பாக்யராஜ் போட்ட ‘முந்தானை முடிச்சு’க்கு இன்றைக்கும் மவுசு! 

By வி. ராம்ஜி

சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் முடிச்சுப் போடுகிற கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ என்பதான படங்களும் நிறையவே உண்டு. இந்த இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு, ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு!
அப்படியொரு வெற்றி, எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. படம் பார்க்கப் போய்விட்டு, ஹவுஸ்புல் போர்டு மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிவந்தவர்களை வைத்து, ஒரு ஷோவே நடத்தலாம். ஒவ்வொரு காட்சிக்கும் இதுதான் நிலைமை. அதுவும் ஆறேழு தடவையாகவும் இருபது முப்பது தடவையாகவும் அறுபது எண்பது முறையாகவும் படத்தைப் பார்த்தவர்களே அதிகம். ரிப்பீடட் ஆடியன்ஸின் மாபெரும் ஆதரவுடன்... வெள்ளிவிழா கொண்டாடிய மிக முக்கியமான படம் 'முந்தனை முடிச்சு'.

1979ம் ஆண்டு முதல்படமான 'சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை ரிலீஸ் செய்தார். 80ம் ஆண்டு 'ஒரு கை ஓசை' வெளியானது. 81ம் ஆண்டு ஆரம்பத்தில் ’மெளனகீதங்கள்’ அடுத்து ’இன்று போய் நாளை வா’ அதன் பிறகு தீபாவளி ரிலீசாக ’அந்த ஏழு நாட்கள்’ என வெளியாகின. மெளனகீதங்களும் அந்த ஏழு நாட்களும் திரையுலகில் இயக்குநர் அந்தஸ்தை பாக்யராஜுக்கு உயர்த்தி, பீடமிட்டுக் கொடுத்தது. ரசிகர்களிடையே இன்னும் நெருக்கத்தையும் பிரியத்தையும் மனதில் இடத்தையும் கொடுத்தது. ’பாக்யராஜ் படம் ரிலீசானா முத நாள், முத ஷோ பாத்துடணும்’ என்று முக்கால்வாசிக்கும் அதிகமான ரசிகர்கள் சங்கல்பம் செய்துகொண்டார்கள்.

அதன் பிறகு 82ம் ஆண்டு ’தூறல் நின்னு போச்சு’ படமும் ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ படமும் வெளியானது. இன்னும் இன்னுமாக பாக்யராஜின் திறமை பளிச்சிட்டது. திரைக்கதையும் வசனங்களும் பெரிதாகப் பேசப்பட்டன. ஏபிசி சென்டர்கள் என எல்லா ஏரியாக்களிலும் பட்டொளி வீசி ரவுண்டு வந்தார் பாக்யராஜ்.

‘’எங்களுக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்களேன்’ என்று பாரம்பரியமான, புகழ்மிக்க, பிரமாண்டமான ஏவிஎம் நிறுவனம் அழைத்தது. பாக்யராஜுக்கு மட்டுமின்றி திரையுலகுக்கே அது ஆச்சரியம்தான். ஏவிஎம் படமென்றால், அது எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன்தான் என்று இருந்த காலம் அது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் தொடர்ந்து பண்ணுவார். அப்போது எஸ்.பி.முத்துராமன். ஆனால் அந்த வழக்கங்களை உடைத்து, பாக்யராஜை இயக்கச் சொல்லிக் கேட்டது ஏவிஎம். இதுவே பாக்யராஜின் அதி முக்கிய சாதனைகளில் ஒன்று.

பாக்யராஜ், இளையராஜா, அசோக்குமார் கூட்டணியில் உருவானது முந்தானை முடிச்சு. 83ம் ஆண்டு வந்த படம் இது. கிட்டத்தட்ட, 37 வருடங்களாகி விட்டன.

இயக்குநர் கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண :

இங்கே இரண்டு கொசுறு தகவல்கள்... படத்தின் கதைக்காக திருப்பதியில் ரூம் போட்டு டிஸ்கஷன் செய்யப்பட்டது. அந்த டிஸ்கஷனில் எழுத்தாளர் பாலகுமாரனும் கலந்துகொண்டு, பணியாற்றினார். தனது முன்கதைச்சுருக்கம் எனும் பயாகிரபி நூலில், இதைக் குறிப்பிட்டிருக்கிறார் பாலகுமாரன்.

அடுத்து... இந்தக் கதைக்கு சின்னவீடு என்று டைட்டில் சொன்னார் பாக்யராஜ். ‘கதை நல்லாருக்கு. டைட்டிலும் நல்லாருக்கு. வேற ஏதாவது சொல்லுங்களேன்’ என்றது ஏவிஎம். ‘அடுத்தாப்ல ஒரு சொந்தப்படம் எடுக்கறேன். அந்தப் படத்துக்கு ஒரு டைட்டில் வைச்சிருக்கேன். அதைத்தரேன்’னு பாக்யராஜ் சொல்ல... அதுதான் ’முந்தானை முடிச்சு’. பிரமாதம் என்று ஏற்கப்பட்டது.

அதிலும் ஒரு கூடுதல் தகவல்... முந்தானை முடிச்சு என்பது எட்டெழுத்து. 8 ராசியில்லாத எண் என்று இப்போதும் பார்க்கப்படுகிறது. கோடிகோடியாய் புழங்குகிற சினிமாவிலும் எட்டு என்பதை கொஞ்சம் எட்டவே வைத்திருந்தார்கள். ஆனால் ’முந்தானை முடிச்சு’ என்பது எட்டெழுத்து. இந்தக் குழப்பத்துடன் ஏவிஎம் இருக்க, அதன் விளம்பர நிர்வாகி எஸ்.பி.அர்ஜுனன் ’டைட்டில் நல்லாருக்கு சார். ஆனா இதுல எட்டு பாக்கவேணாம். ‘மு’வை பெருசாப் போட்ருவோம். ‘ந்தானை டிச்சு’ன்னு போடுவோம். ரெண்டு ‘மு’வுக்குப் பதில், ஒரே ‘மு’ போடுவோம். ஏழு எழுத்துன்னு ஆயிரும்’ என்று யோசனை சொல்ல... டபுள் விசில் கொடுக்கப்பட்டது. அங்கே டேக் ஆஃப் ஆனது ’முந்தானை முடிச்சு’.

வயதான தம்பதி, அதாவது குடுகுடு தாத்தாவும் கிடுகிடு பாட்டியுமாய் அன்பையும் உணவையும் ஊட்டிக் கொள்ளும் அந்த முதல் காட்சியும் ‘விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்’ என்கிற இளையராஜாவின் குரலும் சேர்ந்து, ரசிகர்களைக் கைத்தட்டவைத்தது.

வேஷ்டி சட்டையில், கிராமத்தில், டவுன் பஸ்சில், கையில் குழந்தையுடனும் பெட்டிபடுக்கையுடனும் வந்திறங்கும் பாக்யராஜைப் பார்த்ததும் மொத்த ஆடியன்ஸுக்கும் குழப்பம், தவிப்பு. கேள்விகள். அங்கே சின்னப்பசங்களுடன் சின்னபசங்களாக ஊரையே லந்து பண்ணிக்கொண்டு, கலாட்டா செய்துகொண்டு, ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கும் ஊர்வசி, தன் சகாக்களுடன் பாக்யராஜைப் பார்க்கும்போதே, சுவாரஸ்யம் தொடங்கிவிடும்.

பையில் இருந்து ஒவ்வொரு பொருளாய் எடுத்து அபேஸ் செய்ய, குழந்தையின் பால்புட்டியை எடுத்து, தவக்களை வாயில் வைத்துக்கொள்ளவும் ‘இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற வாத்தியாரு’ என்று சொல்லவும் ‘கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ்’ என்று டைட்டில் போடவும் ரசிகர்கள் அலப்பறையுடன் வரவேற்கவும்... ‘மனுஷன் ஆடியன்ஸோட ‘பல்ஸ்’ஸை எப்படித்தான் புடிக்கிறாரோ...’ என்று தியேட்டருக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்.

காட்சிக்குக் காட்சி காமேடி பண்ணுவதிலும் சென்டிமெண்ட் தூவுவதிலும் மனிதர் ஜித்தன். பள்ளிக்கூடத்தில், இறை வணக்கம் பாடும்போது வார்த்தையை மறந்து திணறுவார் பாக்யராஜ். மீதமுள்ள வரிகளை கிராமத்துப் பெருசு பாடிவிட்டு, ‘ஹூம்... இவன்லாம் வாத்தியாரா வந்து, இவன்கிட்டப் பசங்க படிச்சு... என்னாகப்போவுதோ’ என்று அலுத்துக்கொள்வார்.

ஆற்றில் குளிக்கப் போகும் வாத்தியார் பாக்யராஜ், ஒருவரைப் பார்த்து வணக்கம் என்று ஜாடையாச் சொல்வார். ‘ஏய்யா.. என்னய்யா வாத்தியரு. கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்லவேணாமா. பட்டணத்துல படிச்சிருந்தா, இதெல்லாம் கூடவா தெரியாமப் போகும்’ என்று தலையில் அடித்துக்கொண்டே செல்வார். இன்னும் பத்தடி சென்றதும், வேறொருவரிடம் வேஷ்டியை இறக்கிவிட்டு, இருகைகளையும் கூப்பி, ‘வ...ண...க்...க...ம்...’ என்று பவ்யமாய், நீட்டிமுழக்கிச் சொல்லுவார். ‘என்ன ஆளுய்யா நீ. பட்டணத்துல படிச்சவங்கிறே. வணக்கம்னு வாய்வார்த்தையா சொன்னாப் போதாதா? கோயில்ல கோவிந்தா போடுற மாதிரி கும்பிடுறே. என்னத்த படிச்சியோ போ’’ என்று சொல்லிவிட்டுச் செல்பவரை, விக்கித்துப் பார்ப்பார் பாக்யராஜ். தியேட்டரில் கைத்தட்டி சிரித்து விசிலடித்து முடிக்க நேரமாகும்.

கொஞ்சம்கொஞ்சமாக வாத்தியார் மீது மரியாதையும் நேசமும் ஊர்வசிக்கு வர... அது அடுத்தகட்டமாக காதலாகவும் கல்யாண சிந்தனையாகவும் வளர, ஊர்வசியிடம் இருந்து விலகியே செல்வார் பாக்யராஜ். எப்படியாவது பாக்யராஜை அடையவேண்டும் எனும் உறுதியில், ‘வாத்தியார் கெடுத்துட்டாரு. நான் இப்ப கர்ப்பம்’ என்று சொல்ல, பஞ்சாயத்தில் ஊரே பத்திக்கொள்ள... ‘இதோ... அவ பொய் சொல்றா. என் குழந்தையைப் போடுறேன். குழந்தையைத் தாண்டச் சொல்லுங்க. அப்படி தாண்டிட்டா, கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று பாக்யராஜ் சொல்ல, குழந்தையைத் தாண்டுவார் ஊர்வசி. இடைவேளை என்று போட்டு, நம் பிபியை எகிறவைத்திருப்பார் பாக்யராஜ்.

’ஏமாத்தி, குழந்தையைத் தாண்டி பொய்சத்தியம் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டேல்ல. இனி உனக்கும் எனக்கும் தாம்பத்தியமே கிடையாதுடி’ என்று சொல்லி, ஊர்வசியை வெறுத்துப் பிரித்து. எப்போதும் போல இருப்பார் பாக்யராஜ்.

பள்ளிக்கூட பசங்களின் ரவுசு, மாட்டுக்காரரின் ‘அடுத்த மணி எப்பங்க அடிப்பீங்க’ என்கிற கேள்வி, கவர்ச்சியாக இருந்தாலும் கண்ணியத்துடன் இருக்கும் தீபா டீச்சர், வைத்தியர் பயில்வான் ரங்கநாதன், ஊர்நாட்டாமையும் ஊர்வசியின் அப்பாவுமான கே.கே.செளந்தர், சத்துணவு சாப்பாடு திருடும் நளினிகாந்த், சின்னக் கதாபாத்திரத்தில் முகம் காட்டும் கோவை சரளா, முக்கியமாய் அந்த முருங்கைக்காய் சமாச்சாரம்... என்று அனைவரையும் அனைத்தையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார் பாக்யராஜ்.

ஊர்வசிக்கு இதுதான் முதல் படம். அப்படியா என்று இப்போதைய இளம்தலைமுறை மட்டுமல்ல... அவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு, அப்போதும் அப்படியா என்றுதான் கேட்டார்கள் எல்லோருமே! பாக்யராஜ் படங்களில் எப்போதுமே நாயகியின் கேரக்டர் மிக ஸ்கோப் உள்ள வகையில்தான் இருக்கும். இதிலும் அப்படித்தான்! பரிமளமாகவே வாழ்ந்திருப்பார் ஊர்வசி.

வீட்டுப்பாடம் செய்யாததற்கு மாணவனை அடித்துவிடுவார் ஆசிரியர் பாக்யராஜ். சித்தி கொடுமையால்தான் அவன் எழுதவில்லை; கையில் சூடு போட்டார் என்பதெல்லாம் தெரிந்ததும் மனம் கனத்துப் போவார். ஆரம்பக் காட்சிகளில் இதுவும் ஒன்றுதான். ஆனால் இடைவேளைக்குப் பிறகு இதையெல்லாம் வைத்து முடிச்சு மேல் முடிச்சு போட்டு, தன் கதைக்களத்துக்குள் சடுகுடு விளையாடியிருப்பார் பாக்யராஜ்.

இரண்டாவது மனைவியாகிவிட்ட ஊர்வசியின் மீது, மெல்ல இரக்கம் வரும். கனிவும் வரும். ‘புடவைய மாத்திட்டு வா. சினிமாவுக்குப் போகலாம்’ என்பார். அந்த வீடே தலைகீழாகிவிடும். கணவரின் ஆடைக்கு மேட்ச்சாக தானும் அணிந்துகொண்டு, நகைநட்டுகளையெல்லாம் போட்டுக்கொண்டு, வீட்டைப் பூட்டும் போது, உள்ளிருந்து ஏதோ உடைந்த சப்தம். திறந்து பார்த்தால், முதல் மனைவியின் புகைப்படக்கண்ணாடி விழுந்து உடைந்திருக்கும். ‘ஒருநிமிஷம்... சரிபண்ணிடுறேன்’ என்று சுத்தம் செய்வார். அது கூட பாக்யராஜூக்கு பெரிதாகத் தெரியாது. எடுத்துக்கொள்ளவும் மாட்டார். ஊர்க்காரர்களிடம் அலப்பறையைக் கொடுத்தபடி ஊர்வசி வர, எதிரே சிற்றன்னையின் கொடுமையால் தலையில் அடிபட்ட அந்த மாணவன்... ‘அதுசரிப்பா... மூக்கு வெளுக்காத கழுதை கிடைச்சாலும் கிடைக்கும். மூத்தகுடி புள்ளைய ஆதரிக்கிற இளையகுடி கிடைக்கவே மாட்டா’ என்று யாரோ சொல்ல... சட்டென்று மூடு அவுட்டாகி, ‘ஏய்... தலை வலிக்குது. இன்னொருநாள் சினிமாவுக்குப் போயிக்கலாம்’ என்று வீட்டுக்குத் திரும்புவார். ஒரே சமயத்தில் சந்தோஷம்; அடுத்ததாகவே துக்கம்.

அடுத்தும் பாக்யராஜின் ராஜவிளையாடல் திரைக்கதை. ஊர்வசி வாந்தியெடுப்பார். தடதடவென வீட்டில் இருந்து ஓடிப்போய்விட்டு திரும்புவார் பாக்யராஜ். ‘எங்கே, வைத்தியர் வீட்டுக்காப் போயிருந்தே’ என்பார் ஊர்வசி. ‘இல்ல, ‘உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்’ என்பார் பாக்யராஜ். ‘ஏய்யா... உனக்கும் எனக்கும் நடுவுல ஒண்ணும் ஆகல. ஆனா அவங்ககிட்ட போய் வாந்தி எடுத்திருக்கேன்னு சொன்னா, என்ன நினைப்பாங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் சீர்செனத்திகளுடன் கூட்டமாய் வந்துவிடுவார்கள். ‘பஞ்சாயத்து வரைக்கும் அசிங்கப்படுத்தினாலும் எம் மகளைப் பழிவாங்காம அவளுக்குக் குழந்தை பாக்கியம் கொடுத்தீங்களே...’ என்று கேகே. செளந்தர் நெகிழ்வார். ‘அதுசரிப்பா... இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’னு பாடம் நடத்துறவராச்சே அவரு’ என்பார். வைத்தியர் வந்து ஒண்ணும் இல்ல என்றதும் வருகிற சோகம்... ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கான லீட் காட்சி. ஆனால் வெறும் லீட் காட்சி மட்டுமே அல்ல அது. படத்தையே லீட் செய்யும் காட்சியும் கூட!

இந்த ’சின்னஞ்சிறு கிளியே’ பாடலை, ஒருநாளைக்கு பத்துதடவையாவது சிலோன் ரேடியோவில் போடுவார்கள். இதைக் கேட்க, தமிழகத்தில் பத்தாயிரம் பேராவது காத்திருப்பார்கள் என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் மருமகனை, தன் இரண்டாவது மகளுடன் வந்து அடிக்கடி பார்க்கிற மாமியார் கதாபாத்திரமும் மனசை என்னவோ செய்யும். படத்தில் முதல் மனைவியாக பூர்ணிமா ஜெயராம். நிஜத்தில் பிரவீணாவை அடுத்து இன்றளவும் பூர்ணிமா பாக்யராஜ் ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர்.

கிளாமர், கவர்ச்சி, டபுள் மீனிங், ‘அ’ போடச் சொல்லித் தருதல், அந்தப் புடவைக் கட்டு, கொஞ்சல் பார்வை என்று வருகிற தீபா கேரக்டரை, ஒருகட்டத்தில், மிக மிக உன்னதமாக்கியிருப்பதுதான் பாக்யராஜ் டச். சொல்லப்போனால், தீபாவின் கேள்விகள்தான் பாக்யராஜை மனம் மாறச் செய்யும். ஊர்வசியை ஏற்க முடிவு செய்யும். டைட்டிலில் கூட, ‘மீண்டும் தீபா’ என்று கெளரவப்படுத்தியிருப்பார். இதேபோல், கே.கே.செளந்தரும் தவக்களையும் அமர்க்களப்படுத்தியிருப்பார்கள்.

அசோக்குமாரின் கேமிராவுக்குள் அந்தக் கிராமத்தின் மொத்த அழகையும் கடத்தி வந்திருக்கிற மாய்ஜாலம் தெரியும். அவ்வளவு அழகு கிராமம். எம்ஜிஆரின் படங்கள், எம்ஜிஆரின் சத்துணவுத்திட்டம் என்று ஆங்காங்கே தூவியிருப்பார். அதுவும் கதைக்குத் தகுந்தது போல் கோர்க்கப்பட்டிருக்கும்.

படத்துக்கு தன்னால் ஆன அத்தனை வலுவையும் கொண்டு சேர்த்திருப்பார் இளையராஜா. வெளக்கு வைச்ச நேரத்துல, நான் புடிக்கும் மாப்பிள்ளைதான், சின்னஞ்சிறு கிளியே, அந்திவரும் நேரம், கண்ணத் தொறக்கணும் சாமி, வா வா வாத்தியாரே வா என்று ஒவ்வொரு பாட்டும் அதகளம். அமர்க்களம். அபாரம். கல்யாண, காதுகுத்து வீடுகள் என விசேஷங்களிலெல்லாம் ‘ஏம்ப்பூ... முந்தானை முடிச்சு பாட்டுங்களைப் போடுங்கப்பா’ என்று பெருசுகளே ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்கள். பின்னணி இசையிலும் ராஜ அலங்காரம் பண்ணியிருப்பார் இளையராஜா. அதிலும் பாக்யராஜ் ஊர்வசிக்கு என ஒரு டியூன் பிடித்திருப்பார். அதைக் கேட்கும்போதே, நமக்குள் ஒரு மகிழ்வும் நெகிழ்வும் நிச்சயம்!

இரண்டாவது மனைவியான ஊர்வசியை ஏற்றுக்கொள்ளலாம் என வீட்டுக்கு வந்தால், அங்கே ஊர்வசி இல்லை. காலுக்கடியில் இருக்கும் நோட்டீஸை ராக்கெட் செய்துவிடுவார். தண்டோராச் சத்தம். கருத்தடை முகாம் அறிவிப்பு. சட்டென்று ஏதோ உணர்வு, பயந்து, அடுத்த ஊருக்குச் செல்வார். மனைவி குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுவாளோ என்று பதைபதைத்துவிடுவார். அங்கேயும் பாக்யராஜ் முடிச்சு... ஒரு சண்டைக்காட்சி. ஆஸ்பத்திரி. மயக்கத்தில் ஊர்வசி. டாக்டரின் பதில். சுபமான முடிவு.

வலிக்க வலிக்க கைத்தட்டிக்கொண்டே சொன்னார்கள் ரசிகர்கள்... ‘அதான் பாக்யராஜ் படம்’... ‘படம்னா பாக்யராஜ் படம்தான்’!

இந்தப் படம் 100 நாளைக் கடந்து அதே ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் போது, முந்தானை முடிச்சு திரைக்கதை வசனப் புத்தகம், வழவழ காகிதத்தில், பத்து ரூபாய்க்கு ஸ்டாலில் விற்றதும் வாங்கியதும் ஞாபக முடிச்சுகளாக இன்றைக்கும் இருக்கிறது.

இப்போது போலவே அப்போதும் ‘இது என் படம்’, ‘இது என் கதை’ என்றெல்லாம் அறிவிக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டது. அதையெல்லாம் கடந்து, ’இது பாக்யராஜ் படம்’ என்று இன்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்துநிற்கிறது. ஏனென்றால் இது முந்தானை முடிச்சு அல்ல! இயக்குநர் கே.பாக்யராஜ்க்கும் ரசிகர்களுக்குமான முடிச்சு! அவிழ்க்கவே முடியாத முடிச்சு!
இன்னும் எத்தனை வருடங்களானாலும் ‘முந்தானைமுடிச்சு’ படத்தையும் அதன் மாய்ஜால திரைக்கதையையும் பாக்யராஜையும் முக்கியமாக அந்த முருங்கைக்காயையும் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்