’மறுபடியும் முதல்லேருந்தா...’ எம்ஜிஆர் பட டயலாக்! அங்கே என்.டி.ஆர் - ராமுடு பீமுடு’;  இங்கே எம்.ஜி.ஆர். - எவர்கிரீன் ‘எங்கவீட்டுபிள்ளை’

By வி. ராம்ஜி

இங்கிருந்து ஆந்திராவுக்கும் ஆந்திரத்தில் இருந்து இங்கேயுமாக வந்தவர்களும் இருக்கிறார்கள். வந்து ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் வந்த படமும் உண்டு. வந்து வெற்றிப் படமாக அமைந்ததும் இருக்கிறது. அந்த வகையில்... எங்க வீட்டுப்பிள்ளை, தனி ரகம். காரணம், படம் பார்த்த பலரும் எங்க வீட்டுப்பிள்ளை என்றே எம்ஜிஆரைக் கொண்டாடினார்கள். எம்ஜிஆரை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில், இந்தப் படத்துக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு!

1965ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கலன்று ரிலீஸான இந்தப் படம், எம்ஜிஆர் ரசிகர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டமாகவே அமைந்தது. ‘ராமுடுபீமுடு’ என்று தெலுங்கில் வந்த படத்தை, தமிழில் எடுக்க முடிவு செய்த விஜயா புரொடக்‌ஷன்ஸ், எந்த டிஸ்கஷனும் இல்லாமல் இவர்தான் ஹீரோ என்று எம்ஜிஆரை டிக் அடித்தது. படத்தைப் பற்றி அறிந்துவைத்திருந்த எம்ஜிஆர், டபுள் ஓகே சொல்ல, பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது படம்.

அப்புறம் ஒரு விஷயம்... அந்த தெலுங்குப் படமான ‘ராமுடுபீமுடு’ செம ஹிட்டு. படம் பார்த்துவிட்டு, வணக்கம் போட்டதும் வெளியே வந்த கையுடன், அப்படியே க்யூவில் நின்று, டிக்கெட் வாங்கிப் பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கம். அப்படியொரு வெற்றியைத் தந்த இந்தப் படத்தின் நாயகன் என்டிஆர் என்று சொல்லாமலேயே தெரிந்திருக்குமே உங்களுக்கு?

ராமுடுபீமுடுவை ரசித்துக் கொண்டாடியவர்கள்தான், பின்னாளில் என்டிஆரை கிருஷ்ண பரமாத்மாவாகவே பார்த்துச் சிலிர்த்தார்கள். அதேபோல், இங்கே, எங்கவீட்டுபிள்ளை எம்ஜிஆரை, அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஆராதித்தார்கள்.

இப்போது கூட, தமிழ் சினிமாவில் ஏதேனும் டபுள் ஆக்ட் படங்களில், ‘என்னய்யா எங்கவீட்டுபிள்ளை மாதிரில்ல இருக்கு’ என்று ஜாலியாய் அவர்களே படத்தில் கமெண்ட் டயலாக் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

படம் வருவதற்கு முன்பே எம்ஜிஆர் ரசிகர்கள் பேசிப்பேசி மகிழ்ந்து திளைத்தார்கள். நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து, அடுத்த இரட்டைவேடப் படமாக எங்கவீட்டுப்பிள்ளை அமைந்ததுதான் காரணம்.

விஜயா கம்பைன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நாகிரெட்டி - சக்ரபாணி தயாரித்த ஈஸ்ட்மென் கலர் படம் இது. மிகப் பிரமாண்டமான முறையில் எடுத்திருந்தார்கள். வீடுகள் செட்டெல்லாம் அவ்வளவு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது.

‘டபுள் ஆக்ட்டு. ஆள் மாறாட்டக் கதைதானே...’ என்று ஒற்றைவரியில் சொன்னீர்களென்றால், உம்மாச்சி வந்து உங்கள் கண்களைக் குத்தும். அப்படியெல்லாம் சர்வசாதாரணமாக டீல் செய்து சொல்லிவிடமுடியாதபடி நரஸராஜூவின் மூலக்கதையும் இருக்கும். அதை அதி அற்புதமாக, தெளிவாகத் திரைக்கதையும் ஆக்கியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால், எம்ஜிஆருக்கே இது புதுமாதிரியான படம்தான். காரணம்... அப்பாவி எம்ஜிஆர், தமிழ் சினிமாவுக்கும் புதுசு. ரசிகர்களுக்கும் விருந்து. அந்த அப்பாவி முகம் கொண்ட எம்ஜிஆரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு பாந்தமாக இருக்கும், அந்தக் கேரக்டர்.

அத்தனை சொத்துக்களுக்கும் அதிபதி அப்பாவி எம்ஜிஆர். ஆனால், மாமா நம்பியாரின் பிடியில் சொத்தும் இருக்கும். அவரும் இருப்பார். மிரட்டலான பேச்சு, உருட்டலான பார்வை, விளாசித்தள்ளும் சாட்டையைக் கொண்டு, எம்ஜிஆரை பம்பரமாக்கியிருப்பார் நம்பியார்.

அங்கே இன்னொரு எம்ஜிஆர். நாகேஷுடன் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டு, நடிக்க முயற்சி செய்துகொண்டு, ஜாலியாகப் பொழுதைக் கழிப்பார். அப்பாவி பெயர் ராமு. இவரின் பெயர் இளங்கோ.

ராமு எம்ஜிஆருக்கு ஒருகட்டத்தில் செத்துவிடலாம் என்று நினைத்து முயற்சி செய்ய, அக்காவின் மகளான சிறுமி தடுத்துவிடுவாள். அடியும் உதையும் வாங்கிக்கொண்டு இங்கே இருக்கமுடியாது என்று வீட்டை விட்டே, ஊரை விட்டே கிளம்பிவிடுவார் ராமு.

இதற்கிடையே செல்வந்தரான எஸ்.வி.ரங்காராவின் மகள் சரோஜாதேவியை அப்பாவி ராமுவிற்கு மணமுடித்து, வரதட்சணைப் பணமும் பெற்றுவிடத் திட்டம் போட்டிருப்பார் நம்பியார்.

ஒருவழியாக, ராமு எம்ஜிஆர், இளங்கோ எம்ஜிஆரின் கிராமத்துக்குச் சென்று அவரின் வீட்டுக்குச் செல்ல, இங்கே இளங்கோ எம்ஜிஆர், சரோஜாதேவியின் கண்ணில் பட்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே நம்பியார் வந்து, அவரை அழைத்துச் சென்றுவிட... அப்புறமென்ன? அப்புறம் என்ன... என்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்கள்.

கிராமத்தில் இளங்கோ எம்ஜிஆரின் முறைப்பெண் ரத்னா. ராமு எம்ஜிஆருக்குப் பார்த்த சரோஜாதேவி. இப்படி ஆள்மாறாட்டக் கதையில், காதலும் இடம் மாறும். அந்தக் காதலால் குழப்பமும் பிரிவும் சோகமும் வரும். ஆனால் படம் முழுக்க எல்லாமே இருந்தாலும் சோகத்தை சட்சட்டென்று நல்ல மூடுக்குக் கொண்டு வந்துவிடுகிற திரைக்கதையைக் கையாண்டார்கள்.

வீட்டில் அடைபட்டிருந்த வீரன் எம்ஜிஆர், ஹோட்டலுக்குச் சென்று இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஃபுல்கட்டு கட்டிவிட்டு, பில் தராமல் வெளியேறிவிடுவார். அதேநேரம், அதே டேபிளுக்கு அப்பாவி எம்ஜிஆர் வந்து உட்காருவார். சர்வர், வேறென்ன வேணும் என எரிச்சலாகக் கேட்பார். ரெண்டு இட்லி என்றதும் மறுபடியும் முதல்லேருந்தா என்பார் சர்வர். இந்த மறுபடியும் முதல்லேருந்தா... என்பது ஞாபகம் இருக்குதானே!

சரோஜாதேவி ஒரு பக்கம் வர, இன்னொரு பக்கத்தில் ரெண்டு எம்ஜிஆரும் இருப்பார்கள். சரோஜாதேவியின் ஹேண்ட்பேக்கை ஒருவன் தூக்கிக்கொண்டு ஓட, திருடன் திருடன் என்று கத்துவார். உடனே வீர எம்ஜிஆர், திருடனை நோக்கி ஓடுவார். இது வழக்கமான சீன். ஆனால் திருடன் என்றதும் அப்பாவி எம்ஜிஆர் தன் பர்ஸை பத்திரப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து ஓடுவார். சின்னக்காட்சிதான். ஆனாலும் அத்தனை நகாசு காட்டியிருப்பார்கள்.

இப்படி படம் நெடுக, அங்கங்கே காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை ரொம்பவே ஈர்த்திருப்பார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் ஒவ்வொன்றுமே ஷார்ப். அதிலும் நாகேஷ் உளறுவாயனாக அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. ‘என்னண்ணே... அவங்களைக் கடிச்சிட்டே... ச்சீ... அடிச்சிட்டே’, ‘தப்பு பண்ணிட்டோம். நீங்கதான் துரத்தணும்... சாரி திருத்தணும்’, ‘அண்ணே, அவங்க காலை ஒடி சீச்சீ காலைப் புடி’, ‘டைரக்டர் சார், எனக்கொரு டான்ஸ் கொடுங்க சார். மன்னிக்கணும் சான்ஸ் கொடுங்க சார்’ என்று படம் முழுவதும் நாகேஷ் இப்படியேதான் பேசுவார்.

சரோஜாதேவியை இன்னும் அழகாகவும் எம்ஜிஆரை இன்னும் இன்னும் அழகாகவும் மொத்தப் படத்தை அழகுக்கு அழகாகவும் வின்சென்ட் - சுந்தரத்தின் ஒளிப்பதிவு மெருகேற்றிக்கொண்டே இருக்கும்.ன்விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள் அள்ளிக்கொண்டு போகும். பாடலின் உள்ளூடாக வரிகிற இசைகளும் அமர்க்களப்படுத்தும். பின்னணி இசையும் பிரமாதம்.

கண்களும் காவடிச் சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாட்டு ஸ்டேஜ் டான்ஸ். அதற்கேற்றாற்போல டியூன் போட்டிருப்பார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், நம்மையும் ஆடவைக்கும்.

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வரலாமா பாட்டு, செம லவ் ஸாங்.

அதேபோல,

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்

அவன் மாம்பழம் வேண்டும் என்றான் பாடல், கிராமத்துச் சங்கதிகளைச் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்து குத்துப்பாட்டு. எம்ஜிஆரும் ரத்னாவும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள்.

‘பெண் போனாள்... இந்தப் பெண் போனாள்

இவள் பின்னாலே என் கண் போகும்’ என்ற டூயட் பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் பின்னிப்பெடலெடுத்திருப்பார்.

‘மலருக்குத் தென்றல் பகையானால் என்றொரு சோகப்பாடல். இங்கே சரோஜாதேவியும் அங்கே ரத்னாவுமாகப் பாடுவார்கள். பொதுவாக, பரபரவென போய்க்கொண்டிருக்கும் படத்துக்கு இப்படி சோகப்பாட்டு முட்டுக்கட்டை போடும் என்பார்கள். ஆனால் அப்படி எந்தச் சேதாரமும் நிகழாதபடி, பாடலையும் அமைத்திருப்பார்கள். கில்லாடித்தனமான எடிட்டிங்.

படத்திலும் எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியலிலும் முக்கியப்பங்கு வகித்த ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுதான் படத்துக்கே ஹைலைட். பாட்டு ஆரம்பிக்கும் முன்பிருந்தே ஆரம்பித்துவிடுகிற கைத்தட்டல், பாட்டு முடிந்தும் கூட ஓயாதிருப்பதுதான் எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் அந்தச் சவுக்குக்கும் கிடைத்த மெகா வெற்றி. முக்கியமாக, கவிஞர் வாலிக்குமான வெற்றி இது.

ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, பண்டரிபாய் என பலரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். முக்கியமாக, படம் நெடுக, நாகேஷ் தப்புத்தப்பாகச் சொல்லும் ஒற்றை வரிகள், சரவெடிக் காமெடி.

இந்த எம்ஜிஆரும் அந்த எம்ஜிஆரும் அண்ணன் தம்பி என்கிற முடிச்சு அவிழ்வதும் நம்பியாரை வெளுத்தெடுப்பதும் பண்டரிபாய் அக்கா என அறிந்து உருகுவதும் என கடைசி இருபது நிமிடங்கள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய், சுபம் கார்டுடன் முடியும்.

ஆனால் எம்ஜிஆரின் அடுத்தடுத்த இன்னிங்ஸ் அங்கிருந்துதான் ஆரம்பமானது. அங்கிருந்தும் ஆரம்பமானது.

மனசில் வலியோ வேதனையோ, துக்கமோ வருத்தமோ... ஏதேனும் ஓர் சூழ்நிலையில் கொஞ்சம் டல்லாக இருக்கும் போது, எங்க வீட்டு பிள்ளையைப் பாருங்கள். டல்லான மனசு எம்ஜிஆர் மாதிரியே சுறுசுறுவென ஆகிவிடும். ஏதோவொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா.

65ம் வருடம் வெளியான படம். 55 வருடங்களாகிவிட்ட படம். ஆனால், இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற எம்ஜிஆரைப் போலவே, ’எங்கவீட்டுபிள்ளை’யும் நீடூழி வாழ்வான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்