ஊரடங்கல்ல; உலகடங்குச் சட்டம் போட்ட கரோனா! 

By செய்திப்பிரிவு

இந்தியாவில் எங்கேனும் கலவரம் என்றால் முதலில் 144 தடை சட்டம் போடுவார்கள். அதன்படி ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது. அதற்கும் கலவரம் அடங்காவிட்டால் ஊரடங்குச் சட்டம் (curfew) போடுவார்கள். யாரும் வெளியே தலை காட்டக்கூடாது அவசரத் தேவைக்கு வெளியே வந்து வேலை முடிந்ததும் உடனே வீட்டுக் கூட்டுக்குள் அடைந்து விட வேண்டும். பள்ளிகள் கிடையாது ; சினிமா, கோயில், குளம் என்றும் எதுவும் கிடையாது.

அப்படி ஒரு சட்டம் உலகுக்கே போட்டு விட்டது இந்த "கரோனா" என்கிற வைரஸ். இந்த நோய் பற்றியும் அதன் பரவல் பற்றியும் தாக்கம் பற்றியும் ஒரு அறிவியல் கண்ணோட்டம் தருகிறது இந்தக் கட்டுரை.

1. 'வைரஸ்' ( virus )என்றால் என்ன?

ஒரு கிராம் தங்கம் எடுத்து (விலை இன்றைக்கு எக்கச்சக்கம்!) துண்டு செய்துகொண்டே போனால் கடைசியில் தங்க குணம் எல்லாம் கொண்ட ஒரு துகள்தான் அணு (atom). அதேபோல ரத்தத்தின் குணங்கள் எல்லாம் கொண்ட ஒரு சிறு உயிர்த்துளிதான் ரத்தச் செல் (cell, RBC). அதன் பரிமாணம் சுமார் 10 மைக்ரான் அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு மடங்கு. அதில் பத்தில் ஒரு மடங்குதான் பாக்டீரியா(1 micrometersize); அதிலும் பத்தில் ஒரு மடங்குதான் (0.1m = 100nm) ஒரு வைரஸ்.

இந்த இத்த்த்த்ணுண்டு துளிதான் 'கண்டபடி' பெருகி இன்று சீனாவிலிருந்து "செங்கிஸ்தான்" புயல் போல ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் போய் உலகை அலற வைக்கிறது.

2. அப்படி என்றால் 'வைரஸ்' என்ன உயிர்த்துளிதானா இல்லையா?

உயிர்த்துளி (living organism) மரியாதை கூட வைரஸுக்கு கிடையாது! ஏனென்றால் இந்த வைரஸ் உயிரற்ற கல் போல பலகாலமும் எங்கோ கிடக்கலாம். ஆனால் அதை உயிருள்ள ஒரு 'பாக்டீரியாவோ', நானோ, நீங்களோ தெரிந்தோ தெரியாமலோ தொட்டுவிட்டால் ஒட்டிக் கொண்டு மனிதர்களின் (அல்லது விலங்குகள்) உள்ள செல்லில் புகுந்து கொண்டு, பல்கிப் பெருகி விடும்!! காரணம் என்னவென்றால் விலங்குகளின் (நீங்களும் நானும்தான்!!) செல்களில் உயிர் மூலக்கூறில் (Genetic Code - ல) RNA மற்றும் DNA என்ற இரண்டு உயிர்ச்சுருளும் உண்டு; வைரஸுக்கு RNA அல்லது DNA என்ற எதாவது ஒன்றுதான் உண்டு. இதில் இப்போது படைஎடுத்துள்ள கரோனா வைரஸ் (COVID - 19), ஒரு RNA வைரஸ். எலக்ரான்மைக்ராஸ்கோப் அடிப்படையில் வரையப்பட்ட படத்தை பக்கத்தில் பார்க்க.

இதன் உட்புறம் ஒரு மென்மையான பூப்பந்துபோலவும், அதைச் சுற்றி சூரியக் கதிர்கள் போல (NO, NO , முள்ளம்பன்றி!!! போல) முட்கள் உள்ளதைக் கவனியுங்கள். இந்தக் கொக்கிகளை (protein spikes) வைத்துக் கொண்டுதான் - நம்முடைய மூச்சுக் குழாய்கள் (மூக்கு, வாய், தொண்டை) உள்ளே "மலையேறி" உள்ளே புகுந்து உள்ளே உள்ள செல்களுக்குள் நுழைந்து குடிகொண்டு குட்டி போட்டு நாசம் செய்கின்றன.

3. இந்த வைரஸ் எங்கேயிருந்து புறப்பட்டு நம்மோடு போருக்கு வந்துள்ளன?

பெரும்பாலான வைரஸ்கள் (Viruses) விலங்குகளிடம் இருந்து நமக்குத் தாவியவை. பலகாலம் மனித குலத்தை ஆட்டிப்படைத்த அம்மை (small box), தட்டம்மை (measles),போலியோ (polio) எல்லாமே ஏதோ ஒரு வகை விலங்குகளிடமிருந்து (மாடு, ஒட்டகம்) நமக்கு ஒட்டியவை. இந்த 'கரோனா' ஏதோ ஒரு வவ்வாலிடம் இருந்து மத்திய சீனாவின் வூஹான் (Wuhan)மாநிலத்தில் உள்ள ஒரு மனிதருக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சிறைப்பு. அவர் தும்ம பலர் அந்தத் துளிகளைத் தாங்க வெகுவிரைவில் கரோனாவுக்கு கொண்டாட்டம்.

அங்கு புறப்பட்ட 'கரோனா புயல்' சீனா முழுக்க ஒரு ஆட்டம் ஆடியது; பிறகு கிழக்கு நோக்கி நகர்ந்து தென் கொரியாவுக்கு போனது. (வட கொரியாவுக்கு எட்டிப் பார்க்கத்தான் முடிந்தது!) கொஞ்சம் ஜப்பானில் காலடி வைத்துவிட்டு திரும்பி படுவேகமாக ஈரான் நோக்கிப் பாய்ந்தது. அங்கிருந்து ஒரே தாவலில் ஐரோப்பா போய் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் மையம் கொண்டு விட்டது. அந்தப் புயலின் லேசான தூறல்தான் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் (போக பயம்!!) சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்கும். பின்னர் எங்கே போகலாம் என்று நின்று நிதானித்து இளைப்பாறி பிறகு ஒரே தாவலால் அமெரிக்கா (USA) போய்ச் சேர்ந்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளை எட்டிப் பார்க்கக் கூடவில்லை. தென் அமெரிக்க நாடுகளில் கொஞ்சம் சிதறல் உண்டு. இதுவரை – 28 March 20 – சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 12,000 பேர் இறந்துவிட்டனர். படம் (2) பார்க்க ஏன் இப்படி சில நாடுகள் மீது படுகோபம் மற்றும் சில நாடுகள் மீது படு இரக்கம்?


4. இந்த கரோனா வைரஸ் நோய் எவ்வளவு ஆபத்து?

இதுவரை உலகின் 170 நாடுகளில் பரவி, உலக நோயாக மாறிய "பெருமை" இந்த கரோனாவுக்குத்தான் உண்டு. இன்று வரை 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 30 ,000 பேரைக் கொள்ளை கொண்டுவிட்டது. கடந்த மூன்று மாதங்களில் (இறப்பு சதவீதம் (28660/62100 ) x 100 = சுமார் 4,5 % ) ஆனால் சாதாரண சளி, தும்மல், இருமல் உள்ள பழைய Flu போலத்தான் . ( old flu death rate =0.4%; corona flu ten time more virulent !!)

நீங்கள் ஏரோப்பிளேனில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அருகே உள்ள சீனாவில் இருந்து தொற்று கொண்டு வந்த நண்பர் காய்ச்சல், சளி, இருமலோடு ஒரு தும்மல் போட்டால், அவர் வெடித்த கரோனா குண்டு உங்களைப் பிடித்துக் கொள்ளும். நீங்கள் சிரித்துக் கொண்டே வீடு வந்து விடுவீர்கள்; வழியில் கொஞ்சம் இருமல், சளி, தொண்டை கரகரப்பு. வீடு வந்ததும் ஒரு பெரிய தும்மல்! நீங்கள் குளித்துட்டு ஆனந்தமாய் வேலைக்குப் போய் விடுவீர்கள். ஆனால் உங்களை அன்போடு வரவேற்ற உங்கள் தாத்தா மாட்டிக் கொள்வார். அவரைப் பிடித்த கரோனாவை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது; முதுமையால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும்.

மேலும் உங்கள் தாத்தாவிற்கு 75 வயது எனில் அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, ஆஸ்துமா, அல்லது இருதய நோய் என்று எதாவது இருக்கும்.( They have excess of ACE2 receptor cell – a very warm hearted host for corona ) அவரிடம் கரோனா நிலை கொண்டுவிடும். அவருக்கு ஆஸ்துமா அல்லது நிமோனியா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் கஷ்டப்படுத்தும். இதனால் போதுமான ஆக்சிஜன் உள்ளே போகாது; கரியமில வாயு வெளியே வராது, ரத்தம் கெட்டுவிடும். இதயம் தடுமாறும், ஈரல் தடுமாறும், சிறுநீரகம் வேலை செய்யாது! 85 வயது இருக்க வேண்டியவர் 75 வயதில் இறக்க நேரிடும் (18 % வாய்ப்பு) அவரோடு உங்கள் 73 வயதான பாட்டிக்கும் "கரோனா" மரியாதை செய்யும். ஆனால் பாட்டிக்கு அவ்வளவு ஆபத்தில்லை. ஏனெனில் தாத்தாவுக்கு கொஞ்சம் சிகரெட் பழக்கமுண்டு; குடிப்பழக்கமும் உண்டு!!

உங்கள் பெற்றோருக்கோ (வயது 55 ) மனைவிக்கோ (வயது 30 ) குழந்தைக்கோ (1 - 5 ) கிட்டத்தட்ட எந்த ஆபத்தும் இல்லை. இருமல், சளி, காய்ச்சல் வரலாம். தானாகவே -15 days - போய்விடும்!! ஆனால் நீங்கள் எல்லாருமே மற்றவர்களுக்குப் பரவுவதற்கான பாலமாக (carrier) ஆகிவிடுவீர்கள் கவனித்துப் பார்த்தால் மேலே சொன்னது முழுமையும் புரியும். (படம் 3 )


5. கரோனாவை எப்படி தவிர்க்கலாம்?

முதலில் பயணத்தைத் தவிருங்கள். மிக முக்கியமாக வெளிநாட்டு பயணங்களை இரண்டு மாதம் தள்ளிப்போடுங்கள்.

இந்தியாவுக்கு உள்ளே எனில் மிக மிக அவசியம் எனில் ஏசி இல்லாத காற்று பறக்கும் பஸ்ஸில் அல்லது ரயிலில் பயணம் செய்யுங்கள். செய்யும்போது மூக்கை துணி அல்லது முகக் கவசத்தால் அல்லது டிஷ்யூ பேப்பரால் மூடியோ இருங்கள். பிறகு அதைக் குப்பையில் போட்டு விடுங்கள். நீங்கள் தும்மினால், இருமினால் உங்கள் துகள் உங்கள் துணி அல்லது முகக் கவசம் தாண்டிச் செல்லக்கூடாது. துணி கிடைக்கவில்லை என்றால் குனிந்து உங்கள் சட்டைக்குள் தும்முங்கள் . பலர் கூடும் திருமணம், திருவிழா முதலியவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள்.

வெளியே போய் வீட்டுக்குள் வந்ததும் கையை முதலில் நன்றாக மூன்று முறை சோப்பு போட்டுக் கழுவுங்கள். முகத்தையும் கால்களையும் கழுவுங்கள். இருமலோ தும்மலோ சளியோ உள்ள யாரையும் சந்திக்க நேர்ந்தால். ஐந்தடி தள்ளியே நின்று பேசுங்கள். அல்லது தவிர்த்து பின்னர் சந்திப்பதாக மன்னிப்பு கேட்டு சென்று விடுங்கள். அவ்வளவுதான்.

6. இதற்கு முன்னர் இவ்வளவு மோசமான நோய் வந்தது உண்டா?

பல உண்டு!

2002 -ல் SARS(Severe Acute Respiratory Syndrome)என்று ஒன்று. இதுவும் சீனாவில் தொடங்கி, இதேபோல் ஏதோ ஒரு வவ்வாலிடம் இருந்து புனுகு பூனைக்குப் போக மனிதனுக்கும் பிடித்துக் கொண்டது. இதுவும் RNA வைரஸ்தான் என்பதால் இப்போதைய "கரோனாவின்" அண்ணன் என்று சொல்லலாம். சீனாவை ஒட்டிய 25 நாடுகளுக்குப் பரவி 8000 பேரைத் தாக்கி 800 பேரைப் பழிவாங்கியது (10 % death rate). அந்த பயத்தில்தான் கரோனாவைக் கண்டதும் அதுவும் இத்தாலியில் கண்டதும் உலகம் நடுநடுங்கியது. ஆனால் தம்பி அவ்வளவு மோசமில்லை. (4 % இதுவரை!!)

