’சொர்க்கம் என்பது நமக்கு; சுத்தமுள்ள வீடுதான்!’  கரோனா ஊரடங்கு வீடடங்கு; வீட்டுக்கு வீடு கிளீனிங்! 

By வி. ராம்ஜி

கரோனா வைரஸின் அச்சுறுத்தலால், மனித இனங்களுக்குக் கிடைத்த கெட்டதிலும் ஒரு நன்மை... வீட்டோடு குடும்பம் சகிதமாக இருப்பதுதான். கணவன், மனைவி, குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள் என வீடே நிறைந்துகிடக்கிறது, இந்த உறவுகளால்!

எழுத்தாளர் அநுத்தமா, எழுபதுகளில் மிகப்பிரபலம். அந்த அம்மையாரைப் பேட்டி எடுக்க ஒருமுறை சென்றிருந்தேன்.
அப்போது பேட்டியில் வருத்தப்பட்டுக் குறிப்பிட்டது இப்போதும் நினைவிருக்கிறது... ‘’முன்பெல்லாம் வீட்டுல மனுஷாள் நிறைஞ்சிருந்தாங்க. பொருட்கள் குறைவா இருந்துச்சு. இப்போ, பொருட்கள் அதிகமாயிருச்சு. மனுஷாள் குறைஞ்சிட்டாங்க’’ என்றார்.

உண்மைதான். பொருட்கள், பொருட்கள், பொருட்கள் என நிரம்பி வழிகின்றன வீடுகளும் வீட்டுப் பரண்களும்!

வீடுகள் பலவும் அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகிவிட்டன. பெரும்பான்மையான வீடுகளில், பால்கனி என்று ஓரிடம் ஒதுக்கித் தரப்படுகிறது. முன்பெல்லாம் பால்கனிகள், வீட்டுத் திண்ணையின் குணங்களைக் கொண்டிருந்தன. அதாவது, மாலை வேளையில், திண்ணையில் உட்கார்ந்து குடும்பத்தினர் அனைவரும் ஏதேதோ பேசுவார்கள். சிரிப்பார்கள். பொழுதும் போகும். பரஸ்பரமும் புரிந்துகொள்வார்கள்.

இதேபோல், பால்கனியில் உட்கார்ந்துகொண்டு, ஊரையும் தெருவையும் பார்த்துக்கொண்டு, ஒய்யாரமாக குடும்பத்தார் பேசிக்கொள்வார்கள். அரட்டையடிப்பார்கள். பின்னர், ஒரேயொருவர் உட்கார்ந்து ஆடுகிற மூங்கில் ஊஞ்சலைப் போட்டார்கள். பிறகு, அந்த பால்கனி இடத்தை, வேண்டாத பொருட்கள் வைக்கும் இடமாக்கிவிட்டார்கள்.

முன்பெல்லாம் போகிப் பண்டிகை வருவதற்கு முதல் நாள், வீட்டைச் சுத்தப்படுத்தும் பணி நடக்கும். தேவையில்லாத பொருட்கள், உடைந்த சாமான்கள் எல்லாவற்றையும் கழித்துக்கட்டுவார்கள். இப்போது போகிக்கெல்லாம் நேரமில்லை. ‘பாப்போம்... அவளுக்கு நேரம் கிடைச்சா, எனக்கு கிடைக்கல. எனக்கு டைம் கிடைச்சிச்சுன்னா, அவளுக்கு நேரம் கிடைக்கல’ என்று புலம்பிக்கொண்டே இருந்தார்கள் பலரும்!

கணவரும் மனைவியும் வேலைக்குப் போகிற வீட்டில் இந்த டயலாக். கணவன் மட்டும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் வேறு மாதிரியான வசனம்...
‘எங்கேங்க... வாரத்துக்கு ஒருநாள்தான் அவருக்கு லீவு. அன்னிக்கித்தான் லேட்டா எழுந்துருப்பார். காலைல டிபன் சாப்பிட்டு தூங்குவார். மதியம் எழுந்து, சாப்பிடுவார். தூங்குவார். அப்புறம் சாப்பாடு, நைட் தூக்கம். பாக்கவே பாவமா இருக்கும்’ என்று சொல்வார்கள் மனைவிமார்கள்.

ஆனால், கரோனா ஊரடங்கு... வீடடங்கு... மொத்தத்தையும் மாற்றிவிட்டது. எதெல்லாம் நம் லைஃப் ஸ்டைல் என்று சொல்லிக்கொண்டு ரவுண்டுகட்டி வாழ்ந்துகொண்டிருந்தோமோ... அவை மாறிவிட்டது. வீட்டிலிருந்தே வேலை என்றாகிவிட்டது. அலுவலக தூரமில்லை; பயண நேரமில்லை. அலுப்பும் சலிப்புமில்லை.

வேலை செய்தது போக மீதமுள்ள நேரம், பொன்னான நேரமாகிவிட்டது. அடுப்படி, ஹால், பூஜையறை, சின்ன ரூம், மாஸ்டர் ரூம், பால்கனி என்றிருக்கிற இன்றைய வீட்டின் கட்டமைப்பில் இருந்து, இரண்டுநாளைக்கு ஓரிடம் என்று எடுத்துக்கொண்டு, வீடு மொத்தமும் சேர்ந்து சுத்தப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சின்ன ரூம். அதன் ஜன்னல், டிரஸ்ஸிங் டேபிள், ரைட்டிங் டேபிள், ஷெல்ஃப், பீரோ, மின்விசிறி என சுத்தப்படுத்துகிறார்கள். பீரோவில் உள்ள வேண்டாத துணிகள், டைட்டாகிவிட்ட துணிகள், கிழிந்து நைந்த துணிகளையெல்லாம் அப்புறப்படுத்துகிற வேலை கனஜோராக நடக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு கட்டிய மின்கட்டண பில் தொடங்கி எப்போதோ ஏதோவொரு ஹோட்டலில் சாப்பிட்ட உணவுக்கான பில் வரை கசமுசாவென இருந்த பேப்பர்களையெல்லாம் கழித்துக்கட்டும் போது, ‘அடடா’ என ஒரு விடுதலை உணர்வும் சந்தோஷமும் உள்ளே பல்பு வெளிச்சம் படரச் செய்கிறது, குடும்பத்தாருக்குள்!

முக்கியமாக பரணில் இருக்கிற தகர, இரும்பு, பிரீப்கேஸ் பெட்டிகள், அட்டைப்பெட்டிகள். ‘தெய்வமகன்’ சிவாஜி, ‘புதியபறவை’ சரோஜாதேவி, ‘சிகப்பு ரோஜாக்கள்’ ஸ்ரீதேவி, பாக்யராஜின் ‘மெளன கீதங்கள்’ தொடராக வந்த பக்கங்கள், 72-ம் வருடத்து தீபாவளி மலர் புத்தகங்கள், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பேனர் நியூஸ் தாங்கிய தினசரி, எழுபதுகளின் பள்ளிப் புகைப்படங்கள், தேர்வுக்கு எடுத்த பாஸ்போர்ட் போட்டோக்கள், ஊர்விட்டு ஊர் சென்று வேலை பார்த்த தொடக்கத்தில் அப்பா, அக்கா, நண்பர்கள் எழுதிய கடிதங்கள், பெண் பார்த்த கதையைச் சொன்ன அப்பாவின் விரிவான கடிதங்கள் என ப்ளாஷ்பேக்கில் மூழ்கச் செய்யும் பரண்களும் பெட்டிகளும் இல்லாத வீடுகளே இல்லை.

அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, படித்து, படிக்கக் கொடுத்து, முகநூலில் பதிவிட்டு, லைக்ஸ்கள் வாங்கி, கமெண்ட்டுகள் குவித்து... என சுத்தப்படுத்துவதில்தான் எத்தனை சந்தோஷங்கள் அடுக்கடுக்காக!

போன வாரம் சின்ன ரூம். இந்த வாரம் பெரிய ரூம். அடுத்த வாரம் கிச்சன் என்று டைம் டேபிள் போட்டு, மொத்த வீடும் கிளீனிங் ஒர்க்கில் உற்சாகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. உற்சாகமாகிக் கொண்டிருக்கிறது.

டப்பா இருக்கும்; மூடி இருக்கும். மூடி மட்டும் இருக்கும். டப்பா இருக்காது. கம்பி உடைந்த குடை, பில்டர் நொறுங்கிய பிளாஸ்க், இப்போது ஒன்பதாவது படிக்கும் மகனுக்கு இரண்டாவது படிக்கும் போது வாங்கிய, ஏரோப்ளேன், குரங்கு பொம்மைகள், பிய்ந்து போன டிராவல் பேக், காது விட்டுப்போன ஹேண்ட்பேக், ஆறாம் வகுப்பு புத்தக, நோட்டுகள் எல்லாவற்றுக்கும் விடுதலை கொடுத்து, எட்டிப் பார்த்தால், ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என்றிருக்கும் பரண்கள். ’குடிக்கமாட்டேன், அப்படியே சாப்பிடுவேன்’ என்ற விளம்பர வாசகம் போல், பரணிலேயே படுத்துக் கொள்ளலாம் என்கிற கமெண்டுகள்தான், இன்னும் இன்னும் நம்மை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடச் செய்யும் போஷாக்குகள்!

‘சொர்க்கம் என்பது நமக்கு; சுத்தமுள்ள வீடுதான்’ என்று ஒவ்வொரு வீடும், சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறது. வாரத்துக்கு ஒருமுறையேனும் கழிவுக்குவியல்கள் எரித்து, போகி கொண்டிருக்கிறார்கள்... இந்த கரோனா ஊரடங்கு வீடடங்கு தருணத்தில்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

23 mins ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்