கரோனா காலத்தில் சாலையின் ஓரமாய் நீங்கள் செல்லும் வாகனத்தை நிறுத்தினால் யாராவது பதறிக்கொண்டு ஓடி வருவார்களா?
கேரள - தமிழக எல்லையில் இருக்கும் கோவை வாளையாறு சோதனைச் சாவடி அருகே நீங்கள் ஒரு மிதிவண்டியில் சென்று அதை ஓர் ஓரமாக நிறுத்தி விட்டீர்களானால் போதும். அதன் ஸ்டாண்டைக்கூட போட்டிருக்க மாட்டீர்கள். கொலையே நடந்துவிட்ட மாதிரி பதறி அடித்துக்கொண்டு அங்குள்ள போலீஸார் ஓடிவருகிறார்கள்.
“யார் சார் நீங்க... வண்டியை எதுக்கு இங்கே நிறுத்தறீங்க? முதல்ல வண்டியை எடுத்துட்டுத் தூரப்போங்க” என விரட்டியடிக்கிறார்கள்.
நானும் என் இருசக்கர வாகனத்தை அப்படித்தான் அங்கு கொண்டுசென்று நிறுத்தினேன். ஓட்டமாய் ஓடி வந்தார்கள் நான்கைந்து போலீஸார். நான் ‘பிரஸ்’ என்று சொன்னதும்தான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்கள். பிறகு, ‘‘இங்கே வாகனம் நிறுத்துவதே பெரிய சிக்கல், சார். போலீஸ், ஹெல்த் ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஆட்கள் வாகனம் தவிர எதுவுமே நிறுத்தக் கூடாதுன்னு மேலிடத்திலிருந்து கண்டிப்பான உத்தரவு’’ என்கிறார்கள்.
“ஏன் அப்படி?” கேட்டதுதான் தாமதம்.
“என்ன சார் பிரஸ்ங்கிறீங்க... இதுகூடத் தெரியாதா?’’ என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டுவிட்டு, “என்ன அந்தக் கரோனா கார் மேட்டரே உங்களுக்குத் தெரியாதா?’’ என பேச ஆரம்பித்தார் ஒரு போலீஸ்காரர்.
“போன வாரம் இப்படித்தான் சாயங்காலம் கேரளாவைச் சேர்ந்த ஒருத்தர் காரில் வந்தார். உடம்பு சரியில்லை அந்தப் பக்கம் போகணும்னு சொன்னார். நாங்களும் அந்தப் பக்கம் போகிறவர்தானேன்னு அனுமதித்தோம். ஆனால், கேரள சோதனைச் சாவடியில் விட மறுத்துவிட்டார்கள். ஏதேதோ டாக்குமென்ட் எல்லாம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார்கள். அந்த ஆளும் யார், யாருக்கோ போன் பண்ணினார். அங்கே ஒண்ணும் எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் காரைத் திருப்பிக்கொண்டு வந்து தமிழ்நாட்டுப் பகுதியிலேயே அதை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தார்.
» ஏப்ரல் 23-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
» சென்னையில் கடுமையாகும் ஊரடங்கு: ஒரே நாளில் அதிக வழக்குகள், வாகனங்கள் பறிமுதல்
அதற்கப்புறம் நாங்கள் அவரைக் கவனிக்கவில்லை. அடுத்த நாள் பார்த்தால் ஜன்னல் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட நிலையில் கார் அங்கேயே நிக்குது. ஆனால், ஆள் மட்டும் இல்லை. விசாரித்துப் பார்த்தால் அந்தக் காருக்குள்ளிருந்த ஆள் முன்தினம் இரவே வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு நடந்தே கேரளா பகுதிக்குள் சென்றுவிட்டாராம். பின்னர் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் ஏறிப்போய் விட்டதாகத் தெரியவந்தது. கார் எண் எல்லாம் வைத்து விசாரித்துப் பார்த்ததில் அந்த ஆள் பேர், ஊர் விவரம் எல்லாம் தெரிய வந்தது. அடுத்த நாளே அவர் பாலக்காடு ஆஸ்பத்திரியில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தும் போனார் என்ற தகவல் வந்தது.
அந்த நபரின் மனைவி, மகள் கரோனா சிகிச்சையில் தனிமை வார்டில் இருப்பதாகவும் சொன்னார்கள். இந்த விவரங்கள் தெரிந்ததும், கேரள நபர் விட்டுச் சென்ற கார் பக்கமே யாரும் போகவில்லை. தூரமே தள்ளி நின்றுகொண்டோம். தகவல் தெரிந்ததும் அத்தனை அதிகாரிகளும் வந்துவிட்டார்கள். இங்கிருந்து கேரள அதிகாரிகளிடம் பேச, அங்குள்ள அதிகாரிகள் தமிழக அதிகாரிகளிடம் பேச ஒரே பஞ்சாயத்து. கார் கண்ணாடியைத் திறந்தாலோ, உடைத்தாலோ கரோனா தொற்று பரவிவிடும்னு எல்லோரும் பேச, கார் பெயரே ‘கரோனா கார்’னு பாப்புலர் ஆயிருச்சு.
அப்புறம் இரண்டு நாள் கழித்து அந்தக் காருக்குச் சொந்தக்காரர்கள் கேரளாவிலிருந்து வந்திருந்தாங்க. கிருமிநாசினி தெளிக்கும் வேன் எல்லாம் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட காரைக் கழுவி, மருந்து தெளித்து அதை அப்படியே தூக்கி ஒரு லாரியில் வைத்து கொண்டுபோனார்கள்.
கார் போகிற வரை இந்தப் பக்கம் உள்ளவர்களுக்கு உசிரே இல்லை. அடுத்த நாள்லருந்து இந்த மூலைமுடுக்கெல்லாம் நாலு லாரி கிருமி நாசினி கொண்டு வந்து தெளிச்சுட்டே இருக்காங்க. ஒரு ஆளைக்கூட நிற்க விடறதில்லை. வாளையாறு சுத்தி இருக்கிற கிராமத்து ஆளுகளும் முந்தி மாதிரி தைரியமா இந்தப் பக்கம் வர்றதில்லை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் எந்த வாகனம் வந்தாலும் இங்கே நிறுத்த விடாதீங்கன்னு மேலதிகாரிகள் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்காங்க’’ என்றார் அந்தப் போலீஸ்காரர்.
அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை வாளையார் தமிழக எல்லையில் கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள். வருவாய்த் துறை ஊழியர்கள் மற்றும் போலீஸாரிடம் காண முடிந்தது.
உணவுப் பொருள் ஏற்றி வரும் வண்டியைக்கூட நிறுத்த விடுவதில்லை. கேரளாவிலிருந்து வந்த வண்டி என்றால், ஓட்டுநர்கள் அங்கேயே வண்டியை நிறுத்தி ஒரு ஆளை காவலுக்குப் போட்டுவிட்டு இங்கே வந்து தன் ஆவணங்களைக் காட்ட வேண்டும். அதில் அவர்கள் தமிழகப் பகுதிக்குள் செல்வதற்கு போதிய ஆதாரங்கள் கடிதங்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
தமிழகப் பகுதியிலிருந்து வண்டிக்கும் அதே கட்டுப்பாடுதான். ஒரு ஆள் அதை இன்ஜினை ஆஃப் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். இன்னொருவர் ஆவணங்களைக் கேரள எல்லைக்குள் சென்று அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெற்று வர வேண்டும். ஒற்றை ஆள் உள்ள வாகனம் என்றால் அப்படியே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
தவிர, ‘தமிழகத்திலிருந்து வரும் ஆட்கள் யாவரும் கரோனா தொற்றுடன்தான் வருகிறார்கள். அவர்களை உள்ளே விடக்கூடாது’ என்ற மனநிலை கேரள எல்லைக் காவலர்களிடம், சுகாதாரப் பிரிவினரிடம் நிறையவே இருக்கிறது. கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் தமிழக அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
44 mins ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago