பணம் உள்ளவர்களுக்குத் தங்களின் குறையை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. வீதிக்கு வந்து சொல்வதைத் தவிர ஏழைகளுக்கு வேறு வழியே இல்லை. ஏழை மக்கள்தான் வீதிதோறும் அப்துல் கலாமின் படத்தை வைத்து நினைவிரங்கல் நிகழ்த்தினார்கள். யாரும் அழைக்காமலே எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு ராமேசுவரத்துக்குச் சென்று வழியனுப்பிவைத்தார்கள். எந்த ஆர்ப்பாட்டமோ, சிறு சலசலப்போ இன்றி நடந்து முடிந்த அந்த நிகழ்வுக்குப் பின், தமிழ்நாடு இன்று அந்த ஏழை மக்களாலேயே போராட்டக் களமாக மாறியிருக்கிறது.
தமிழக காவல்துறையில் பணியாற்று பவர்களின் எண்ணிக்கையை இப்போது தான் கணிக்க முடிகிறது. எங்கு திரும் பினாலும், எந்த பத்திரிகையைத் தொட் டாலும், எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும், சமூக வலைதளங்களில் நுழைந்தாலும் அப்துல் கலாமின் உருவங் களாகவே காட்சியளித்த இடங்களில், மதுவுக்கு எதிரான போராட்டப் படங் களும், செய்திகளுமே நிரம்பி வழிகின் றன. மக்களுக்கு காவலர்களாக இருந்த காவல்துறையை எதிரிகளாக பார்க்கும் அளவுக்கு செய்திகள் அரங்கேறு கின்றன.
இளம்பருவத்தில் திரைப்படங்களில் நான் கண்ட காவல் துறையினர், தீயவர் களை தண்டித்து குற்றம் இழைத்தவர் களைத் தேடிப் பிடித்தார்கள். முதன்முத லாக அவர்களை நேரில் பார்த்தபோது மறைந்திருந்துதான் பார்க்க முடிந்தது. எங்கள் கிராமத்தில் மட்டும்தான் சுற்று வட்டாரத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சினார்கள். அதுவும் அண்ணன் தம்பிகளான இருவர் வீட்டில் மட்டும் தான், அதைத் தொழிலாகவே செய்தார் கள். அவர்களைப் பிடிக்க ஊருக்குள் திடீரென நுழையும் காவல்துறையின ரைக் கண்டு அந்தக் குடும்பத்தினர் தப் பித்துக்கொள்ள மறைவிடம் தேடி ஓடு வதும், பின் காவல்துறையிடம் பிடிபட்டு தலையில் சாராயப் பானையை வைத்து தெருத் தெருவாக விலங்கிட்டு அழைத் துப் போவதையும் பார்த்த காட்சிகள் உயிருள்ளவரை மறக்க முடியாதவை.
சாராயம் காய்ச்சியவர்கள்தான் என் றில்லை. அதை குடித்த ஒன்றிரண்டு பேர்கள் அந்த நேரத்தில் ஓடி மறைய முயல்வதும், பின் மாட்டிக் கொள்வதும், அடித்து வாகனங்களில் ஏற்றப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாலும் மது பற்றிய எச்சரிக்கை உணர்வு என்னுள் குடிகொண்டன. அத்துடன் எனது அப்பா என்றைக்காவது ஒருநாள் குடித்துவிட்டு அம்மாவின் திட்டுக்கு பயந்து வீட்டுக்குள் வராமல், இருட்டில் வைக்கோல் போரில் மறைந்துகொண்டு கிடப்பதும், பின் அம்மாவிடம் அவர் கொடுக்கும் உறுதிமொழிகளும்தான் எம்.ஜி.ஆர் மேல் எனக்குப் பற்றை வளர்த்தன.
அரசுக்குப் பணம் தேவை என்கிற ஒரே காரணத்துக்காக, ஒரு தலைமுறை யையே குடிகாரர்களாக, குடி நோயாளி யாக மாற்றுவதும், அதன் மூலம் உடல் உறுப்புக்கள் கெட்டு, உழைப்பு கெட்டு, மனம் கெட்டு நாள்தோறும் அந்த மக்கள் ஆயிரக்கணக்கில் செத்தொழிவதும், மருத்துவமனைகளில் நோயாளிகளாகக் கிடப்பதும், தெருவெங்கும் வீழ்ந்து கிடப் பதும் மற்றவர்களால் கேலி செய்கிற சமூகமாக மாறி வருவதும் உரியவர் களின் கண்களுக்கும், செவிகளுக்கும் இப்போதாவது எட்ட வேண்டும்.
எந்த சிக்கல் வந்தாலும் அதற்காகப் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள், தமிழர்கள் மேல் அக் கறையுள்ள இயக்கத்தினர்கள் இருக் கிறார்கள் என ஒதுங்கியிருந்த மக்களெல் லாம், இனி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனப் போராட வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.
