’அந்தப் பேட்டில என்ன சொல்ல நினைச்சீங்க விசு சார்?’

’ஊரெங்கும் இதே பேச்சு’ என்றொரு வார்த்தையை மக்கள் பயன்படுத்துவார்கள். எனக்குத் தெரிந்து, அந்தப் படத்தைப் பற்றித்தான் எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘குடும்பத்தோட பாக்கலாம்’ என்று பார்த்தவர்கள் சொல்லிப் பூரித்தார்கள். ‘மனசு விட்டு சிரிச்சிட்டு வரலாம்’ என்று படத்தில் உள்ள காமெடிக் காட்சிகளை, சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.

‘நான் மூணுதடவை பாத்துட்டேன்’ என்று பெருமையாய் சொல்லி காலர்தூக்கிவிட்டுக்கொண்டவர்களும் உண்டு. ‘நாலஞ்சு தடவை போயும் டிக்கெட் கிடைக்கலியேப்பா. ஹவுஸ்புல் போர்டுதான் பாத்துட்டுத் திரும்பினோம்’ என்று வருந்தியவர்களும் உண்டு. ‘நாரதர் நாயுடு’ என்று அந்தப் படத்தின் கேரக்டர் பெயரைச் சொல்லி எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டார்கள்.

முதல் இயக்கத்திலேயே,மொத்த திரையுலகையும் தமிழகத்தையும் தன்பக்கம் திருப்பிய நாரதர் நாயுடு... இயக்குநர் விசு.
நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் விசு. இயக்குநர் பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்படிப் பணியாற்றுகிற போதே, விசுவின் எழுத்தாற்றலை புரிந்து உணர்ந்த பாலசந்தர், ‘தில்லுமுல்லு’, ‘நெற்றிக்கண்’ முதலான படங்களின் வசனங்களை எழுதப் பணித்தார்.

வசனகர்த்தாவாக பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான் இவரை நடிகராக அறிமுகப்படுத்தினார். ‘குடும்பம் ஒரு கதம்பம்’தான் விசு நடித்த முதல் படம். ‘மணல் கயிறு’, ‘டெளரி கல்யாணம்’, ‘சிதம்பர ரகசியம்’ என்று வரிசையாக இவர் எடுத்த படங்கள் அனைத்துமே குடும்பப்பாங்காகவும் அதேசமயம் சொல்லும்விதத்தில் காமெடியாகவும் இருந்தது, மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது.

ஏவிஎம் பட்டறையில், அதற்கென ஆஸ்தான இயக்குநர்கள் உண்டு. பாக்யராஜ், பாரதிராஜா, விசு ஆகிய மூவரும்தான் ஏவிஎம்மில் அப்போது படமெடுத்து ஆஸ்தானத்தையும் கடந்து இயக்கியவர்கள். அதிலும் விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ அடைந்த வெற்றி, இன்றைய தலைமுறையின் மனதிலும் இடம்பிடித்திருப்பதுதான் மிகப்பெரிய சாதனை. மத்திய அரசின் ‘தங்கத்தாமரை’ விருது பெற்ற படம் இது.

நடிப்பு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, விசுவின் எழுத்துக்கு தனி மவுசு எப்போதுமே உண்டு. மற்ற இயக்குநர்களின் படத்தில் நடித்தாலும் கூட, அந்த வசனங்களில், விசு முத்திரை தேடுவார்கள் ரசிகர்கள்.

எண்பதுகளில், மக்களின் மனம் கவர்ந்த இயக்குநராகவும் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர்களில் முக்கியமானவர் விசு. அன்றைக்கு தியேட்டர்களுக்கு குடும்பசகிதமாக வரச் செய்ததில் விசுவுக்கும் அவரின் படங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.

’திருமதி ஒரு வெகுமதி’, ‘வரவு நல்ல உறவு’, வேடிக்கை என் வாடிக்கை’, ‘பட்டுகோட்டை பெரியப்பா’ என இவரின் தலைப்பின் ரைமிங்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிக்காகத்தான் இருந்தது. தமிழ்த்திரையில், விசுவுக்கான இடம் என்பதை பின்னர் வந்த எவரும் தொடவில்லை என்பதே உண்மை.

கடந்த 2019ம் வருடத்தில், ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரிடம் ‘இந்து தமிழ் திசை’ யுடியூப் சேனலுக்கு பேட்டி கேட்டு போன் செய்தேன். ‘ஒரு அரைமணி நேரம் கழிச்சு கூப்பிடட்டுமா சார்’ என்றார். அதன்படியே மிகச்சரியாக அரைமணி நேரத்திற்குள் அழைத்தார். ‘நாளைக்கு 11 மணி போல வாங்க. வீட்டு அட்ரஸை வாட்ஸ் அப்ல அனுப்பறேன்’ என்று சொன்னார். அனுப்பியும் வைத்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பேட்டியில், கொஞ்சம் கூட அயர்ச்சியுறவே இல்லை.

‘வயசு 75 ஆச்சு சார். வாரத்துக்கு மூணு டயாலிஸிஸ் பண்ணிட்டிருக்கேன். அதுக்காகத்தான் இந்த ஏரியால வீடு வாங்கி வந்தேன். ’சம்சாரம் அது மின்சாரம் 2’ கதை ரெடியா இருக்கு. படத்தோட மொத்த ஸ்கிரிப்ட்டும் வசனமும் எழுதி தயாரா வைச்சிருக்கேன். ஆனா, தயாரிப்பாளர்தான் கிடைக்கலை சார்’ என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.

அந்தப் பேட்டிக்குப் பின்னர், வாட்ஸ் அப்பில், நலம் விசாரித்து மெசேஜ் அனுப்புவார். நாட்டுநடப்பு குறித்து கருத்து தெரிவிப்பார். பேட்டிகளைப் பார்த்துவிட்டு, பாராட்டுவார்.

கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு, ‘இனிமேல் எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவேண்டாம். பார்வை மங்கிக்கொண்டே வருகிறது. படிக்கமுடியவில்லை’ என்று அனுப்பியிருந்தார். அடுத்து, இரண்டு நாள் கழித்து போன். ‘ராம்ஜி சார், நல்லாருக்கீங்களா? ஒரு முழுப்பேட்டி எடுப்போமா?’ என்று கேட்டார். ‘சரி சார்’ என்றேன். ‘எப்போ எடுக்கலாம்?’ என்றார். ‘நீங்க சொல்லுங்க சார்’ என்றேன். ‘சீக்கிரமே எடுத்துருவோம். சொல்றேன் சார்’ என்றார்.

அப்போது கூட அவரின் பேச்சில் எந்தத் தளர்ச்சியுமில்லை. வாரத்துக்கு மூன்று முறை டயாலிஸிஸ் செய்கிற உடலாக எந்த அயர்ச்சியுமின்றிதான் உற்சாகத்துடன் பேசினார்.

‘கரோனா ஊரடங்கு’ நாளில்... தன் பேச்சையும் மூச்சையும் அடக்கிக்கொண்டுவிட்டார் விசு. சொல்ல விரும்பிய பேட்டியை தராமலேயே போய்விட்டீர்களே விசு சார். என்ன சொல்ல நினைத்தீர்கள் விசு சார்?

’இந்து தமிழ் திசை’க்கு விசு அளித்த வீடியோ பேட்டி:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE