மருத்துவர்களின் மனக் குமுறல்கள்: 3- நோயாளிகளின் அலட்சியமும் மருத்துவர்களின் அச்சமும்

By கா.சு.வேலாயுதன்

அரசுக் கல்லூரி மருத்துவமனைகளைப் பொறுத்தவரை தற்போது வெளி நோயாளிகள் (ஓ.பி.) வார்டுகளில் காய்ச்சல் ஓ.பி. வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைக் கவனிக்கும் இந்தப் பிரிவில், கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகள் உடனடியாக கரோனா மருத்துவ மையத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

இது தவிர வெளியில் உள்ள தனியார் கிளினிக்குகளும், தனியார் மருத்துவமனைகளும் இத்தகைய அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளைப் பரிசோதித்து அவர்களிடம் கரோனா அறிகுறி இருந்தாலோ, அவர்களுக்கு வெளிநாடு போய் வந்தவர்களுடன் தொடர்பு இருந்தாலோ அதற்கேற்ப கரோனா மருத்துவ மையத்திற்கு அனுப்புகிறார்கள்.

உதாரணத்திற்கு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் ஓ.பி. செயல்படுகிறது. இங்கே கரோனா அறிகுறியுடன் வருபவர்கள் உடனடியாக கரோனா மருத்துவ மையமாக சிங்காநல்லூரில் செயல்படும் ஈஎஸ்ஐ தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதேபோல் கிளினிக், தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா அறிகுறியுடன் இனங்காணப்படுபவர்களை, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் அல்லது மாநகர சுகாதாரப் பிரிவு அலுவலருக்குத் தகவல் தந்து கரோனா மையமான ஈஎஸ்ஐக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?
இப்படி வரும் நோயாளிகள் Corona Suspected Ward-ல் அனுமதிக்கப்பட்டு, அவர்களிடம் தொண்டை சளி மாதிரி எடுக்கப்படுகிறது. இந்த மாதிரியை மருத்துவக் கல்லூரியில் உள்ள சோதனைக் கூடத்திற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் அதைச் சோதித்துப் பார்த்து 6- 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிக்குக் கரோனா பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்ற ரிசல்ட்டைத் தருகிறார்கள். உள்ளூரில் உள்ள சோதனைக்கூடம் இத்தோடு தன் சோதனையை நிறுத்திக்கொள்வதில்லை. கரோனா பாசிட்டிவ் நோயாளியின் மாதிரிகளில் ஒன்றைத் தங்களிடம் வைத்துக்கொண்டு இன்னொன்றை புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் வைராலஜிக்கு அனுப்புகிறார்கள். அங்கிருந்து ரிசல்ட் வர தாமதமானாலும், அதை வாங்கி உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

கரோனா பாசிட்டிவ் ரிசல்ட் பெறப்பட்ட நோயாளிகள் அடுத்த கட்டமாகக் கரோனா வார்டுக்கு மாற்றப்படுகிறார்கள். இவர்களுக்குக் காய்ச்சல், சளி, தலைவலிக்கான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனே பக்கத்தில் உள்ள ஐசியு வார்டுக்கு மாற்றி சிகிச்சை தர வேண்டும். இது மூன்றாவது கட்டம். தற்போது 100-ல் ஒருவருக்கே மூச்சுத் திணறல் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சாதாரண மருந்து மாத்திரைகளினாலேயே, பலருக்குப் பெரும்பாலும் தானாகவே காய்ச்சல் சரியாகிவிடுகிறது. 14 நாட்கள் கழித்து மறுபடி சளி மாதிரி எடுத்து அனுப்பினால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நெகட்டிவ் வந்துவிடுகிறது. இந்த இடத்தில் இவர்களை நான்காவது கட்டமாக ஸ்டெப் டவுன் வார்டில் அனுமதிக்க வேண்டும். அங்கே 14 நாட்கள் வைத்திருந்து இரண்டு முறை சளி மாதிரிகள் எடுத்து சோதித்த பிறகுதான் கரோனாவிலிருந்து குணமானதாக அறிவித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

முதல் ஸ்டேஜில் வரும் Suspected Ward-ம், அடுத்ததாக வரும் கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வார்டும் தனித்தனி கட்டிடங்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கும்கூட அடுத்ததாக உள்ள கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வைரஸ் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை.

விதிமீறல்களால் விபரீதம்
கோவை கரோனா மருத்துவ மையமான ஈஎஸ்ஐயில் இந்த 4 ஸ்டேஜ் வார்டுகளும் அடுத்தடுத்து மேல்மாடிகளில் உள்ளன. ஒரு வார்டில் உள்ளவர்கள், வேறு வார்டுகளில் உள்ள உறவினர்களைச் சந்தித்துப் பேசுவது இயல்பாக நடக்கிறது.

ஒருவர் பேசிய செல்போனை மற்றவர் வாங்கிப் பேசுகிறார்கள். அதில் நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. செக்யூரிட்டிகள், வார்டு அட்டெண்டர்கள் இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு நோயாளிகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு கடைகளில் பிஸ்கட், பீடி, சிகரெட் போன்ற பொருட்களை வாங்கிவந்து தருகிறார்கள்.

பொருள் பரிவர்த்தனை மூலம் நோய்த்தொற்று சுலபமாக வெளியில் செல்கிறது. கரோனா வார்டில் இருக்கும் நோயாளிகள் தப்பிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். அவர்கள் மூலம் வைரஸ் பரவி விடும். அதற்கான ஏற்பாடுகள் பெரும்பாலான கரோனா வார்டுகளில் இல்லை.

ஒருவருக்கு ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தாலும் அவரை ஸ்டெப் டவுன் வார்டில் வைத்து 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், பலர் உடனே வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டுக்குச் சென்றாலும் அங்கும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதைப் பலர் கடைப்பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படியான சூழலில் பணிபுரியும் மருத்துவர்களின் பாடுதான் பெரும்பாடு.

மனம் வெதும்பும் மருத்துவர்கள்
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று காய்ச்சல் ஓ.பி. வார்டுகளில் தலா இரண்டு மருத்துவர்களைச் சுழற்சி முறையில் பணியமர்த்தி இருக்கிறார்கள். மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 400 பேர் இருந்தும், மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் மருத்துவர்களே இந்தப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முதலில் இவர்கள் யாருக்கும் ‘என்-95’ முகக்கவசம் வழங்கப்படவில்லை. மிகவும் புலம்பி, மருத்துவ அதிகாரியிடம் கேட்டதில் கணிசமான அளவு முகக்கவசங்கள் வந்துள்ளன. அதையும் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களே அள்ளிக்கொண்டு விட்டார்களாம்.

“ஒரு நாளைக்கு நாங்கள் ஒவ்வொருவரும் 30 காய்ச்சல் நோயாளிகளைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரை சோதிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது. சாதாரண சர்ஜிக்கல் முகக்கவசம் போட்டுக்கொண்டுதான் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இது தேவைப்படாத மருத்துவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட ‘என்-95’ முகக் கவசத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை” என்று மனம் புழுங்கிய மருத்துவர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட விநோத அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.

(தொடரும்…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்