ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 17 நாட்களைக் கடந்துவிட்டோம். இன்னும் இந்தியாவின் பல முனைகளில் சொந்த ஊர் திரும்ப முடியாத தொழிலாளர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்னொரு பக்கம் பலர் தடையை மீறிச் சாலை வழியாக சொந்த ஊருக்குத் திரும்ப நடைபயணத்தை மேற்கொண்டனர். இதில் சிலர் இறந்துபோயினர்.
இக்காட்சிகள் கடந்த சில நாட்களாக தொடந்து கொண்டிருக்கும் சூழலில்தான் இந்தியாவில் அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரியும் 40 கோடி தொழிலாளர்கள் மிக மோசமான வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
இதனை வெறும் அறிக்கையாகக் கடந்துவிடாமல் இந்தியாவுக்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணியாக மத்திய அரசு கருத்தில் கொண்டு துரிதமான நடவடிக்கையில் இறக்க வேண்டும் என்று பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கரோனா விவகாரத்தில் மெத்தனம் காட்டியதுபோல் மத்திய அரசு இந்த எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருகிறது.
இதில் ஊரடங்கு நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்டால் இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு எம்மாதிரியாக நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதற்கான எந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் மத்திய அரசின் தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை.
இந்த நிலையில், தங்களை அச்சமூட்டும் எதிர்வரும் நாட்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் நம் முன் பல கேள்விகளை வைக்கின்றனர்.
இசை அரசு , ஆட்டோ ஓட்டுநர்
கரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதனால் அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் நியாயமானது. ஆனால் இந்நகரத்தை நம்பி வாழும் தினக் கூலி மக்களின் நிலைமைகளையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும். சாலையில் பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீதியோரம் கடைகளை வைத்திருப்பவர்கள் என அனைவரும் ஒரு நாள் வருமானத்தை நம்பித்தான் வாழ்கிறோம். அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பணப்புழக்கம் இல்லாததால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையிலிருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. இது எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். இந்த ஊரடங்கால் எங்கள் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.
அரசு கூறுவதுபோல் ஒரு பத்து நாள் வீட்டில் இருக்கலாம். ஆனால், ஒரு மாதம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் உரிமையாளர் என்னிடம் வீட்டு வாடகை கேட்டுக் கொண்டிருக்கிறார். கரோனாவால் பாதிக்கப்படும் மக்களைத் தடுப்பதற்காக ஊரடங்கை விதித்த இந்த அரசு, இந்த ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு தரப்பு மக்களின் துன்பங்களைக் காணத் தவறிவிட்டது. வெறும் 1000 ரூபாய் வழங்குவதுடன் அவர்களின் கடமை முடிந்துவிட்டதா? தற்போது இருக்கும் விலைவாசிக்கு இது போதுமா? நான் கேட்பதில் நியாயம் இருக்கிறது அல்லவா? எங்களைப் போன்றவர்களுக்கு இந்த அரசு என்ன கூற இருக்கிறது?
இப்போதைக்கு இருக்கும் பணத்தை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதுவே ஒருமாதத்திற்குத் தொடராது அல்லவா?
இதில் அரசின் அறிவிப்புகள், சமூக இடைவெளி, எல்லாம் குடும்ப அமைப்புகளுக்குள் வரும்போது சண்டையாக மாறுகிறது. அவ்வாறு மாறுகையில் அது குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கிறது. இவர்கள் கூறுவது போல தனித்திருப்போம்... எல்லோரையும் பாதுகாப்போம் ... என்ற முழக்கம் இந்த நாட்டில் அனைவருக்கும் பொதுவானது அல்ல. பசி, பட்டினி இதில் இரண்டாவதுதான்.
ஆனால், வருமானம் இல்லாத சூழலில் எம்மாதிரியான உளவியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை அரசு அறியுமா? வீட்டில் ஏற்படும் இந்த சமூக இடைவெளி அரசுக்குத் தெரியுமா?
அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளார்களா? உண்மையில் அரசு இதில் தவறிவிட்டது. கரோனாவினால் ஒரு பக்கம் இறக்க.. மறுபக்கம் பசிக் கொடுமையினாலும், குடும்ப வன்முறையினாலும் மக்கள் இறப்பார்கள். இவை எல்லாம் ஏற்படும் என்பதை அரசு கவனிக்கிறதா என்பதுதான் என் கேள்வி..
ஜெயந்தி, ஓட்டலில் பணிபுரிபவர்
வேலைக்குச் சென்று 17 நாட்களுக்கு மேல் ஆகிறது. முதல் பத்து நாள் இருந்த பணம் தற்போது கையில் இல்லை. சென்ற மாதத்திற்கான சம்பளத்தையே எங்கள் நிறுவனம் இன்னும் அளிக்கவில்லை.
ஊரடங்கு காரணமாக அவர்களிடம் சென்று கேட்கவும் முடியவில்லை. அடுத்த மாதத்தை நினைத்தால் இன்னும் பயம்தான் வருகிறது. நியாய விலைக் கடைகளில் அரசு அளித்த 1000 ரூபாய் பணம் 2 நாளைக்கே பத்தாது. குழந்தையை வைத்து இந்த நாட்களை நகர்த்துவது வேதனை நிறைந்ததாக உள்ளது.
எங்களைப் போன்ற தினசரி வேலைக்கான வருமானத்தை நம்பி இருப்பவர்களை அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐயப்பன், பெயிண்டர்
இரு வாரங்களுக்கும் மேலாக பிழைப்பு இல்லை. தினமும் எழுந்து வேலையைத் தொடங்கிவிடும் எனக்கு இது வலியைத் தருகிறது. கையில் இருக்கும் பணமும் குறைந்து வருகிறது.
இதில் அடுத்து வரும் நாட்களுக்கும் அரசு ஊரடங்கை நீட்டிக்கப் போகிறது என்று கூறுவது அச்சத்தைத்தான் தருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையில் நியாயம் உள்ளது. ஆனால் அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். இந்த முழு ஊரடங்கால் அடித்தட்டு மக்கள் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது அரசுக்குப் புரிய வேண்டும்.
கரோனாவுக்குத் தீர்வு ஊரடங்கு என்றால், ஊரடங்கால் வீட்டின் உள்ளே இருக்கும் மக்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.
முருகன், கட்டிடத் தொழிலாளி
கடந்த பத்து நாட்களில் வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது. அரசு அளிக்கும் இந்த நிதி உதவிகள் நிச்சயம் ஒரு குடும்பத்திற்குப் போதாது. இவர்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அளித்த சலுகைகளால் என்னைப் போன்ற தினக்கூலிகள் எப்படிப் பயனடைவார்கள்?
நான் சம்பாதித்தால்தான் என் குடும்பத்தை ஓட்ட முடியும். எனது குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். விரைவில் இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்கிறார்.
இந்த ஊரடங்குக்குப் பிறகு இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை அரசு பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
”இந்தியா இந்த ஊரடங்குக்குப் பிறகு பொருளாதார ரீதியாக ஆழமான ஒடுக்குதலை எதிர்நோக்கியுள்ளது. ஏனென்றால் இந்த நிதியாண்டு மார்ச்சுடன் நமக்கு முடிந்துவிட்டது. அதன்படி தற்போதைய வளர்ச்சி விகிதம் என்பது 4 % மட்டும்தான் என்று அரசுத் தரப்பில் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மை நிலவரம் 2% சதவீதம்தான் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்போது சீனாவின் பொருளாதாரம் 35% (ஜிடிபி) சதவீதம் கீழறிங்கி விட்டது. அவ்வாறு இருக்கையில் நமது பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. நமது பொருளாதாரம் வலிமையான பொருளாதாரம் கிடையாது. ஏற்கெனவே நமது பொருளாதாரம் சரிவில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் நமது வளர்ச்சி விகிதம் 2% - லிருந்து மேலும் கீழிறங்க அதிகம் வாய்ப்புள்ளது. அவ்வாறு கீழிறங்கும்போது அனைத்துத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் நம் முன் மிகப் பெரிய கேள்வியை தொழிலாளர்கள் முன் வைக்கிறார்கள். நாங்கள் கரோனாவால் சாகிறோமா.. பட்டினியால் சாகிறோமா என்று. இந்தக் கேள்வி கடந்த சில நாட்களாக விவாதமாக மாறியுள்ளது.
ஜோதி சிவஞானம்
இந்தியா முழுவதும் சுமார் 90% மக்கள் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் தினக்கூலிகளின் நிலைமையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்து ஒரு தினத்தைக்கூட அத்தொழிலாளர்களால் தாங்க முடியவில்லை. உதாரணத்திற்கு பெரும் நகரங்களில் கட்டிடப் பணிகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறுவனங்கள் அளித்த இடங்களில் இருந்து கொண்டு, அங்குள்ள கையேந்தி பவன்களில் உணவு உட்கொண்டு தங்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
அரசு அறிவித்த இந்த திடீர் ஊரடங்கு அவர்களை ஒரு நாள்கூட அந்த நகரங்களில் இருக்கவிடாமல் தங்கள் சொந்த ஊரை நோக்கிப் புறப்பட வைத்துவிட்டது.
இந்த நிலையில்தான் உலக பன்னாட்டு அமைப்பு 90% தொழிலாளர்கள் வறுமை நிலைக்குக் கீழ் தள்ளப்படவுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இத்தகைய ஆபத்துகளை பலரும் பலமுனைகளில் கூறிக்கொண்டு இருக்கும்போது அரசு இதனை முன்னரே கணித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அரசு இதில் தவறிவிட்டது.
நம் பிரதமரோ ஊரடங்குக்காக நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் இன்று வரை அரசு தான் செய்த தவறைத் திருத்தவில்லை. அரசு முன் பல சவால்கள் உள்ளன. ஆனால், இதற்காக அவர்கள் அறிவித்துள்ள நிதி 0.1 சதவீதம்தான்.
விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்குவது என்பது ஏற்கெனவே உள்ள திட்டத்தில் உள்ளதுதான். அந்தத் தொகையும் முழுமையாக அளிக்கப்படவில்லை.
இந்தியாவில் மொத்தம் 14 கோடி விவசாயிகள் உள்ளனர். இதில் 7 கோடி பேரை மட்டும்தான் அடையாளம் கண்டிருக்கிறார்கள். பிறருக்கு ஆதார் இல்லை, அரசு சார்ந்த ஆவணம் இல்லை என்ற காரணத்தினால் அடையாளப்படுத்த முடியவில்லை என்று அரசு காரணம் கூறியுள்ளது. அரசால் அடையாளப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கும் அரசு இதுவரை நிதியை முழுமையாக அளிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த வருடத்துக்கான நிதியில், 2,000 ரூபாயை முன்னதாகவே விவசாயிகளுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அவ்வளவுதான். மத்திய அரசு அளிக்கும் 500 ரூபாய் பணமும், 5 கிலோ அரிசியும் எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
அரசின் இந்த வருடச் செலவு என்பது 30 லட்சம் கோடி ரூபாய். நமது நாட்டின் மொத்த ஜிடிபி 220 லட்சம் கோடி ரூபாய். இந்த அளவுடன் ஒப்பிடுகையில் அரசு அறிவித்துள்ள நிதி அரை சதவீதம் கூட இல்லை.
அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். நமது ஜிடிபியை விட அவர்கள் பத்து மடங்கு அதிகம். அதில் 10 சதவீதம் அவர்கள் செலவிடுகிறார்கள். மலேசியா 16% சதவீதம் செலவு செய்கிறார்கள். அத்துடன் இல்லாமல் இதற்கு மேலேயும் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள். ஆனால், இந்திய அரசு போதிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து வரும் சூழலில், மத்திய அரசு அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் பாதி சதவீதம் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களைப் பற்றிய எந்த விவரமும் இந்திய அரசிடம் இல்லை. இதில் அவர்களை எவ்வாறு கண்டறிந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். இம்மாதிரியான சிக்கல்களை இந்தியா எப்படி எதிர்கொள்ள இருக்கிறது?
தமிழ்நாட்டில் இதனை தற்போது செய்து வருகிறார்கள். இது நிச்சயம் பாரட்டப்பட வேண்டியது. இந்த அணுகுமுறையில் அனைத்து மாநிலங்களுக்கும் கேரளா முன்னோடியாகத் திகழ்கிறது.
மாநில அரசுகளுக்கு இதற்கென தனி நிதி ஒதுக்காவிட்டாலும் அவர்கள் கேட்கும் வருவாயையும் (உதாரணத்துக்கு ஜிஎஸ்டியை எடுத்துக் கொள்ளுங்கள்) மத்திய அரசு அளிக்கவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் கூட மத்திய அரசு, மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை அளிக்கவில்லை என்றால் மத்திய அரசின் செயல்பாட்டை என்னவென்று கூறுவது?
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் வேதனையைத்தான் தருகின்றன. இந்த நேரத்தில் அவர்கள் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். அரசியல் செய்யக்கூடாது.
முதற்கட்டமாக உணவு தேவைப்படும் 90% சதவீத மக்களுக்கு உணவு சென்றடைவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். பிற மக்கள் சென்று உதவி செய்வதற்கான வாய்ப்பும் இதில் குறைவு. இந்தச் சூழலில் அமைப்பு சாரா தொழிலாளர்களைக் காக்காவிட்டால் எவ்வாறு இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்? அவர்களைப் பாதுகாப்பதுதான் அரசின் முக்கியக் கடமை.
ஆனால், இது தொடர்பாக அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. வெறும் ஊரடங்கை அறிவிப்பதற்காக மட்டும் தொலைக்காட்சியில் தோன்றி வருகிறார்கள். இது அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டிய காலம்” என்று பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, யுகே, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை தினமும் முன்வைத்து வருகின்றன.
எனவே, இந்திய அரசும் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து இந்த கரோனா பேரிடரில் அவர்களைப் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago