அம்மா நடிகையிடம் பேசிக்கொண்டிருப்பதாகவே இல்லாமல், நம் வீட்டு அம்மாக்களிடமும் பெரியம்மாக்களிடமும் பேசிக்கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ, என்ன உணர்வு மேலிடுமோ... அப்படித்தான் இருந்தது நடிகை வடிவுக்கரசியிடம் பேசும்போதும்!
’இந்து தமிழ் திசை’யின் 'Rewind with Ramji' வீடியோ நிகழ்ச்சிக்காக, நடிகை வடிவுக்கரசி மனம் திறந்து பேசினார்.
அவர் பேசிய வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது.
’’என்னுடைய சொந்த ஊர் ராணிபேட்டை. எங்க அப்பா விவசாயி. ஆனாலும் அவருக்கு சினிமாவில் பல தொடர்புகள் உண்டு. ஜே.ஆர்.மூவீஸ், தேவர் பிலிம்ஸ்னு தொடர்புகள் இருக்கு. தேவர் பிலிம்ஸ் எடுக்கிற படங்களில், ஏதேனும் ஒரு சின்னவேஷத்தில் வந்துவிடுவார் அப்பா. இப்படி எம்ஜிஆருடன் ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘நீதிக்குப் பின் பாசம்’ என பல படங்களில் நடித்திருக்கிறார்.
» ’உன்னை ஆடியன்ஸ் திட்டப்போறாங்க பாரு’ ; நடிகர் மோகனிடம் சொன்ன பாலுமகேந்திரா!
» கலகல ‘கலாட்டா கல்யாணம்’; சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல்படம்!
சினிமாவுக்கும் எங்கள் குடும்பத்துக்குமான இன்னொரு சொந்தம்... இயக்குநர் ஏ.பி.நாகராஜன். இவர் என்னுடைய பெரியப்பா. அதாவது, அம்மாவோட அக்காவோட கணவர். லீவு நாட்களில், ராணிபேட்டையில் இருந்து பெரியப்பா வீட்டுக்கு வருவோம். ஆனால், சினிமா ஷூட்டிங் எதையும் நாங்கள் பார்த்தது கிடையாது.
லீவுக்கு பசங்க எல்லாரும் வந்திருக்காங்களே என்று கோயில்களுக்குப் போகலாம் என ஒரு டூர் போட்டார் பெரியப்பா ஏ.பி.நாகராஜன். இந்த விஷயம் நடிகர் சிவகுமார் அண்ணன், மனோரமா ஆச்சின்னு அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சதும், ‘அண்ணே, நாங்களும் வரோம்ணே’ என்று பெரியப்பாவிடம் தெரிவித்தார்கள்.
அப்போதெல்லாம் பஸ்சில் டூர் செல்வது வழக்கம். அது இப்போதும் இருக்கிறது. சரி ஒரு பஸ் பிடித்து போய்வரலாம் என்றிருந்த வேளையில், அதையே ஒருகதையாக்கி, படமெடுத்தால் என்ன என்று பெரியப்பா நினைத்து செயல்படுத்தியதுதான் ‘திருமலை தென்குமரி’. இந்தப் படத்தின் மூலமாகத்தான், சினிமாவில் நடிப்பவர்களையெல்லாம் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது எங்களுக்கு!
இப்படி இருந்த சமயத்தில், மிகப்பெரிய பேரிடி. ‘முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை, முப்பது வருஷம் கெட்டவருமில்லை’ என்று சொல்வார்களே... அதுபோல் எங்கள் குடும்பம் தடக்கென்று கீழே போனது. எங்க அப்பா பேரு சண்முகம். அம்மா பேரு சந்திரா (அவர்களின் படங்களை கழுத்தில் டாலராக அணிந்திருப்பதாகச் சொல்கிறார்). அப்பா, படங்களுக்கு பைனான்ஸும் செய்துகொண்டிருந்தார்.
இந்தசமயத்தில், ராணிபேட்டையில் இருந்து சென்னை நந்தம்பாக்கத்திற்கு வந்துவிட்டோம். எம்ஜிஆரின் தோட்ட வீட்டுக்கு அருகில்தான் பெரியப்பாவின் வீடு. ஒன்பதாவதெல்லாம் இங்கே படிச்சேன். அப்புறம் பியுசியை வாலாஜால படிச்சேன். அதுக்குப் பிறகுதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சதெல்லாம் நடந்துச்சு.
என் பெரியப்பா, லேடீஸ் தியேட்டருக்கெல்லாம் போய் படம் பாக்க அனுமதிக்கமாட்டாங்க. அதனால, வீட்லயே 16 எம்.எம்.மில் ‘திருவிளையாடல்’, சரஸ்வதி சபதம்’னு படங்கள் போட்டுக் காட்டுவாங்க. அதுக்கு அப்புறமா, தியேட்டரே கட்டினாங்க. அதுல படங்கள் பாத்தோம். இதுதான் பிற்காலத்துல, ஏ.பி.என். டப்பிங் தியேட்டரா மாறுச்சு. எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா... பெண்கள் வெளியே போகக்கூடாது, தியேட்டர்லலாம் படம் பாக்கக் கூடாதுன்னு இருந்த குடும்பத்துலேருந்து வந்தவ நான். ஆனா குடும்பச் சூழலும் வறுமையும் என்னை வேலைக்குப் போக வைச்சுச்சு. சினிமாலயும் நடிக்க வைச்சுச்சு. இன்னமும் நடிக்க வைச்சிக்கிட்டிருக்குங்கறதுக்காக சொல்றேன்.
குடும்பத்தோட சூழல், காலத்தின் சூழல். நல்லா வாழ்ந்த குடும்பமாச்சே. அப்போ மெளபரீஸ் ரோட்ல, ஊர்வசின்னு ஒரு கடை. புடவைக் கடை. புடவைக்கெல்லாம் எம்பிராய்டரிங்லாம் பண்ற கடை. அதுல வேலை கேட்டோம். இதேகாலகட்டத்துல, தஞ்சை வாணன் சார்தான், தூர்தர்ஷன்ல வேலை பாத்துக்கிட்டிருந்தார். அவர் என் அப்பாவுக்கு நல்ல நண்பர். அதேபோல மணிவர்மான்னு காங்கிரஸ்ல இருந்தார். அவர் என் அப்பாவோட அண்ணன். இதனாலயும் தஞ்சை வாணன் சார் நல்ல பழக்கம். அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லி வேலை கேட்டோம்.
இதேசமயத்துல, நந்தம்பாக்கத்துல இருக்கும்போது, பக்கத்திலேயே இருந்த பிரைமரி ஸ்கூல்ல டீச்சரா வேலைக்கு சேர்ந்தேன். மாதச் சம்பளம் 75 ரூபாய். அதுக்குப் பிறகு, அந்த தோட்டத்தையெல்லாம் வித்துட்டு, நந்தனம் ஏரியாவுக்கு வந்தோம். என் அண்ணன் பேரு அறிவழகன். அவர் நந்தனம் ஹவுஸிங் போர்டுல இருந்தார். சிங்கிள் ரூம் அது. எங்க தோட்டம் ரொம்பப் பெருசு. ஏகப்பட்ட மாடுகள் வளர்த்தோம். ரெண்டு கிணறு இருக்கும். வயல் இருக்கும். அதெல்லாம் விக்கும்போது, அங்கே இருந்த பொருட்களையெல்லாம் வேலை பாத்தவங்களுக்கே கொடுத்துட்டு, நாலஞ்சு புடவை, தட்டுமுட்டு சாமான்கள்னு எடுத்துக்கிட்டு, அண்ணனோ ஒத்தை ரூமிற்கு வந்தோம். டீச்சர் வேலையை விட்டாச்சு. தூர்தர்ஷன்ல சேர்ந்தேன்.
அங்கே என்னன்னா... புரொடக்ஷன்ல வேலை பாத்தேன். அப்போ 20 அம்சத் திட்ட காலம். அதைவைச்சு பாடணும். நான் நல்லாப் பாடமாட்டேன். கோரஸாப் பாடணும். அதுல ஒருதடவை பாடினால், 12 ரூபா ஐம்பது காசு தருவாங்க. குழந்தைகள் நிகழ்ச்சி காம்பியர் பண்ணினால், 75 ரூபாய் தருவாங்க. அதுக்கு செக் தருவாங்க. அப்பா பேங்க் அக்கவுண்ட்டும் கிடையாது, ஒண்ணும் கிடையாது. அதை பக்கத்தில் இருக்கிற யுனிவர்சிட்டில இருக்கிற பேங்க்ல கொடுத்து பணமா மாத்துவேன். இப்படித்தான் ஆரம்பிச்சது என் வாழ்க்கை.
அந்த நிகழ்ச்சி பேரு ‘கண்மணிப் பூங்கா’. எனக்கு சீனியர் பிரேம் ஜோதின்னு இருந்தாங்க. ’குழந்தைங்களா... இன்னிக்கி அக்கா என்ன கதை சொல்லப்போறேன் தெரியுமா?’ன்னு ஆரம்பிச்சு கதை சொல்லுவேன். மாசத்துக்கு ரெண்டு புரோகிராம் கிடைக்கும். அப்புறம் 12 ரூபா 50 காசுக்கு கோரஸ் பாட்டு. தூர்தர்ஷன்ல, சாயந்திரம் நிகழ்ச்சியை முடிச்சிட்டு, எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வழியா சிம்சன் பஸ் ஸ்டாப்புக்கு வருவேன். காடு மாதிரியிருக்கும். கும்மிருட்டு. தடதடன்னு ஓடிவருவேன். பயமா இருக்கும். பஸ் நம்பர் கூட ஞாபகம் இருக்கு. அஞ்சாம் நம்பர் பஸ். கூட்டமா இருந்தா ஏறமாட்டேன். ரெண்டு மூணு பஸ் விட்டுட்டு அப்புறமா ஏறி, அடையார் பார்க் ஹோட்டல்கிட்ட இறங்குவேன். அப்பதான் ஹோட்டல் கட்டிட்டிருந்தாங்க. அங்கேயும் இருட்டாத்தான் இருக்கும். பஸ்சை விட்டு இறங்கினதும் விறுவிறுன்னு நந்தனம் குவார்ட்டர்ஸுக்கு ஓடிவருவேன். இப்படி ஓடியோடிதான் என் வாழ்க்கை ஆரம்பமாச்சு.
அப்போ, ஊர்வசி கடைலயும் வேலை பாத்தேன். அந்த ஓணர் பேரு பிரேம்சந்த். அவர்தான் ஒருநாள், ‘ஹிண்டு பத்திரிகை’யைக் காட்டினார். அதுல ஒரு விளம்பரம். கன்னிமரா ஹோட்டலில், ஹவுஸ்கீப்பிங், மெயிண்டெனென்ஸ், ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு ஆள் வேணும்னு வந்துருச்சு. அங்கே வந்து கத்துக்கலாம்னு இருந்துச்சு. அவர் சொன்ன உடனே, நானும் என் அக்கா சுகுணாவும் அப்ளை பண்ணினோம்.
இருந்த இடங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வித்தாச்சு. பெரியப்பா ஏ.பி.நாகராஜனும் ஏப்ரல் 1ம் தேதி இறந்தாரு. அதனாலதான் இந்த வேலை, அந்த வேலைன்னு போக ஆரம்பிச்சேன். ஊர்ல நிலங்களையெல்லாம் வித்ததைப் பாத்துட்டு, ஊர்ல எல்லாரும் ‘சினிமாக்காரங்களை நம்பி இந்தக் குடும்பம் இப்படி ஆயிருச்சு’ன்னு சொன்னாங்க. எங்க அப்பா லவ் மேரேஜ் வேற! அதனால ரொம்பவே கெட்டபேரு.
எங்க அக்கா சுகுணா ரொம்ப அமைதியான கேரக்டர். ‘நல்லதங்காள்’ படம் வந்த சமயத்துல அவ பொறந்ததாலதான் ‘சுகுணா’ன்னு பேரு வைச்சாங்க. ‘வடிவுக்கு வளைகாப்பு’ சமயத்துல நான் பொறந்தேன். அதனால, வடிவுக்கரசின்னு பேர் வைச்சாங்க. ஹோட்டல்ல கேட்ட கேள்விக்கு கொஞ்சம் தயங்கினா அக்கா. அதாவது, ‘டாய்லெட்லாம் கழுவற சூழல் வரும், செய்வீங்களா’ன்னு கேட்டாங்க. இவ பதிலே சொல்லலை.
இதேபோலத்தான் எங்கிட்டயும் கேட்டாங்க.நான் டக்குன்னு சொன்னேன்...
‘டாய்லெட்டை க்ளீன் பண்றேன்!’
- நினைவுகள் தொடரும்
வடிவுக்கரசியின் முழு வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago