மருத்துவ உலகம் இக்கொடிய கரோனா வைரஸுக்கு விரைவில் தீர்வு காணாதா என்று நாம் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "ஹைட்ராக்சி குளோரோ குயின் மற்றும் அசித்ரோமைசினை ஒன்றாக எடுத்துக்கொண்டால், மிகப்பெரிய அளவில் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் மருந்துகளாக மருத்துவ வரலாற்றில் இருக்க வாய்ப்பு உள்ளது" என ட்வீட் செய்திருந்தது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
அதே நேரத்தில், கடந்த வாரம் ஹைட்ராக்சி குளோரோ குயின் என்ற மருந்தை மத்திய அரசு அட்டவணைப்படுத்தப்பட்ட (H1) மருந்து என்று அறிவித்துள்ளது.
அதாவது, இது ஒரு மருத்துவரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட மருந்துச்சீட்டு மூலம் மட்டுமே இனி இதனை வாங்க முடியும். அதுமட்டுமல்ல, ஹைட்ராக்சி குளோரோ குயின் ஏற்றுமதியையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.
இவை அனைத்துக்கும் கோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயினைப் பயன்படுத்துவது பற்றிய மருத்துவத் துறையில் சமீபத்தில் அடிபடும் பேச்சுகள் காரணமாகும்.
ஹைட்ராக்சி குளோரோ குயின் எப்படி செயல்படுகிறது?
இந்த மருந்து பாரம்பரியமாக மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில தன்னைத்தானே சுயமாக தாக்கிக்கொள்ளும் நோய்க் கோளாறுகளான ( Auto immune disorders) லூபஸ், முடக்கு வாதம் மற்றும் சிக்குன் குனியாவுக்குப் பிறகு வரும் வைரஸ் கீழ்வாதம் ( post viral arthritis) போன்றவற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது .
வைரஸ் தொற்று நோய்களில் இது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான சரியான வழிமுறை தெரியவில்லை என்றாலும், மூன்று சாத்தியமான வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
ஒன்று, இது வைரஸின் நுழைவைத் தடுக்கிறது. இரண்டு, செல்களில் பெருக்கமடைந்த வைரஸ்கள் செல்லைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது. மூன்று, வைரஸ் லைசோசோம்களில் செயல்பட்டு பெருக்கத்தைத் தடுக்கிறது.
மருத்துவத் துறையில் ஆதாரங்கள்
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த ஒரு குறிப்பிட்ட மருந்து பயனுள்ளதாக இருக்கிறது என்று எப்படி நமக்குத் தெரியும்? அதற்கு அந்த மருந்து ஆராய்ச்சிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் ஆய்வகத்திலும், விலங்குகளிலும், பின்னர் மனிதர்களிடமும் சோதனை செய்யப்படுகிறது. மனித சோதனைகள் பொதுவாக கட்டுப்பாட்டுச் சோதனைகள் (Randomized control trial) என்று அழைக்கப்படுகின்றன.
இந்த சோதனையில், நோயாளிகள் மற்றும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினருக்கு உண்மையான மருந்தும் மற்றொரு மருந்து போல் தன்மை கொண்ட போலி மூலக்கூறும் கொடுக்கப்படுதிறது.
இறுதியாக, உண்மையான மருந்தைப் பெற்ற பிரிவினரில் அம்மருந்து எத்தகைய நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனக் கண்காணிக்கப்பட்டு முடிவுகள் மருத்துவ இதழ்களில் வெளியிடப்படுகின்றன.
இதுபோன்ற சோதனைகளை நடத்துவதற்கு முன்பு நாம் நெறிமுறை அங்கீகாரத்தையும் பெற வேண்டும். இத்தகைய கட்டுப்பாட்டு ஆய்வுகளிலுருந்து மருத்துவ நடைமுறைக்குத் (clinical practice) தேவையான மிக உயர்ந்த ஆதாரங்கள் பொதுவாக கிடைக்கின்றன.
இந்த வகையான சான்றுகள் ஒரு குறிப்பிட்ட மருந்தை நம்பிக்கையுடன் பரிந்துரைக்க மருத்துவருக்கு உதவுகின்றன.
ஹைட்ராக்சி குளோரோ குயின் பயனுள்ளதா என்பதற்குச் சான்றுகள்
துரதிர்ஷ்டவசமாக, கோவிட் நோயாளிகளிடையே ஹைட்ராக்சி குளோரோ குயின் இதுபோன்ற சோதனைகளை சந்தித்ததில்லை.
சீனாவில் சில ஆய்வக அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் ஹைட்ராக்சி குளோரோ குயின் கரோனா வைரஸை எதிர்ப்பதில் சிறப்பாகச் செயல்படுவதாக கண்டறிந்துள்ளார்கள்.
மனிதர்களிடையே செய்யப்பட்ட ஒரே ஒரு சோதனையிலிருந்து ஆதாரம் உள்ளது. அது பிரான்ஸில் நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆய்வில் பல ஓட்டைகள் உள்ளன.
ஒன்று, இது 36 நோயாளிகளிடையே மட்டுமே செய்யப்பட்டது. அதில், ஆறு பேர் அறிகுறிகள் அற்றவர்கள். ஆனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள். 22 பேருக்கு மேல் சுவாசக்குழாய் தொற்றும் மற்றும் 8 பேருக்குக் கீழ் சுவாசத் தொற்றும் இருந்தன.
தீவிர நோய் உள்ள நோயாளிகள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டனரா என்ற தகவல்கள் நமக்கு இல்லை. மருந்துகள் கொடுத்த 6 நாட்களுக்குப் பிறகு ரத்தத்தில் வைரஸ் இருக்கிறாதா? இல்லையா என்பதே அந்த ஆய்வின் நோக்கம்.
நோய் தீவிரமடைந்ததா, நோயாளி இறந்தாரா? அல்லது நலமாகி வீடு சென்றாரா? என்பது பற்றிய தகவல்கள் நமக்கு இல்லை. இந்த ஆய்வில் நோயாளிகளுக்கு அசித்ரோமைசினும் வழங்கப்பட்டது. இந்த நேரத்தில், அசித்ரோமைசின் பற்றிய சில தகவல்களையும் கொடுக்க விரும்புகிறேன். இது ஒரு நுண்ணுயிர்க்கொல்லி (antibiotic). நுண்ணுயிர்க்கொல்லி என்றாலே பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படக்கூடியது.
சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் நிமோனியா சிகிச்சையில் பயன்படுத்துகூடியது. அசித்ரோமைசின் இம்யூனோமோடூலேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.
அதாவது நமது நோய் குணமாவதற்கு ஏதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றி அமைக்க இது உதவக்கூடும். ஆனால் வைரஸ் தொற்றுநோய்களில் அசித்ரோமைசின் செயல்பட முடியும் என்பதற்கான உயிரியல் ஆதாரங்கள் இல்லை.
ஆகவே, அசித்ரோமைசின் எடுத்த பிறகு கோவிட்-19 நோயாளி குணமடைந்துவிட்டால், அது பெரும்பாலும் தற்செயலாக நடந்த நிகழ்வு என எண்ணத் தோன்றுகிறது.
முற்காப்பு மருந்து மற்றும் தடுப்பு மருந்து
கரோனா நம்மைப் பாதிக்கும் முன் நாம் அனைவரும் ஹைட்ராக்சி குளோரோ குயின் எடுக்கலாம் என்று அறிவிக்க இந்தச் சான்றுகள் போதுமானதா? இல்லவே இல்லை.
சான்றுகள் பலவீனமாக இருப்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ( ICMR) மிகவும் எச்சரிக்கையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. யார் ஹைட்ராக்சி குளோரோ குயின் எடுக்கலாம்? ஒன்று, சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 இன் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள நோய் அறிகுறியற்ற (asymptomatic) சுகாதாரப் பணியாளர்கள் (healthcare workers), இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளிடம் நேரடித் தொடர்புடைய அறிகுறியற்ற குடுமபத்தினர் ஹைட்ராக்சி குளோரோ குயினை தற்காப்புக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று அது அறிவுறுத்துகிறது.
இது நியாயமற்றது என நீங்கள் யோசிக்கலாம். ஏன் எல்லாரும் எடுக்கக்கூடாது என எண்ணலாம். சற்று பொறுங்கள்.
முற்காப்பு மருந்துக்கும் (prophylaxis) தடுப்பு மருந்துக்கும் (vaccine) உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சில தொற்று நோய்களுக்கு முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக, நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நேரடித் தொடர்புடய அவருடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு, ரிஃபாம்பிசின் மற்றும் ஐசோனியாசிட் போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதேபோல், நீங்கள் மலேரியா நோய்த் தொற்றுடைய பகுதிகளுக்குப் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு முற்காப்பு மருந்தாக குளோரோ குயின் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் மிக்க பயனுள்ளவை என்பதற்கு மனிதர்கள் மீது பல ஆய்வுகள் நடத்தப்பட்டு நமக்கு போதுமான சான்றுகள் உள்ளன. இவை தடுப்பு மருந்துகள் அல்ல, அவை முற்காப்பு மருந்துகள் என அழைக்கப்படுகின்றன.
முதலாவதாக, ஹைட்ராக்சி குளோரோ குயின் கோவிட்-19 நோயைக் குணமாக்குவதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்று நான் கூறினேன். அது மட்டுமல்ல முற்காப்பு மருந்தாக பயனுள்ளது என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை.
இரண்டாவதாக, இது அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டால், அது நோய்க்கு எதிராக நாம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்ற தவறான பாதுகாப்பு உணர்வை உருவாக்கக்கூடும். முற்காப்பு மருந்து நோய்த்தடுப்பு மருந்துக்குச் சமமானதல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
ஹைட்ராக்சி குளோரோ குயினின் பக்க விளைவுகள்
மற்ற பிரச்சினைகள் என்ன? ஹைட்ராக்சி குளோரோ குயினின் பாதகமான விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் . ஹைட்ராக்சி குளோரோ குயினின் நீடித்த பயன்பாடு அரித்மியாவை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.
இதயம் மிக விரைவாக, மிக மெதுவாக அல்லது சீரற்ற முறையில் துடிப்பது அரித்மியா. இது ஒரு சிறிய விகிதத்தில் இறப்புகளுக்கும் வழிவகுக்கும். இந்தியா நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என்பதை அறிவோம். மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளும் நமது நாட்டில் அதிகம் உள்ளனர்.
இந்த வகையான நோயாளிகள் ஏற்கெனவே இதய நோய்கள் உருவாகும் அபாயத்தில் உள்ளனர், மேலும் இந்த மருந்து அத்தகைய ஆபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் உலகமும் கரோனாவில் மட்டுமே கவனம் செலுத்துகையில், நாள்பட்ட தொடர் நோய்களின் சிகிச்சைகள் உள்ளிட்ட பிற நோய்கள் அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன.
சுகாதாரப் பணியாளர்களின் திடீர் பற்றாக்குறையாலும், பல மருத்துவமனைகள் நோயாளிகளின் சேவைகளை மூடிவிட்டதாலும் தொடர் நோய்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதிலும், மருந்துகள் கிடைப்பதிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . இந்த நெருக்கடியின் போது தொடர் நோய்களால் (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்) ஏற்படும் இறப்புகள் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
ஹைட்ராக்சி குளோரோ குயினை முறையற்ற முறையில் எடுப்பது இன்னும் இறப்புகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பார்வை குறைதல், மனநோய் மற்றும் கடுமையான இரைப்பை அழற்சி ஆகியவை வேறு சில பக்க விளைவுகளாகும்.
கடந்த வாரம் அமெரிக்காவின் அரிசோனாவில் இரண்டு வாரங்களுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயினை சுயமாக உட்கொண்ட ஒருவரின் மரணத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர் மனைவியும் அத்தகைய பக்க விளைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புகள்
நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புகள் ( antibiotic resistance) உலகெங்கிலும் மருத்துவர்களுக்கு முக்கிய சவாலாக உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட நோய்த்தொற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகள், நோய்த் தொற்றுக்கு எதிராக செயல்படத் தவறிவிடுகின்றன. இது உயிருக்கு ஆபத்தான நோயான மலேரியாவிற்கும் பொருந்தும்.
நாட்டில் ஏற்கெனவே ஹைட்ராக்சி குளோரோ குயினுக்கு எதிரான, ஹைட்ராக்சி குளோரோ குயினால் குணப்படுத்த முடியாத நோயாளிகளின் எண்ணிக்கையும், அத்தகைய உயிர்ழப்புகளைத் தடுப்பதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று நுண்ணுயிர்க்கொல்லிகளின் முறையற்ற பயன்பாடும், மருத்தவரின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துக் கடைகளில் வாங்கி உட்கொள்வதாகும்.
ஹைட்ராக் சிகுளோரோ குயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை முறையற்ற முறையில் பொதுமக்கள் எடுக்கும் பொழுது, கரோனா நெருக்கடி முடிந்தவுடன் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு என்பது மிகப்பெரிய அளவில் பொது சுகாரப் பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புண்டு.
சட்டவிரோதப் பதுக்கல்
மற்றொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால் மாத்திரைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பது. இந்த மருந்து பற்றி சில செய்திகள் வந்தபோது, சில்லறை விற்பனையாளர்கள் இந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்தி விட்டனர். மேலும், மருத்துவமனைகள் ஹைட்ராக்சி குளோரோ குயினை மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பெறுவதற்கு சிரமப்பட்டு வந்தன. இப்போது கூட மருத்துவமனைகளின் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்படவில்லை. இம்ம்ருந்தின் தட்டுப்பாடு வழக்கமாக இம்மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் அதனைச் சார்ந்துள்ள நோயாளிகளிடையே மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவேதான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ( ICMR) மிகவும் எச்சரிக்கையான வழிகாட்டுதலான நோய்த்தொற்று உருவாக அதிக வாய்ப்புள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முற்காப்பு மருந்து என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் இந்த மருந்து எச் 1 மருந்தாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதும் நியாயமானது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
ஹைட்ராக்சி குளோரோ குயின் இருப்பதால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம் அல்லது நோய்த்தொற்றைத் தடுக்கலாம் என்ற தவறான பாதுகாப்பு எண்ணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டாம்., ஒரு சமூகமாக நோய் பரவுவதைத் தடுக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு நாம் கீழ்ப்படிவோம். வீடுகளுக்குள் தங்கி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம்.
நாளையை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்!
கட்டுரையாளர்: லீபர்க் ராஜா MBBS.,MD, நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதார மருத்துவ நிபுணர். தொடர்புக்கு: leeberk2003@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago