அறைக்குச் சென்றார் ஹிட்லர். ஈவாவுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரின் தற்கொலையோடு சர்வாதிகாரம் மட்டுமல்ல, அடுத்த சில வாரங்களில் இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. அவரைப் பற்றி இன்றும்கூட ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அவருக்கு மனநோய் ஏற்பட்டதால்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டதாக ஆய்வாளர்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால், எப்படியிருந்தாலும் ஹிட்லரின் வாழ்க்கை ரத்த சகதியால் ஆனது!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 hours ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago