தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்;  கரோனா வைரஸ் - 21 நாள் தடையால் புதிய அனுபவம்

By வி. ராம்ஜி

உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்தியா முழுவதும் 21 நாள் தடை விதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நம் அன்றாடப் பணிகளின் பயணமானது முட்டுச் சந்தில் நின்றுவிட்டது. அப்படியே ஒரு யுடர்ன் அடித்து, அந்தக் காலத்து வாழ்க்கையை செல்போன்களுடனும் தொலைக்காட்சிகளுடனும் கழித்துக்கொண்டிருக்கிற அதேவேளையில், இன்னும் இன்னுமான பாக்கியங்களும் அனுபவங்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

நம் தாத்தா பாட்டிகளுக்கு திருமணமாகி எத்தனை ஆண்டுகளாகியிருக்கும்? கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம்தானே. அந்த வகையில் நம் தாத்தாவுக்கெல்லாம் கிடைக்கவில்லை.

அடுத்து, நம் அப்பாக்களுக்கு கல்யாணமாகி எவ்வளவு வருடங்களாகியிருக்கும்? அப்போதெல்லாம் திருமணம் 15 முதல் 20 வயதில் திருமணம் நடந்துவிடும் என்பதைக் கொண்டு கணக்கிலெடுத்தால், எப்படியும் 40 முதல் 55 வருடங்களாகியிருக்கும் என்று வைத்துக்கொள்வோம்.

ஆக, அப்பாவுக்குத் திருமணமான சுமார் 50 வருடங்கள்... தாத்தாவுக்குத் திருமணமான சுமார் 75 வருடங்கள்... இத்தனை வருடங்களில், அவர்களின் பணிக்காலங்களில், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒன்று இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது.

அப்படித்தான் இதைப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு கணவனும் மனைவியும் வேலை, சம்பளம், வாழ்க்கை, இஎம்ஐ என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். காலையில் சீக்கீரம் கிளம்பிவிடுகிறார்கள். எட்டுமணி நேர வேலையைப் பார்ப்பதற்காக, காலையில் அலுவலகத்திற்கு சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணிநேரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. எட்டு மணிநேரம் என்பது ஒன்பது பத்து மணிநேரம் கூட ஆகிறது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குக் கிளம்பி வருவதற்கு, அதே இரண்டு மணிநேரம்.

ஆக, ஒருநாளின் பதினான்கு மணிநேரம், வேலைக்குச் செல்வதிலும் வேலையைச் செய்வதிலுமாகக் கழிந்துவிடுகிறது. காலைக்கடன், குளியல், சமையல் என்பதில் இரண்டு மூன்று மணிநேரம் அசால்ட்டாக போய்விடுகிறது. மீதமுள்ள நேரங்கள், டிவி, சீரியல், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், தூக்கம் என ஓடியே போகிறது.

இப்படியான பரபர சூழலில், கணவன் மனைவியிடம் பேசவும் மனைவியானவள் கணவனிடம் பகிர்ந்துகொள்ளவுமான விஷயங்கள் ஆயிரமாயிரம். ஆனால் பாவம்... பேசத்தான் நேரமில்லை.

இதில், இன்னொரு கொடுமையையும் பலர் அனுபவித்து வருகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் ஷிப்ட் முறை வேலை உண்டு. கணவனுக்கு இந்த வாரம் பகல் டியூட்டி. அதே நேரத்தில் மனைவிக்கு இரவுப் பணி. அடுத்த வாரத்தில், கணவனுக்கு இரவுப் பணி. மனைவிக்கோ பகலில் வேலை. ஆக, கணவன் வீட்டிலிருப்பார். தூங்கிக்கொண்டே இருப்பார். அப்போது மனைவி வேலைக்குச் சென்றிருப்பார். மனைவி அக்கடா என்று அசந்து தூங்குவார். அப்போது கணவன் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொள்ளாத குறையாக வேலை பார்ப்பார்.

இப்படியாகத்தான் நூற்றுக்கு முக்கால்வாசி குடும்பங்கள் இயங்கி வருகின்றன.

‘அதெல்லாம் இல்லீங்க. நான் வேலைக்குப் போறதில்ல. அவரு மட்டும்தான் வேலை பாக்குறாரு’ என்று சொல்லும் மனைவிமார்கள் இருக்கலாம். குடும்பங்கள் இருக்கலாம். அப்படியான குடும்பங்கள் இருந்துவிட்டால் மட்டும்... பேசவும் பகிரவுமான நேரங்கள் கிடைத்துவிடுகிறதா என்ன? அப்படியே கிடைக்கிற நேரங்களை, பேசிக் கழிக்கிறோமா? பகிர்ந்து தொலைக்கிறோமா என்பதும் கேள்விக்குறிதான்!

‘பாவம் அவ. வீட்டை அப்படிப் பாத்துக்கறா. இந்த நேரத்துல போய், ஆபீஸ் பிரச்சினை, உடம்புப் பிரச்சினைன்னு அவகிட்ட சொல்லிட்டிருந்தா நல்லாருக்குமா?’ என்று நினைக்கிற கணவன்மார்களையும்...

‘அவரே ஆடியோடி ஓய்ஞ்சு போய் வீட்டுக்கு வந்து அக்கடான்னு இருக்கறாரு. அவர்கிட்ட போய், குழாய்ல தண்ணி லேசா வருது. மாடிவீட்டுக்காரங்க, குப்பையை மாடிலேருந்தே கொட்டுறாங்க. பொண்ணு செல்போனையே நோண்டிக்கிட்டிருக்குது. பையன் கிரிக்கெட் பேட்டும் கையுமாவே இருக்கான்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தா, அந்த மனுஷனுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச நிம்மதியும் போயிரும்’ என்று நினைக்கிற மனைவிமார்களையும்...

கையெடுத்து ஒரு சலாம் போடத்தான் வேண்டும்.

சரி... இப்போதைய சூழலைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

உலகெங்கும் உலுக்கிக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். ஆயிரம் நம்பியார்களும் பி.எஸ்.வீரப்பாக்களும் ரகுவரன்களும் கூட மிரட்டி பயமுறுத்தாத வகையில், நம்மைக் கதறடித்துக் கொண்டிருக்கிறது கரோனா.

'உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்’ என்ற வாசகம், இப்போது, ‘உலக மனிதர்களே... உங்கள் வீடுகளில் இருங்கள்’ என்று மாறியிருக்கிறது.

‘பள்ளி, கல்லூரிகள் இயங்காது’ என்று அப்போதே அறிவித்துவிட்டது அரசாங்கம். ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டது அலுவலக நிர்வாகம். ஆக, ஒருவீட்டின் ரேஷன் கார்டில் யார் பெயரெல்லாம் இருக்கிறதோ... அவர்கள் அனைவரும் இப்போது வீட்டில் இருக்கிறார்கள்.

காலையில் சிஸ்டத்தை ஆன் செய்து, சில வேலைகளைப் பார்த்துவிட்டு, பிறகு, மனைவி குழந்தைகளுடன் காலை உணவு. பின்னர் வேலை. ‘கொஞ்சம் டீ கொடேன்’ என்று கேட்டதும் டீ. அதை பசங்களும் கால் டம்ளர் குடிக்க... அடுத்து, குழந்தைகள் ‘அம்மா, லெமன் ஜூஸ்’ என்று கேட்க, அந்த லெமன் ஜூஸ் தொண்டை நனைக்க, வேலை ஜரூராகும்.

காலை, மதியம், இரவு என இப்படி நல்ல பொழுதாக இனிதாகிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஒருநாளின் மனைவி செய்யும் வேலைகள் கணவனுக்குத் தெரிவதும் கணவன் செய்யும் வேலைகள் மனைவிக்குத் தெரிவதும் அப்பாவும் அம்மாவும் படுகிற சிரமங்களையும் பணிகளையும் குழந்தைகள் கவனிப்பதுமாக ‘மியூச்சுவல்’ என்கிற புரிதல் அங்கே வேர்விட்டுக்கொண்டிருப்பதை நாம் உணருகிறோம்தானே! கணவன், மனைவி, குழந்தைகள் என்று எல்லோரும் ஒரே தருணத்தில்... ஒரே சமயத்தில்... குழுவாக, கூடி, அதேசமயம் தனித்திருக்கும் வாய்ப்பு... இதனைப் பயன்படுத்துவதும் பண்படுத்துவதுமே நம் சாமர்த்தியம்!

‘வெள்ளைக்காரன்கிட்ட வேலை பாத்தவன் நான்’ என்று மார்தட்டிக்கொள்ளும் தாத்தாக்களுக்குக் கூட இப்படியொரு தருணம் கிடைக்கவில்லை. ‘அப்பலாம் சிஸ்டமேடிகா வேலைகள் நடக்கும்’ என்று கம்பீரமாகச்சொன்ன அப்பாக்களுக்கும் இப்படி வீட்டிலிருந்தே வேலை என்பதெல்லாம் வாய்க்கவே இல்லை.

ஆனால், இன்றைய தலைமுறைக்கும் கடந்த தலைமுறை தம்பதிக்குமாக வாய்த்திருக்கிறது இப்படியொரு பாக்கியம். தாத்தாக்களுக்குக் கிடைக்கவில்லை. அப்பாக்களுக்கு வாய்க்கவில்லை.

24x7 ஏழு நாட்களும் 24 மணிநேரமும் இப்போது வீடு... வீடு...வீடு என்பதாகக் கழிந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.

''நான்லாம் வேலைக்குப் போறவனில்லைங்க. பிஸ்னஸ்'' என்று சொல்லிக்கொள்ளும் நண்பர்களும் உண்டுதான்.

பிஸ்னஸ்தான். வியாபாரம்தான். பொருள் கொள்முதல், பொருள் லோடு, கஸ்டமர், ப்ரமோஷன் என்று வண்டியை எடுத்துக்கொண்டு நீங்களும் நாலா திசையிலும் அலைந்துகொண்டிருந்தீர்கள்தானே.

ஆனால் இப்போது, வீடுதானே பாஸ் உங்களுக்கு ஆபீஸ்!

புரிந்துணர்வு என்கிற அற்புதமான வார்த்தை தமிழில் உண்டு. அப்படிப் புரிந்து உணருகிற தருணம்தான் கரோனாவால் நமக்குக் கிடைத்திருக்கிறது. புரிந்து உணர்ந்து வாழ்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்