படைப்பு என்பது ஜோடனைகள் இல்லாமல் இருக்கவேண்டும். எழுத்து என்பதும், கருத்து என்பதும் ஏதோ ஒருவகையில் படிப்பவரை உலுக்கியெடுக்கவேண்டும். உசுப்பிவிடவேண்டும். கதை என்பதை வெறும் கதையாக இல்லாமல், வாழ்வியலுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அந்தக் கதையானது இருக்கவேண்டும். ‘இது வெறும் கதை இல்லப்பா. நம்ம வாழ்க்கை’ என்று ஏதோ ஒருவகையில், கதையுடன் வாசகர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ளவேண்டும். அப்படியொரு, படைப்பையும் எழுத்தையும் கதையையும் நமக்குத் தந்தவர் ஜே.கே. என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெயகாந்தன்.
ஜெயகாந்தனுக்கு முன்னதாக ஏராளமான எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் எழுத்துலகில், ஜெயகாந்தன்தான் முதன்முதலாக புயலாக வந்தார். இவரின் கதை சொல்லும் பாணியில் எவரின் சாயலும் இல்லை. ஆனால், மனிதர்களின் மனங்களும் அவர்களுக்கு எங்கோ ஏற்பட்ட காயங்களும் வேதனைகளும் அதற்கான மருந்துகளும் இருந்தன. நீண்ட கிருதாவும் பிடரி பறக்கிற முடியும் பைப் சிகரெட்டுமாக கம்பீரமாகக் காட்சி தந்த ஜெயகாந்தனை, எல்லோரும் சிங்கம் என்றுதான் சொன்னார்கள். எழுத்துச் சிங்கம். ஆனால் அந்த எழுத்துக்குள்ளே இருந்ததெல்லாம் வாழ்வு குறித்த கனிவும் பெருங்கருணையும்தான்!
ஒரு கதை... அதுவும் சிறுகதை... ஒட்டுமொத்த தமிழ் உலகையும் உலுக்கி உசுப்பி பரபரப்பை ஏற்றுமா தெரியவில்லை. ஆனால், ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ அப்படியொரு காட்டுத் தீயாகப் பரவியது. கற்பு எனும் விஷயத்துக்கு, அப்படியொரு ஜஸ்ட் லைக் தட் விளக்கத்தை அதுவரை எவரின் படைப்பும் கொடுத்ததில்லை. எந்த எழுத்தாளரும் சொன்னதுமில்லை.
இந்த ‘அக்கினி பிரவேசம்’ சிறுகதை, ‘கங்கா எங்கே போகிறாள்’ எனும் நாவலாயிற்று. பிறகு அதுவே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் திரைப்படமாகவும் வந்து, சினிமாவுக்கான நிறம் இப்படியாகவும் இருக்கலாம் என வெளிச்சமிட்டுக் காட்டியது.
'' ‘யாருக்காக அழுதான்?’ கதையைப் படித்துவிட்டு என்னால் தூங்கமுடியவில்லை. என் நண்பன் கவிஞர் வாலி, ஜெயகாந்தனுக்கும் நண்பன். ஆகவே, அவன் என்னை ஜெயகாந்தனிடம் அழைத்துக் கொண்டு சென்றான். நான் கதை பற்றி சொன்னேன். ஜெயகாந்தனும் கேட்டுக்கொண்டான். நாங்கள் மனமொத்த நண்பர்களானோம்.
பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். எல்லாப் படைப்புகளையும் படித்தேன். படித்துப் புரிந்ததை அவனிடம் சொன்னேன். ’சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்று ஜெயகாந்தனின் படைப்புகளில் நான் நடித்தது, மறக்க முடியாத அனுபவம். உண்மையிலேயே ஜெயகாந்தன் ஒரு சிங்கம்’’ என்று ‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதை இங்கே பதிவு செய்வது சரியாக இருக்கும்.
அநேகமாக, ஒரு எழுத்தாளனின் படைப்புகளைப் படித்துவிட்டு, அந்த எழுத்தாளரைச் சந்திக்க வேண்டும் என விரும்பி வருவதன் தொடக்கம், ஜெயகாந்தனில் இருந்துதான் தொடங்கியிருக்கும். அதேபோல், ஒவ்வொரு கதையும், யாரோ ஒருவரையேனும் முழுவதுமாக மாற்றிப் போடுகிற மந்திர வித்தையையும் ஜெயகாந்தனின் எழுத்துகள்தான் முதன்முதலாகச் செய்தன.
’பிரம்ம உபதேசம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘கைவிலங்கு’, ’பாரீசுக்குப் போ’, ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்பது உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தலைமுறைகள் கடந்துமான வாசகர்கள், பிரமித்துச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வார்த்தைகளில் நளினமோ புத்திசாலித்தனமோ இருக்காது. அந்தக் கதையின் கேரக்டர்களுக்குத் தக்கபடியாகத்தான் வார்த்தைகள் விழுந்திருக்கும். ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ கதைகளிலெல்லாம் அப்படித்தான். அவ்வளவு ஏன்... மெட்ராஸ் பாஷை பேசுபவர் என்றாலே, அவர் ஸ்லம்மில் இருப்பவர் என்கிற பொய்யான மாயையை, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ காவியத்தில், சுக்குநூறாக உடைத்திருப்பார் ஜே.கே.
பெரிய பங்களாவில், சூட்டும் கோட்டுமாக போட்டுக்கொண்டு, காரில் வலம் வரும் ஸ்ரீகாந்த் அநாயசமாக மெட்ராஸ் பாஷையைப் பேசியதை, எழுத்தை நேசிப்பவர்களும் சினிமாவை ரசிப்பவர்களும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமுடியாது.
ஜெயகாந்தனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு பாடம். வாழ்க்கைக்கான வேதம். ஒரு சிறுகதையின் கட்டமைப்பிற்கான ஆகச்சிறந்த படைப்பு... ஜெயகாந்தனின் சிறுகதைகளாகத்தான் அறியப்பட்டு, கொண்டாடப்பட்டன.
புரட்சி, புதுமை, யதார்த்தம் என்றெல்லாம் பல எழுத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இவை அத்தனையும் அன்றைக்கே ஜெயகாந்தன் படைப்புகளில் இருந்தன. ஐம்பதுகளில் தொடங்கி எண்பதுகள் வரை எழுதிக்கொண்டிருந்த ஜெயகாந்தனின் படைப்புகள், எல்லாக் காலத்துக்குமானவை. எல்லோருக்குமானவை.
அடுத்த தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறை என்று ஜெயகாந்தனின் எழுத்துகள் பரவி, வியாபித்து, அவர்களை என்னவோ செய்து, உருமாற்றிக் கொண்டே இருக்கும்.
ஜெயகாந்தன் சிங்கம். அவரின் எழுத்துகள் எப்போதுமே சிம்மாசனத்தில்தான் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும்!
எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் நினைவு நாள் இன்று (8.4.2020).
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago