கரோனா களத்தில் கருணை முகங்கள்: 1- காவல்துறையின் அன்புக் கரங்கள்!

By செய்திப்பிரிவு

உலகம் முழுக்க உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறது கரோனா. ஒட்டுமொத்த உலகத்தாரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டு, சுற்றிக்கொண்டிருக்கிறது. 21 நாள் ஊரடங்கில், வீடடங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். மேல் மற்றும் நடுத்தட்டு மக்கள், உடனே அலர்ட் ஆனார்கள். காய்கறி முதல் கடலைப் பருப்பு வரை வாங்கி, ஸ்டோர் பண்ணி வைத்துக்கொண்டார்கள்.

ஆனால், எளிய மாந்தர்களின் நிலை? ‘வேலைக்குப் போனாதான் சம்பளம், சம்பளம் வந்தாதான் சாப்பாடு’என்று வாழ்பவர்களும் வாழ்தலுக்குப் போராடுபவர்களும்தான் இங்கே அதிகம். கோடு கிழித்துப் பிரித்து, வறுமைக்கு வாக்கப்பட்டதாகச் சொல்லப்படுபவர்கள் இங்கே அதிக சதவீதம். இவர்களின் நிலை கேள்விக்குறிதான்.

‘கரோனாவால் நாம் ஏழு வருடம் பின் தங்கிவிடுவோம்’என்று கவலையுடன் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறோம் என்றே தெரியாமல் இருப்பவர்களுக்கு, இன்னும் எத்தனை வருடங்களாகுமோ, நிமிர்வதற்கு?

‘அதெல்லாம் இருக்கட்டும். இப்போதைய ஒவ்வொரு நாளும் ஒரு யுகம். ஒருநாளின் மூன்று வேளை உணவென்பதே மாபெரும் லட்சியம் ’ என்றாகிவிட்ட இந்தச் சூழலில், இவர்களின் நிலை?

இப்படி யோசிப்பது பலரின் குணம். யோசித்ததைச் செயலாற்றி, பசியாற்றுவதுதான் அருங்குணம். துயரும் பசியும் துடைக்கிற அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்களின் அன்புக்கு இங்கே ஈடேது; இணையேது?

அந்த முகங்களைப் பார்க்கவும்... முடிந்தால் அவர்களுடன் இணைந்து கை கோக்கவுமான மினி தொடர்தான் இது.

ஊரடங்கு... வீடடங்கு என அறிவிக்கப்பட்டதுமே, கண்ணும் கருத்துமாகக் களத்தில் நின்று சேவையாற்றிக் கொண்டிருக்கிறது காவல்துறை. அதேவேளையில், காவல்துறையின் உயரதிகாரிகளின் ஆலோசனையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் குடிசைப்பகுதி மக்கள் பக்கமும் திரும்பிப் பணியாற்றி வருகிறார் சென்னை F5 சூளைமேடு காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் பாபு .

வீட்டில் முடங்கிக் கிடக்கிற குடிசை வாழ் மக்களின் வயிறு பற்றி யோசித்தார். சென்னை சூளைமேடு, திருக்குமரபுரம், அன்னை சத்யா நகர், விநாயகபுரம், கிழக்கு நமச்சிவாயபுரம், மேற்கு நமச்சிவாயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதி மக்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், திருநங்கைகள் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபுவால் பலன் பெற்றுள்ளன. அவர்களின் பசியாற்றுவதும் எங்களின் பணியே என நேயத்துடன் செயலாற்றி வருகிறார்.

இதற்கான ஊக்க சக்தியாகவும் ஆக்க சக்தியாகவும் இருக்கும் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டி, பொதுமக்களுக்கு உதவி செய்வதற்கான பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்.

முத்துவேல்பாண்டி

கிரிமினல்களையும் குற்றவாளிகளையும் நோட்டமிட்டுப் பிடிக்கும் வல்லமை கொண்ட காவல்துறையினருக்கு நல்லவர்களையும் எளிதில் அடையாளம் காணமுடியும்தானே. அந்தந்தப் பகுதிகளில் உள்ள நல்லுள்ளக்காரர்கள், தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்டவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் காக்கும் கரத்துக்குச் சொந்தக்காரர்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல், கருணை உள்ளங்கள் ஒன்றிணைந்தன. திருக்குமரபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் எனும் தொழிலதிபர் அப்படித்தான் இணைந்தார். அங்கே உள்ள 450 குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 கிலோ அரிசி. சூளைமேட்டின் இந்தப் பகுதி மக்கள் வயிறும் மனமும் குளிர நெகிழ்ந்து போனார்கள்.

சக்திவேல்

அதையடுத்து, அன்புக்கும் உதவிக்கும் எல்லைகள் ஏது?

இந்தப் பகுதியைத் தாண்டி, சென்னையின் பல பகுதிகளில் இருக்கும் 400 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், அரிசி என வழங்கப்பட்டன.

''வெளிநாட்டு ஏற்றுமதிக்காக வைச்சிருந்த அரிசி மூட்டைகள். இப்போ, நம்மூர் மக்களுக்குப் பயன்படுது. இதைவிட நிம்மதி, கோடி கொடுத்தாலும் கிடைக்காது'' என்கிறார் தொழிலதிபர் சக்திவேல்.

''சூளைமேடு நமச்சிவாயபுரம் ஏரியாவில் ஆயிரம் வீடு இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் அஞ்சு கிலோ அரிசி. இதைத் தொடர்ந்து கொடுக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒருவேளை, ஏப்ரல் 14க்குப் பிறகும் இந்த ஊரடங்கு தொடர்ந்தாலும், கொடுக்கறதுக்கு நிவாரணப் பொருட்களும் இருக்கு. நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்காங்க'' என்கிறார் காவல்துறை ஆய்வாளர் ஆனந்த் பாபு.

2000 குடும்பங்கள், 8000 பேருக்கு உதவி

ஊரடங்கு காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசி தீர்க்கும் பணிகளை ஈடுபாட்டுடன் செய்து வருகிறது எழும்பூரில் உள்ள என் உடான் என்ற அமைப்பு. அந்தப் பகுதி மக்கள் பலரும் கண்ணீரும் புன்னகையுமாய் நன்றி தெரிவிக்கிறார்கள்.

வேதிகா

நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வேதிகாவிடம் பேசினோம். ''ஒருநாள் ஊரடங்கின்போதே இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். எனவே அதற்கேற்றபடி உதவிகள் செய்யத் திட்டமிட்டோம்'' என்கிறார்.

ஊரடங்கு தொடங்கிய மறுநாளில் இருந்தே நீண்டுவிட்டது கருணைக் கரம்.

என் உடான் அமைப்பினர், ஊரடங்கின் முதல் வாரத்திலேயே 500 திருநங்கைகள் மற்றும் 500 தினக்கூலிப் பணியாளர்கள் என 1000 பேருக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை வழங்கினர். அரிசி, கோதுமை, வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய், உப்பு, சர்க்கரை, மிளகாய்,சோப்பு என குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகள் அவை!

''இப்படி 2 ஆயிரம் குடும்பங்களைக் கண்டுகொண்டிருக்கிறோம். அந்தக் குடும்பத்தில் உள்ள 8 ஆயிரம் பேருக்கு வழங்கவும் முடிவு செய்து, பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்கிறார் வேதிகா.

உணவும் உணவுப் பொருட்களும் மட்டும்தானா?

ஆயிரம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின், 200 குடும்பங்களில் உள்ள 400 குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் புத்தகங்கள், பொம்மைகள், எல்லோருக்கும் உணவுப் பொட்டலங்கள், பொருட்கள் முதலானவையும் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் பணியை அறிந்து தெரிந்துகொண்டவர்கள், சேவையின் கரங்களைப் பலப்படுத்தி வருகிறார்கள். விளைவு... இன்னும் இன்னுமாக ஏரியாவையும் உதவியையும் விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறார்கள் கருணை மனிதர்கள்! இவற்றையெல்லாம் சாத்தியமாக்கி, ஊக்கப்படுத்தி வருகிறது காவல்துறை.

''மக்களை வெளியே நடமாடாமல் காவல்துறை வைத்திருக்கும் பணியில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், தன்னார்வ அமைப்பினர், நல்ல உள்ளம் கொண்டவர்கள், உணவு கிடைக்காமல் அல்லல்படும் மனிதர்கள் என எல்லோரையும் ஒருங்கிணைத்து, எங்கள் வாகனங்கள் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு ஏரியாவுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லவும் துணை நிற்கிறார்கள் காவல்துறை அன்பர்கள்'' என்று நெக்குருகிச் சொல்கிறார் வேதிகா.

கரோனா வைரஸ் பரவுவதுதான் ஆபத்து. அதன் விளைவாலும் தாக்கத்தாலும் நல்ல உள்ளங்கள் பரந்துபட்டு ஒன்றிணைந்து கொண்டிருப்பதுதான் மனிதத்தின் வெற்றி; அன்பின் ஆழம்!

- அகத்தில் முகம் பார்ப்போம்.

எழுத்தாக்கம்: கார்த்திக் கிருஷ்ணா, வி.ராம்ஜி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

59 mins ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்