அனைத்துத் தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, இருக்க இடம், அணிய ஆடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் உலகில் உள்ள 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மையமாகக் கொண்டே இயங்கும் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன.
தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத் தவிர பிற மொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவற்றை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஓராண்டு முழுக்கக் காணவேண்டிய திரைப்படங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் பார்த்து முடித்தாகிவிட்டது.
திரைப்படச் செய்திகளைக் கேள்விப்படுவதும், சுவரொட்டி விளம்பரங்களைக் காண்பதுமே வாழ்வின் பெருமகிழ்ச்சியாக இருந்த காலங்கள் ஒழிந்துவிட்டன. முப்பது பைசா கட்டணமாகக் கொடுத்து திரைப்படம் பார்த்த எனக்கு கைக்குள்ளேயே இருக்கும் கைப்பேசிக்குள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையெல்லாம் நினைத்த நேரத்திலெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் எனும் வசதியை அறிவியல் அமைத்துத் தந்திருக்கிறது.
காத்திருப்பின் காலம்
» ’’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ல நடிச்சேன்; செம அடி வாங்கினேன்’’ - நடிகை வடிவுக்கரசி பிரத்யேகப் பேட்டி
உலகம் முழுமையிலும் 1 லட்சத்து 37 ஆயிரம் திரையரங்குகள் உள்ளன. திரையரங்குகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம், இந்தியா மூன்றாமிடம். அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 40,000 திரைகள் கொண்ட அரங்கங்கள் உள்ளன. மக்கள் தொகையில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம் கொண்ட நம்நாட்டில் 11,000 திரைகள் கொண்ட அரங்குகள் மட்டுமே உள்ளன. இவற்றுள் ஒரே ஒரு திரையரங்கைக் கொண்ட செனகல் எனும் தனி நாடான தீவும் இருக்கின்றது. உலகிலேயே திரைப்படம் பார்க்க மிகக்குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான் எனும் செய்தியையும் அறிய முடிகிறது.
கரோனாவின் தாக்குதலிலிருந்து இவையெல்லாம் இனி தப்பிக்குமா எனப் பட்டியலிடும் பொழுது திரையரங்கங்கள் முதலில் நிற்கின்றன. ரூ.5 கோடியிலிருந்து ரூ.2500 கோடிகள் வரை செலவழித்து உருவாக்கிய அமெரிக்கத் திரைப்படங்கள்கூட எப்பொழுது திரைக்கு வரும் எனத்தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றன.
கரோனா தொற்றுக்கிருமியிலிருந்து மீள மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்து அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தி பலன் கண்டபின்தான் அனைத்திற்கும் தீர்வு. இன்றைக்கு மருந்து கண்டுபிடித்தாலே நடைமுறைக்கு வர ஓராண்டு, இரண்டாண்டு ஆகலாம் என ஆளாளுக்குச் சொல்கிறார்கள். திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள் மட்டும் திரைப்படத்தொழிலில் முதலீட்டாளர்கள் இல்லை. திரையரங்கு உரிமையாளர்களும்தான். மக்களுக்கு நம்பிக்கை உருவாகி திரையரங்கில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க முன்வரும் வரைக்கும் திரையரங்குகள் காத்திருக்கத்தான் வேண்டும்.
மக்கள் காத்திருக்க மாட்டார்கள்
ஆனால், முடித்து தயார் நிலையிலுள்ள திரைப்படங்கள் அதுவரைத் திரையரங்குகளுக்குக் காத்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவரை மக்கள் காத்திருக்க மாட்டார்கள்!. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஏதோ ஒரு வடிவில் காணக்கிடைக்கின்ற திரைப்படங்கள்தான். அவற்றை எந்த வடிவத்தில் எந்தக் கருவிகளில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல என நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் உயிர் வாழவே பணத்திற்கு அலையப்போகும் மக்களுக்கு இவ்வாறு வீட்டுக்குள்ளேயே திரைப்படங்களைப் பார்ப்பதால் பெரும் பணம் மிச்சம். ஒரு குடும்பம் ஒரு படத்துக்குச் செலவழிக்கும் தொகையில் சில ஆண்டுகள் முழுக்க நினைத்த இடத்தில், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி... இப்படி தங்களின் வசதிக்கேற்ப குடும்பமே எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இதுபோக இதனால் நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுதலை, தின்பண்டங்கள், வாகன நிறுத்தக் கட்டணம் போன்ற இந்தச் செலவுகளிலிருந்தும் விடுதலை. இதுபோக எரிபொருள் மிச்சம் என இப்படிப்பட்ட எண்ணற்ற பலன்களை அனுபவித்துவிட்டதால் இதுவே பின்னர் பழக்கமாகவும் ஆகிவிடலாம். இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்குச் செலவழித்த தொகை கிடைக்குமா என்றால்! கட்டாயம் அதற்கு மேலும் கிடைக்கும் என ஹாலிவுட் தயாரிப்பாளர்களே கூறுகிறார்கள்.
திரையரங்கில் பார்க்கும் பார்வையாளர்களைவிட மின்திரையில் (Amazon,Netflix, etc..&Television) பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடிவிட்டதாம். இதற்குக் காரணம் திரையரங்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டவர்கள்.
எல்லோரும் மீண்டும் பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்தியா போன்ற பல மொழிகளில், அவர்களுக்கான மொழியில் தயாரிக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் இன்று ஆங்கிலத் துணை எழுத்துகளுடன் (Sub-Titles) உலகத்திலுள்ள மக்கள் அனைவராலும் பார்க்க முடிகிறது.
கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டிருந்தால் தமிழ்த் திரைப்படங்களும் உலக மக்கள் அனைவராலும் கவனிக்கப்படும். கடந்த ஆண்டில் தமிழில் வெளியான “Tolet” எனும் திரைப்படம் உலகம் முழுக்க அதிகப் பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை அறிகிறேன். இந்தப் படம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிக்கலையும், தனிப்பட்ட கலாச்சாரங்களையும் பதிவு செய்ததால் மட்டுமே இது நிகழ்ந்திருக்கின்றது. அதே நேரத்தில் கதாநாயகர்களை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள் எல்லாம் தமிழர்கள் மற்றும் அதையும் தாண்டி மிகச்சிறிய அளவில் இந்தியர்களால் மட்டுமே பார்க்கப்பட்டன.
எல்லைகளை உடைத்தெறியும் இணையம்
வீட்டுக்குள் வந்துவிட்ட மின்திரை ஊடகங்கள் திரைப்படப் பார்வையாளர்களின் திரைப்படம் குறித்த பார்வையை மாற்றியிருக்கின்றன. சுவையைக் கூட்டியிருக்கின்றன. கதை என்றால் கதாநாயகர்களை முன்னிறுத்தித்தான் உருவாக்க வேண்டும், கதாநாயகிகள் களிப்பூட்டுபவர்களாக, கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனும் காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த விதிகளை உடைத்திருக்கின்றன. இனி கதாநாயக வழிபாடும், கற்பனை பிம்பங்களும் உடைந்துபோகும். திரைப்படங்கள் இதுவரை பேசாமல் ஒதுக்கி வைத்திருந்த அனைத்தையும் பேசும்.
இந்த மாற்றங்கள் மற்ற மொழிகளில், நாடுகளில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே வரத்தொடங்கிவிட்டன. முப்பது வயதாகிவிட்டப் பெண்களைக் கதாநாயகியாக்க, முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கவைக்க முன்வர மாட்டார்கள் என்பதெல்லாம் இனி இல்லாமல் போகும். உலகில் தமிழ் மொழி மற்றும் சில மொழிகளைத் தவிர்த்து அனைத்திலும் பாதிக்கு மேற்பட்ட படங்கள் எப்பொழுதோ பெண்களை மையமாகக்கொண்ட படங்களாக மாறிவிட்டன.
ஒரு கதாநாயகனை முன்வைத்து மாபெரும் வெற்றிப்படத்தை 25 லட்சம் பேர் இதுவரை பார்த்தார்கள் என்றால் யாரென்றே முன்பின் அறியாத புது நடிகர்களைக் கொண்ட திரைப்படங்களை ஒரு கோடி பேருக்குமேல் உலகம் முழுவதிலும் இருந்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் டிசம்பரிலேயே வெளியாக வேண்டியிருக்கப் படங்கள் ஆயிரக்கணக்கில் முடங்கிக்கிடக்கின்றன. ரூ.1,500 கோடிகளிலிருந்து ரூ.2,500 கோடி வரை செலவழிக்கப்பட்ட படங்கள்கூட திரையரங்குகள் செயல்படும் நாளுக்காகக் காத்திருக்காமல் மின்திரையின் மூலமாக மக்களைச் சென்றடைவதற்கான திட்டங்களை ஆராயத் தொடங்கிவிட்டன எனும் செய்திகளை இணையங்களில் காண முடிகிறது. திரைப்படக்கலை அனைத்துக் கலைகளையும் உள்ளடக்கி செயல்படத் தொடங்கிவிட்டதால் மக்கள் அதை எப்போதும் இழக்க மாட்டார்கள். திரைப்படக் கலை அழிந்துபோகும் என கவலைகொள்ள வேண்டியதில்லை. அதன் வடிவம்தான் மாறிக்கொண்டேயிருக்கும்!
எவ்வாறு பேசாத படங்கள் பேசும் படங்களாக மாறியதோ, எவ்வாறு கருப்பு வெள்ளை படங்கள் வண்ணப்படங்களாக மாறியதோ, படம் இயக்கும் கருவிகள் ஆளில்லாத முறைக்கு மாறியதோ, படச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் சிறிய மின்விசை கேமராக்களில் உருவாக்கப்படுகிறதோ அதேபோல் திரையரங்குகளில் மட்டும் இருந்த சினிமா மின்திரைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. திரைப்படம் என்பது ஒலி, ஒளி,காட்சிகளின் தனித்துவ சிறப்புத்தன்மை இவற்றின் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொருவரின் கற்பனைகளையெல்லாம் கடந்த வித்தைக் கலை. சில படங்கள் தரும் அனுபவத்தைத் திரையரங்குகளில் மட்டுமே பெற முடியும். அந்த அனுபவத்தை அடைய விரும்பும் மக்கள் தொடர்ந்து திரைப்படங்களைத் திரையரங்கில் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
திரையரங்க அனுபவம் எத்தனை அபாரமானது என்பதை உணர்வுபூர்வமாக தங்கள் ரத்த அணுக்களில் பதித்துக்கொண்ட பார்வையாளர்கள் யாரும் ‘திரையரங்குகள் மூடியே இருக்கட்டும்’ என்று என்றைக்கும் சொல்லப்போவதில்லை. அதேநேரம், 40,000 அரங்குகளைக் கொண்ட அமெரிக்காவில்தான் வீட்டிற்குள்ளேயே மின்திரையில் அதிகப்படியானவர்கள் திரைப்படத்தைப் பார்க்கிறார்கள் எனும் உண்மையையும் நாம் உணர வேண்டும். எந்தப் படத்தை எங்கே காணலாம் என முடிவெடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் பார்வையாளனின் உரிமை! அறிவியல் திரைப்படத்தைக் காற்றில் பார்க்கும் காலத்திற்கும் அழைத்துக்கொண்டு போகலாம். அதையும் நம்மால் தவிர்க்க இயலாது.
தொடர்புக்கு: thankarbachan@yahoo.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago