எப்படி? இப்படி!- 14: அமிலக் குளியல்!

By பட்டுக்கோட்டை பிரபாகர்

லண்டனில் மேடம் டுஸாட்ஸ் மெழுகுச் சிலை காட்சியகத்தில் உலகம் முழுவதும் பிரபலமான பிரமுகர்களின் சிலைகளை வைத் திருக்கிறார்கள். எதிர்மறை செயல்களால் பிரபலமானவர்களின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில் அங்கே சிலை யாக நிற்கும் ஒருவன் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹேக்.

அப்படி என்ன செய்தான் அவன்?

ஹேக்குக்கு இரக்கம் என்றால் பொருள் தெரியாது. பாறாங்கல் நெஞ் சன். பணத்துக்காக எதுவும் செய்வான். உச்சமான குற்றமான கொலையை சர்வ சாதாரணமாக செய்தவன். எத்தனை? 9 கொலைகள். தடயம் எதுவும் இல்லாமல் சாமர்த்தியமாக செய்தவன், கடைசியில் ஒரு சிறு தவறினால் மாட்டிக் கொண்டான்.

ஹேக் அதிகம் படிக்காதவன். பலவிதமான வேலைகள் செய்தான். பணம் கையாடல் செய்து மாட்டி பல முறை சிறைக்குச் சென்று திரும்பியவன். விடுதலையானதும் ஊரை மாற்றிக் கொள்வான். ஆனான், திருட்டை விடமாட்டான்.

ஹேக் தலைநகர் லண்டனுக்கு வந்து சேர்ந்தான். ஒதுக்குப்புறமாக வீடு எடுத்துத் தங்கினான். முன்பகுதியில் ஒரு மெக்கானிக் கடை வைத்துக் கொண்டான். அதில் வந்த வரு மானம் ஆடம்பரச் செலவுகளுக்கு போதவில்லை. பெரிய தொகையை பார்க்க வழி யோசித்தான்.

1943-ல் மேக்ஸ்வான் என்கிற பணக்காரனின் நட்பு கிடைத்தது. அவன் லண்டனில் தனி வீட்டில் தங்கியிருக்க, அவனுடைய பெற்றோர் வெளியூரில் இருந்தார்கள். ஹேக் மேக்ஸ்வானிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பழகி னான்.

ஒரு கொலைக் குற்றத்தில் கொலை செய்யப்பட்ட மனிதனின் உடல் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் குற்றவாளியைத் தண்டிக்க முடியாது என்று சட்டம் இருப்பதைத் தெரிந்து கொண்டான். ஒரு துண்டு எலும்புகூட காவல்துறைக்குக் கிடைக்காமல் செய்ய முடியுமா என்று யோசித்தான்.

கடைக்குச் சென்று கொஞ்சம் கந்தக அமிலம் வாங்கி வந்தான். ஒரு எலியைக் கொன்று, அந்த அமிலத்தில் போட்டு கவனித்தான். 30 நிமிடங்களில் அந்த எலி முற்றிலும் கரைந்து கூழாகியது. அதுதான் திட்டம் என்று தீர்மானித்தான்.

ஓர் இரவில் மேக்ஸ்வானை தனது வீட்டுக்கு வரவழைத்தான். திடீரென்று அவன் கழுத்தை நெரித்தான். மேக்ஸ் வான் இறந்ததும், அவன் உடலை 40 கேலன் கந்தக அமிலம் நிரப்பப்பட்ட தொட்டியில் தூக்கிப் போட்டான். மறுநாள் சோதித்துப் பார்த்தான். அந்த உடல் முழுக்க கரைந்து சதை, எலும்பு எல்லாம் கூழாக மாறியிருந்தது. அந்த சதைக் கூழை பாதாளச் சாக்கடையில் கொட்டிவிட்டான்.

மேக்ஸ்வானின் வீட்டுக்குப் போய் தங்கிக்கொண்டு அவனுடைய பெற் றோருக்குத் தகவல் கொடுத்தான். மேக்ஸ்வான் போருக்குச் செல்வதைத் தவிர்க்க, தலைமறைவாகச் செல்வ தாக தன்னிடம் சொல்லிவிட்டுப் போயி ருப்பதாக சொன்னான்.

மேக்ஸ்வானின் உடைமைகளை எல்லாம் விற்று பணமாக்கிக் கொண் டான். அந்த வீட்டையும் போலிப் பத்திரங்கள் தயாரித்து தன் பெயருக்கு மாற்றி விற்கும் முயற்சியில் இருந்த போது பெற்றோருக்கு இவன் மேல் சந்தேகம் வந்தது.

அதை உணர்ந்த ஹேக், மேக்ஸ் வானைப் பற்றிய தகவல் தருவதாகச் சொல்லி இருவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்தான். இருவரையும் மண்டை யில் தாக்கி கொலை செய்தான். அவர்களின் உடல்களையும் அமிலத் தொட்டியில் போட்டு கரைத்து, சாக்கடையில் கொட்டிவிட்டான்.

மேக்ஸ்வானின் வீட்டை விற்று பணமாக்கிக் கொண்டு சீட்டாட்டம், உல்லாசம் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். மூன்று கொலை களைப் பற்றியும் உலகம் அறியவில்லை. மேக்ஸ்வானின் உறவினர்கள் அவர்கள் எங்கோ வாழ்வதாக நினைத்தார்கள்.

ஐந்து வருட உல்லாச வாழ்க்கையில் பணம் எல்லாம் தீர்ந்துவிட, 1948-ல் அடுத்து இவன் பார்வையில் விழுந்தவர் டாக்டர் யஹனிர்சன். டாக்டரும் அவர் மனைவி ரோஸும் ஒரு கிளப்பில் அறிமுகமானார்கள். டாக்டருக்கு ஒரு வீடு விற்க வேண்டியிருந்தது. தான் விற்றுத் தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டான் ஹேக். அது சம்பந்தமாக அவர் வீட்டுக்கு பல முறை சென்று நம்பிக்கையை வளர்த்தான்.

ஒருநாள் டாக்டரை மெக்கானிக் கடைக்கு வரவழைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். அடுத்து வழக்கம்போல அமிலக் குளியல்தான். டாக்டரின் மனைவிக்கு போன் செய்தான். தன்னைச் சந்திக்க வந்த டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாகச் சொன்னான். அவர் மனைவி ரோஸ் அலறிக்கொண்டு அங்கு வந்தாள். அவளையும் சுட்டான். அமிலத்தில் தூக்கிப் போட்டான். அவர்களின் வீட்டுப் பத்திரங்களை தன் பெயருக்கு மாற்றி விற்று பணமாக்கினான்.

அடுத்து வலையில் விழுந்தது கணவரை இழந்து தனியாக வாழ்ந்த ஆலிவ் டுராண்ட் என்கிற 69 வயது பெண்மணி. அவரிடம் செயற்கை நகங் கள் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வும், தன் தொழிலில் முதலீடு செய் யும்படியும் கேட்டுக் கொண்டான். அது பற்றிப் பேச தன் மெக்கானிக் கடைக்கு அழைத்தான்.

ஆலிவ் டுராண்ட்டும் அமிலத்தில் கரைந்தார். சாக்கடையில் கலந்தார். அவரின் உறவினர்கள் காவல்துறைக்குச் சென்றார்கள். ஹேக்குடன் ஆலிவ் பழகி வந்ததைப் பற்றி ஒருவர் சொல்ல, ஒரு அதிகாரி ஹேக் மேல் சந்தேகம் எதுவுமில்லாமல் ஒரு சாதாரண விசாரணைக்காகத்தான் அவனைத் தேடி வந்தார்.

இங்கேதான் ஹேக்கின் ஓர் அல்ப புத்தி… அவனை சறுக்கிவிட்டது. ஹேக் வீட்டில் அதிகாரியின் கைக்கு ஒரு லாண்டரி பில் கிடைத்தது. பெண்கள் அணியும் பெர்சியன் ஆட்டுத் தோலால் ஆன ஓவர் கோட்டுக்கான பில் அது. இறந்தபோது ஆலிவ் அணிந்திருந்தது. அந்தக் கோட்டின் மேல் ஆசைப்பட்டு அதை அமிலத்தில் போடாமல் ஹேக் எடுத்து வைத்து லாண்டரிக்குப் போட்டிருந்தான்.

அது போதாதா அதிகாரிக்கு? வீட்டை முற்றிலும் குடைந்தார். ஏற்கெனவே அவன் விற்ற சொத்துக்களின் பத்திரங்கள் கிடைத்தன. அவன் வீட்டின் சாக்கடையில் கொஞ்சம் கூழாக இருப்பதை கவனித்த அதிகாரி அதை எடுத்து சோதனைக்கு அனுப்பினார். மேலும் ஒரு மெட்டல் ஸ்பிரிங் கம்பியும் அங்கே கிடைத்தது.

அந்தக் கூழில் மூன்று வெவ்வேறு மனிதர்களின் பித்தப்பை கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்த மெட்டல் ஸ்பிரிங் செயற்கைப் பல்லை வாயில் பொருத்துவது. அது ஆலிவுக்கு தன்னால் பொருத்தப் பட்டதாக ஆலிவின் பல் மருத்துவர் சான்றளித்தார்.

கடுமையாக விசாரித்ததும், போலீஸ் கண்டுபிடித்த 6 கொலைகளைத் தவிர மேலும் 2 பெண்கள், ஒரு ஆண் என்று மொத்தம் 9 கொலைகளைத் தான் செய்ததாக ஹேக் ஒப்புக்கொண்டான்.

ஆனால், தன்னை சில குரல்கள் துரத்துவதாகவும், அந்தக் குரல்கள் கொலை செய்யச் சொன்னதாகவும், தனக்கு ரத்தம் தொடர்பான கனவுகள் அடிக்கடி வருமென்றும் கோர்ட்டில் சொன்னான். அவனைப் பரிசோதித்த மனநல மருத்துவர்கள் அவன் பொய் சொல்வதாகச் சொல்லவே, ஜூரிகள் அவனைக் குற்றவாளி என்று தீர்மானித்தார்கள். 1949-ம் வருடம் தூக்கிலிடப்பட்டான் ஹேக்.

‘அமிலக் குளியல் கொலைகள்’ என்று அப்போது இந்த வழக்கு மிகவும் பேசப்பட்டது. வழக்கு நடந்தபோது தீர்ப்புக்கு முன்பே ’மிர்ரர்’ பத்திரிகையில் ஹேக்கைக் குற்றவாளி என்று கட்டுரை எழுதியதால், அதன் ஆசிரியர் சில்வெஸ்டர் கைது செய்யப்பட்டு கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

இங்கிலாந்தின் குற்ற வரலாற்றில் தடயவியலின் உதவியால் தீர்ப்பளிக் கப்பட்டது இதுவே முதல் வழக்காகும். கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கிடைக்கவில்லை என்றாலும் சூழ்நிலைகளும், தடயங்களும் கொலை நடந்ததை உறுதி செய்தாலே குற்றவாளியைத் தண்டிக்க முடியும் என்று இந்த வழக்கு புதிய தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 1954-ல் சட்டத் திருத்த மும் செய்யப்பட்டது.

- வழக்குகள் தொடரும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.com

முந்தைய அத்தியாயம்: >எப்படி? இப்படி?- 13: இறந்தவர்கள் வாழ்கிறார்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்