பாசத்தை சோத்துல காட்டாதீங்க ;  ’வீட்டிலிருந்தே வேலை’யில் குண்டாகும் கணவன்கள்! 

By வி. ராம்ஜி

'கத்தி போச்சு, வாலு வந்தது' என்றொரு பழமொழி பிரசித்தம். கரோனா காலத்தில், ஊரடங்கு வீடடங்கு என்றிருக்கின்ற சூழலில், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் பலரும், குண்டாகிவிடுவார்கள் போல என அலுப்பும் சலிப்புமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகெங்கும் கரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தோராயமாக தினமும் நூறுபேர் என கரோனா அட்டாக் பண்ணிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு... ஊரடங்கிற்குள் ஊரடங்கு என அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

வீட்டிலிருந்தே வேலை என நிறுவனங்களும் கம்பெனிகளும் சொன்ன நிலையில், குடும்பம் மொத்தமும் வீடடங்கிக் கிடக்கிறது. முன்பெல்லாம் வாரத்தின் ஆறுநாட்கள், டிபன் பாக்ஸில் அடைக்கப்பட்ட உணவு என்றிருக்கும். ஞாயிறு போற்றுதும் என்று ஆப்பமென்ன, மதியம் நான் வெஜ் அயிட்டம் என்ன அந்தவொரு நாளில் வெளுத்தெடுத்துவிடுவார்கள். சைவக்காரர்களாக இருந்தால், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என கல்யாண சமையல் சாதம் கணக்காக, முழுக்கட்டுகட்டுவார்கள்.

இப்போது கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக, ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்று வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் பலரும். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை செம சாப்பாடு என்றிருந்த நிலை, இப்போது வாரத்தின் ஏழு நாட்களும் என்றாகிப் போனதுதான், ‘கரோனா’ காலத்தின் புதிய திண்டாட்டம்.

'பாவம்... வீட்ல நிம்மதியா இப்பதான் சாப்பிடமுடியும்' என்று ஒவ்வொரு வீட்டின் குடும்பத்தலைவியரும் சமையலறையில் புகுந்து பண்ணுகிற அலப்பரைகள் ஏராளம். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல், வீட்டுக்கு வீடு தினுசு தினுசாக, வெரைட்டி வெரைட்டியாக பரிமாறப்படுகின்றன உணவுகள்.

‘அப்பாவுக்கு வத்தக்குழம்பு ரொம்பப் பிடிக்கும்’, ‘அப்பாவுக்கு தூள் பஜ்ஜின்னா ரொம்ப இஷ்டம்’, அப்பாவுக்கு அடையும் அவியல்னா கொள்ளைப்பிரியம்’, அப்பாவுக்கு பருப்பு உருண்டைக்குழம்புன்னா ரெண்டு கை சேர்த்து சாப்பிடுவாரு’ என்கிற வசனங்களில் தங்களின் பாசத்தை மழையெனப் பொழிகிறார்கள் மனைவிமார்கள். ‘அட... இதெல்லாம் உனக்கு பண்ணத் தெரியுமா? எனக்கு இத்தனை நாள் தெரியவே தெரியாதே’ என்று விழிகளில் ஆச்சரியம் படரவிடுகிறார்கள் கணவன்கள். அவர்களுக்கு எங்கே தெரியும்... யூடியூபில், எல்லா ஊர் ஸ்பெஷல் உணவுகளையும் சமைப்பதை விவரமாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள் என்பது!

போதாக்குறைக்கு, ‘திருவாரூர்ல உங்க அத்தை மணிக்கொழுக்கட்டை பண்ணுவாளே. நீ விரும்பி விரும்பிச் சாப்பிடுவியே. அதை உன் மனைவிகிட்டே பண்ணச் சொல்லி சாப்பிடு’ என்று ஒன்றுவிட்ட பெரியப்பா மகன், மெனக்கெட்டு போனில் போட்டுச் சொல்ல, பிறகென்ன... யூடியூபில் ‘மணிக்கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என்று மொத்தக் குடும்பமும் தேடும். அப்போது, அதனூடே, பால்கொழுக்கட்டை செய்வது எப்படி எனும் வீடியோவும் எட்டிப்பார்க்கும்.

இப்போது, மணிக்கொழுக்கட்டையா, பால்கொழுக்கட்டையா என்று பட்டிமன்றமே நடக்கும். ‘அப்பாவுக்கு மணிக்கொழுக்கட்டைதான் புடிக்கும்’ என்று அம்மா சொல்ல, ‘பால்கொழுக்கட்டைதான் இனிப்பா இருக்கும் போல, அதான் வேணும்’ என்று குழந்தைகள் அடம் பண்ண... ‘சரி சரி... இன்னிக்கி ஒரு கொழுக்கட்டை, நாளைக்கி ஒரு கொழுக்கட்டை’ என்று மனைவியர், சாலமன் பாப்பையாவாக தீர்ப்பு வழங்குவார்கள். மதியம் சாப்பிட்ட, வத்தக்குழம்பும் பருப்பு உசிலியுமே இன்னும் செரிக்காத போது, மூன்றரை நாலுக்கெல்லாம் கோலிகுண்டு சைஸில் உள்ள மணிக்கொழுக்கட்டையை தட்டில் போட்டு கொடுப்பார்கள்.

ஒருநாள் ஆப்பம், தேங்காய்ப்பால். காலையில் சாப்பிட்டு அந்த மயக்கத்தில் இருக்கும் போதே, பன்னிரண்டு மணி வாக்கில், ‘வெயில் என்னமா கொளுத்தியெடுக்குது. இந்தாங்க’ என்று வெஜிடபிள் சாலட் நீட்டப்படும். வெள்ளரி, வெங்காயம், கேரட் என தயிரில் மிதக்கும். அந்தக் காலத்தில், எம்ஜிஆர், சிவாஜி படங்களெல்லாம் ஹவுஸ்புல்லாகி, டிக்கெட் இல்லை என்று தியேட்டர் அளவுக்கான கூட்டம் வெளியேறுமே... அதுபோல், ஏற்கெனவே வயிறு ஹவுஸ்புல் போர்டு போடாத குறையாக நிறைந்திருக்க, மோர்க்குழம்பு, அதில் மிதக்கிற வடைகள், கத்தரிக்காய் வதக்கல், பாகற்காய் பிரட்டல் என்று டைனிங் டேபிளும் நிரம்பி வழியும். கொஞ்சம் அசந்து மறந்து முறைத்தால், ‘பாவம் உங்க அப்பாவுக்கு மோர்க்குழம்பு, கத்தரிக்கா கறின்னா அப்படியொரு இஷ்டம்’ என்று கிச்சனிலிருந்து பதில் வரும்.

மடிப்பாக்கத்தில் இருக்கிற நண்பரொருவர் போனில் பேசும் போது சொன்னார். முன்பெல்லாம் ஒருலிட்டர் ஆயில் பாட்டில், ரெண்டு லிட்டர் ஆயில் பாட்டில் வாங்கிக்கொண்டு போவார்கள். இப்போது அஞ்சு லிட்டர் கேன் தான் வாங்கிப் போகிறார்கள். இவய்ங்களாம், ஆயில் ஐட்டம்லாம் சாப்பிடுறதை நிறுத்திட்டேன் என்று போனமாதம் வரை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் என்று புலம்பினார். இப்படி ஆயில் ஆயிலாக உணவாகக் கலந்து உள்ளே போனால், உடம்பும் வயிறும் என்னாவது? திணறித்தான் போகிறார்கள் கனம் (!) பொருந்திய கணவன்மார்கள்.

இதில் இன்னொரு அட்டாக்தான் மிகப்பெரிய சுவாரஸ்யம்.

ஊரிலிருக்கும் அம்மா, மாமியார், நாத்தனார், உறவுக்காரர்கள், தோழிகள் என தினமும் நடக்கிறது கரோனா கால அவசர மீட்டிங். ‘நான் எட்டாவது படிக்கும் போது, ஒரு மே மாத லீவுல, வெள்ளிக்கிழமை அன்னிக்கி ஒரு சாம்பார் வைச்சியே... அதென்ன சாம்பார்மா?’ என்பதில் தொடங்கி, ‘ஏண்டி இவளே... உன் பர்த்டேக்கு, வீட்லேருந்து அந்த சிக்கனும் முட்டையுமா போட்டு கெட்டியா, கிரேவி மாதிரி என்னமோ கொண்டுவந்தியே. எயித் டி செக்‌ஷன்ல உக்கார்ந்து சாப்பிட்டோமே. அது எப்படிப் பண்ணனும்’ என்று பிளாஷ்பேக் ஓட்டி, குஸ்கா எப்படிப் பண்ணனும், குஸ்காவுக்கு பால்கறி எப்படிச் செய்யணும் என்றெல்லாம் மீட்டிங்கில் பேசி முடித்து, நம்மை சோதனைக்கும் சோதனைக்குழாய் ஆய்வுக்கும் உட்படுத்துகிறார்களே என்று வயிறு தடவி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆண்கள்.

கோபத்தைக் கூட அடக்கிவிடலாம். நாக்கை எப்படி அடக்குவது? சப்புக்கொட்டி, உணவு ருசியில் திளைக்கும் சிலர், ஆபீஸ் நண்பர்களுக்கு போன் போட்டு, இது எப்படி பண்றது, அது எப்படிச் செய்யணும் என்று கேட்டு, அதை ரெக்கார்டு செய்து, பின்னர் விவிதபாரதி ரேஞ்சுக்கு அதை சவுண்டாக வைத்து, வியர்க்க விறுவிறுக்க மனைவி சமைப்பதை சாப்பிட்டுவிட்டு, நண்பருக்கு போன்போட்டு, ‘ஏ கிளாஸ் நண்பா’ என்று நன்றி தெரிவிக்கிறவர்களும் உண்டு.

எதுஎப்படியோ? ஊரடங்கு வீடடங்கு காலமெல்லாம் முடிந்து, மீண்டும் வேலைக்குச் செல்லும் தருணத்தில், ‘என்னடி இது, சட்டையெல்லாம் டைட்டா இருக்கு. பேண்ட் போடவே முடியல’ என்கிற நிலை நிறையபேருக்கு வரும் போல! ’சும்மா இருங்க... உங்க கண்ணே பட்ரும் போல. சாயந்திரம் திருஷ்டி சுத்திப் போடணும்’ என்று வெள்ளந்தியாகச் சொல்லுவார்கள் மனைவிமார்கள்.

‘என்ன... வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் எதுனா டிஷ் பண்ணி, போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடுவீங்க. அப்புறம்.. இன்னிக்கி கேரட் அல்வாவும் முந்திரி பக்கோடாவும் பண்ணி போட்ருந்தேன். ஒரு லைக்கும் போடலியே நீங்க’ என்று வாட்ஸ் அப்பில், வாய்ஸ் மெசேஜ் வர... வீடு கேரட் அல்வா பண்ணுவது எப்படி என்றும் முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்றும் தேடத்தொடங்கும்.

இந்த கரோனா காலத்தில், ஏதேனும் உணவு செய்து, அதை முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவதுதான், இப்போது மிகப்பெரிய ஸ்டேட்டஸ்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்