'ஆபீஸ்ல மீட்டிங்'; 'பயங்கர டிராஃபிக்';  'வண்டி ஓட்டிட்டிருக்கேன்'; 21 நாள் ஊரடங்கு: பொய்யிலிருந்து விடுதலை! 

By வி. ராம்ஜி

எதற்கெடுத்தாலும் சின்னச் சின்ன பொய்களைச் சொல்கிற, சொல்லித் தப்பித்துக் கொள்கிற, இந்த நவீன உலகில் யாருக்கு வேண்டுமானாலும் எதற்கு எடுத்தாலும் சொல்கிற டெம்ப்ளேட் பொய்கள்... நமக்குப் பழக்கமானவைதான்!

வீட்டிலிருந்தோ ஊரிலிருந்தோ போன் வரும். கடன் கொடுத்தவரோ கடன் கேட்பவரோ போனைப் போடுவார்கள். இவர்களுக்கெல்லாம் ‘மீட்டிங்... பிறகு அழைக்கிறேன்’ என்று டெம்ப்ளேட்டாக, செல்போனிலேயே இருக்கிற மெசேஜை அழுத்தி அனுப்பிவிடுவார்கள்.

‘மாப்ளே... என்னடா பண்றே?’ என்று ஊரிலிருந்தோ அல்லது உள்ளூரிலிருந்தோ நண்பர்கள் யாரேனும் போன் செய்வார்கள். அந்த போனை எடுத்தால், எப்படியும் அரை மணிநேரம் காது கொடுக்கவேண்டும் என்று அதைத் தவிர்த்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்காக, சட்டென்று போனை எடுத்து, ‘செம டிராஃபிக்ல மாட்டிக்கிட்டிருக்கேன். அப்புறமா கூப்பிடுறேன்’ என்று சொல்லிவைத்துவிடுவார்கள். இன்னும் சிலர், மணிரத்னம் பட வசன ஸ்டைலில், ‘மீட்டிங்...அப்புறம்...’ என்று சன்னமாகச் சொல்லுவார்கள்.

நம்மில் சிலர், லேட்டாகத் தூங்கி, லேட்டாக எழுந்து, லேட்டாகக் கிளம்புவார்கள் அலுவலகத்துக்கு! ‘இன்னும் ஆளைக் காணோமே’ என்று அலுவலக நண்பர்கள், பாஸ், மேலதிகாரி என போன் செய்தால், ‘சார்... வண்டி பஞ்சர் சார்’, ‘பசங்க படிக்கிற ஸ்கூல்ல மீட்டிங் சார்’, ‘பஞ்சர் ஒட்டி முடிச்சிட்டு, இப்பதான் சார் வண்டி எடுக்கிறேன்’, ‘ஸ்கூல்ல மீட்டிங்... மிஸ்கிட்ட வரமுடியாதுன்னு சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கேன் சார்’, ‘கிண்டிகிட்ட செம டிராஃபிக் ப்ரோ’, என்றெல்லாம் புதுசு புதுசாய், தினுசு தினுசாய் பொய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

‘என்னய்யா, பொய் பொய்யா அவுத்துவுடுறே?’ என்று கேட்டால், ‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுங்கறதெல்லாம் அந்தக் காலம். பொய் சொன்னாதான் சாப்பாடு... இந்தக் காலம்’ என்று பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.

காலையைப் போலவும் மாலையிலும் ஆரம்பமாகும் பொய்கள். இந்த முறை வீட்டிலிருந்துதான் போன் வரும். ‘ஆபீஸ்ல செம வேலை’ என்பார்கள் டீக்கடையில் அரட்டையடித்துக்கொண்டே! ‘லேட்டாகும் போல’ என்று முன்னெச்சரிக்கை சொல்வார்கள்... ‘டாஸ்மாக்’ ப்ளான் போட்டவர்கள். வீட்டிலிருந்து போன் வந்தால், எடுக்காமல் வண்டியோட்டுவார்கள். 'டிராபிக் சத்தத்துல காதுலயே விழல' என்பார்கள். ‘நான் சைலண்ட்ல போடல. பாக்கெட்ல இருந்துச்சா, ஏதோ பட்டு, சைலண்ட் மோடுக்கு போயிருச்சு போல’ என்று அசடு வழிவார்கள். ‘ம்ச்... இந்த போனை மாத்தறதுக்கு ஒரு நேரம் வரமாட்டேங்கிது’ என்று அலுத்துக் கொள்வார்கள்.

‘இப்ப பாரேன்... நான் போன் பண்ணுவேன். அங்கேருந்து மீட்டிங், ஆபீஸில் செம வேலைன்னு எதுனா மெசேஜ் வரும் அவன்கிட்டேருந்து. எவ்ளோ பந்தயம்?’ என்று சரியாகப் புரிந்து உணர்ந்த நண்பர்கள், எங்கோ இருந்துகொண்டு, யாரிடமோ பந்தயம் கட்டி, நம்மை வைத்துக்கொண்டு விளையாடி ஜெயிப்பார்கள்.

கரோனா அச்சுறுத்தல்... 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு... ஒட்டுமொத்த இந்தியாவும் ஒத்தசிந்தனையில் தவித்துக் கொண்டிருக்கிறது. பல அலுவலகங்களில், வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டது. ‘வண்டி பஞ்சர் சார்’ என்பதற்கெல்லாம் வேலையில்லை. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. ‘ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்’ என்று பொய் சொல்லவும் முடியாது. சொல்லவும் அவசியமில்லை.

‘கிண்டில டிராபிக், பெருங்களத்தூர்ல பயங்கர ஜாம்’ என்றெல்லாம் சொல்லவே முடியாது. ஊரடங்கால், பஸ்கள் இயங்கவில்லை. வெளியே நடமாட்டமில்லை. டிராபிக் பொய்களுக்கு வேலையுமில்லை.

பொதுவாகவே, 21 நாட்கள் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்துவந்தால், அதுவே பழக்கமாகிவிடும் என்கிறது மனோதத்துவம். 21 நாட்கள் காலையில் 5 மணிக்கு எழுந்தால், பின்னர் 5 மணிக்கு விழிப்பு வந்துவிடும் என்கிறார்கள். காலை உணவை 21 நாட்கள் 8 மணிக்குச் சாப்பிட்டால், 22-ம் நாளில் இருந்து காலை 8 மணிக்கு கபகபவென பசிக்கத் தொடங்கிவிடும் என்கிறார்கள்.

‘வீட்லேருந்து போன் வந்துச்சு சார். ஒய்ஃபுக்கு உடம்பு சரியில்லையாம்’ , ‘ஸ்கூல்லேருந்து போன்.. வேன் ரிப்பேராம். பசங்களை கூட்டிட்டுப் போயிருங்க’, ‘ஊர்லேருந்து வந்த அத்தை ஊருக்குக் கிளம்புறாங்க’, ஊர்லேருந்து மாமா வர்றாரு’ என்றெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிப் பழக்கப்பட்டவர்கள், இந்த 21 நாட்களும் அப்படியெல்லாம் பொய் சொல்லத் தேவையே இல்லாத நிலையாக அமைந்துள்ளது.

இந்த நாட்களை... கரோனா ஊரடங்கு நாட்களைப் பயன்படுத்திக்கொள்வோம். பழக்கமாக்கிக் கொள்வோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த நிலையெல்லாம் கடந்து, பொய்யற்ற வாழ்க்கையை வாழ்வோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 mins ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்