நேரம் பார்த்து வேலை செய்ய வேண்டிய காலகட்டம் இல்லை; பெருமையான தருணம்; கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களின் குரல்

By நந்தினி வெள்ளைச்சாமி

மாநிலத்தின் தலைநகரம் என்பதாலும், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கூடுகை இடமாக இருப்பதாலும், கரோனா வைரஸ் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகரின் கண்ணோட்டத்தில் இருந்தே நம்மில் பெரும்பாலானோர் பார்த்து வருகிறோம். சென்னையின் அரசு மருத்துவர்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக எத்தகைய பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறார்களோ அதற்கு இணையாக சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளும் மருத்துவர்களும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கட்டுரை பிரசுரமாகும் நாள் வரை (ஏப்.4) தமிழகத்தில் கரோனா வைரஸால் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக பார்த்தால், 81 பேருடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. திருநெல்வேலி (36), ஈரோடு (32), கோவை (29), தேனி, நாமக்கல் தலா 21 நோயாளிகளுடன் இந்த 5 மாவட்டங்கள் அடுத்த 4 இடங்களை வகிக்கின்றன.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு வலுவானது. ஆனால், அன்றாட மருத்துவப் பணிகள், அவசர சிகிச்சைகள், கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைகள், விழிப்புணர்வு முகாம்கள், நிர்வாக பணிகள் என எல்லாப் பணிகளையும் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதால், இப்போதே மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு மருத்துவமனைகள். மேலும், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), எண்-95 முகக்கவசங்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்ய முடியாமல், அதற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலைமையை தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் எப்படி எதிர்கொண்டு வருகின்றனர்?

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 நாட்கள் பணி முடித்துவிட்டு ஒரு வார காலம் சுய தனிமைப்படுத்தலுக்காக, பணி விடுப்பில் இருக்கும் மூத்த மருத்துவர் ஒருவரிடம் 'இந்து தமிழ் திசை' சார்பாகப் பேசினோம்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர், நெல்லை அரசு மருத்துவமனையின் நிலைமையை விளக்கினார்.

"நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு என 60 படுக்கைகள் உள்ளன. மேலும், 200 படுக்கைகளைத் தயார் செய்துள்ளோம். 15 வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. மேற்கொண்டு இன்னும் ஆர்டர் செய்திருக்கிறோம். வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சீரியஸான நோயாளிகள் வரவில்லை. அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்களை மூன்று குழுவாகப் பிரித்துள்ளோம். கரோனா வார்டில் பணி செய்பவர்கள், புறநோயாளிகள் பிரிவில் பணி செய்யும் மருத்துவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் பணி செய்யும் மருத்துவர்கள் என மூன்றாகப் பிரித்துள்ளோம்.

இதில், கரோனா வார்டில் உள்ள மருத்துவர்கள் கட்டாயம் பிபிஇ எனப்படும் முழு பாதுகாப்பு உடை அணிந்துதான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதை ஒருமுறை கழற்றிவிட்டால் மீண்டும் வேறு பிபிஇ கிட் தான் உபயோகிக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்ல, அந்த வார்டில் உள்ள பாரா மெடிக்கல் பணியாளர்கள் முதல் முதுநிலை மருத்துவ மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் பிபிஇ கிட் கொடுக்கப்படுகிறது.

அந்த வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், 4 நாட்கள் தினமும் 8 மணிநேரம் பணி செய்வார்கள். பின்னர் தனியார் ஓட்டல் ஒன்றில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள். அப்போது அவர்களுக்குப் பணி விடுப்பு அளிக்கப்படும். ஒரு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகே அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

பிபிஇ பாதுகாப்பு உடையை அணிவதால் ஏற்படும் சிரமங்களையும் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"அந்த டிரஸ்ஸைப் போட்டுக்கொண்டு அதிக நேரம் இருக்கவே முடியாது. அந்த நேரத்தில் எதுவும் சாப்பிட முடியாது. மருத்துவர்களுக்கு மருத்துவமனையில் இருந்து தான் உணவுகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு உடையை அணிவதற்கு முன்பே நன்றாக சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். அந்த உடையை அணிந்த சிறிது நேரத்திலேயே உடல் சோர்வாகிவிடும். மூச்சு முட்டும். பகலில் பணி செய்யும் மருத்துவர்கள் தொடர்ந்து 6 மணிநேரம் அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் கூட அருந்த முடியாது. இயற்கை உபாதைகளுக்காக கழிவறை கூட செல்ல முடியாது.

தங்களது செல்போனைக் கூட அவர்கள் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் போன் மூலமாகக் கூடதொற்று பரவலாம். ஒரு போனை மட்டுமே உள்ளே வைத்திருக்க அனுமதித்திருக்கிறோம். மருத்துவர்கள் தான் உலகம் முழுவதும் முதலில் அதிக தொற்றுக்கு ஆளாகின்றனர். பிபிஇ கிட்-ஐ அரசு தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இது மட்டும் தான் அரசுக்கு எங்களின் வேண்டுகோள்.

ஏனென்றால் அதனை உற்பத்தி செய்வது தற்போதைக்குக் கடினமாக இருக்கிறது. இப்போதைக்குக் கிடைக்கிறது. இனி கிடைக்கவில்லையென்றால் என்னவாகும் என்ற கவலையும் இருக்கிறது. இருக்கும் மருத்துவர்களை வைத்து இப்போதைக்குச் சமாளிக்கிறோம். இனி நோயாளிகள் வர வர கஷ்டம் தான். தனியார் மருத்துவர்கள் என அனைவரையும் இந்தப் பணியில் இணைத்துதான் மேற்கொண்டு பணி செய்ய வேண்டியிருக்கும்" என்கிறார்.

இந்தியாவில் இதுவரை சுமார் 12 மருத்துவர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். முகக்கவசங்கள், கையுறைகள், பிபிஇ கிட் ஆகியவற்றின் பற்றாக்குறையால்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது மருத்துவ உலகம் சொல்லும் புகார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர், அவரது மனைவி, 10 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவே, மருத்துவர்கள் இந்தத் தொற்றுக்கு எவ்வளவு எளிதில் ஆளாகக்கூடும் என்பதை நமக்கு உணர்த்தும்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "ஒன்றரை கோடி முகக்கவசங்கள், 25 லட்சம் எண்-95 முகக்கவசங்கள், 11 லட்சம் பிபிஇ பாதுகாப்புக் கவசங்கள், 2,500 வென்டிலேட்டர்கள், 30 ஆயிரம் டெஸ்ட் கிட் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இப்போதிருக்கும் ஊரடங்கால் இதனை உற்பத்தி செய்வதிலும் கொள்முதல் செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஒரு மருத்துவர் பிபிஇ கிட் ஒன்றை ஒருமுறை அணிந்துவிட்டால், அதனை மீண்டும் அணிய முடியாது. இதுவே, பிபிஇ கிட் தொடர்ந்து தேவைப்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.

முகக்கவசம், கண்களுக்கு பாதுகாப்பு, தலையுறை, முழு கவச உடை உள்ளிட்ட 23 முக்கிய பாதுகாப்புக் கவசங்கள் கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் தரப்பட வேண்டும் என, தேசிய நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. வெளிப்புற நோயாளிகள் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அத்தியாவசியப் பாதுகாப்பு கவசங்கள் தொடந்து கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மருத்துவர் சங்கம், அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள், பாதுகாப்புக் கவசங்களைத் தொடர்ந்து வழங்க தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

தொடர் பணிச்சோர்வு, குடும்பத்தைக் காண முடியாதது என, உடல் சோர்வை விட மன அழுத்தமே மருத்துவர்களுக்கு அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறார் நெல்லை மருத்துவர்.

"வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் பதட்டம் இன்றி பார்க்கலாம். கரோனா நோய்த்தொற்றைப் பதற்றத்தோடு தான் அணுக முடியும். ஏனென்றால் அதன் தீவிரம் அதிகம். இதனால், மருத்துவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு அருகிலேயே வீடு இருந்தாலும் செல்ல முடியாது. கஷ்டம் தான். குழந்தைகள், பெரியவர்களை விட்டு இங்கு மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. இருந்தாலும், அவர்கள் தங்கள் கஷ்டங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். பாதிக்கும் மேல் இங்கு பெண் மருத்துவர்கள். கைக்குழந்தை உள்ள ஒரு பெண் மருத்துவர் இருக்கிறார்.

உடல் பிரச்சினைகளை விட மனநலப் பிரச்சினைகள்தான் அதிகம். முதுநிலை மருத்துவ மாணவர்களும் பணியில் உள்ளனர். அவர்களும் இளைஞர்கள் தான். அவர்களை இந்த நிலைமை கட்டிப்போட்டது போன்று இருக்கும். கர்ப்பமாக உள்ளவர்கள், உடல்நிலை சரியில்லாத மருத்துவர்கள் மட்டும் தான் பணியில் இல்லை. மற்ற எல்லா மருத்துவர்களும் பணியில் இருக்கின்றனர். நோய்த்தொற்று குறித்த பயம் இருந்தாலும் அவர்கள் பணி செய்கின்றனர். ஆனால், பயந்து யாரும் ஒதுங்கவில்லை, எல்லோரும் விரும்பித்தான் பணி செய்து வருகின்றனர்" என்று முடிக்கிறார்.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கரோனா வைரஸ் தொற்றை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அங்கு பணிபுரிந்து வரும் பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் நம்மிடம் விளக்கினார்.

"மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு கரோனா தொற்று பாசிட்டிவா, நெகட்டிவா என தெரியாமலேயே பல மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர். அந்த வார்டில் உள்ள ஒருவருக்கு சோதனை முடிவு 'பாசிட்டிவ்' என வந்தால், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் உட்பட அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி விடுப்பு அளிக்கிறோம்.

மொத்தம் உள்ள மருத்துவர்களில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள் கரோனா வார்டில் இருப்பார்கள். இரு பங்கு மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விட்டுதான் அவர்கள் வீடுகளுக்குச் செல்வார்கள். அப்போதுதான் மருத்துவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு. சமூகப் பரவலையும் தடுக்க முடியும். கோவை அரசு மருத்துவமனையில் 250 மருத்துவர்கள், இஎஸ்ஐ மருத்துவமனையில் 200 மருத்துவர்கள் இருக்கின்றனர். அவசர சிகிச்சைக்கு என தனியாக மருத்துவர்கள் இருக்கின்றனர். மகப்பேறுக்கு தனி மருத்துவக்குழு உள்ளது.

கரோனா வார்டில் 10 மருத்துவர்கள் உட்பட 25 பணியாளர்கள் உள்ளனர். இப்படிப் பல பணிகளுக்கு மருத்துவர்களைக் குழுவாகப் பிரித்து பணியாற்ற வேண்டியிருக்கிறது.இதனால், பணிச்சுமை இல்லை எனச் சொல்ல மாட்டேன். அதனை உணர ஆரம்பித்திருக்கிறோம்" என்றார்.

மருத்துவர்கள் பற்றாக்குறை, பாதுகாப்புக் கவசங்களுக்கான போதாமை நிலவுகையில் தமிழகத்தில் சமூகத்தொற்று ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்கிறார் வேலூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆதித்யா.

"வேலூரில் பழைய அரசு மருத்துவமனையில் 125 படுக்கைகளுடன் கூடிய தனி மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய கரோனா தனி வார்டு இருக்கிறது. 40 வென்டிலேட்டர்கள் உள்ளன. 70% நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படாது.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 10-30% படுக்கைகளை தனி வார்டுகளாகத் தயார்படுத்தியிருக்கிறோம். சிஎம்சி மருத்துவமனையிலும் 125 படுக்கைகள் உள்ளன. 40% மருத்துவர்கள் கரோனா வார்டில் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். 60% மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் பணியில் இருக்கின்றனர். சில மருத்துவர்கள் 24 மணிநேரமும் பணி செய்ய வேண்டியிருக்கிறது. மருத்துவர்கள் நாம் பயந்துகொண்டிருந்தால் ஒரு கரோனா நோயாளிக்குக் கூட சிகிச்சை அளிக்க முடியாது.

கேரளாவில் ஒரு மருத்துவருக்கு கரோனா ஏற்பட்டு மற்ற எல்லா மருத்துவர்களையும் பின்னர் தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டது. அப்படி இருக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு இப்போதே சுழற்சி முறையில் மருத்துவர்களைத் தனிமைப்படுத்துகிறோம். அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைப்பது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதனால் சமூகத் தொற்று அளவுக்கு நிலைமை மோசமானால் இன்னும் சவாலானதாக இருக்கும்" என்றார்.

பல பகுதிகளில் அருகமை தனியார் மருத்துவமனைகள் மூடியிருப்பதால், அரசு மருத்துவமனைகளுக்குப் புறநோயாளிகளாக வருபவர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காலத்திலும் கணிசமாகக் குறையவில்லை. மேலும், ஏழை, எளிய மக்கள்தான் அரசு மருத்துவமனைகளை நாடுவர் என்ற நிலைமை மாறி வருவதாகக் கூறும் மருத்துவர்கள், கரோனாவால் ஏற்பட்ட தாக்கத்தால் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களும் அரசு மருத்துவமனைகளுக்கு வரத்தொடங்கியுள்ளனர் என்கின்றனர்.

பிள்ளைகளையும், கணவரையும் பார்க்க முடியாத நிலை இருந்தாலும் மருத்துவர்கள் திருப்தியுடன் வேலை பார்ப்பதாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி அனுரத்னா.

"எந்த மருத்துவரும் இந்தப் பணியைக் கூடுதல் சுமையாக நினைக்கவில்லை. இது நாங்கள் நேரம் பார்த்து வேலை செய்ய வேண்டிய காலகட்டம் இல்லை. இப்போது வேலை செய்வது மருத்துவர்களான எங்களுக்குப் பெருமையான தருணம். எல்லாவற்றுக்கும் எங்களைத் தயார்படுத்திக்கொண்டு தான் ஸ்டெதஸ்கோப், வெள்ளை கோட் அணிந்திருக்கிறோம். அனைவரும் எங்கள் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம்.

எல்லாப் பணிகளையும் முடித்து விட்டு, இரவு 12-12.30 மணிக்கு நான் தூங்கச் சென்றாலும் இன்றைக்கு என் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற மனநிறைவுடன் தான் செல்கிறேன். நான் என் பிள்ளைகளயும் கணவரையும் பார்ப்பதில்லை. இவையெல்லாம் முடியும் வரை பார்க்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். பெரும்பாலும் மருத்துவமனையில்தான் தங்குகிறேன். தமிழ்நாட்டில் மேம்பட்ட பொது சுகாதாரக் கட்டமைப்பு இருக்கிறது. நமக்கு வழிகாட்டிய தலைவர்கள் அப்படி இருந்தனர். தமிழ்நாட்டு மருத்துவர்களுக்குப் பொறுப்புணர்வும் அதிகம்" என்றார் அனுரத்னா..

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

மேலும்