கரோனா களத்தில் கருணை முகங்கள் - 3 :  பிளாட்பார மனிதர்கள், தொழுநோயாளிகள், குடிசை மக்கள், நன்றியுள்ள நாய்கள்... பார்த்துப் பார்த்து உணவு

By செய்திப்பிரிவு

வருடத்தின் 365 நாட்களிலும் சாலையில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்போதெல்லாம் கட்டிடங்களைப் பார்த்துப் பிரமித்து கடந்துவிடுகிறோம். சக பயணிகளையும் அவர்களின் வாகனங்களையும் அந்த வாகனங்களுக்குப் பின்னே எழுதியிருக்கிற வாசகங்களையும் படிப்பதில் காட்டுகிற ஆர்வத்தை, தெருவில் சுருண்டு கிடக்கிற மனிதர்களின் பக்கமும் எங்கே செல்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி திரியும் நாய்களையும் நாம் கண்டுகொள்வதுமில்லை; கவனித்துச் சிந்திப்பதுமில்லை. கேட்டால்... ‘இந்தப் பரபரப்பான உலகத்திலே...’ என்கிற வசனம் இருக்கவே இருக்கிறது, நாம் தப்பித்துக் கொள்ள!

இப்போது சாலைப் பயணமில்லை. வீடுதான் உலகம். வீடே உலகம். அதுவே அலுவலகம். அதுவே பொழுதுபோக்கு. இப்படியாக ஆசுவாசத்துடன் இருக்கிற இந்த நாட்களில், கரோனாவின் ஊரடங்கு வீடடங்கு நாட்களில்... அந்தச் சாலையே வீடு, பிளாட்பாரமே மாளிகை, வெட்டவெளியே வாழ்க்கை என்று குறுகிக் கிடக்கிறவர்களின் பசிக்கும் வயிறு பற்றி, அந்த அரைசாண் வயிறு பற்றி, அரைநிமிடமாவது யோசித்திருக்கிறோமா?

ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மனிதர்கள் புழங்கும் சாலைகளில், இப்படியான நான்குபேருக்கு, நாலு இட்லியாவது வாங்கித் தரும் நாலுபேர் இருக்கத்தான் செய்கின்றனர். இப்போது சாலையே வெறிச்சோடிக் கிடக்கிற ஊரடங்குப் பொழுதில், அவர்களுக்கு உணவு?

மூன்று வேளையும் சரியான நேரத்தில், மணக்கமணக்க, ருசிக்க ருசிக்க, வகைதொகை தெரியாமல், குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுகிற இந்த அற்புதமான நாட்களில், வீடும் வாசலுமில்லாமல், வாழ்வாதாரமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த பிளாட்பார மனிதர்களை, கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

‘ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா’ (Space Kidz India) எனும் அமைப்பினர், இந்த மனித உயிர்களையும் அவர்களின் வயிறுகளையும் சிந்தித்தார்கள். கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஊரடங்கு நடந்துகொண்டிருக்கிற இந்த நாட்களில், அவர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘’சென்ட்ரல், பாரீஸ் கார்னர், அண்ணாசாலைன்னு பல ஏரியாக்களில், பிளாட்பாரமே உலகம் என்று திரிந்துகொண்டிருக்கும் சுமார் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து, அந்தப் பொட்டலத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம். ராயப்பேட்டை ஏரியாவில், லாக் நகர்னு ஒரு ஏரியா இருக்கு. அங்கே வயதானவர்கள், நோயாளிகள்னு நிறைந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கும் உணவுப் பாக்கெட் கொடுத்துக்கிட்டிருக்கோம்’’ என்கிறார்கள்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ எனும் சொல்லுக்கேற்ப, உயிர் வாழ்தலைத் தவிர வேறு எந்த ஆசையோ விருப்பமோ இல்லாமல் தெருவோரங்களில் உள்ள இந்த மனிதர்களை நினைத்து, அவர்களைப் பசியாறச் செய்து கொண்டிருக்கும் இப்படியான தன்னார்வ அமைப்புகளின் வடிவில்தான் கடவுள் தன் கருணை முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

