பல தலைமுறைகள் கடந்தும் கூட, நாம் வழிவழியாகச் சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் இரண்டு. முதல் வார்த்தை, ‘டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது’ என்பது. நம் உடல் விஷயத்தில், உடலில் இருக்கும் பிரச்சினை விஷயத்தில் உண்மையை சரியாகச் சொல்லிவிடவேண்டும். அப்படிச் சொன்னால்தான், அதன் வீரியம் உணர்ந்து, நம்மைக் காப்பார் மருத்துவர்’.
சரி.. அடுத்த வார்த்தை?
‘மருத்துவர் என்பவர் சாமிக்குச் சமானம்’. கடவுளால் படைக்கப்பட்ட அற்புத மனிதர்கள்தான் மருத்துவர்கள். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் இருந்தால், முதலில் அவரை மருத்துவரிடம் ஒப்படைப்போம். அதன் பிறகு அருகில் உள்ள ஆலயம் சென்று ஆண்டவனிடம் பிரார்த்திப்போம்.
‘பொழைக்கவே மாட்டாருன்னு நினைச்சு கலங்கிப் போயிட்டோம். ஆனா அந்த டாக்டர்தான், இன்னிக்கி என் புருஷனை நடமாட வைச்சிருக்காரு... எங்க அப்பாவை பழைய நிலைக்குக் கொண்டு வந்தாரு... என் பொண்டாட்டியை உசுரோட திருப்பிக் கொடுத்துட்டாரு... என்றெல்லாம் சொல்லி நெகிழ்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நாமே கூட அப்படிச் சொல்லி, மருத்துவரை கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறோம்.
கரோனா தராத கலவரம்
உட்கார்ந்திருக்கும்போது, பள்ளி ஆசிரியரோ டாக்டரோ வந்தால் மட்டும்தான் நாம் சட்டென்று எழுந்திருப்போம். அப்படியொரு மரியாதையான பீடத்தை மனதில் அமைத்து அவர்களை அமரவைத்திருக்கிறோம்.
ஆனால் இந்த கரோனா வைரஸ் இன்னும் நம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நம்மைப் புதிதாகப் பிறக்கச் செய்திருக்கிற தருணத்தில், நம் சிந்தனைகளை தூசுதட்டி உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த நாட்களில், மெல்ல மெல்ல நம் மனம் விசாலமாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், மனசை நாமே குறுக்கிக்கொண்டுவிட்டோமோ என்று சென்னையில் நடந்த அந்தச் செயல்... நமக்குள் ஏற்படுத்துகிற பீதிகளும் கலவரங்களும் கரோனா கூட ஏற்படுத்தவில்லை.
உலகமே கரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் அரசாங்கமும் மக்களைப் பாதுக்காக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாகவும் கரோனாவை எதிர்க்கும் ஆயுதங்களாகவும் கேடயமாகவும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் காவல்துறையினரும் அத்தனைப் பொறுப்புடனும் கவனத்துடனும் ஆத்மார்த்தமாகவும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாலையிலேயே நின்று பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கரோனா குறித்த கவலை இருக்கிறதேயன்றி, அச்சமில்லை. மொத்த ஊரையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற பணியாளர்கள், கரோனா பூதம் நமக்குள் பாய்ந்துவிடுமோ என்றெல்லாம் பயமோ பதட்டமோ இல்லாமல்தான் பொதுசிந்தனையுடனும் பொது உபகாரமாகவும் பணி செய்துகொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக மருத்துவர்கள். ஏற்கெனவே வேறு நோய்களில் இருப்பவர்களை கரோனா வெகு எளிதாகத் தாக்கிவிடும் என்பதால் அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பொறுப்பு ஒரு பக்கம், கரோனா ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அறியும் வகையிலான பரிசோதனைகளை, மிகுந்த பொறுப்புடன் செய்துகொண்டிருப்பது ஒருபக்கம், கரோனா வைரஸ் தாக்கிவிட்ட மக்களைத் தனிமைப்படுத்தி, கண்காணித்து, அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பணி என்று இன்னொரு பக்கம்... மருத்துவர்கள் தெய்வங்களாக நம்மை காத்துக்கொண்டிருப்பதால்தான், கரோனா அரக்கன்களின் அட்டூழியம் ஆரம்பத்திலேயே அடக்கப்பட்டிருக்கிறது எனும் உண்மையை நாம் உணர்ந்திருக்கிறோமா... தெரியவில்லை.
முக்கியக் கடமை
‘ஊரடங்கு... வீடடங்கு’ என்று சொல்லிக்கொண்டிருப்பதை பலரும் கேட்காமல்தான் திரிந்துகொண்டிருக்கிறோம். ஆக, கரோனா குறித்த விழிப்புணர்வும் நம்மிடம் இல்லை. பயமும் கிடையவே கிடையாது. பரஸ்பரம் சமூக இடைவெளி என்பது சக மனிதர்களுக்குள் அவசியம் என்பதையும் நாம் புரிந்துணரவில்லை. ஒட்டிக்கொண்டும் ஈஷிக்கொண்டும்தான் இருக்கிறோம். காரணம்... ‘கரோனாவாவது... நமக்காவது... வர்றதாவது’ என்கிற அசால்ட் அலட்சிய மனோபாவம்.
ஆனால், சென்னையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணி செய்த மருத்துவர் ஒருவருக்கு, கரோனா பாதிப்பு ஏற்பட... அவர் இறந்துவிட்டார். நியாயத்துக்கு நாம் என்ன செய்திருக்கவேண்டும்? அவருக்கு மரியாதை செய்திருக்கவேண்டும். இறுதி மரியாதை. ஊர் மக்களையெல்லாம் காப்பதற்காக தன் இறுதி மூச்சு வரை போராடிக் கொண்டிருந்தவரின் மூச்சு அடங்கிவிட்ட நிலையில், அந்த மருத்துவருக்கு, மருத்துவரின் ஆத்மாவுக்கு ஆத்மார்த்தமாக நம் அஞ்சலியைச் செலுத்துவதுதானே இப்போதைய நம் மிக முக்கியக் கடமையாக இருக்கவேண்டும்.
‘செய்நன்றி’ கொன்று வன்முறை
‘எங்க ஏரியால புதைக்கக்கூடாது. அப்படிப் புதைச்சா, அந்தப் பொணத்துலேருந்து கரோனா எங்களுக்குப் பரவும்’ என்று ஒட்டிஒட்டி நின்று, கூட்டமாய் நின்று, வழிவிடாமல் போராடினோம். பிணத்துடன் வந்த ஆம்புலன்ஸை வழிமறித்தோம். ஆம்புலன்ஸ் டிரைவர்களின் மண்டையை உடைத்துக் காயப்படுத்தினோம். ஊரடங்கவும் இல்லை; வீடடங்கவும் இல்லை; தனித்திருக்கவும் இல்லை; முகக்கவசமும் இல்லை. சிறியவர் பெரியவர் வித்தியாசமில்லாமல், கூடி நின்று போராடும் வேளையில் கரோனா பரவாது என்கிற முட்டாள்தனத்தோடும் பிணத்தைப் புதைத்தால்தான் அதிலிருந்து கரோனா பரவும் என்கிற அறியாமை கலந்த முட்டாள்தனத்தோடு போராடுவதையும் மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தி நன்றி தெரிவிக்கவேண்டிய நாமே, ‘செய்நன்றி’ கொன்று வன்முறையில் ஈடுபட்ட மனோநிலையையும் எந்த சானிடைஸராலும் கழுவித் தீர்க்கமுடியாது. எந்த முகமூடி அணிந்தாலும் மனசாட்சி ஒவ்வொருநாளும் குத்திக்கொண்டே இருக்கும் நம் மனசை!
இன்னொரு சோகத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்தியிருக்கிறது தமிழ்ச் சமூகம். ஈரோட்டுக்கு அருகே சிறுமுகை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெயமோகன். 2007-ம் ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் 1,179 மதிப்பெண் எடுத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டார். ‘என்ன ஆகப்போறே?’ என்கிற கேள்விக்கு அதிக மதிப்பெண் எடுத்த எல்லாரைப் போலவும் ‘டாக்டர்’ என்று சொன்னார். ஆனால் டாக்டராகவே ஆனார். அதுமட்டுமல்ல... தன் மருத்துவ வாழ்க்கை மொத்தத்தையும் பழங்குடியினருக்காகவே செலவழித்தார்.
சடலத்துக்கு அவமானம் தருவதா?
தற்போதைய கரோனா சூழலில், ஓடியோடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் உடல்நிலையை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ‘லேசா ஜூரம்’ என்றிருந்தவருக்கு ‘கரோனாவாக இருக்குமோ’ என்று சோதித்துப் பார்த்தார்கள் சக மருத்துவர்கள். அவரைத் தாக்கியது கரோனா அல்ல. டெங்கு. சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்தார். சென்னையில் நடந்தது போலவே அவரின் பிணத்துக்கும் நடந்தது அவமரியாதை. ‘எங்கள் பகுதியில் புதைக்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பிணத்தை வைத்துக் கொண்டு, ஊரிலிருந்து வரும் சொந்தத்துக்குக் காத்திருக்கலாம். ஆனால் இடமின்றி, எங்கே புதைப்பது என்று தெரியாமல் எவ்வளவு நேரம்தான் வைத்திருக்கமுடியும்? அந்த மருத்துவரது அம்மாவின் அழுகைக்கு எவரிடமும் ஆறுதல் இல்லை. மகனைப் பறிகொடுத்துவிட்டதால் அழுததைவிட, மகனின் உடலைப் புதைக்க இடம் கொடுக்கலையே... என்பதற்காக அழுதவள், ஒருகட்டத்தில் எடுத்த முடிவு... தற்கொலைக்கு முயன்றதுதான்! உலகில் எந்தநாடுகளிலும் கூட இப்படியொரு அவமானத்தை, எந்தச் சடலமும் சந்தித்திருக்காது (!).
‘கண்களை விற்று ஓவியம் வாங்கி என்ன பயன்?’ என்றொரு வாசகம் உண்டு. மனிதநேயம் தொலைத்துவிட்டு, உயிரைக் கட்டிக்கொண்டு என்னசெய்யப் போகிறோம்? கெட்டவனாகவே வாழ்ந்து, கெட்டவனாகவே எல்லோரையும் துன்புறுத்தி, கெட்டவன் எனும் முத்திரையுடனே ஒருவன் செத்துப்போனால், அவனுடைய பிளஸ் பாயிண்ட் என ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதை வைத்துக் கொண்டு, அவனின் இறப்புக்காக இரங்கற்பா பாடி அழுகிற நாம், ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, படித்து, மருத்துவராகி, உயிர்காக்கும் சேவையையே வாழ்க்கையெனக் கொண்டிருந்து, அந்தச் சேவையில் ஈடுபட்டதாலேயே கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, இறந்துவிட்டவரை நாம் சாகும் வரை கொண்டாடிக்கொண்டிருக்க, ஆயிரம் பிளஸ் பாயிண்டுகள் இருக்கின்றன. ஆனால், அவரின் சடலம் புதைக்க ஆறடி கூட இடம் தராமல் அலைக்கழித்த பாவத்தைத் தொலைக்க, நம் இந்தியக் கண்டத்தில் புதிதாய் ஒரு நதி பிறந்தால்தான் உண்டு!
மனிதத்துடன் இரு
‘தனித்திரு... விழித்திரு... வீட்டிலிரு’ என்ற வாசகத்துடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ‘மனிதநேயத்துடன் இரு!’
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நடந்த இந்த சடலங்களுக்கு நேர்ந்த அவமானங்களையெல்லாம் பார்த்துவிட்டு, ‘என்னுடைய கல்லூரியில் கரோனா பாதித்த சடலங்களை புதைக்க இடங்களைத் தருகிறேன். தாராளமாக அங்கே புதைத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
‘மனிதர்கள் வேண்டுமானால் சாவார்கள். மனிதம் எப்போதும் மரிக்காது’ என்பதற்கு இதுவொரு உதாரணம். நம்பிக்கை பலம்!
மனிதத்தைச் சாகடிக்காதிருப்போம்; பிணங்களை இன்னொரு முறை கொல்லாமல் இருப்போம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago