தமிழ் சினிமாவில் 65-ம் வருடம் முக்கியமான ஆண்டு. அதற்கு முன்னதாக எத்தனையோ பக்திப் படங்கள் வந்திருக்கின்றன. இந்த வருடத்துக்குப் பின்னரும் கூட, எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் புகுந்து, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்துகொண்ட திரைப்படம்... ‘திருவிளையாடல்’.
எண்பதுகளின் இறுதி வரை, தொன்னூறுகளின் தொடக்கங்களிலும் கூட, ‘திருவிளையாடல்’ செய்த மாயாஜாலங்கள் மறக்கவே முடியாது. யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் அந்த வீட்டு வாசலில் கட்டியிருக்கும் குழாய் ஸ்பீக்கர் வழியே, ’நாரதரே.. உலகம் என்றால் என்ன, அம்மையப்பன் என்றால் என்ன?’, ‘நாரதரே... நீ வந்த காரியம் நிறைவேறிவிட்டதா?’, ‘முருகா... ஞான பண்டிதா...’, ‘சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?’, ‘பழம் நீயப்பா’, ‘ஐயோ ஐயோ... ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே’, ‘சத்தியமாக... சத்தியமாக, நிச்சயமாக... நிச்சயமாக’, ‘போய் வா என்று சொல்லுங்களேன்... போ’, ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை’, ‘என் இசைக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமை’, ‘குரு... ஜெயம் நம்ம பக்கந்தேன்’...
இப்படி நம் வாழ்விலும் மனதிலும் இரண்டறக் கலந்துவிட்ட ‘திருவிளையாடல்’ படத்தின் மொத்த கதை வசனமும் ஒலிச்சித்திரமாக ஓடிக்கொண்டிருக்கும். அதை ஏகப்பட்ட பேர் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
» எம்ஜிஆரின் முழு லவ் சப்ஜெக்ட்... ’அன்பே வா!’ ; மனதை அள்ளும் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’
» இறந்தது டாக்டரா... மனிதநேயமா? - சடலங்களைச் சாகடிக்காதீர்கள்!
இன்றைக்கு 50 வயதில் இருப்பவர்கள், ‘திருவிளையாடல்’ ஒலிச்சித்திரத்தைக் கேட்காமல் வளர்ந்திருக்கவே வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப்போனால், பக்திப் படமான இந்தப் படத்தின் ஒலிச்சித்திரத்தை நாத்திகர்கள் கூட, ரசித்துக் கேட்டார்கள்.
இவற்றுக்கெல்லாம் முதல் காரணம்... முழுக்காரணம்... இயக்குநர் ஏ.பி.நாகராஜன். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழகழகான வசனங்களால், காட்சியை ரசமாக்கியிருப்பார் ஏ.பி.என். சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில் இருந்து நான்கைந்து விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதற்கு கதை உருவாக்கி, அவற்றை மிகத்தெளிவான திரைக்கதையாக்கி, மிகச்சிறந்த நடிகர்களைக் கொண்டு, தன் வசனங்களைக் கொண்டு நடிக்க வைத்த கேப்டன்... ஏ.பி.நாகராஜன்.
படத்துக்குள் இருக்கிற ஓவ்வொரு கதையிலும் வருகிற எல்லோரையும் அழகாக வேலை வாங்கி அவர்களின் நடிப்புத் திறனைக் கொண்டு வந்த வல்லவர். முத்துராமன், தேவிகா, டி.ஆர்.மகாலிங்கம், ஜி.சகுந்தலா, ஓ.ஏ.கே.தேவர் எல்லோருமே அப்படி பிரமாதப்படுத்தியிருந்தார்கள். அவ்வளவு ஏன்... படத்தில் நக்கீரராக வந்தவரும் அசத்தியெடுத்திருப்பார். அவர் யார் தெரியும்தானே. படத்தை தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்தான் அவர்! டைட்டிலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று போடும்போது, ஸ்க்ரீனில் விநாயகர் சிலையைக் காட்டுகிற நுட்பமான, ரசனையான இயக்குநர்.
’கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்று கடவுள் குறித்துச் சொல்லுவார்கள். ஆனால் சிவபெருமான் எப்படியிருப்பார்? அநேகமாக சிவாஜி கணேசன் போலிருப்பார் என்று எல்லோரும் கற்பனை செய்துகொள்வார்கள். அந்த அளவுக்கு சிவாஜியும் உமையவளாக சாவித்திரியும் வாழ்ந்திருப்பார்கள்.
இவர்களையெல்லாம் சொல்லிவிட்டு, ‘தருமி’யைச் சொல்லாமல் போனால் எப்படி?
ஒருநாள்... ஏ.பி.நாகராஜன், நாகேஷுக்கு போன் செய்தார். ‘திருவிளையாடல்’னு பக்திப் படம் பண்றேன். அதுல தருமின்னு ஒரு ஏழைப்புலவன் கேரக்டர். அதை நீதான் பண்ணனும்’ என்றார். அதைக் கேட்டு நாகேஷ் தவித்து மருகினார். 65-ம் ஆண்டில், நாகேஷ் ரொம்பவே பிஸி. காலையில் 7 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நாகேஷின் தவிப்பைப் புரிந்துகொண்ட ஏ.பி.என்.... ‘’ஒரு ஒன்றரை நாள் கால்ஷீட் கொடுத்தாப் போதும். அதுக்குள்ளே நான் எடுத்துக்கறேன்’ என்றார். அவர் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த நாகேஷ், சம்மதித்தார்.
சொன்ன தேதிக்கு வந்தார் நாகேஷ். மேக்கப் போடப்பட்டது. சிவாஜிக்கு மேக்கப் நடந்து முடிக்க நேரமானது. அதற்குள் கேரக்டர், காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை விவரித்தார் ஏ.பி.நாகராஜன். ‘நாகேஷ்... நடுவுல வசனங்களை சேத்துக்கறதா இருந்தாலும் சேத்துக்கோ. ஆனா நான் எழுதிக்கொடுத்த வசனங்களை சொல்லாம இருந்துடாதே’ என்றார்.
சிவாஜி வந்தார். அவர் வருவதற்கு முன்னதாக நாகேஷ் தனித்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன. பிறகு சிவாஜியும் நாகேஷும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்றைக்கு நாம் பார்த்து பிரமித்து, கைதட்டி, ரசித்து, வியந்துகொண்டிருக்கிற ‘தருமி’ கதாபாத்திரத்தை வெறும் ஒன்றரை நாளில் நடித்துக் கொடுத்தார் நாகேஷ்.
பிறகு, சிலமாதங்கள் கழித்து, படத்தை ஏ.பி.என்., சிவாஜி, சாவித்திரி, நாகேஷ் உள்ளிட்ட பலரும் பார்த்தார்கள். ‘தருமி’யின் காட்சிகள் வந்தன. அது முடிந்ததும், இயக்குநரை அழைத்தார் சிவாஜி. ‘நாகராஜா... இதைத் திரும்பப் போடு பாக்கலாம்’ என்றார். அவ்வளவுதான். பின்னே உட்கார்ந்திருந்த நாகேஷ் முகம் இருண்டது. ‘என்ன இந்த சீன்லயெல்லாம் ரொம்ப ஓவரா சேட்டை பண்ணிருக்கான். இதையெல்லாம் கட் பண்ணிரு’ என்று சிவாஜி சொல்லிவிடுவாரோ என்று பயந்துகொண்டே இருந்தார் நாகேஷ்.
அந்தக் காட்சி திரையில் மீண்டும் ஓடியது. பார்த்து முடித்த சிவாஜி, ‘நாகராஜா... இந்தக் காட்சில நாகேஷ் ரொம்பப் பிரமாதமாப் பண்ணியிருக்கான். ஒரு ஃப்ரேம் கூட தூக்கிடாதே. படத்துல அவன் பேசுற ஒவ்வொரு டயலாக்கிற்கும் அவனோட சேஷ்டைகளுக்கும் தியேட்டர்ல கைதட்டல் பிரமாதமாக் கிடைக்கும்யா’ என்றார். அதை தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த நாகேஷ் நெகிழ்ந்து போனார்.
இப்படியாகத்தான் எடுக்கப்பட்டது ‘திருவிளையாடல்’ திரைப்படம். படத்துக்குப் போடப்பட்ட செட்டுகள் மிரட்டும். கண்ணைக் கவரும். கே.பி.சுந்தராம்பாளின் பாடல்களும் டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர் ஜிலீர் பாடல்களும் மயக்கும்.
கண்ணதாசனின் பாடல்களும் கே.வி.மகாதேவனின் இசையும் ராஜாங்கம் பண்ணும். ’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’, ‘பாத்தா பசுமரம்’, ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்று எல்லாப் பாடல்களும் தனி ரெக்கார்டு சாதனைகளாயின.
முக்கியமாக, டி.எஸ்.பாலையா ஹேமநாத பாகவதராகவே வாழ்ந்திருப்பார். அவர் பாலமுரளிகிருஷ்ணா குரலில், ‘ஒருநாள் போதுமா...’ என்ற பாடலுக்கு வாயசைத்து நடித்ததும் அவரின் முகபாவங்களும் அப்ளாஸ் அள்ளின.
சிவாஜி, சாவித்திரி, நாகேஷ், டி.எஸ்.பாலையா, கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம் என எந்தவொரு நடிகரையும் நடிகராகப் பார்க்காமல், அந்தந்த கதாபாத்திரமாகத்தான் பார்க்கமுடியும். அதுதான் ஏ.பி.நாகராஜன் எனும் அற்புதப் படைப்பாளியின் தனித்துவ மகத்துவம்!
1965-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி வெளியானது ‘திருவிளையாடல்’. இந்த 2020-ம் ஆண்டு, ‘திருவிளையாடல்’ படத்துக்கு 55-வது ஆண்டு!
எத்தனையோ படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரீமேக் குப்பிக்குள் அடக்கமுடியாத விஸ்வரூபம்... இந்தத் திருவிளையாடல்.
ஒரு சிவாஜி, ஒரு ஏ.பி.நாகராஜன், ஒரு நாகேஷ்.. ஒரேயொரு திருவிளையாடல்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago