ஒருநாளில் ஓராயிரம் முறையாவது மனைவியிடம் இருந்து வரும் இரண்டு கேள்விகள்...
‘ஏங்க... எங்கே இருக்கீங்க?’
‘எப்போ வருவீங்க?’
இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டுத் துளைத்தெடுத்துவிடுவார்கள் மனைவிமார்கள். இதில் திணறித்தான் போவார்கள் கணவர்கள்.
‘ச்சே... இவளோட ஒரே ரோதனையா போச்சு. சாயங்காலம் ஆயிருச்சுன்னா, ஆபீஸ்லேருந்து வீட்டுக்கு வர்றதுக்குள்ளாற, ஆறேழு போன் போட்டு உயிரை வாங்கிடுறா’ என்று அலுத்துக் கொள்வார்கள். ஆனால், தன் நிலையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், சளைக்காமல், சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் திருமதிகள்.
கரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், வீடடங்கிக் கிடக்கிற சூழலில், ‘ஏங்க... எங்கே இருக்கீங்க?’ என்ற கேள்விக்குள்ளும் ‘எப்போ வருவீங்க?’ என்கிற விசாரிப்புக்குள்ளும் இருக்கின்ற அன்பையும் பிரியத்தையும் கொஞ்சம்கொஞ்சமாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் ஆண்கள்.
காலையில் பசங்களை பள்ளி வேனில் திணித்து அனுப்புவதற்கும் கணவனுக்கு காலை உணவையும் மதிய உணவையும் கொடுத்து அனுப்புவதற்கும் எழுந்தது முதல் மனைவியர் விளையாடும் கபடியாட்டம், ஆசியப் போட்டி விளையாட்டுகளுக்கு இணையானது.
வீட்டை க்ளீன் செய்ய ஒருமணி நேரம், துணி துவைத்துக் காயப்போட ஒருமணி நேரம். நடுவே... ‘ஆபீசுக்குப் போயிட்டீங்களா?’, ‘நல்லாருக்கியாம்மா?’ என்று கணவனுக்கு ஒரு போன், ஊரில் உள்ள அம்மாவுக்கும் மாமியாருக்கும் ஒரு போன். ஆறாங்கிளாஸில் ஒன்றாகப் படித்து, ஆடுதுறையில் வாக்கப்பட்ட தோழியிடம் ஒரு போன்... என்று பரபரப்பு அடங்கவே மதியமாகிவிடும்.
அம்மாவும் மாமியாரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். தோழியும் அப்படித்தான். ஒருவேளை, எந்த தொந்தரவுமின்றி ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம். மதியத்துக்குப் பிறகு கணவனும் வேலையில் பிஸியாகலாம். இருக்கவே இருக்கு சீரியல்கள். எண்பதுகளில் வந்த படங்களின் டைட்டிலில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஏதோ சீரியல்களைத் துழாவுவார்கள்.
சமைத்த, சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவுவதிலும் துவைத்த துணிகளை மடிப்பதிலும் பொழுது ஓடிவிடும். திரும்பிப் பார்த்தால், திணித்து அனுப்பிய வேனிலிருந்து கசங்கிப் போய் அழுக்காக வருவார்கள் பிள்ளைகள்.
அவர்களுக்கு மாற்று டிரஸ், தின்பதற்கு பலகாரம் எனக் கொடுத்துவிட்டு, அவர்களின் வீட்டுப்பாடங்களைப் பார்த்தால், அந்தத் திறமைக்கு ஐ.ஏ.எஸ்.ஸே எழுதிவிடலாம் என மலைத்துக் கலைத்துப் போவார்கள்.
அந்தசமயத்தில்தான் கணவனைத் தேடும் மனது. ‘ஏங்க... எங்கே இருக்கீங்க?’ என்று ஒரு செல்போன். ‘ஹூம்... ஆப்பிரிக்காவுல’ என்று எரிந்துவிழுவான் கணவன். பிறகு ‘ஆபீஸ்லதான் இருக்கேன்’ என்று கடுப்புடன் பதில் வரும்.
பிறகு சிறிதுநேரம் கழித்து மீண்டும் போன். ‘எப்போ வருவீங்க?’
‘டிராபிக்ல மாட்டிக்கிட்டு தவிச்சிக்கிட்டிருக்கேன். எப்போ வருவேன் எப்போ வருவேன்னு உயிரை எடுக்கறியே’ என்று டாப்கியரில் கோபம் கொப்பளிக்கும். திரும்பவும் அரைமணி நேரம் கழித்து போன் வரும். அதே கேள்வி. ‘இன்னும் ஒருவாரமாவும். வைடி போனை’ என்று சொல்லும்போது, முன்னேயும் பின்னேயும் சிக்னலில் நிற்பவர்கள் பார்ப்பார்கள்.
ஒருவழியாக, வீட்டுக்கு வந்த கணவனைப் பார்த்ததும் வருகிற முகத்தின் பரவசத்துக்கும் மனதின் நிறைவுக்கும் ஈடு இணையே இல்லை.
மறுநாள். அதே கதை, அதே திரைக்கதை. அதே வசனம்... ‘ஏங்க... எங்கே இருக்கீங்க?’ ‘எப்ப வருவீங்க?’
இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவோ, உணர்ந்துகொள்ளவோ நேரமின்றி ஓடிக்கொண்டிருந்த கணவன்மார்கள், இப்போது வீடடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டிலிருந்தே வேலை என்றிருக்கிறார்கள்.
பசங்களுக்கு ஸ்கூல் இல்லை. கணவனுக்கு ஆபீஸ் இல்லை. ஆனாலும் அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்காமலேயே எழுந்துவிடுகிறார்கள் பெண்கள். ஸ்கூல் இல்லாவிட்டால், அலுவலகம் போகாவிட்டால் என்ன... சமையல், வீடு ஒழுங்கு, பூஜை, துணி துவைத்தல் என்பதற்கு எந்த கரோனா வந்தாலும் விடுமுறை இல்லையே!
விடுமுறை என்று வீட்டில் இருக்கும் கணவன்மார்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் கணவன்மார்களும் மனைவியானவள் பம்பரமாய் சுற்றிச் சுற்றி வேலை செய்வதை, ஓரக்கண்ணால் பார்த்து பிரமித்துதான் போகிறார்கள்.
வாரத்துக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை வரும். அப்போது பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது; பதார்த்தங்களுக்கும் குறைவிருக்காது. ஆனால் இப்போது தினமும் ஞாயிற்றுக்கிழமை போல், வீடே குதூகலமாகிவிடுகிறது. வீடு என்றால் வீடா என்ன?
மனைவி என்பவளைக் கொண்டுதான் தங்குமிடம் வீடாகிறது. வீடு என்பதே மனைவிதான்.. அவர்கள்தான் குதூகலமாகிறார்கள். குழந்தைகள் ஒரு கண்; கணவன் இன்னொரு கண். இவர்கள் இருவரையும் வீட்டில் ஒருசேரப் பார்த்துக்கொண்டிருக்கிற எல்லா நாளுமே பண்டிகைகள்தான் அவர்களுக்கு!
‘என்னம்மா போனையே காணோம்’ என்று அம்மாவோ மாமியாரோ நாத்தனாரோ பள்ளித் தோழியோ போன் செய்து கேட்கும் நிலை வந்துவிடும். ‘அவரு வீட்லயேதானே இருக்காரு. அவருக்கு எதுனா பண்ணிக்கொடுக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு’ என விளக்கமளிக்கிற மனைவியரைப் பார்க்கும் கணவன்களுக்கு, அவர்கள் எல்லை தெய்வங்களாகவே தெரிவார்கள்.
‘ஏங்க... எப்போ வருவீங்க?’ ‘எங்கே இருக்கீங்க?’ என்கிற கேள்விகளின் அடர்த்தியும் ஆழமும் உணர்ந்து சிலிர்த்து நெகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஊரிலிருக்கும் அம்மா, மாமியார், அக்கா, நண்பர்கள், தோழிகள் என அனைவருக்கும் போன் போட்டுப் பேசி, ஏதோவொரு பேச்சில் மனைவியைச் செருகி, அவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள். ‘அட... சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ என்கிற பாடல் வரிகளின் அர்த்தம் புரிந்து, உணர்ந்து, தெளிவுபட வாழவைத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைத் துணைக்கும் கரோனாவுக்கும் சேர்த்துச் சொல்வோம் நன்றியை!
தூரத்தில் இருந்தால்தான் அன்பைப் புரிந்துகொள்ளமுடியும் என்றிருந்த காலம் போய், பக்கத்தில் இருக்கும் போதும் பாசத்தை உணர்ந்துகொள்ளும் தருணம் இது. உணர்வோம்; தெளிவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago