கரோனா, ஊரடங்கு என அன்றாடம் அவஸ்தைகளை எதிர்கொள்பவர்கள் பலர். கோவையில், ரத்தப் பரிசோதனை செய்யவும், மாஸ்க் வாங்கவும் அலைந்த என் அனுபவமும் அப்படியானதுதான்.
சாதாரண சளி, காய்ச்சல்தான். மருத்துவரிடம் சென்று குணமாகி விட்டது. பத்து நாள் கழித்து இந்த ‘‘சாந்தி சோசியல் சர்வீஸ்ல ரத்த டெஸ்ட் எடுத்துட்டு வந்துடுங்க. அதையும் உங்க மெடிக்கல் ரிப்போர்ட்டோட இணைச்சிரலாம்!’’ என என் மருத்துவர் ஆலோசனை சொல்லியிருந்தார்.
வெறும் வயிற்றில் தண்ணி கூட குடிக்காமல் டெஸ்ட் எடுக்கப் போக வேண்டும் என்பது மருத்துவரின் தெரிவிப்பு. ‘கோவிட்-19’ பரபரப்பு, பதற்றத்தில் அந்த டெஸ்ட் எடுக்க நாள் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. ‘ஊரடங்கு இருந்தாலென்ன. அதை தாமதிப்பானேன். பாதுகாப்பாக போய் வரலாம்!’ என்று இன்றைக்குத்தான் மருத்துவரின் சீட்டை எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே புறப்பட்டேன்.
எதிர்பார்த்தது போலவே கோவை செல்வபுரம் பிரிவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். நான் நிருபர் என்று சொல்லியும் கழுத்தில், ஐ.டி கார்டு தொங்க விட்டிருந்தும் அவர்கள் அடித்த கூத்து சொல்லி மாளாது.
‘‘பிரஸ்ன்னா அறிவில்லையா? இப்படியா வருவாங்க. மாஸ்க் எங்கே?’’ என்கிறார் ஒருவர்.
‘‘அது உள்ளூர் கடைகளில் கிடைக்கலை!’’ என்று சொல்லி ஹெல்மெட்டுக்குள்ளே நுழைத்து என் கர்ச்சீப்பை முகக்கவசமாக கட்டுகிறேன். உடனே அந்த போலீஸ்காரர் துள்ளுகிறார்.
‘‘யோவ், கர்ச்சீப்பெல்லாம் கட்டக் கூடாதைய்யா. மாஸ்க் போடு. இல்ல வண்டிய திருப்பி வந்த ரூட்லயே விடு. நேத்துதானே உனக்கு அட்வைஸ் பண்ணினேன்!’’ என்கிறார்.
‘‘நான் நேற்று வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. நீங்கள் வேறு யாரோ ஒரு ரிப்போர்ட்டருக்கு அட்வைஸ் செய்திருக்கலாம்!’’ என்கிறேன். ‘‘இல்லையே, நீங்கதானே இந்த வழியில போனது. பிரஸ்காரங்கன்னாலும் முகத்துல மாஸ்க் போடணும்ன்னு டிவியில நேத்து செய்தி போட்டீங்கள்ல?’’ என்கிறார். ‘‘நான் டிவி மீடியா இல்லை. பத்திரிகை!’’ என்கிறேன்.
அதற்குள் இன்னொரு போலீஸ்காரர் வருகிறார். ‘‘நீங்க போங்க சார்!’’ என்கிறார். உடனே இந்த போலீஸ்காரர் என் ஆக்டிவாவிற்கு குறுக்காக காலை அகட்டி நின்று கொள்கிறார். ‘‘இரு, உன்னைப் போட்டோ எடுக்கணும்!’’ என்கிறார்.