மேலும், அரும்பாக்கம், விருகம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் குடிசைப் பகுதி வாழ் மக்களுக்கு 10 நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். வண்ணார்பேட்டை நாகமணி தியேட்டருக்கு அருகில் உள்ள தொழுநோயாளிகள் ஹோமில் உள்ளவர்களுக்கு சோப், பினாயில், கையுறை, முகக்கவசம் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

‘’பொழிச்சலூர்ல நரிக்குறவர் இன மக்கள் இருக்காங்க. சுமார் 400 பேர் இருப்பாங்க. அவங்களுக்கு, சானிட்டைஸர், மாஸ்க், கஷாயம், உணவுப் பொருள்னு கொடுத்திருக்கோம். வழக்கமாவே, ‘சாமி, சாமீன்னு சொல்றவங்க, அப்போ நெகிழ்ந்து சொன்னாங்க. எங்களுக்கு ஒருமாதிரியாயிருச்சு. மனிதர்கள், மனிதர்களுக்குச் செய்ற சின்னச் சின்ன உதவிதானே இதெல்லாம்’’ என அமைதியாகச் சொல்கிறார்கள் இந்த அமைப்பில் உள்ள அன்பர்கள்.

’’தெனத்துக்கும் வந்து சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்துட்டுப் போறாங்க. அதுவும் ஏதோ ஒரு சாதம்னு இல்லாம, ஒருநாள் எலுமிச்சை சாதம், அடுத்தநாள் பிரிஞ்சி சாதம், மறுநாள் புளியோதரை, இன்னொரு நாள் தயிர்சாதம்னு கொடுக்கறாங்க. டீக்கடை, சைக்கிள் கடைன்னு எதுனா ஒரு கடைல, தண்ணி கேட்டு வாங்கிக்குவோம். இப்ப கடையெல்லாம் இல்ல. இவங்களே தண்ணியும் கொடுக்கறாங்க’’ என்று குரல் கம்மச் சொல்லும் மனிதர்களின் வயிறு மட்டுமல்ல... நெஞ்சமும் நிறைந்திருப்பதை உணரமுடிகிறது.

ஊரடங்கு... வீடடங்கு நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், காவல்துறையினரின் பங்கும் அவர்களின் எல்லையில்லாப் பணியும் அளவிடவே முடியாதது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா’ அமைப்பினர், காவல்துறையிர் குறித்தும் யோசித்தார்கள். பாரிமுனை, மயிலாப்பூர், ராயப்பேட்டை என பல பகுதிகளின் சாலைகளில், பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு, டீ, பிஸ்கட், வாட்டர் பாட்டில், கஷாயம் என வழங்கினார்கள். அதேபோல், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், துப்புரவுப் பணியில் ஈடுபட்டு, ஊரை சுத்தமாக்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு, கையுறை, முகக்கவசம், சானிட்டைஸர், கஷாயம், உணவுப் பொட்டலம் என இந்த அமைப்பினர், வழங்கி வருகின்றனர்.

சேவை என்பதற்கு சாதி, மத பேதங்களெல்லாம் இல்லை. உயிர்களிலும் அப்படித்தான்!

வீட்டில் நாய் வளர்க்கிறோம். ஜிம்மி, பப்பி என்றெல்லாம் பெயர் வைக்கிறோம். கொஞ்சுகிறோம். ஆனால் யாருமே வளர்க்காமல், தெருவில் கிடப்பதை தெருநாய்கள் என்று சொல்கிறோம். தெருவில் தேமேனென்று சுற்றித் திரியும் நாய்களுக்கு, டீக்கடைகளும் உணவகங்களும் ஏதோ பிஸ்கட்டையோ ரொட்டியையோ போடும். டீ குடிக்க வந்தவர்களில் எவரேனும் ஏதேனும் வாங்கிப் போடுவதை வாலாட்டித் தின்னும். இப்போது டீக்கடைகளும் இல்லை. உணவகங்களில் உணவு மீதமாவதுமில்லை.

ஏரியாவே கதியென்று கிடப்பதுதான் நாய்களின் குணம். எந்த வம்பு வழக்குக்கும் போகாத நாய்கள், உயர் நீதிமன்ற வளாகத்திலும் சுற்றித் திரிகின்றன. கோர்ட், கேஸ் எதுவுமில்லை இப்போது. வாய்தா, சம்மன், ஆர்டர் என்று ஏதுமின்றி நிசப்தமாக இருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வளாகம்.‘’கோர்ட்டுக்குள்ளே 20 லேருந்து 25 நாய்கள் வரைக்கும் சுத்திகிட்டு இருக்கு. பாவம்... இந்த நாய்களுக்கு குடிக்க தண்ணியும் இல்ல. பசியாற ஒருவாய் சோறும் கிடையாது. ஏதோ ஒரு அமைப்பு. அந்த அமைப்புல இருக்கிற வக்கீல் சார்களும் மேடமும் இந்த நாய்கள் பத்தி யோசிச்சிருப்பாங்க போல. இந்த 25 நாய்களுக்கும் தினமும் உணவு கொடுக்கறாங்க.

அவங்க, எங்ககிட்ட கொடுத்துடுவாங்க. நாங்க நாய்களுக்குப் போட்ருவோம். இதெல்லாம் நாய்கள் சாப்பிடுற ஸ்பெஷல் உணவு’’ என்று நெகிழ்வுடன் சொல்கிற ஆசைத்தம்பி, உயர் நீதிமன்ற வளாகத்தில் வாட்ச்மேனாகப் பணியாற்றுகிறார்.

‘’மொத்தம் மூணு ஷிப்ட்னு வேலை பாக்கறோம். இப்ப கரோனாவால ரெண்டு ஷிப்ட்டுதான். ஷிப்ட்டுக்கு தகுந்தது மாதிரி, நாய்களுக்குப் போடுறதுக்கு உணவையெல்லாம் பிரிச்சுக் கொடுத்துடுவாங்க. நாங்களும் சரியான நேரத்துக்கு, அதுங்களைக் கூப்பிட்டு (!) சாப்பாடு போட்ருவோம். இதுங்களுக்கு தண்ணி கொடுக்கறதுக்காகவே பக்கெட் வாங்கியிருக்கோம். அந்த பக்கெட்டுகள்ல தண்ணியை ரொப்பி, அங்கங்கே வைச்சிருவோம். வேணுங்கும் போது, அதுங்க குடிச்சிக்கும்.

சாப்பிட்டு முடிச்சிட்டு, தலையைத் திருப்பி ஒரு பார்வை பாக்கும் பாருங்க... அந்த ஒத்தைப் பார்வைல நன்றியை வெளிப்படுத்திரும். அப்பலாம், ஒரு அமைப்பா இருந்து, இப்படி எல்லா நல்லதுகளும் பண்ற அந்த மனுஷாளுக்கெல்லாம் நானும் மனசார நன்றி சொல்லிக்குவேன்’’ என்று உணர்ச்சிமேலிடச் சொல்கிறார் ஆசைத்தம்பி.

இப்போது, ஊரடங்கு வீடடங்கால், உற்சாகமாக சுற்றித் திரிகின்றன காகங்களும் குருவிகளும் அணில்களும். நம் வீட்டு பால்கனிகளுக்கு வந்து நம்மை நலம் விசாரிக்கின்றன. நள்ளிரவுகளில், ஏதோ ஒரு உருவம் பார்த்து, எங்கோ ஒரு சத்தம் கேட்டு, குலைத்துக் காக்கிற சம்பளம் வாங்காத காவலாளிகாகத் தெருவில் திரியும் நாய்கள், பசி மயக்கத்தில் சோர்ந்து, சுருண்டு கிடக்கின்றன.

நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளையும் ஒரு கவளம் சோற்றை நம் தெருநாய்களுக்கு என ஒதுக்கிக் கொடுப்போம்.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ எனப் பாடி உணவளித்த ஏழைக்கவிஞன் பாரதியால் முடிந்ததென்றால்.. நம்மாலும் முடியும்தானே!
- அகத்தில் முகம் பார்ப்போம்

எழுத்தாக்கம் : வி.ராம்ஜி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்