‘நம்ம கணக்கு வாத்தியார் இன்னிக்கி லீவாம். செம ஜாலிடா’
‘நைன்த் சி சாந்தி, மூணாவது பாடவேளையில், உன்னை லேப்கிட்ட வரச்சொல்லுச்சுடா’
‘மாப்ளே... உன் சட்டைல... முதுகுல... காக்கா எச்சம்டா’
என்பதில் தொடங்கி, நமக்கு நெருக்கமான, மறக்க முடியாத ‘ஏப்ரல் 1’, வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.
» நம் கேரக்டரை மாற்றும் ஊரடங்கு - வீடடங்கு!
» தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால் புதிய அனுபவம்
மார்ச் 31-ம் தேதி முடிந்து, ஏப்ரல் 1-ம் தேதி விடிந்ததும், தேதி கிழிக்கிறோமோ இல்லையோ, எழுந்து முதல் வேலையாக பசங்களே ஏப்ரல் ஃபூல் பண்ணிவிடுகிறார்கள்.
‘உன் அக்கா போன் பண்ணினாங்க’ என்று யார் யாரோ போன் செய்ததாகச் சொல்லுவார்கள். அப்போது போன் வரும். ‘இந்தா போன்’ என்பார்கள். நாமும் அவசரம் அவசரமாக, ஆசையும் அன்புமாகப் போனை வாங்குவோம். பார்த்தால்... நம்மிடம் உள்ள இன்னொரு போனில் இருந்து இன்னொரு போனுக்கு அவர்களே அழைத்து, கெக்கேபெக்கே செய்வார்கள்.
யோசித்துப் பார்த்தால், ஏப்ரல் முதல் தேதியில், நாம் யாரையாவது ஏமாற்றுவதும் நம்மை யாராவது ஏமாற்றுவதுமாகத்தான் கழிந்துகொண்டிருக்கிறது சுவாரஸ்யம்.
ஏப்ரல் 1-ம் தேதிக்கும் நம் பள்ளிக் காலத்துக்கும் அப்படியொரு பந்தம் உண்டு. வழக்கமான நண்பர்களுடன் வழக்கமான சாலையில் வராமல் தனியே வருவார்கள் சிலர். ‘எங்கே அவனைக் காணோம்’ என்று எல்லோரும் கேட்கவேண்டும் என்பதுதான் திட்டம். அதன்படியே நான்கைந்து பேராவது கேட்பார்கள். ‘அவனுக்கு உடம்பு சரியில்ல... ஜூரம்... வவுத்தால போவுது’ என்று சொல்வார்கள். பள்ளிக்குச் சென்று பார்த்தால், அந்தப் பையன் நிற்பான். எல்லோரும் சேர்ந்து ‘ஏப்ரல் ஃபூல்’ என்று கத்துவார்கள்.
‘இரு இரு... படிக்காம விளையாடிக்கிட்டே இருக்கே. உங்க வாத்தியார்கிட்ட வந்து சொல்றேன்’ என்று ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பா நம்மிடம் சொன்னதை, நண்பர்கள் நினைவு வைத்துக்கொண்டு, மிகச்சரியாக ஏப்ரல் 1-ம் தேதியன்று, சீரியஸாக தபதபவென ஓடிவருவார்கள். ‘டேய் மச்சான்... உங்க அப்பா ஸ்கூலுக்கு வந்திருக்காரே... ஏன்டா?’ என்பார்கள்.
‘அப்பாவா?’ என்று மெல்ல அதிர்வோம். ‘நம்ம கிளாஸ் வாத்தியாரைப் பாத்து, ஸ்டாஃப் ரூம்ல பேசிக்கிட்டிருக்காருடா’ என்று அடுத்த குண்டை தூக்கிப் போடுவார்கள். நமக்கு டர்ராகி, முட்டிக்கொண்டு வரும் ஒன் பாத்ரூமில் இருந்து விடுதலை பெற்று, விறுவிறுவென ஸ்டாஃப் ரூம் நோக்கி ஓடி, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சென்று, மெல்ல கழுத்து திருப்பிப் பார்த்தால், அங்கே அப்பா இருக்கமாட்டார். நம் வகுப்பு வாத்தியாரும் இருக்கமாட்டார்.
திரும்பினால், ‘ஏப்ரல் ஃபூல்’ என்று கத்திக்கொண்டு, அந்த முத்திரையை முதுகில் குத்த துரத்துவார்கள். ’கறை நல்லது’ போல, ‘ஏமாறுவதும் சந்தோஷம்’ என்றிருந்த நாட்களை யாரால்தான் மறக்கமுடியும்?
‘வாலிபால் காஞ்சனாவை கிண்டல் பண்ணினியே ஞாபகம் இருக்கா? ‘இரு இரு எங்க அண்ணன்கிட்டயே சொல்லி அடிவாங்க வைக்கிறேன்னு சொன்னாளே... மறந்துட்டியா? அவங்க அண்ணன், ஸ்கூல் வாசல்ல நிக்கிறான். அந்தப் பக்கமா போயிடாதே’ என்று மதிய லஞ்ச்சுக்கு அப்புறம் சொல்லி பீதியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு பீரியடாக முடியும் போது, பீதிதான் அதிகமாகும். லாங் பெல் அடித்ததும் எல்லோரும் உற்சாகமாகக் கிளம்ப, சம்பந்தப்பட்ட பையன், பேஸ்த்தடித்தது போல் உட்கார்ந்திருக்க... மொத்த பசங்களும் கூடி, ‘ஏப்ரல் ஃபூல்’ முத்திரையைக் குத்துவார்கள்.
இங்க் தெளிப்பது, சட்டையில் கறை ஏற்படுத்துவது, ஏமாறுவதும் ஏமாற்றுவதும் கொண்டாட்டமாகவே இருந்தது அப்போது!
வயது ஏற ஏற, ஏமாற்றங்களும் அதன் வீரியமும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன.
அப்போது ஏமாந்தது ரசிக்க வைத்தது. இப்போதைய ஏமாற்றங்களோ வலிக்கவும் துடிக்கவும் வைக்கின்றன.
இன்றைக்கு ஏப்ரல் 1. கரோனா வைரஸ் எனும் ஒற்றைச் சொல்லால், உலகமே முடங்கி வீட்டில் கிடக்கிறது. சகஜநிலைக்கு இந்த உலகம் எப்போது திரும்பும் என்று கலங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், எவரையும் ஏமாற்றாமலும் எவரிடமும் ஏமாறாமலும் இருப்போமே.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
22 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago