ஒருவர் படபடவெனப் பேசுவதை, ‘மடை திறந்த வெள்ளம்’ என்று சொல்லுவார்கள். நடிகை வடிவுக்கரசி மனதில் உள்ளதையெல்லாம் சொல்ல நினைத்துப் பேசுகிறார். தங்குதடையின்றிப் பேசுகிறார். மளமளவெனப்பேசுகிறார். ஞாபக அடுக்குகளில் இருந்து எடுத்துப் பேசுகிறார். ஒரு தெளிந்த நீரோடை போல், அவரிடம் இருந்து விழுந்துகொண்டே இருக்கின்றன வார்த்தைகளும் உண்மைகளும்!
’இந்து தமிழ் திசை’ யின் 'Rewind With Ramji' வீடியோ நிகழ்ச்சியில், வடிவுக்கரசியின் மனம் திறந்த பேட்டியின் எழுத்தாக்கம் தொடர்கிறது.
‘’கன்னிமரா ஹோட்டலில் இண்டர்வியூ. ரிசப்ஷனிஸ்ட்னா என்ன வேலைன்னு நமக்குத் தெரியும். மெயிண்டெனென்ஸ்னா, எலெக்ட்ரிக்கல் ஒர்க். அதுவும் தெரியும். ஹவுஸ்கீப்பீங்னா? இது என்னன்னு அவங்ககிட்டயே கேட்டேன். ரூம்ஸ் சுத்தமா இருக்கா, எல்லாம் வைச்சிருக்கானு பாக்கணும். உங்களுக்குக் கீழே ரெண்டுமூணு பேர் இருப்பாங்க. ஒருவேளை... ஏதாவது ஒரு இக்கட்டான சூழல், ஸ்டிரைக் அப்படி இப்படி வந்துருச்சுன்னா, எல்லாவேலைகளும் பாக்கணும். முக்கியமா, டாய்லெட்லாம் கூட க்ளீன் பண்ணனும். பண்ணுவீங்களா?’ அப்படீன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் கூட தயங்காம ‘கிளீன் பண்ணுவேன் சார்’னு சொன்னேன். ’ஓகே. நீங்க வேலைக்கு ஜாயின் பண்ணலாம்’னு சொன்னாங்க. அங்கே எனக்கு ஸ்டைஃபெண்ட் 350 ரூபா. அப்போ... அது எனக்கு அவ்ளோ பெரிய காசு.
கன்னிமரால வேலைக்கு சேந்துட்டேன். அதேசமயம், தூர்தர்ஷன்ல வாரத்துக்கு ஒருநாள்ங்கறதால, அதையும் விடாமப் பண்ணிட்டிருந்தேன். அந்தசமயத்துல, நிஜமாவே ஹோட்டல்ல ஸ்டிரைக் வந்துச்சு. ஒர்க்கர்ஸ்லாம், ஹோட்டல் வாசல்ல உக்கார்ந்து ஸ்டிரைக் பண்ணிட்டிருக்காங்க. எனக்கு இன்சார்ஜ் ரேகான்னு ஒரு மேடம். அவங்க, நான், தீபான்னு ஒருத்தங்க. ரூம்ஸ் கிளீன் பண்ணனும். லாபி கிளீன் பண்ணனும். டாய்லெட்ஸ்லாம் சுத்தம் பண்ணனும். எங்கிட்ட சொன்னாங்க. நான் கிட்டத்தட்ட 12 ரூம்ஸ் டாய்லெட்டுன்னு மளமளன்னு க்ளீன் பண்ணினேன்.
இதையெல்லாம் ஜி.எம்.கிட்டயும் சொன்னாங்க. டியூட்டி முடிஞ்சு வெளியே போனா மறுபடியும் உள்ளே வரமுடியாத நிலை. ‘இங்கேயே தங்கிரு வடிவு’ன்னு ரேகா மேடம் சொன்னாங்க. ‘எங்க வீட்ல ஹோட்டல்ல வேலை பாக்கறதே சுத்தமாப் பிடிக்கல. வீட்டுக்கும் வராம, இங்கேயே தங்கினேன்னா அவ்ளோதான் மேடம்’னு நான் சொல்லிட்டுக் கிளம்பினேன். வெளியே ஸ்டிரைக் பண்றவங்க போய், என் குடும்ப நிலையையெல்லாம் சொல்லி, புரியவைச்சேன். அப்புறம் இதேமாதிரி ஒருவாரம் வேலை பாத்தேன். அப்போ, என்னை பர்மெனண்ட் பண்ணி லெட்டர் கொடுத்தாங்க. 1,500 ரூபா சம்பளம்.
இதேகாலகட்டத்துல, வேலை தேடுறதுதான் எனக்கு மிகப்பெரிய வேலை. ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு அப்ளை பண்ணலாம்னு, ஊர்வசி புடவைக் கடைக்குப் பக்கத்துல இருக்கிற போட்டோ ஸ்டூடியோவுக்குப் போய், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தேன். ஆனா, 19 வயசு இருக்கணும்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அப்போ எனக்கு 19 வயசாகலை. ‘கன்னிப்பருவத்திலே’ படம் பண்ணும்போதுதான் எனக்கு 19 வயசு.
அப்ப, பாரதிராஜா ‘கிழக்கே போகும் ரயில்’ படம் எடுக்கறதுல இருக்கார். ஸ்டூடியோல இருந்த என் போட்டோவும் அவர் கைக்குப் போயிருச்சு. அப்ப புடவைக்கடைல வேலை. பி.வி.பாலகுரு சார், என்னைப் பாக்க வந்தார். பாரதிராஜா கூட்டிட்டு வரச்சொன்னார்னு சொன்னார். எனக்கு அப்போ என்ன நினைப்புன்னா, சினிமாவை நம்பித்தான் நம்ம படிப்பு போச்சு, குடும்பம் இந்த நிலைக்கு வந்துருச்சு, வாழ்க்கையே மாறிருச்சுன்னு ஒரு எண்ணம். அதனால நான் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன். அதுக்குப் பிறகுதான் கன்னிமரால வேலைக்குச் சேர்ந்ததெல்லாம் நடந்துச்சு. ஆக, ‘கிழக்கே போகும் ரயில்’ வாய்ப்பு... நான் ரயிலேறலை.
அடுத்தாப்ல, ‘கண்மணிப்பூங்கா’ நிகழ்ச்சியைப் பாத்துட்டு மறுபடி கூப்புடுறாங்க. அப்பவும் மறுத்தேன். அப்பதான் தஞ்சை வாணன் சார் இன்னும் சிலரெல்லாம்...’ எல்லாரும் ஒரு ஆல்பம் போட்டுக்கிட்டு சினிமால சான்ஸ் தேடுறாங்க. ஆனா உனக்கு வாய்ப்பு தேடி வருது. போய்ப் பாரு’ன்னு சொன்னாங்க. எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. கன்னிமரால என் கூட வேலை பாக்கற அமுதாங்கற தோழியையும் கூட்டிக்கிட்டு போனேன்.
அங்கே ஆபீஸ்ல செம கூட்டம். ‘இவர்தான் எஸ்.ஏ.ராஜ்கண்ணு’ன்னு சொன்னாங்க. ‘இவர்தான் டைரக்டர் பாரதிராஜா’ன்னு சொன்னாங்க. அவங்களுக்கு ‘ஹாய்’ சொல்லிட்டு நின்னுட்டிருந்தேன். அப்புறம் நாங்கபாட்டுக்கு கிளம்பி வந்துட்டோம். அதுக்குப் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’ படமும் வந்துருச்சு.
அடுத்த படம்தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. அப்போ பாரதிராஜா சார், ‘ஹோட்டல்ல வேலை பாக்கற பொண்ணு வந்துச்சே. ஹாய் சொல்லுச்சே... அதைக் கூட்டிட்டு வாங்கய்யா’ன்னு சொன்னாராம். தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.சாரே வந்துருந்தார். விவரம் சொன்னார். ‘என்னடா இது... நம்ம லைஃப்ல பாரதிராஜா சார் வந்துக்கிட்டே இருக்காரே...’னு யோசனை.
அதே தோழி அமுதாவைக் கூட்டிக்கிட்டு போனேன். அது கே.ஆர்.ஜி. சாரோட வீடு. செம கூட்டம். மேக்கப் டெஸ்ட்டெல்லாம் நடந்துட்டிருக்கு. கே.ஆர்.ஜியோட பையனும் பொண்ணும் குடுகுடுன்னு ஓடிவந்தாங்க. ‘அக்கா,நீங்கதானே கண்மணிப்பூங்கால கதை சொல்லுவீங்க’ன்னு கேட்டாங்க. அப்புறம் அவங்க அம்மாவைக் கூட்டிட்டு வந்தாங்க. அவங்க எங்களை உள்ளே கூட்டிட்டுப் போயி, காபிலாம் கொடுத்தாங்க.
அப்புறமா, பாரதிராஜா சார் வந்தார். ஒரு மிரட்சியோட அவரைப் பாத்தேன். ’இந்தப் படத்துல ஒரு அருமையான கேரக்டர். கமல் சாரோட நடிக்கணும். நீங்கதான் நடிக்கிறீங்க’னு மளமளன்னு சொல்லிட்டுப் போயிட்டார். மேனேஜர் வீட்டு அட்ரஸ்லாம் வாங்கிக்கிட்டார். எனக்கே உதறலெடுக்குது. ஹோட்டல் வேலையவே வீட்ல ஒத்துக்கலை. இப்போ, சினிமால நடிக்கிறேன்னு சொன்னா அவ்ளோதான்!
‘என்ன அமுதா பண்றது’ன்னு கேட்டேன். ‘அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. அதனால, ஹோட்டல்ல ரெண்டுநாள் நைட் ஷிப்ட்னு சொல்லிட்டு, நடிக்கப் போயிரு’னு சொன்னா. சரின்னு நானும் அப்படியே சொன்னேன்.
சபையர் தியேட்டர் பக்கத்துலதான் ஷூட்டிங். போனேன். முடியை என்னென்னவோ பண்ணினாங்க. புருவத்தையும் எடுத்துட்டாங்க போல. மேக்கப்லாம் போட்டாங்க. அங்கே, என் பெரியப்பா கம்பெனில வேலை பாத்த புரொடக்ஷன் வேலை பாக்கறவர் அங்கே இருந்தார். அவர்கிட்ட ‘யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன்.
அதுக்குப் பிறகு, எனக்கு டயலாக் சொல்லிக் கொடுக்க ஒருத்தர் வந்தார். அவர்தான் பாக்யராஜ் சார்னு எனக்கு அப்புறமாத்தான் தெரியும். அவர் சொன்ன டயலாக்கையெல்லாம் கேட்டுக்கிட்டேன். தூர்தர்ஷன்ல, லைவ்ல ‘கண்மணிப்பூங்கா’ பண்ணின அனுபவம், இங்கே கைகொடுத்துச்சு. அந்தப் படத்துல என் கேரக்டர் பேரு சித்ரா.
கமல் சார் வந்தார். எனக்கு இன்னும் பயம் வந்துருச்சு. ஏ.பி.என்.சார் வீட்டுப் பொண்ணாச்சேனு தெரிஞ்சு சொல்லிருவாரோனு பயம்.
சினிமால, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துல நான் நடிச்ச முதல் காட்சி... எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்ச, யாராலயும் மறக்கமுடியாத அந்த இண்டர்வியூ காட்சிதான். கமல் சார் கேட்க, நான் பதில் சொல்லிக்கிட்டே வரணும். அப்போ, ’மிஸ் சந்திரா’ன்னு கமல் சார் சொல்ல, ‘ஸாரி சார், எம்பேரு சித்ரா’ன்னு சொன்னேன்.
ஷூட் முடிஞ்சு, கமல் சார், ‘இந்தப் பொண்ணுக்கு ப்ரஸென்ஸ் ஆஃப் மைண்ட் ஜாஸ்தி. நல்லா நடிச்சிருக்கு. பெரியாளா வரும்’னு பாரதிராஜா சார்கிட்ட சொன்னார். அப்புறம் கவுண்டமணி கூட நடிக்கிற காட்சிகளும் எடுத்தாங்க. முடிஞ்சுது. கிளம்பி வந்துட்டேன்.
மறுநாள்தான் கண்ணாடியைப் பாக்கறேன். புருவத்தைக் காணோம். அம்மா பாத்தா என்ன பதில் சொல்றது? ரோட்ல, பஸ்ல எப்படிப் போறது. நெத்தில கை வைச்சுக்கிட்டே புருவத்தை மறைச்சிக்கிட்டு வேலைக்குப் போனேன். அடுத்து ஒரு ரெண்டுநாள் இருக்கும். இன்னும் கொஞ்சம் சீன்ஸ் எடுக்கணும்னு ‘சிகப்பு ரோஜாக்கள்’ பட யூனிட் ஆள் ரெண்டுபேர், எங்க வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க.
அப்பாதான் கதவு திறந்தார். ‘வடிவுக்கரசி... ஷூட்டிங்...’னு சொன்னாங்க. ‘இல்லப்பா, என் பொண்ணு ஹோட்டல்ல வேலை பாக்குது, தூர்தர்ஷன்ல வேலை பாக்குது’னு அப்பா சொன்னாரு. ’பக்கத்துல ஒரு பொண்ணு சினிமா, டிராமாலலாம் நடிக்குது’ன்னு சொன்னாரு. அங்கே போயிட்டாங்க. ஆனா அங்கே இல்லைன்னு தெரிஞ்சு, திரும்பிப் போயிட்டாங்க.
ஆனா திரும்பவும் வந்தாங்க. கவுண்டமணியோட நடிக்கிற சீன் போட்டோ, கமல் சார் ரூமுக்குள்ளே வரும் போது, ஹேண்ட்பேக்கை ஸ்டைலா தோள்ல போட்டுக்கிட்டு வருவேன். அந்த ஸ்டில்லுன்னு எடுத்துட்டு, எங்க வீட்டுக்கு வந்து கேட்டாங்க. ’இந்தப் பொண்ணுதான் ஷுட்டிங் வரணும். கூட்டிட்டு வரச்சொன்னாங்க’னு போட்டோவைக் காட்டினாங்க.எல்லாத்தையும் வாங்கி வைச்சுக்கிட்டாரு அப்பா.
ஹோட்டல் வேலை முடிஞ்சு, வீட்டுக்கு வந்தேன். அப்பா என்னைக் கூப்பிட்டாரு. கையில இருந்த போட்டோவைக் காட்டி, ‘என்னது இது’ன்னு கேட்டாரு.
நான் அமைதியா, தலைகுனிஞ்சபடி நின்னுக்கிட்டிருந்தேன்.
‘நான் தூக்குல தொங்கி சாகப் போறேன்’னு அப்பா கத்துனாரு. ’சொல்லு... யாரு இது?’ன்னாரு.
‘நான்தாம்பா’ன்னேன். எல்லாக் கதையையும் சொன்னேன்.
அன்னிக்கி விழுந்துச்சு பாருங்க அடி... செம அடி!
- நினைவுகள் தொடரும்
வடிவுக்கரசியின் பிரத்யேக வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago