நம் கேரக்டரை மாற்றும் ஊரடங்கு -  வீடடங்கு!  

By வி. ராம்ஜி

‘சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு?’ என்று வடிவேலு பேசிய வசனம் செம பாப்புலர்.

அதற்கும் முந்தைய காலங்களில், ‘வீட்டுக்கு வீடு வாசப்படி?’ என்று எல்லோரும் சொல்வோம். ஆமாம்... வீட்டுக்கு வீட்டு வாசற்படி இருக்கத்தான் செய்யும். வாசலும் படியும் இல்லையெனில் வீட்டுக்குள் எப்படிச் செல்வது? என்று கூட சிலர் கேட்கலாம்.

வீட்டுக்கு வீடு வாசப்படி என்றால், எல்லா வீடுகளிலும் சண்டையும் சச்சரவும் இருக்கத்தான் செய்யும். இது இயல்பான ஒன்றுதான் என்கிற அர்த்தத்துக்காக இப்படிச் சொல்லிவைத்தார்கள். ஆக, வீடு என்றிருந்தால், சண்டையும் சச்சரவும் இருக்கத்தான் செய்யும்.

வீடுகளில், சண்டை என்று வந்தால், பட்டிமன்றம் ரேஞ்சுக்கு எதிரெதிர் வார்த்தைகளை வீசுபவர்கள்தானே நாம். ஒரு விஷயத்தில் புரியவைக்கவேண்டும் என்பது போய், அந்த வாக்குவாதத்தில் ஜெயிக்கவேண்டும் என்கிற மனோநிலை வந்துவிடும், இருவருக்கும்.

சின்னதாக ஆரம்பிக்கிற பேச்சுவார்த்தைகள்தான், தடித்துத் தடித்து, மிகப்பெரிய சண்டையாகவே மாறுகின்றன. ஆரம்பத்திலேயே மருந்து போடுகிற சின்னக் காயம். ஆனால், கவனிக்கவே கவனிக்காமல், பெரிய புண்ணாக்கிக் கொள்வதுதான் இங்கே பிரச்சினையாகிவிடுகிறது.

சண்டை என்பது கணவனுக்கும் மனைவிக்கும்தான். ஆனால் அந்தச் சண்டைக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருப்பார்கள். எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கும். அவ்வளவு ஏன்... பக்கத்துவீட்டுக் கிளையில் இருந்து இலை, நம் வீட்டுப் பக்கம் விழுந்தது, நம் வீட்டு நாய், அவர்கள் வீட்டு வாசலில் ‘உச்சா’ போனது... என்பது உள்ளிட்ட விஷயங்களுக்கும் குய்யோ முறையோ என்று கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

இப்படியான சண்டைகளில் கணவன் எடுக்கும் ஆயுதம். சட்டை. அதை மாட்டிக் கொண்டு, வண்டி சாவியை எடுத்துக்கொண்டு, செருப்பை மாட்டிக்கொண்டு விருட்டென்று கிளம்பிவிடுவான்.

அவனுடைய வண்டி, டாஸ்மாக்கில் நிற்கும். ஒரு சிலரின் வண்டி, டீக்கடையில் நிற்கும். வேறு சிலர், தெரிந்த நண்பர்களின் புத்தகக் கடை, பழக்கடையில் போய் நிற்கும். மனைவி சரசுவிடம் சண்டை போட்டுவிட்டு, தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பரமு உட்கார்ந்துகொண்டிருப்பதாக ‘தாயுமானவன்’ கதையில் சொல்லியிருப்பார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

இன்னும் சிலர், ஊரிலிருக்கும் உறவுகளிடம், தோழமைகளிடம் போனைப் போட்டுப் புலம்புவார்கள்.

இந்த சமயத்தில் வீடு பதைபதைப்பு ஏதுமின்றி அமைதியாகிவிடும். ‘போன மச்சானைக் காணோமே’ என்று எந்த டென்ஷனும் இருக்காது. பிள்ளைகளும் வழக்கத்தைவிட சீக்கிரமாகச் சாப்பிட்டு, சீக்கிரமாகவே தூங்கிப்போவார்கள். ‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு’ என்று வீட்டம்மாக்களுக்குத் தெரியும். ‘எங்கே சுத்தியும் ரங்கனை ஸேவிச்சாகணும்’ என்பதுபோல், தன் புருஷன் வந்துவிடுவான் என்பது இத்தனை வருடமாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் மனைவிக்குத் தெரியாதா என்ன?

தள்ளாட்டத்துடன் வருபவர்கள் உண்டு. ஹோட்டலில் ஐந்தாறு பரோட்டாக்களை அமுக்கிவிட்டு வருவோரும் உண்டு. சிங்கம் போல் வீரமாகச் சென்று, பூனையைப் போல் பதுங்கிப் பதுங்கி வருபவர்களும் இருக்கிறார்கள்.

சரி... சண்டை என்று வந்துவிட்டால், மனைவிமார்களின் பெரும்பான்மையான டயலாக்கைப் பார்ப்போமா?

‘உங்க கூட குப்பை கொட்டினது போதும். நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன்’’ என்று சொல்வார்கள்.

சிலர், வாழ்க்கையை குப்பையுடன் ஒப்பிட மனமில்லாமல், குப்பையை எடிட் செய்துவிடுவார்கள். ‘நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். ஒரு பத்துநாள் நான் இல்லேன்னாதான் என் அருமை தெரியும் உங்களுக்கு’ என்று கெடு போல், டைம் கொடுப்பார்கள்.

இத்தனைக்கும் சொல்லிவைத்தது போல், யதேச்சையாய் ஊரில் இருந்து அம்மா அப்போது போன் செய்வார். ‘என்னம்மா நல்லாருக்கியா? பசங்க நல்லாருக்கா? மாப்ள நல்லாருக்காரா?’ என்று கேள்விகள் வரும். ‘மாப்ள நல்லாருக்காரா?’ என்ற கேள்வியில்தான் உஷ்ணமாவார்கள். ‘ஹும்... இருக்காரு இருக்காரு’ என்று குத்தலாய் பதில் வரும். அது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். சூழ்நிலையை அம்மாவுக்குச் சொல்லும் தந்திரம். இன்னொன்று... எதிரே நடுஹாலில் உட்கார்ந்திருக்கிற புருஷனுக்கு விடுகிற அம்பு.

ஒருசிலர் காட்டிக்கொள்ளமாட்டார்கள். ‘ஊருக்குப் போறேன்.எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’என்று சொல்லும் வேளையில் போன். ‘அம்மா, இதோ கிளம்பி வரேம்மா’ என்றுதானே சொல்லவேண்டும். ‘அம்மா, அந்தப் பச்சரிசியும் புழுங்கலரிசியும் சேர்த்து அரைச்சு, பக்கோடா மாதிரி ஒண்ணு போடுவியே...அது எப்படிம்மா? உன் மாப்பிள்ளைக்கு அது ரொம்பப் பிடிக்கும்’ என்று நடிகையர் திலகம் சாவித்திரி கணக்காக, வேறு முகம் காட்டுவார்கள்.

பிறகு போனை வைத்துவிட்டு, சண்டையைத் தொடருவதெல்லாம் ‘பாகுபலி 2’ ரகம்.

இந்தச் சண்டையில் இன்னொரு கேரக்டரும் இருக்கலாம். அவர்... கணவனின் அம்மா. அந்தப் பெண்ணின் மாமியார். சில தருணங்களில் சண்டைக்குக் காரணகர்த்தாவே அந்த அம்மாவாக இருக்கும். அல்லது அந்த அம்மாவை மையமாக்கி புயல் அடிக்கும். பிள்ளையும் மருமகளும் போடுகிற சண்டையைப் பார்க்கப் பொறுக்காமல், கட்டிலில் இருந்து சால்வையும் இருமலுமாக, பண்டரிபாய் ரேஞ்சுக்கு மெல்ல வருவார். ‘உங்களுக்கு ஏம்பா சிரமம்? என்னால நீங்க சண்டை போட்டுக்க வேணாம். நான் வேணா, சின்னவன்கிட்ட போயிடுறேன். என்னை பஸ் ஏத்தி விடுப்பா’ என்று சொல்லிவிட்டு, கண்ணீரும் இருமலுமாக திரும்பிச் சென்று, தலையணைக்குக் கீழே வைத்திருக்கும் பர்ஸ் பிரித்துப் பார்ப்பார்கள்.

‘ச்சே... வீட்ல நிம்மதியே இல்ல’ என்று சட்டையை மாட்டிக்கொண்டு, கிளம்புகிற புருஷன்களாகட்டும். ‘நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்’ என்று சொல்கிற மனைவிகளாகட்டும். ‘இன்னொரு மகன் வீட்டுக்கோ மகள் வீட்டுக்கோ போயிடுறேன்’ என்று சொல்கிற மாமியார்களாகட்டும். வந்த வாரச் சூழ்நிலைகளாலும் வரக்கூடிய வாரத்தின் சூழல்களாலும் அப்படிச் சொல்லுவதில்லை. சொல்லவும் முடியாது. போகவும் கூடாது.

சட்டை இருக்கலாம். வண்டி இருக்கலாம். செருப்பு இருக்கலாம். ஆனால் டாஸ்மாக் இல்லை. டீக்கடை இல்லை. பழக்கடை, புத்தகக் கடைகள் இல்லை. மனைவி பேசுவதை தேமேனென்று கேட்டுக்கொண்டு, ‘அமைதியோ அமைதி’ என்று சின்சாங் போல் அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. வீட்டிலேயே இருக்கவேண்டியதுதான்.

‘அம்மா வீட்டுக்குப் போறேன்’ வசனங்களை இப்போது மனைவி சொல்வதில்லை. சொல்ல முடியாது. பஸ் இல்லை. ரயில் இல்லை. தெரு தாண்டினாலே, போலீஸ் நிறுத்திவிடும். வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல, ஓலாவும் ஊபரும் கூட இல்லை. மாமியார்களுக்கும் இதே நிலைதான்.

'நம்ம புருஷனைப் பத்தி தெரியாதா? வழக்கம் போல வண்டியை எடுத்துட்டு, ரோட்டுக்குப் போய் போலீஸ்கிட்ட மாட்டுவாரு. கரோனா ஊரடங்குல ஏன்யா வந்தேனு போலீஸ்காரர்கிட்ட திட்டு வாங்குவாரு. ஃபைன் கட்டுவாரு. அப்புறம் இந்தக் கோபத்தையும் நம்மகிட்ட காட்டுவாரு' என்று புரிந்து உணர்ந்து அமைதி காக்கும் மனைவிமார்களுக்கு, அமைதித் திலகம் பட்டத்தையும் நோபல் பரிசையும் வழங்கலாம்.

‘சட்டையை மாட்டிக்கிட்டு எங்கே போறது? நூதன தண்டனைகளை போலீஸ் தர்றாங்க. ஒரு டீ கூட குடிக்க முடியாது. போதாக்குறைக்கு, ஊரே அமைதியா இருக்கும்போது, நம்ம ஏன் வீட்ல ஆர்ப்பரிக்கணும். கொத்துப் பரோட்டா சாப்பிடவும் கடை இல்ல. பேசு தாயே பேசு. எவ்ளோ திட்டணுமோ திட்டிக்கோ’ என்று மெளனச் சாமியாராகிக் கொண்டிருக்கிறார்கள் சம்சாரிகள்.

‘டேய்... உம் பொண்டாட்டியை திட்டாதேடா. அவ இல்லேன்னா என் கதி என்னாகும் தெரியுமா? அவ என் வவுத்துல பொறக்கலியே தவிர, ஒரு மக மாதிரி என்னைப் பாத்துக்கறா. வேளாவேளைக்கு மாத்திரையும் சாப்பாடும் கொடுக்கறா. அவ ஆய்ஞ்சு ஓய்ஞ்சு உக்கார்ந்து நான் பார்த்ததே இல்ல. பாவம்டா அவ’ என்கிற பண்டரிபாய்களும் கண்ணம்மாக்களும் ராஜம்மாக்களும் குடும்பச் சச்சரவுகளை சமீபநாட்களுக்கு சைலன்ட்மோடுக்கு மாற்றி வருகிறார்கள். கரோனா வைரஸ் தாக்குதல் அபாயத்தாலும் உலகடங்கு, ஊரடங்கு, வீடடங்கு என்கிற சித்தாந்தத்தாலும் கொஞ்சம்கொஞ்சமாக தங்கள் கேரக்டரை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

'வெளியே போனா கரோனா பயம். வீட்ல பொண்டாட்டி பயம். என்ன ஒண்ணு... ரெண்டு பிரச்சினையும் சமாளிக்க ஒரே வழி... சோப் போடுறதுதான்' என்று வாட்ஸ் அப்பில் யாரோ யாருக்கோ எழுதி, அதை யார் யாரோ, யார் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கரோனா... நம்மை எப்படியெல்லாம் மாற்றி, செதுக்கிப் போடுகிறது பாருங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்