மகேந்திர மகத்துவம்! - இயக்குநர் மகேந்திரன் நினைவு நாள்

By வி. ராம்ஜி

வசூலைக் குவிக்கும் படங்கள் என்று ஒரு பட்டியல் உண்டு. வசூல் வியாபார வகையறாக்களையெல்லாம் கடந்து, மனதைப் பாதிக்கச் செய்யும் படங்கள் என்றொரு வகை உண்டு. இரண்டாவதாகச் சொன்ன விஷயத்தில், எப்போதும் முதலாவதாக இருப்பவர்... இயக்குநர் மகேந்திரன்.

இயக்குநர் மகேந்திரன்... கம்பீரமான படைப்பாளி. அவரின் நடையும் உடையும் போலவே, அவரின் படைப்புகளும் நேர்த்தியானவை. மாணவப் பருவத்தில் காரைக்குடியில் எம்ஜிஆரைப் பார்த்தார். அவரை ஈர்த்தார். பிறகு அவராலேயே திரையுலகிற்கு வந்தார்.

ஆனால் எம்ஜிஆருடன் எந்தப் படமும் பண்ணவில்லை. பத்திரிகையில் சேர்ந்தார். சினிமா விமர்சனங்கள் எழுதினார். செந்தாமரையுடன் பழக்கமானார். நாடகங்களும் கதைகளுமாக எழுதினார். சிவாஜி நடித்த ‘நிறைகுடம்’ படத்துக்கு கதை, வசனம் எழுதினார் மகேந்திரன். படம் ஹிட்டானது.

அதேபோல், இவரின் நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதை சிவாஜியே தயாரித்து நடித்தார். அந்தப் படம்தான், தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களுக்கான முதல் ஐகான் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. எஸ்.பி.செளத்ரியையும் ஜெகனையும் மறக்கமுடியுமா?அந்தப் படம்... ‘தங்கப்பதக்கம்’ என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தின் கதை வசனத்தை எழுதினார். இவையெல்லாம் எல்லோரும் எப்போதும் எடுக்கிற படங்களாகத்தான் இருந்தன. அதில் சின்னச் சின்னக் காட்சிகளிலும் வசனங்களிலும் கவனம் ஈர்த்தார்.


அந்த சமயத்தில்தான் மகேந்திரனுக்கு இயக்கும் வாய்ப்பு வந்தது. அதுவரை, எத்தனையோ இயக்குநர்களுக்கு கதைகள் கொடுத்த மகேந்திரன், தான் படம் இயக்க வந்தபோது, நல்ல நாவல்களைப் படமாக்கவே விரும்பினார். அப்படித்தான் ‘முள்ளும் மலரும்’ எடுத்தார். ரஜினி என்கிற மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இன்றைக்கு இருக்கக்கூடியவர், மிக இயல்பாகவும் நடிக்கமுடியும் என மகேந்திரன் நிரூபித்தார். அண்ணன், தங்கை பாசம் என்கிற டெம்ப்ளேட்டுக்குள் சிக்காமல், அண்ணன் தங்கையின் உணர்வுகளைப் படமாக்கியதுதான் மகேந்திரன் படத்தை தனித்துக் காட்டியது.

‘உதிரிப்பூக்கள்’ இன்று வரைக்குமான அழகிய திரைக்கதை. ஒளிப்பதிவு, இசை, வசனம், நடிப்பு முதலானவற்றை நீள அகல ஆழங்கள் அதிகரிக்காமல், மிகைப்படுத்தாமல் படைத்திருப்பார். நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு சபலக் கேஸ் ப்ளஸ் சாடிஸ்ட் கணவன், அவர்களின் குழந்தைகள், அந்த அழகிய கிராமம், படைப்பின் உள்ளே இருக்கிற மாந்தர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மரமும் அந்த ஆற்றங்கரையும் சலனமற்ற நதியும் கூட மகேந்திரனுக்குக் கட்டுப்பட்டு நடித்திருக்கும்.

பக்கம்பக்கமான வசனங்களால் கைதட்டல் பெற்ற சினிமாப் படங்களை, நீளமான மெளனங்களாலும் உணர்வுகளாலும் கைதட்டச் செய்தார் மகேந்திரன். நடிகர்களின் பின்னே ஓடிக்கொண்டிருந்த சினிமாவில், கதையின் பின்னே நடிகர்களையும் ஓடச் செய்தார். ரஜினி மாதிரியான நடிகர்களைக் கூட, கேரக்டர் வழியே உருமாற்றிக் காட்டினார்.

தமிழ் சினிமாவில் பாடல்கள் தவிர்க்கமுடியாதவைதான். ஆனாலும் பாடல்களிலும் முத்திரை பதித்தார். ‘செந்தாழம்பூவில்’ பாடலாகட்டும், ‘அழகிய கண்ணே’ வாகட்டும், ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’ என்பதாகட்டும், அம்மாவும் இரண்டு மகள்களும் சேர்ந்து குதூகலிக்கிற ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடலாகட்டும், மேடைப் பாடகி பாடுகிற ‘காற்றில் எந்தன் கீதம்’ பாட்டாகட்டும்... ஒவ்வொன்றிலும் நியாயங்களும் கவிதையும் கதையின் கனமும் சொன்னார் மகேந்திரன்.

மகேந்திரன் படங்கள் அனைத்துமே பாடங்கள். இந்த 40 வருடங்களில் உதயமான இயக்குநர்கள் பலரும், மகேந்திரன் படங்களைச் சிலாகிக்காமல் இருக்கவே மாட்டார்கள். ஆனால் என்ன... மகேந்திரன் படங்கள் போல் எடுக்கத்தான் இதுவரை எவரும் வரவில்லை.

மகேந்திரன் ஸ்டைல் படங்களை, மகேந்திரன் மட்டுமே இயக்க முடியும். அதுதான் மகேந்திர மகத்துவம்.

இன்று 2.04.2020 இயக்குநர் மகேந்திரன் நினைவு நாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்