சர்வம் கரோனா பயம்!

By செய்திப்பிரிவு

ரிஷபன்

கிச்சன்லருந்து வீட்டம்மிணியின் குரல் கேட்டது.

"சும்மாதானே இருக்கீங்க. மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வரலாம்ல..."

நான் ‘வீட்டிலிருந்து வேலை திட்ட’த்துல தான் இருக்கேன். கண் முன்னாடி கம்ப்யூட்டர். ஆனா, அம்மிணிக்கு நான் ஏதோ படம் பார்க்கிற ஃபீலிங்கு.

“இல்லம்மா... ஒரு ஜாப் ஓடிகிட்டிருக்கு. பாதியில விட்டுட்டு போக முடியாது” முடிஞ்சவரைக்கும் குரலைத் தழைச்சு சொல்லிப் பார்த்தேன். ம்ஹும்.

“நியூசை வச்சாலே பீதியக் கெளப்புறாங்க. சாமான்லாம் வாங்கி ஸ்டாக் வச்சுக்கன்னு கீழ் வீட்டுல சொன்னாங்க. மொளகா வறுத்த நெடில தும்மி தொலைச்சுட்டேன். அந்தம்மா உடனே வூட்டுக்குள்ர ஓடிருச்சு, பாதி பேசிகிட்டிருக்கும்போதே.”

இவ்ளோ சொன்ன பிறகு மறுக்கமுடியுமா? “சரிம்மா. போயிட்டு வரேன்”னு சரண்டர் ஆயிட்டேன்.

அப்ப பாத்து வெளியில, "சார்" னு குரல் கேட்டுச்சு. எட்டிப் பாத்தா எதிர் வீட்டுக்காரர் நின்னாரு. கையில் ஏதோ டப்பா.

“நேத்து சிங்கப்பூர்லேர்ந்து என் பையன் வந்தான். சாக்லேட்னா ஒங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு தெரியும்... அதான்.”

முகமெல்லாம் பளிச்சுனு ஆகி நான் ரெண்டு ஸ்டெப் முன்னாடி வச்சா, பின்னாடி நாலு ஸ்டெப்புக்கு அம்மிணி என்னை இழுத்துட்டாங்க. கண்ணால முறைச்சாங்க. எதிர் வீட்டுக்காரர்ட்ட சொன்னாங்க.

“நேத்து தான் இவருக்கு செக்கப் போனோம். இனிப்பு சாப்பிடாதீங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரு.”

“ஓ... அதனால என்ன. ஒண்ணே ஒண்ணு ஆசைக்கு.” விடாம ஒரு பெரிய பார் சாக்லேட்டை நீட்டினாரு.

அம்மிணி என் கையை இறுக்கப் புடிச்சுகிட்டு, “அப்டி டேபிள்ல வச்சுருங்க”னு சொல்லிட்டாங்க.

அவரு அந்தப் பக்கம் போனதும் கேட்டேன். “ஏம்மா இப்டியா நடந்துக்குவாங்க”

விட்டாங்க ஒரு ரைடு. “சிங்கப்பூர்லேர்ந்துன்னு சொல்றாரு. உசுரு பயமே இல்லாம சாக்லேட்டுக்கு பாயுறீங்க.”

நியூஸ் பேப்பரால அந்த சாக்லேட்டைக் கவ்வி டாய்லட்ல போட்டு ஃப்ளஷ் பண்ணிட்டாங்க. என்னை இழுத்துகிட்டு போய் கை கழுவச் சொன்னாங்க.

“இங்க பாருங்க... இனிமே எதைத் தொட்டாலும் கை கழுவணும்... புரிஞ்சுதா.”

“உன்னைத் தொட்டாலுமா?”ன்னு கேட்கத் தோணுச்சு. வாய வச்சுக்கிட்டு வம்பு வளர்த்துக்கக் கூடாதுன்னு கம்முனு இருந்துட்டேன். அடுக்கி வெச்சிருந்த இருபது பாட்டில் சானிடைசரைக் காட்டுனாங்க. “ஏம்பா... அடுத்தவங்க வாங்கன்னு கடையில மிச்சம் மீதி விட்டு வச்சிருக்கியா?”ன்னு தெரியாம கேட்டு ஒரு முறைப்பை வாங்கிட்டேன்.

“நானே பூஞ்ச ஒடம்பு. அதான் ஒங்கள மார்க்கெட் அனுப்புறேன்... புரிஞ்சுதா” எனக்கு வேலை வச்சதுக்கு சென்டிமென்ட்டா காரணம் சொன்னாங்க.

மகனார் குரல் இன்னொரு பாத்ரூம்லேர்ந்து கேட்டுச்சு.

“நான் வெளிய வரலாமா?”

“உடுப்பெல்லாம் சுடு தண்ணில முக்கிட்டு வா.”

ஜாக்கிங் போயிருக்கான். அம்மிணி சும்மா விடுவாங்களா... உரிச்ச கோழி மாதிரி வெளியே வந்தான். வந்த வேகத்துல, “டிவி வைங்கப்பா...”னாரு உடனே அம்மிணி வெளியே வந்துட்டாங்க. இப்ப எல்லாம் அவங்க கையில தான் ரிமோட்.

“கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை”ன்னு டிவியில நிலவரம் சொல்லும்போதே அம்மிணி முகத்துல ஒரு கலவரம்.
நானும் ஆன்னு வாயைப் பொளந்துகிட்டு நியூஸ் பார்த்ததும் அம்மிணி விரட்டுனாங்க. “போங்க. காயெல்லாம் பத்து நாளைக்கு வராப்ல வாங்கிருங்க.”

வெளியே வந்தா என்னை மாதிரி விரட்டப்பட்ட நாலஞ்சு அப்பிராணி ஆண்கள் தெருவுல. ஒருத்தருக்கொருத்தர் எட்டி நின்னு சிரிச்சுக்கிட்டோம். அவங்கவங்க வீட்டுலயும் அலர்ட் பண்ணிருப்பாங்க போல. எல்லாரும் நாலடி தள்ளியே தான் நடந்தாங்க.
வழியில வந்த தூசியால லைட்டா செருமினேன். மார்க்கெட்டுக்குள்ள எல்லாரும் மரியாதையா வழி விட்டாங்க.

“எப்படிம்மா கெழங்கு... வெங்காயம்லாம்... லொக் லொக்.”
“அவருக்கு முதல்ல கொடுத்து அனுப்புங்க” சொல்லிட்டு பக்கத்துல நின்னவரு பத்தடி தள்ளிப் போய் நின்னாரு.

காய் கேட்டதெல்லாம் அள்ளிப் போட்டு பையைக் காட்டச் சொல்லி கவுத்தாரு கடைக்காரரு. நான் கொடுத்த ரூபாயை கைபடாம வாங்கி வெச்சாரு.

என்னோட போன் அலறுச்சு. அம்மிணிதான். “அப்டியே மளிகை சாமானுக்கும் சொல்லிட்டு வந்துருங்க. பதினஞ்சு நாள் வெளியே போகக் கூடாதாம்.”

கடைக்காரர் திணறிக்கிட்டிருந்தாரு. எல்லாரும் ஒரே நேரத்துல படை எடுத்தா பாவம் அவருதான் என்ன செய்வாரு. என் லிஸ்ட்டையும் வாங்கி வச்சுகிட்டு, “அனுப்பறேன் போங்க”ன்னுட்டாரு.

தெருவுல தான் என்ன மரியாதை... வழக்கமா மேல இடிச்சுகிட்டு போவுற ஜனங்க இன்னிக்கு ஏதோ விஐபி போறாப்ல ஒருத்தருக்கு ஒருத்தர் ஒதுங்கி வழி விட்டாங்க.

வீட்டு வாசல்ல வந்ததும் மகனார், ’அப்படியே நில்லு’ன்னு ஜாடை காட்டுனாரு. கொசு மருந்து அடிக்கிறாப்ல என்மேல ஸ்ப்ரே செஞ்சாங்க. இவங்க அடிக்கிற கூத்துல எதிர் வீடு, பக்கத்து வீடெல்லாம் கதவை அடைச்சுட்டாங்க.

“காய்கறி, பால் பாக்கெட்லாம் நல்லா வாஷ் பண்ணி வைங்க. யாரையும் தொடலீல்ல...”

“இல்லம்மா... லொக் லொக்”

அம்மிணி அடுத்த நிமிசம் அரண்டுட்டாங்க.

“இப்ப ஏன் இருமினீங்க..?”

”ம்... சும்மா டைம் பாஸுக்கு. வெளியே போய்ட்டு வந்தா தொண்டை வறண்டு போவாதா?”

எனக்கே பொறுமை போயிருச்சு. கம்ப்யூட்டர்ல இன்னும் ஜாப் முடியல. என் ஆபிஸ் ஜூனியர் நான் திரும்ப வந்துட்டேன்னு தெரிஞ்சதும் “சார் நானும் அரை மணி போயிட்டு வந்துரவா?”ன்னு கேட்கும் போதே தவறுதலா வீடியோ கால் ஆன் ஆயிருச்சு.
புதுசாக் கல்யாணம் ஆனவன். அவன் வொய்ஃப் அவன் கன்னத்துல இடிச்சுகிட்டு இருந்ததைப் பார்த்து தொலைச்சுட்டேன். பட்டுனு கட் பண்ணிட்டான். “போய்த் தொலை”ன்னு ஆசி வழங்கிட்டு வொர்க் ஃப்ரம் ஹோம்னா இது இல்லன்னு கண் அடிக்கிற ஸ்மைலி போட்டு மெசெஜ் அனுப்பினேன்.

அம்மிணிகிட்ட இதைச் சொல்லி சிரிக்கலாம்னு போனா, அவங்க வாட்ஸ் - அப்ல வந்த கரோனா நியூஸ் எல்லாத்தியும் சீரியஸா பாத்துட்டு இருந்தாங்க.

“இங்கே பாரும்மா... ஒவ்வொரு கால கட்டத்துலயும் ஏதாச்சும் இப்படி வந்துகிட்டுத்தான் இருக்கு. எச்சரிக்கையா இருக்கணும்னு பீதியாகிட்டே போகக் கூடாது... புரிஞ்சுதா.”

அவங்க உடனே ஒரு சார்ட்டைக் காட்டி, “அப்ப இது எல்லாமே பொய்யா கோப்பால்”னு என்னைப் பார்த்தாங்க. ஒவ்வொரு நாட்டுலயும் அதோட தாக்கம் எப்படின்னு கணக்கு போட்டுக் காட்டியிருந்தாங்க. அதைப் பாத்துட்டு இருக்கும்போதே அப்டேட் ஆகும் போல. நம்பர் சுத்திகிட்டே இருந்துச்சு.

என் கையில் போனைக் குடுத்துட்டு இவங்க எங்கே போனாங்கன்னு நிமிர்ந்தா ஆவி பறக்கிற ஒரு டம்ளரை நீட்டுனாங்க. அந்தாண்ட மகனார் அதே போல இன்னொரு டம்ளரோட நின்னாரு.

“மொதல்ல இதைக் குடிங்க.”

“என்னம்மா இது..?” நாத்தம் குடலைப் புரட்டுச்சு. அதை வாசல்ல வச்சாலே எந்த வைரஸும் திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிரும். அவ்ளோ நாத்தம்.

'வாட்ஸ் - அப்ல வந்துச்சு. பூண்டுதான் மெயின்... இதைக் குடிச்சா எந்த வைரசும் எதுவும் செய்ய முடியாதாம்.”

அம்மிணி ஏற்கெனவே ரெண்டு டம்ளர் அடிச்சிருந்தாங்க போல. துணிச்சலா என் பக்கத்துல வந்து நின்னு சொன்னாங்க.

ஜன்னல் வழியா வெளியே கொட்டிட்டு குடிச்சாப்ல பாவ்லா காட்டி என்னைப் பார்த்து கண்ணடிச்சாரு மகனார். என் போறாத காலம் சுவத்தை ஒட்டி நின்னேன். கொட்டுனா வயித்துலதான் கொட்ட முடியும். கண்ண மூடிக்கிட்டுக் குடிச்சாலும் புரட்டிகிட்டு வந்துச்சு.

“வாயைப் பொத்துங்க... துப்பீடாதீங்க”ன்னு கமெண்ட்ரி கொடுத்துகிட்டே இருந்தாங்க அம்மிணி.

அதக் குடிச்சுட்டு அப்டியே கம்ப்யூட்டர் முன்னாடி போய் ஒக்கார்ந்தா தலை கிர்ர்னு சுத்துது. சுதாரிச்சு ஜாபை செக் பண்ணேன்.

“இதே மாதிரி நைட்டுக்கு ஒரு தடவை குடிச்சா போதும்”னு அம்மிணி ஹேப்பியா சொன்னாங்க.

ஹைய்யோ இன்னொரு டோஸ் இருக்கான்னு அரண்டு போயிட்டேன். “நான் மட்டும் ஆபீஸ் வந்துரவா?”ன்னு என் பாஸுக்கு மெசேஜ் அனுப்பினேன். “செக்யூரிட்டி விட மாட்டார்”னு அவர் பதில் போட்டாரு. கூடவே, ஒரு சோக ஸ்மைலியும்.

பாவம் அவரும் எதையோ குடிச்சுத் தொலைச்சுருப்பார் போல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

13 hours ago

வலைஞர் பக்கம்

15 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்