2012-ல் MERS (Middle East Respiratory Syndrome)வந்தது. இதன் உற்பத்தி ஸ்தானம் சவுதி அரேபியா. சுமார் 2500 மனிதர்களைத் தாக்கி 866 பேரைப் பலிவாங்கியது. அதாவது 34 %. ஆனால் நல்லவேளையாக இந்த நோய்ப் பேயை (jinn) விரைவில் பிடித்து பாட்டிலில் (bottle ல்) அடைத்து விட்டார்கள். இது இப்போதுள்ள கரோனாவை விட எட்டு மடங்கு கொடிய அரக்கன்! இந்த நோய்க்கு காரணம் ஒட்டகம் என்று கருதப்படுகிறது!
மேலே சொன்ன மூன்றுமே காற்று மூலம் (தும்மல், இருமல் காரணமாக) பரவி மூச்சுக் குழாய் மூலம் மனிதனைத் தாக்குகின்றவை!

எபோலா வைரஸ் (Ebola Virus) : இது பெரிதும் மேற்கு ஆப்ரிக்காவில், தோன்றி அண்மையில் உள்ள நாடுகளுக்கு மட்டும் பரவியது.(2014 - 16). 28,000 பேரைத் தாக்கி 11,000 பேரை (39%) பலி வாங்கிய மகா கொடிய நோய்.

இவற்றை இங்கே ஒப்பிட்டுக் காட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் மேலே குறித்த நான்கு கொடூரமான அண்ணன்களையும் மருந்து கண்டு அடக்கி ஒடுக்கிய மனித சமுதாயத்திற்கு இந்த கரோனா ஒரு ஜூஜிபி. கொஞ்சம் பொறுங்கள் போதும். மேலே சொன்ன கருத்துக்கள் யாவும் முழுக்க முழுக்க விஞ்ஞானப் பூர்வமாக நிறுவப்பட்ட உண்மைத் தகவல்கள் (factual data).

இனி வருவது மேலே குறித்த உலகைத் தாக்கும் கரோனா வைரஸ் பற்றிய கருத்தோட்டங்கள் (Hypothesis): அதாவது விஞ்ஞானத்தின் அடிப்படையிலான, educated impressions:( you may agree or disagree !!!)

1. சீனாவில் தொடங்கி ஜப்பானையோ இந்தியாவையோ தாக்காமல் ஏன் ஈரானையும் அதைவிட இத்தாலியையும் இந்தக் 'கரோனா'கொடுமை செய்கிறது?

இதற்கு மூன்று காரணங்கள் எங்களுக்குப் படுகின்றன:

A. சீனர்கள் நன்றாக வசதியாக வாழ்கிறார்கள். அவர்களும் அண்மையில் உள்ள தென் கொரியாவும் பக்கத்து வீட்டுக் காரர்கள். (இந்தியாவும் வங்க தேசமும் போல) இவர்கள் உலக அளவில் பயணம் செய்பவர்கள். உலகின் மிகவும் அதிக பயணிகள் (international tourism) விரும்பும் முதல் 10 நாடுகள் Table1-ல் தரப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் முக்கியமான 10 நாடுகள் உள்ளன. அந்த அட்டவணையில் உள்ள நாடுகளில் கரோனா அரக்கனால் அநியாயமாக மாட்டிக் கொண்ட நாடு இத்தாலி. ஏன்?

அங்கே நிறைய சுற்றுலாப் பயணிகள் போய் உள்ளனர். எவ்வளவுக்கு எவ்வளவு டூரிஸ்டுகள் அதிகமா அந்த அளவுக்கு கரோனா வருகை அதிகம்! இரண்டாவது வந்த வியாதி இறுக்கிப் பிடித்துக் கொள்ளக் கூடிய, அல்லது மடிந்து விடக்கூடிய முதியவர்கள் நிறைந்த நாடு இத்தாலி.

(இதை வாழ்நாள் (எதிர்பார்ப்பின்) கீழ்க் காணலாம். அதாவது இத்தாலியில் இருந்தால் நீங்கள் 83 ஆண்டுகள் எளிதாக உயிர் வாழலாம். அது மட்டுமல்ல நடுத்தர வயதே (Median age) 45 அதாவது இத்தாலியில் 50 சதவீதம் பேர் 45 -லிருந்து 90 வரை. எனவே கரோனா தாக்குதல் அதிகம். இதற்கு அளவு கோலாக கடைசிக் கட்டம் காட்டுகிறது: 679 என்பது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 679 பேருக்கு கரோனா நோய் இதற்கு அடுத்த தாக்கம் ஸ்பெயினுக்கு (372 பேர்) காரணம் அங்கும் வயதானவர்கள் அதிகம் (83 and 42). டூரிஸ்டுகளும் அதிகம். பிரான்ஸுக்கும் இதே கதிதான்: ஆனால் பிரான்ஸ் நல்ல வசதி உள்ள நாடு ஆகவே தாக்கம் ஸ்பெயினை விட பாதிதான்.

இப்போது நேராக ஜப்பானைப் பாருங்கள். வயதானவர்கள் அதிகம் பிரான்ஸ் போலவே. ஆனால் டூரிஸ்டுகள் மூன்றில் ஒரு மடங்குதான் தவிர ஜப்பான் போன்ற கவனமான, திறமையான ஒழுங்கான நாட்டை எங்கும் பார்க்க முடியாது! அதனால்தான் சீனாவுக்குப் பக்கமிருந்தாலும் கவனமாக பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இத்தாலியைவிட 34 மடங்கு குறைவு.

அமெரிக்காவும் நிறைய முதியவர்கள் (79,61) நிறைந்த நாடு; டூரிஸ்டுகளும் அதிகம். இருந்தும் தாக்கம் இதுவரை 43 தான் காரணம் இப்பொதுதான் நோய் பரவல் தொடங்கியுள்ளது. ட்ரம்ப் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். இப்பொது "வாரி சுருட்டிக்" கொண்டு அமெரிக்கா பரவலைத் தடுக்க "போர் முனைப்பில்" இறங்கிவிட்டது.

இப்போது கவனியுங்கள்: இந்தியாவோ, வங்கதேசமோ, பாகிஸ்தானோ, இந்தப் பிரச்சினையில் மிகக் குறைந்த பாதிப்புதான்
முதல் காரணம் இந்தியாவிற்கு வெளிநாட்டுக்காரர்கள் வருகை 5 மடங்கு குறைவு; இரண்டாவது இந்தியா இளைஞர்கள் நிறைந்த (69,28) நாடு; இதன் காரணமாக கடைசிக் கட்டம் 0.6 அதாவது 1300 மில்லியன் மக்களுக்கு 780 பேர்தான் நோய்வாய்ப்பட்டுள்ளனர். எனவே நாம் கவனமாக இருந்துவிட்டால் இந்த நோய் நம்மை ஒன்றும் செய்யாது. அதற்கான நடவடிக்கை அரசாங்கம் முழுமையாக இறங்கிவிட்டது.

இந்தியாவின் நெருங்கிய பாகிஸ்தானுக்கும் வங்க தேசத்துக்கும் டூரிஸ்ட் வருகை நோய் வருகை மிகக் குறைவு. தவிரவும் இந்தியா போலவே, இந்த இரு நாடுகளிலும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகக் குறைவு. நோயைப் பிடித்து வைக்க இந்த மூன்று நாடுகளிலும் போதுமான முதியவர்கள் இல்லை!

இதில் தேவையில்லாமல் மாட்டிக் கொண்ட நாடு ஈரான். டூரிஸ்டுகள் குறைவு; இளையவர்கள் அதிகம். எனினும் சீனாவின் நண்பன்; (எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்) ; Common boundary எல்லையால் எளிதில் நோய் பரவியிருக்கக் கூடும்.

இந்தியாவும் பக்கம்தான்; ஆனால் நாம் சீனாவுக்கு எளிதில் விசா கொடுப்பதில்லையே!

இப்போது இந்தியாவுக்கு வருவோம். இந்தியாவின் கேரளாவில் 3.5 கோடி மக்கள்தொகைக்கு 29 பேருக்கு கரோனா. எனில் கோடிக்கு எட்டுப்பேர் ; மகாராஷ்டிராவில் கோடிக்கு நாலுபேர். தமிழ்நாடோ ஆந்திராவோ 0.3 தான். கேரளாவில் 100 மடங்கு அதிகம்!


எல்லாவகையிலும் நம்மைப் போன்ற கேரளாவுக்கு ஏனிப்படி சோதனை? ஒரே காரணம் கேரளாவில் வீடுதோறும் வெளிநாட்டில் வேலைசெய்துவிட்டு வரும்போது நோயையும் அழைத்து வருவதுதான்!

எனவே தமிழர்களே!

அச்சம் தவிர்!

உலகின் மிகப் பாதுகாப்பான மண்ணில் இருக்கிறீர்கள்!!

இப்போது கரோனா பற்றி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் முதலில் வதந்தி 'பல்கலையில்' உலவி வரும் கருத்துகளைப் பார்ப்போம்!

A. கரோனா, சீனர்கள் ஏவிவிட்ட உயிர்கொல்லி ஆயுதமா (biological weapon)?
இல்லை. அதற்கான ஆதாரம் இல்லை. நாம் விலங்குகளோடு இருக்கையில் ஏதோ ஒரு விலங்கிலிருந்து கவனக்குறைவால் வருவதுதான் வைரஸ்.

B. மனிதர்கள் மேல் உள்ள கோபத்தினால் கடவுள் ஏவிவிட்ட சாபமா (curse, scourge?)

இல்லை.
ஏனென்றால் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளைப் பற்றி கவலையேபடாத சீனர்களும், அதிகம் அக்கறை காட்டும் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரானியர்களும்தான். எனவே இதுவும் சரியான கருத்தல்ல.

C. முட்டையோ இறைச்சியோ சாப்பிடுவதால் இந்த நோய் வருமா?

முட்டையோ இறைச்சியோ சாப்பிடுவதால் வருவதும் இல்லை போவதும் இல்லை. இறைச்சி விரும்புவோர் நன்றாக சுத்தம் செய்து நன்றாக வேகவைத்து, நன்றாகச் சாப்பிடலாம்!

D. இயற்கையை நாம் மதிக்கவில்லை. அளவுக்கு மீறி அதை வேலை வாங்கி (exploit) கொடுமைப்படுத்துவதால் அது கோபம் கொண்டு பொங்கி எழுகிறதோ?

கிபி 1347 - 1351 வரை நான்கு ஆண்டுகள் ஐரோப்பாவில் பிளேக் (plaque )என்ற நோய் வந்தது. நோய் வாய்ப்பட்ட கருப்பு எலியை மொய்த்த ஈயால் பரவிய பாக்டீரியா நோய் இது. (வைரஸ் அல்ல) இந்த நோய் வந்தால் உடல் எங்கும் புண் வெடிக்கும். இதனால் 100 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஐரோப்பாவில் 40 % பெரும் நோய் வந்தது. 20% கொடுமையாக வெந்து நொந்து இறந்தார்கள். காரணம் சுகாதாரம் இன்மை; நோயிக்கு மருந்து இன்மை.
இந்தக் காலகட்டம் அறிவியல் பிறக்காத காலம் இயற்கையோடு இயைந்து விவசாயம், நெசவு மற்றும் சில தொழில்களோடு எளிமையாய் வாழ்ந்த காலம். விஞ்ஞானம் 1600 க்கு பின்னர்தான்.

விஞ்ஞானம் வந்த பிறகு வந்த நோய்கள் பலவற்றிலும் கொடியது இந்த பிளேக். எனவே அண்மையில் வந்த 'கரோனா' நம்மீது இயற்கை காட்டும் கோபமல்ல.

இந்த இடத்தில் அம்மை பற்றியும் போலியோ பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த இரு நோயும் ஐயாயிரம் ஆண்டு பழமை (எகிப்து மம்மியில் தெரிந்தது). எனினும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பால் கோடிக் கணக்கான குழந்தைகள் நலம் பெற்று துள்ளி விளையாடுகிறார்கள். அதே போல இந்தக் கரோனா காணாமல் போகும் நாட்கள் தொலைவில் இல்லை.

கடைசியாக ஒரு விஷயம்:

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் (ஈரான்??) முதலிய நாடுகட்கும் நமக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு இத்தாலியில் இருவர் சந்திக்கையில் கட்டித் தழுவி கன்னத்தில் முத்தமிடுவார்கள். எனவே நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும். மற்ற ஐரோப்பிய அமெரிக்கா நாடுகளின் கைகுலுக்கலே முறை. இதுவும் நோய் தொற்றுக்கு ஒரு “நல்ல வழி ".

ஆனால் இந்தியாவில் நாம் கை கூப்பி வணக்கம், நமஸ்தே சொல்கிறோம்; தொடுவது, தழுவது வழக்கமில்லை. இந்தியாவில் நோய் பரவாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணம்.

அடுத்து ஒரு முக்கிய காரணம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தாலி team ல் உள்ள (USA ,ஸ்பெய்ன், பிரான்ஸ், ஜெர்மனி) எல்லாவற்றிலும் இந்த ஜனவரி - மார்ச் மாதங்களில் வெப்பம் சுமார் 10 C; ஈரப்பதம் சுமார் 40 % இந்த கரோனாவுக்கு அண்ணனாக வந்த SARS வைரஸுக்கு ரொம்ப உகந்த சூழ்நிலை. இந்த வைரஸை வைத்து ஆராய்ச்சி செய்த சரன் முதலான விஞ்ஞானிகள் [1] இவை வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக அதிகமாக இந்த SARS வைரஸ் விரைந்து மடிந்ததைக் கண்டுபிடித்து நிறுவி பின்னர் இந்த காரணங்களாலேயே SARS மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளைப் பாதிக்கவே இல்லை. இந்த SARS இன் தம்பியாக கரோனவும் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளை பாதிக்கவே இல்லை. இன்றைய நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் கரோனாவின் தாக்கம் சுமார் 500 மடங்கு குறைவு.

இதைவிட முக்கியம். இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பமும் புழுக்கமும் அதிகமாகும். இவை அதிகமாக ஆகா கரோனா கதிகலங்கி மடியும். இன்னும் ஒரு வாரத்தில் கோடை வேர்த்துக் கொட்டும் போது கரோனா நோய் உள்ளவன் தும்மினால் வெளிவரும் வைரஸ் எல்லாம் உடனே ஈரப்பதத்தால் பிடிக்கப்பட்டு இரண்டு அடிக்குள்ளேயே கீழே விழுந்துவிடும்.

எனவே இன்னும் ஒரு மாதத்தில் கரோனாவின் கொஞ்ச நஞ்ச ஆட்டமும் அடங்கிவிடும். கை கூப்பி வந்தனம் வணக்கம் சொல்லி வழி அனுப்பி விடுவோம். ஒவ்வொரு முறை சைக்கிள் ஓட்டி கீழே விழுந்து முட்டி உடைந்து கொள்ளும் சிறுவன்/ சிறுமி விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கு என்று இன்னும் கவனமாக ஓட்டிப் பழகி விடுவது போல இந்த நோய் வருகையால் நாம் சில கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது "நாட்டடுங்கு சட்டம்" முடிந்து ஏப்ரல் 14-லிருந்து பெரிதும் இயல்பு வாழ்க்கை. தொடங்கிவிட வேண்டும். நமக்கு இது போதும். ஆனால் பொது இடங்கள் சினிமா தியேட்டர், கோயில்கள், பெரிய கடைகள் (Mall) முதலியவற்றில் ஒவ்வொருவருக்கும் வெப்பம் பார்க்க வேண்டும்; கையில் கிருமி நாசினி கொடுத்து தூய்மை செய்துவிட்டு, மூன்று டிஷ்யூ பேப்பரும் கொடுத்து (தும்மல், இருமல், பரவல் தடுக்க) அனுப்ப வெண்டும். எதுவும் இல்லாவிட்டால் அவரவர் சட்டைக்குள் தும்ம வீடியோபோட்டுக் காட்ட வேண்டும். முடிந்தால் ஒரு துணி கர்ச்சீப் (kerchief) கொடுக்கலாம்.

தவிர நாம் மேலே சொன்ன பொது இடங்களில் ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு நிற்பதுதான் வழக்கம்; "personal space" என்பதே இல்லை. குறைந்தது ஒவ்வொருவருக்கும் இடையே அரையடி இடைவெளி அவசியம்.

இந்த நோய்க்கு இந்தியாவுக்கு இவ்வளவு செய்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்து. இதற்கு மேலும் கடுமையான ஊரடங்கு சட்டம் போட்டு கடைகள், தொழிற்கூடங்கள், உணவு விடுதிகள் மூடினால் பொருளாதாரத் தாக்கத்தால் ஏழை மக்கள் தவித்து விடுவார்கள். ஏற்கெனவே நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அளவு நடவடிக்கை ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ பொருந்தாது. இத்தாலியில் இந்தியாவைவிட (680 /0.2) = (3400) மடங்கு நோய்த்தாக்கம் அதிகம். அங்கே நாட்டு அடங்கு சட்டம் மிக அவசியம்! நமக்கல்ல.

ஏன் இப்படி ஐரோப்பியா கதிகலங்கி இருக்கிறது தெரியுமா?

1918 – 1920ல் நூறாண்டுக்கு முன், இதேபோல் ஒரு "Flu" காய்ச்சலால் 5000 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்; சுமார் 800 லட்சம் மக்கள் இறந்தனர். அது நம் இந்தியர்களையும் கொன்றது. தவிர அது வந்த சமயம் முதல் உலகப் போர் வேறு. ஒரே கொட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் அடைபட்டுக் கிடந்த போர் வீர்ரகளின் வேதனையையும் நோயையும் சேர்த்து இந்த "Flu" காய்ச்சல் பேயாட்டம் ஆடிவிட்டது.

அதே போல இன்னொரு கொள்ளை நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஐரோப்பா எல்லா முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இது அங்கே அவசியம்; நிச்சயம் வெற்றியும் தரும்.

கடைசியாக மிக முக்கியமான விஷயம்!

இந்த கரோனா என்ன செய்யப் போகிறது? எத்தனை நாட்கள் கொடுமை செய்யலாம்?

கரோனா வைப் பற்றி நமக்கு இப்போது முழுமையாகத் தெரியாவிட்டாலும், அதன் அண்ணன் "SARS " பற்றித் தெரியும். இது 40 நாட்கள் தான் ஆட்டிப்படைத்தது.[2] நாற்பது நாட்களில் முற்றிலும் அழிந்து போய்விடும் என்று அர்த்தமல்ல. புதுத் தொற்று எதுவும் வராது பேயாட்டம் ஓய்ந்து மூச்சு வாங்கும்.

அந்தக் கணக்குப்படிப் பார்த்தால் இந்தியாவில் பிப்ரவரி 25-ல் முதல் விதை; மார்ச் 3-ம் தேதி 5 பேர்; மார்ச் 25-ம் அன் று610 பேர்; மார்ச் 28-ம் தேதி அன்று 824 பேர். இதன் இரட்டிப்பு நாட்கள் ஏழு. அதாவது இன்றைக்கு மார்ச் 28-ம் தேதி அன்று 824 எனில் ஏப்ரல் 4-ம் தேதி 1,648 ஆகிவிடும்; ஏப்ரல் 11-ல் 3,296, ஏப்ரல் 18-ல் 6592. அதற்குள் 54 நாட்கள் ஆகிவிடுமே.

இப்போது எடுத்திருக்கும் ஊரடங்கும் சட்டத்திலும் சித்திரை வெயிலும் கரோனா தாக்குப் பிடிக்காது என்பது எங்கள் கருத்து. அதாவது இரட்டிப்பு 8.5 நாட்கள் என்றால் என்ன ஆகும் என்றும் 5 நாட்கள் என்றால் என்ன ஆகும் என்றும் படத்தில் காணலாம்.

எதிர்பாராத சூழல்கள் நேரினும் 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்றாது. பிரச்சினை முற்றாது. அதில் 200 இறக்க நேரிடலாம். எஞ்சிய 8,800 பேர் முழுமையாக சிரித்துக் கொண்டே வீட்டுக் போவார்கள்! இந்த 200 பேர் இறப்பு வேதனைதான் என்றாலும், தமிழ்நாட்டில் மட்டுமே சாலை விபத்தில் இதைவிட அதிக மரணம்!

GROUP 1 -- இரட்டிப்பு 7 நாட்கள்
GROUP 2 --- இரட்டிப்பு 8.5 நாட்கள்
GROUP 3 ---- இரட்டிப்பு 5 நாட்கள்

இவையெல்லாம்விட இந்த நூறாண்டுகளில், மனித சமுதாயத்தின் மருத்துவ அறிவும், சாதனங்களும் அறிவியல் துறையும் நூறுமடங்கு முன்னேறியாகிவிட்டது. எனவே இந்த கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்; கட்டுப்படுத்தப்படும்.

இப்படை தோற்கின் எப்படி ஜெயிக்கும்?

கட்டுரை எழுதியவர்கள்:

1. டாக்டர் வ. மாசிலாமணி, இயற்பியல் துறை ஆராய்ச்சிப் பேராசிரியர். தொடர்புக்கு: masila123@gmail.com
2.R வித்யா ஸ்ரீ பயோடெக் மாணவி

REFERENCES:
1. WORLDOMETER (COVID19 CORONA VIRUS PANDEMIC
2. K.H.Chan et al, THE EFFECTS OF TEMPARATURE AND RELATIVE HUMIDITY ON THE VIABILITY OF SARS CORONAVIRUS, Advances in virology. VOL:2011
3. M.Chan-Yeung,& Run-Heng Xu, SARS: EPIDEMOLOGY, Respirology (2003)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்