பிறமொழித் திணிப்பும், ஈழத் தமிழ னின் சிக்கலும்தான் தமிழர்களின் பெரிய சிக்கல்களாக எண்ணியிருந்த கல்லூரி மாணவர்கள் தங்களின் குடும்பம், தங் களின் உறவுகள் சீரழிவதைப் பார்த்து இந்த சமுதாயத்தை இனி காப்பாற் றவே முடியாது என நினைத்து யாரை யும் எதிர்பார்க்காமல் போராடத் துணிந்து விட்டார்கள். குடியில் தனது தந்தையை இழந்த பிஞ்சுக் குழந்தைகளையும், இளம் பள்ளிப் பருவத்தினரையும் அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது வீதியில் காணும் காட்சிகளும், வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் காணும் காட்சிகளும் அவர்களை சிந்திக்க வைக் கின்றன. யாரிடம் இவர்கள் கெஞ்சு கிறார்கள்? யாரை எதிர்த்துப் போராடு கிறார்கள் என்கிற கேள்வி உருவாகிறது.
உரிமைகளைக் கேட்டதற்காக காவல்துறையினரால் கண்மூடித்தன மாக தாக்கப்படும் மாணவர்கள் ஒன்று சேரத் தொடங்கியிருக்கிறார்கள். மதுக் கடைகள் மூடும்வரை இனி எங் களுக்கு பள்ளியும் வேண்டாம், கல்லூரி யும் வேண்டாம் என அனைவரும் ஒன்று கூடும் காலம் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது. இவ்வளவு காலங் கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக் காமல் கண்டுகொள்ளாமல் இருந்த அரசியல் கட்சியினர் கூட, வரப் போகிற தேர்தலை மனதில்கொண்டு அவர்களும் போராட்டத்தில் பங்கெடுக் கின்றனர். சில கட்சிகள் மாணவர்களைப் போராடத் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுக் கள் எழுந்திருக்கின்றன. யார், யாருக்கு மதுவை ஒழிப்பதில் அக்கறை இருந்தது என்பதையெல்லாம் தொடக்கத்தில் இருந்தே கவனித்து வரும் மக்கள், யார் மூலமாக நடந்தாலும் நல்லது நடந்தால் போதும் என போராட்டத்தில் தங்களை யும் ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.
ஏற்கெனவே உடல் உழைப்பு வேலைக்கு ஆள் கிடைக்காத நம் மாநிலத் தில், வடமாநிலத்தவர் உள்ளே நுழைந்து அனைத்து வேலைவாய்ப்புகளிலும் ஊடுருவிவிட்டார்கள். உடல் நலத்தை சிதைக்கக் கூடிய குறைந்த விலை மதுவை குடித்துக் குடித்து அவர்களது உடலில் வலு இல்லாமல் போய்விட்டது. மதுக்கடைகளில் இருந்து வருபவர்களின் பஞ்சடைந்த கண்களையும் கைகள் ஒடுங்கிய உடலையும் பார்த்தால் அவர் கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருப் பதை உணரமுடியும். குடிப்பதால் மன மும் உடலும் சிதைந்து, புத்தி சிந்திக்க மறுக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்ற பொருளாதாரம் இன்றி குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது. குடியினால் நம் கலாச்சாரத்தை சிதைக்கும் அருவருக் கத்தக்க அனைத்து பாலியல் குற்றங் களும் பெருகிக்கொண்டே இருக்கின் றன. ஒரு கெட்ட பழக்கத்துக்கு ஆட்பட்ட மனிதர்களை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பதே எதிர்காலத் தில் பெரும் சமுதாய சிக்கலாகிவிடும்.
மது விற்பனையை நடைமுறைப் படுத்துவதற்கு முன் தமிழகத்தில் ஆண்டுதோறும் வெறும் 200 பேர் களுக்குள்தான் கள்ளச் சாராயத்தால் இறந்தார்கள். அந்த 200 பேரைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப் பட்டதாக சொல்லப்பட்ட இந்த மதுக் கடைகள் தினமும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் கொன்று, அத்தனை குடும்பத் தையும் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
அரசு எவ்வளவோ நலத் திட்டங் களைச் செய்தாலும்கூட அனைத்து சீரழிவுக்கும் காரணமாக இருக்கும் அரசாங்கமே மது விற்கும் திட்டத்தால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுகிறது.
ஏற்கெனவே மிகமிகச் சிறிய எழுத் தில் எழுதியிருக்கும் எச்சரிக்கை வாசகத் தைப் படிக்க முடியாதவர்கள் கண்கள் சுருங்கி, பஞ்சடைந்து பார்வையை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ் வொரு மது புட்டியிலும் எழுதியிருக்கும் எச்சரிக்கைக் குறிப்புகளை எவ்வளவு பலம் வாய்ந்த மூக்குக் கண்ணாடி களைக் கொண்டும் இனி யாராலும் படிக்க முடியாது. அதில் எழுதியிருப்பதெல்லாம் இதுதான்.
குடி நாட்டுக்குக் கேடு!
குடி வீட்டுக்குக் கேடு!
குடி உயிருக்குக் கேடு!
எப்போதுமே ஒரு கட்டம் வரை அரசாங்கம்தான் மக்களை வழிநடத்தும். தாங்கள் உருவாக்கிய தங்களுக்கான அந்த அரசாங்கம் வழி தவறும்போது… அந்த மக்களே அந்த அரசாங்கத்தை வழி நடத்தத் தொடங்கிவிடுவார்கள். அதன் பெயரும் ’மக்களாட்சி’தான்!
- இன்னும் சொல்லத்தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago