‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி’யை நினைவிருக்கிறது அல்லவா? கோவையின் கடைக்கோடி மலைக் கிராமமான வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் பாட்டி, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பதால் பெரும் புகழ் பெற்றவர்.
தற்போது பொது முடக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்தால் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்க முடியாமல் இவர் தவிப்பதாகச் சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. தகவலறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் கமலம்மாளிடம் போனில் பேசி, சில உதவிகளைச் செய்ய… ‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ மீண்டும் வைரலாகி இருக்கிறார்.
உண்மையில், கமலம்மாளைப் பற்றி வெளியான தகவல்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சிலர், இவருக்குக் கரோனா வந்துவிட்டதாகப் பேச ஆரம்பித்ததும்தான், ஸ்டாலினே அழைத்துப் பேசினார் என்கிறார்கள்.
இட்லி பாட்டி எப்படி இருக்கிறார், ஸ்டாலின் பேசியதால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடி வடிவேலம்பாளையம் சென்றேன். நான் சென்றபோது காலை 11 மணி. அப்போதும் தன் ஜாகைக்கு வந்த ஒருவருக்கு அவித்து வைத்திருந்த இட்லியைப் பரிமாறிக்கொண்டிருந்தார் பாட்டி. கூடவே, “நீயும் நாலு இட்லி சாப்பிடு கண்ணு” என்றார்.
» மதுரையில் கரோனா சமூக பரவலாவதைத் தடுக்க உழவர் சந்தைகள் மூடப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி
“நேத்து செல்போன்ல உங்ககூட பேசினாங்களே, அது யாரு பாட்டி?” என்றேன். ரொம்ப யோசித்து, “அதுதான் கருணாநிதியோட பையன்!” என்கிறார்.
“அவர் பேரு என்னன்னு தெரியுமா?”
“ம்.. அது வந்து… ஸ்டாலினு.”
“அவர் கூட அப்படி என்னதான் பேசினீங்க?” என்றால், ‘‘அதையேன் கேக்கற சாமி” என்று புன்முறுவல் பூத்தவர், “இங்கிருக்கிற பசங்க என்னை டிவியில புடிச்சுப் போட்டுட்டாங்களா… பாட்டி ரொம்பக் கஷ்டப்படுது. இட்லி வியாபாரம் சரியில்லை. பாதிப்பேர் கூட சாப்பிட வர்றதில்லைன்னு நான் பேசினதை வீடியோ பண்ணிட்டுப் போனாங்க.
கூடவே, இட்லி பாட்டிக்குக் கரோனா வந்துடுச்சுன்னு யாரோ சொல்லிட்டாங்க போல. அதைப் பார்த்துட்டு ஸ்டாலினு எங்கூட பேச விரும்புறதாச் சொல்லி, பசங்க கொண்டுவந்து போனை நீட்டினாங்க.
அவரு, ‘ஏம் பாட்டி நல்லாயிருக்கீங்களா? உங்களுக்கு என்ன உதவி வேணும்? எதுன்னாலும் கேளுங்க. உங்ககிட்ட வர்றவங்ககிட்ட செஞ்சு தரச் சொல்லியிருக்கேன்’னு அனுசரனையா பேசினாரு. நானும் ‘நல்லாத்தான் சாமி இருக்கேன். இந்த கரோனா வந்து ஊரே கஷ்டப்படுது. எங் கஷ்டமா பெரிசு?’ன்னு சொன்னேன்” என்று சிரிக்கிறார் பாட்டி.
“முன்னாடியே நிறைய பேர் உங்களுக்கு உதவி செய்றதா சொல்லியிருந்தாங்களே... கலெக்டர் கூட உங்களுக்கு வீடு தர்றேன்னு சொல்லியிருந்ததா செய்தி வந்துச்சே… ஆனா, இன்னமும் அதே பழைய ஓட்டு வீட்லதான் இருக்கீங்க..?”
“நிறைய உதவிகள் கிடைச்சுது. சில்வர் பிளேட்டு, இட்லி சட்டி, கேஸ் சிலிண்டர்ன்னு எல்லாம் வந்துச்சு. இடம் இருந்தா வீடு கட்டிக் கொடுக்கிறேன்னு கலெக்டர் சொன்னாரு. அதுக்கும் ஒரு ரெண்டு பேர் வந்து பக்கத்துல எம்பேருக்கு ரெண்டு சென்ட் இடம் வாங்கித் தர்றேன்னு பேசினாங்க. அதோட பத்திர ஜெராக்ஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. அந்த நிலம் எம் பேருக்கு இந்நேரம் ஆயிருக்கும். அதுக்குள்ளேதான் இந்தக் கரோனா வந்துடுச்சே…”
“ஊரடங்கு நேரத்துலயும் இட்லி சுட்டு விற்கிறீங்களே. யாரும் தடுக்கலையா?”
“தடுக்காம இருப்பாங்களா? கரோனா வந்துடுச்சு… இட்லி சுடாதேன்னு சொல்லிப் பார்த்தாங்க. நான் என்ன வியாபாரத்துக்கா செய்யறேன். ஏழை பாழைக சாப்பிடத்தானே செய்யறேன். போங்கப்பான்னுட்டேன். அப்பவும் ஊருக்குள்ளே பசங்க வெளியூர்க்காரங்களை விடறதில்லை. அவங்களாலதான் கரோனா வரும்ங்கிறாங்களே என்ன செய்யறது?
தினம் ஆறு கிலோ அரிசி இட்லிக்கு ஊற வைப்பேன். இப்ப மூணு கிலோ அரிசி போட்டாலே இட்லி தீர்றதில்லை. இதையும் செய்யாம நிறுத்திடலாம்னுதான் பாக்கிறேன். ஆனா நம்மளை நம்பி வர்ற ஏழை பாழைக என்ன செய்வாங்க சொல்லு. இங்கே பத்து இட்லி சாப்பிட்டாலும் பத்து ரூபாதான். இதையே வேற கடைக்குப் போனா முப்பது நாற்பது ரூபா கொடுத்து சாப்பிடோணும். இப்ப கடைகளும் இல்லை. என்ன செய்வாங்க பாவம்? அதுதான் உசிருள்ளவரைக்கும் இதைச் செய்யலாம்னு செஞ்சுட்டு இருக்கேன்.”
“ஸ்டாலின்கிட்ட இருந்து கேட்ட உதவி வந்துச்சா?”
“நான் எங்கே கேட்டேன். அவங்களா கொண்டுவந்து கொடுத்தாங்க. இருபத்தி அஞ்சு கிலோ அரிசி மூட்டையைக் கொண்டுவந்து ஒருத்தர் போட்டாரு. அப்புறம் உளுந்து, பருப்புன்னு கொஞ்சம் கொண்டு வந்தாங்க. ஏதோ பொழப்பு ஓடுது…”
“ஏன் பாட்டி…நாலஞ்சு மாசம் வர்ற மாதிரி பத்து மூட்டை அரிசி, ரெண்டு மூட்டை உளுந்து இப்படி கேட்டிருக்கலாம்ல. ஸ்டாலின் பெரிய கட்சித் தலைவரு. வசதியானவரு. கொடுத்திருப்பார்ல?”
“ஏன் சாமி, அப்படி கேட்டா நல்லாயிருக்குமா? நமக்கே அடுக்குமா? ஊர் சனமே சோறில்லாம கிடக்குதுக. ரோடு வழி, தடம் வழியெல்லாம் வேலை வெட்டியில்லாம எத்தனை ஆயிரம் பேர் கிடக்கிறாங்க. நம்ம மட்டும் வாங்கிட்டா ஆச்சா? அவங்களுக்கெல்லாம் யாரு கொடுப்பாங்க. அவங்க பாவத்தை நாம சம்பாதிக்கலாமா... எல்லோருக்கும் அவரு கொடுக்கணும்ல. கொடுக்கட்டும் சாமி. அதுதானே நமக்கு நல்லது. அதுதானே தர்மம்?”
அதற்கு மேல் பாட்டியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. விடைபெறுகிறேன். கை கூப்புகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago