இன்று அன்று | 1951 ஆகஸ்ட் 13: இந்தியாவின் முதல் விமானம்

By சரித்திரன்

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களைப் பழுதுபார்த்துத்தான் பறந்துகொண்டிருந்தது இந்தியா.

பெங்களூரூவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனம்தான் அந்த வேலைகளைச் செய்துவந்தது. ஆனால், 1941-லேயே 10 பேர் அமர்ந்து பறக்கக் கூடிய முதல் விமானமான ஜி-1 கிளைடரை டாக்டர்.வி.எம்.காட்கே வடிவமைத்தார். ஜெர்மனியில் விமானப் பொறியி யலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தில்தான் பொறியாளராக வேலைபார்த்தார். ஆனால், அப்போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு விமானங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முனைப்புக் காட்டவில்லை.

தன்னுடைய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காததால் வருத்தப்பட்டு வேலையை ராஜினாமா செய்தார் காட்கே. உடனடி யாக பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்து விமானப் பொறியியல் துறையை நிறுவினார். பிற்காலத்தில் ஹிந்துஸ் தான் விமான நிறுவனத்தில் விமானங்கள் வடிவமைத்த அத்தனை பேரும் அவர் உருவாக்கிய துறையில் பட்டம் பெற்றவர்களே.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ராயல் விமானப் படை, ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தது. உடனே, முனைவர் காட்கே மகிழ்ச்சியோடு மீண்டும் ஹிந்துஸ்தானில் சேர்ந்து தலைமை வடிவமைப்பாளர் பொறுப்பேற்றார். ஆழமான பரிசீலனைக்குப் பின்னர், இந்திய விமானப் படைக்கு ஒரு அடிப்படைப் பயிற்சி விமானத்தை வடிவமைக்கலாம் என முடிவெடுத்து அதற்கான திட்டத்தை இந்திய அரசிடம் சமர்ப்பித்தனர். முதல் உள்நாட்டு விமானத்தை உருவாக்க 1948 அக்டோபர் 11-ல் இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. உற்சாகமான மனநிலையில், பெரும் ஆரவாரத்தோடு ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் முதல் இந்திய விமானத்துக்கான மாதிரி வடிவத்தை உருவாக்குவதில் ஈடுபட்டனர். சிலை வடிக்கும் சிற்பிபோல ரசித்து ரசித்து விமானத்தின் ஒவ்வொரு பாகத்தையும் செய்தனர். பளு தாங்கும் சோதனை, கட்டமைப்புச் சோதனை, இறக்கைகள் சோதனை எனத் தனித்தனியாகப் பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இன்ஜின் பொருத்தி 'ஹிந்துஸ்தான் டிரெய்னர் 2' (ஹெச்.டி-2) என்ற பெயர் சூட்டி முதல் பறக்கும் சோதனை 1951 ஜூலை 27-ல் நடத்தப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் சோதனை விமான ஓட்டியாக கேப்டன் ஜாம்ஷட் கைகோபாத் முன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹெச்.டி-2 விமானத்தை ஒரு பொம்மைபோல வெகு திறமையாக அவர் கையாண்டார். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலுக்குப் பிடித்தமான விமான ஓட்டுநர் இவர்தான். 1951 ஆகஸ்ட் 13 அன்று ஹெச்.டி.-2 விமானத்தில் கம்பீரமாக அமர்ந்த ஜாம்ஷட், அதை வளைத்து, சுழற்றி, குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி அத்தனை சாகசங்களையும் அநாயாசமாகச் செய்துகாட்டினார். தாங்கள் வடிவமைத்த விமானம் அற்புதமாகச் செயல்படுவது கண்டு காட்கேவும் அவருடைய குழுவினரும் பெருமிதம் கொண்டனர். இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரியும் துணைத் தளபதியுமான சுபவிரத முகர்ஜி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்தின் அத்தனை ஊழியர்களும் நிறுவனர்களான சேட் வால்சந்த் ஹீராசந்த், பாவ்லே, மைசூர் மகாராஜா ஆகியோரும் அண்ணாந்து பார்க்க இந்தியாவின் முதல் சொந்த விமானமான ஹெச்.டி.-2 வானில் கம்பீரமாகப் பறந்தது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்