தன் செல்போனில் நான் முகத்தில் கர்ச்சீப் கட்டிய காட்சியை படம் எடுத்துக் கொள்கிறார். ‘பி.பி.அதிகம்!’ என்று இப்போதுதான் டாக்டர் சுட்டிக்காட்டி மாத்திரை எழுதி சரிப்படுத்தி யிருக்கிறார். அதற்காகவே டெஸ்ட்டும் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதை எடுக்கப் போகும் போதுதான் பிபி எகிறுகிற இந்த டென்ஷன்.
‘சரி, போகிற வழியில் ஏதாவது ஒரு மெடிக்கல் ஸ்டோரில் மாஸ்க் வாங்கிக் கட்ட வேண்டும்’ என முடிவு செய்கிறேன். என்ன காலக் கொடுமை எங்கும் கடைகள் இல்லை.மருந்தகங்கள் கூட. அடுத்தது உக்கடம் பஸ் நிறுத்தத்தில் நிறைய போலீஸார். பல வண்டிகள் போகத்தான் செய்தது. அதை எந்த போலீஸாரும் தடுக்கவில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்குத்தான் தெரியும்.
அடுத்தது ராமநாதபுரம் சிக்னல். நான்கைந்து போலீஸார். பிரஸ் என கையுயர்த்தியதும் ஏதும் பேசாமல் அனுமதிக்கிறார். அதற்கடுத்து சிங்காநல்லூர் சிக்னல். அங்கு நான்கு மூலையிலும் மூலைக்கு இரண்டாக போலீஸார். இங்கேதான் நேற்று முழுக்க டூவீலரில் சென்ற டாக்டர், ஆசிரியர், லேப் டெக்னீசியன் என பாகுபாடில்லாமல் அவர்கள் ‘பிட்டத்தில்’ லத்தி விளையாடிய இடம்.
நம்முடைய ‘பிட்டம்’ பத்திரம் என்கிற மாதிரி மனசு பயம் காட்டுகிறது. ஒரு போலீஸ்காரர் ஓடி வருகிறார். நான் கையசைத்து விட்டு வண்டியை முடுக்குகிறேன்.
அப்பாடா... சாந்தி சோசியல் சர்வீஸ் வந்தாச்சு. நான் வசிக்கும் கோவைபுதூரிலிருந்து இந்த சென்டருக்கு 23 கிலோமீட்டர் தூரம். என்றைக்கும் காலையிலேயே பரபரவென்று மருத்துவப் பரிசோதனைக்கு நோயாளிகள் குழுமும் இடம்.
சாந்தி கேன்டீன், சாந்தி பெட்ரோல் பங்க். சாந்தி மருந்தகம் என இங்கே கோவை மக்கள் அதிகம் பேர் இங்கேதான் வருவார்கள். காலை மதிய நேரங்களில் இங்குள்ள கேன்டீனில் சாப்பிடுபவர்கள் மட்டும் 20 ஆயிரம் பேர். 5 ஆயிரம் வாகனங்கள் அணிவகுக்கும். சாந்தி மருத்துவ பரிசோதனை மையமும் அதற்கு சளைத்ததல்ல, பிளட், யூரின் டெஸ்ட் மட்டுமல்லாது பல்வேறு உறுப்புகள் ஸ்கேன், எக்ஸ்ரே, இதயத்திற்கு ஈசிஜி எடுப்பவர்கள் என ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.
இப்போது மனிதத் தலைகளே இல்லை. பளிச்சென்று துடைத்து விட்டதுபோல் காட்சியளிக்கிறது. கேட்டில் இருந்த நான்கைந்து செக்யூரிட்டிகள் இருசக்கர வாகனங்களை அனுமதிக்கவில்லை.
என் மருந்துச் சீட்டைக் காட்டி அவர்களிடம், ‘‘மருத்துவப் பரிசோதனை மையம் (லேப்) இருக்கில்ல?’’ என்கிறேன். ‘‘இல்லை. மருந்தகம் மட்டும்தான் இருக்கிறது!’’ என்கிறார்.
எனக்கு பொசுக்கென்று ஆகிவிட்டது.
என்றாலும் மருந்தகத்தில் ‘மாஸ்க் வாங்கிக் கொள்ளலாமே!’ என உள்நுழைகிறேன்.
மீண்டும் தடுக்கிறார் செக்யூரிட்டி. ‘‘என்ன வாங்கப் போகிறீர்கள்?’’ மருந்துச் சீட்டைக் காண்பிக்கிறேன். அவர் விடுகிறார்.
அடுத்து ஒரு செக்யூரிட்டி, ‘‘அங்கே பைப் இருக்கிறது. கையைக் கழுவி விட்டு வரிசையில் நில்லுங்கள்!’’ என்கிறார்.
நானும் அந்தக் குழாயின் அருகே வைக்கப்பட்டிருந்த சோப்பைப் போட்டு கையை நன்றாகக் கழுவிவிட்டு வரிசையில் நிற்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஆறடி இடைவெளி.
மருந்தகம் ரொம்ப தூரம் தெரிகிறது.
மருந்தகத்தின் முன்னே ஹாலில் ஆறடிக்கு ஆறடி இடைவெளியில் நாற்காலிகள் தெரிகின்றன. அதிலும் மருந்து வாங்க வந்தவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நேரம் கடக்கிறது.
இதோ, வரிசையில் நிற்கும் எங்களை ஒவ்வொருவராக ஃபீவர் சோதித்து (கையில் உள்ள கருவியால்) உள்ளே விடுகிறார் ஒரு செவிலி. மறுபடி ஆறடி இடைவெளியில் ஒரு க்யூ. மருந்தக கவுன்ட்டர் நெருங்கும்போது ஒரு செக்யூரிட்டி வருகிறார்.
‘‘ஹேண்ட் மாஸ்க், ஃபேஸ் மாஸ்க் கிடையாது. அதுக்காக யாரும் நிற்க வேண்டாம்!’’ எனக்கு முன்னால் நின்ற ஒரு பெண்மணி வரிசையை விட்டு தயங்கித் தயங்கி வெளியே வருகிறார். ‘‘முகக்கவசம் கூடவா இல்லை?’’ என செக்யூரிட்டியிடம் சந்தேகத்துடன் வினவுகிறேன்.
‘‘அதுதான் இல்லைன்னு தமிழ்லதானே சொன்னேன்!’’ என சீறுகிறார் செக்யூரிட்டி.
அநேகமாக எத்தனை பேருக்கு இப்படி பதில் சொல்லியிருப்பாரோ? ‘கோவையிலேயே பெரிய மருந்தகம் சாந்தி சோசியல் சர்வீஸ். இங்கேயே மாஸ்க் இல்லைன்னா எங்கே இருக்கும்?’ சந்தேகம் பொங்க வந்து வெளியில் நின்ற வண்டியை ஸ்டார்ட் செய்கிறேன்.
‘மாஸ்க் இல்லாமல் முகத்திற்கு இப்படி கர்ச்சீப் கட்டிக் கொண்டு போனால் திரும்ப அந்த போலீஸ்காரனிடம் அவமானப் பட நேருமே!’ அவமானம் எட்டிப் பார்க்கிறது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்தான் ஒண்டிப்புதூர். அங்கே சோமசுந்தரம் மெடிக்கல் திறந்திருக்கலாம்.
அங்கே இந்த மாஸ்க் கேட்டுப் பார்க்கலாம். வண்டியை உருட்டுகிறேன். நல்ல வேளை எதிர்பார்த்தமாதிரியே அந்த மெடிக்கல் ஷாப் திறந்திருந்தது. ‘‘மாஸ்க் இருக்க வேண்டுமே!’’ மெடிக்கல் கவுன்ட்டருக்குச் செல்கிறேன். அங்கே ஒருவருக்கு கடை சிப்பந்தி ஒரு ஃபைலில் பச்சை நிற மாஸ்க் ஒன்றையும், வெள்ளை நிற மாஸ்க் ஒன்றையும் வைத்து விளக்கிக் கொண்டிருக்கிறார்.
‘‘இந்த பச்சைக் கலர் 30 ரூபாய். 5 மணிநேரம்தான் போட முடியும். அதுக்கப்புறம் நாத்தம் தாங்காது. நாங்களே போட்டுக்க முடியாது. தண்ணியில போட்டா பஞ்சு பஞ்சா போயிடும். இந்த வெள்ளை மாஸ்க் எப்பவும் போட்டுக்கலாம். 240 ரூபாய். எது வேணும்?’’ என்கிறார்.
அந்த மாஸ்க்கை பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர் அலங்க மலங்க பார்க்கிறார்.
‘‘இந்த 30 ரூபாய் மாஸ்க் ஒண்ணு மட்டும் கொடுங்க!’’ என்கிறார். நான் பார்க்கிறேன். இன்னிக்கே இப்படி. நாளைக்கு. இன்னமும் 21 நாள் கழித்து இந்த மாஸ்க்குகள் கிடைக்குமா? எனக்கு மட்டுமல்ல, மனைவிக்கு ஒண்ணு, மகனுக்கு, மகளுக்கு, மருமகளுக்கு, என ஐந்தாறு பேருக்கு வேணுமே!
ஒரு குத்து மதிப்பாக ‘‘இந்த வெள்ளை மாஸ்க்ல ஒரு மூணு. பச்சை மாஸ்க் ஒரு பத்து கொடுங்க!’’ என்கிறேன். கடைப்பையன், ‘‘சார், இந்த வெள்ளை மாஸ்க் போட்டுட்டு தண்ணியில போடலாம். ஆனா, துவைக்கக்கூடாது. கசக்கக்கூடாது. சோப்பு போடக்கூடாது. குளுந்தண்ணியில போட்டுட்டு, அப்புறமா சுடுதண்ணியில போட்டு காயப்போட்டா போதும். எதுவானாலும் யூஸ் பண்ணீட்டு கழட்டி வெயில்ல நல்லா காயப் போட்டுடுங்க!’’ என்கிறார்.
அவர் கொடுத்த பில்லுக்கு பணம் செலுத்தி விட்டு ஒரு பச்சை மாஸ்க்கை எடுத்து முகத்தில் கட்டிக் கொண்டு, ‘மாஸ்க் வென்ற பெருவீரனாக’ வண்டியில் திரும்புகிறேன். வரிசையாய் அப்பவும் மருந்தகங்கள் பூட்டிக் கிடக்கின்றன. மருத்துவமனைகள், கிளினிக்குகள் பூட்டிக் கிடக்கின்றன. டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்களின் தேவை இப்போதுதான் அதிகம். 24 மணி நேரமும் பாடு பட வேண்டியவர்கள். ஏன் இப்படி பூட்டி வைத்திருக்கிறார்கள்?
டாக்டர்களும் மனிதர்கள்தானே. பலர் உயிர் பயத்துடன் கிளினிக்கிற்கு லீவு விட்டதாகச் சொல்கிறார்கள். செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் வெறுமனே ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மாத சம்பளம் வாங்குகிறவர்கள்தானே? அவர்கள் பேருந்தில்தானே வருவார்கள். பேருந்துகளே இல்லாதபோது அவர்கள் எப்படி வர முடியும்? அப்படியே டூவீலரில் வந்தால் லத்தி அடி வாங்க யாருக்கு பலம் இருக்கிறது? ஐடி கார்டு தொங்க விட்டு ஒற்றையாளாக வந்த நிருபரே இந்த போலீஸ்காரர்களிடம் இந்த பாடு பட வேண்டியிருக்கிறது. அவர்கள் என்ன பாடு பட வேண்டி வரும்?
உள்ளுக்குள் ஒரு குமைச்சல். திரும்பி வரும் வழியில் கவனிக்கிறேன். ஒவ்வொரு சாலைதோறும் இரண்டொரு துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்கூட்டிக் கொண்டும், குப்பை வண்டியை தள்ளிக் கொண்டும் கர்மமே கண்ணாய்க் கடக்கிறார்கள். என் இந்த அனுபவத்தை என் நெருக்கமான சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
‘‘வேலாயுதம். இங்கே கோயமுத்தூர்ல கரானா சென்டர் நம்ம ஜி.எச்சும், ஈஎஸ்ஐயும்தான். அதுல இருக்கிற டாக்டர்களுக்கே மாஸ்க் தரப்படலை. என் நண்பன் டாக்டர் போன் பண்ணி கதர்றான். நான் கரோனா வந்துதான் சாவேன் போலிருக்குன்னு. இருந்த மாஸ்க்கெல்லாம் மந்திரிக, எம்.எல்.ஏக, ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் வீடுகளுக்கு போயிருச்சாம். நாங்க பீதியிலதான் வேலை செஞ்சுட்டு இருக்கிறோம்!’’ என்கிறார்.
‘‘அரசாங்க கரோனா சென்டர்களே இப்படியிருக்கும்போது தனியார் ஆஸ்பத்திரி, கிளினிக்குகள் மருத்துவர்கள் என்ன செய்வாங்க பாவம்? அதுதான் 90 சதவீதம் பேர் பூட்டிட்டே போய்விட்டார்கள்!’’ என்கிறார்.
என் பத்திரிகை நண்பர் ஒருவரிடம் பேசுகிறேன்.
‘‘சார் இந்த மாஸ்க் கதையே பெருங்கதை. நேத்து நான் ஒரு மருந்துக்கடையில் மாஸ்க் கேட்கிறேன். இல்லைன்னுட்டாங்க. நான் பிரஸ், அது இதுன்னு சொன்னதும் எங்கோ ஒளிச்சு வச்சிருந்ததை பவுன் மாதிரி எடுத்துக் கொடுத்தாங்க. அது சாதாரண நாளில் அஞ்சு ரூபாதான் விலை. இப்ப ரூ. 40-ன்னாங்க. அந்த நேரத்துல ஒரு துப்புரவுத் தொழிலாளி வந்துட்டார். ‘எனக்கு ஒரு மாஸ்க் வேணுங்க’ங்கிறார். கடைக்காரர் இது ஒண்ணுதான் இருக்கு. அதுவும் அவுருக்கு கொடுத்தாச்சுங்கிறார். அவர் என்னையே பரிதாபமா பார்க்கிறார்.
அவர் திரும்பத் திரும்ப, ‘நான் குப்பை வழிக்கிறவன் சாமி. கொஞ்சம் தயவு பண்ணுங்கங்கிறார்’ அவங்க இல்லைன்னே சொல்றாங்க. அப்புறம் நானே அவர்கிட்ட அந்த மாஸ்க்கை கொடுத்துட்டு வந்துட்டேன். அப்புறம் தெருவுல வித்த ஒரு மாஸ்க்கை வாங்கி கட்டிட்டேன். அது பொம்பளைக பழைய நைட்டில யாரோ தைச்ச மாஸ்க். இங்கே மாஸ்க் கொள்ளை, கொள்ளையா இருந்திருக்கு. சீனாவுல கரோனான்னவுடனே நல்ல விலைக்கு எல்லாம் ஏத்தி விட்டுட்டாங்க. அட நம்ம ஊருக்கும் கரோனா வரும். மாஸ்க் தேவைப்படும்ன்னு ஏற்றுமதி செய்யாம இருந்திருக்கலாம்ல. எங்கே நம்மாளுகளுக்கு பணத்து மேல இருக்கிற அறிவு உயிர் மேல இல்லையே!’’ என்றார்.
கரோனாவிற்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இரண்டாம் நாளிலேயே ஒற்றை மாஸ்க்கின் கதை இப்படி என்றால் 21-ம் நாள் எப்படியிருக்குமோ? மனித குலம் கடக்க வேண்டிய தூரம் நிறையத்தான் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
31 mins ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago