ஆவலை வீசுவோம் 10 - நம்மை கண்காணிக்காத தேடியந்திரம்

By சைபர் சிம்மன்

'டக்டக்கோ'வை (DuckDuckGo) உங்களுக்குத் தெரியுமா? அந்த தேடியந்திரத்தை பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா?

இணைய உலகில் டக்டக்கோவின் செல்வாக்கு அதிகரித்து வருவதும், இணையவாசிகள் பலரும் மெல்ல டக்டக்கோவுக்கு மாறி வருவதும் தெரியுமா?

புள்ளிவிவரங்கள் இதை கச்சிதமாக உணர்த்துகின்றன. டக்டக்கோ தினந்தோறும் நிறைவேற்றித்தரும் தேடல் கோரிக்கைகள் அண்மையில் ஒரு கோடியை கடந்திருக்கிறது. தேடியந்திர முதல்வனான கூகுளுடன் ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை ஒன்றும் இல்லைதான். ஆனால் ஒற்றை மனிதரால் துவக்கப்பட்ட டக்டக்கோ தேடியந்திரத்துக்கு இது ஒரு மைல்கல். நிச்சயம் டக்டக்கோ வளர்ந்திருக்கிறது.

தனியுரிமைக்கு ஜே!

டக்டக்கோ பற்றி விவரிக்க துவங்கிவிட்டு, அதன் ஆதார பலமான தனியுரிமை காப்பு பற்றி குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. ஏனெனில் இணையவாசிகளின் தனியுரிமையை மதித்து காப்பாற்றுவது அதன் தனித்தன்மையாக இருக்கிறது. இந்த அம்சமே அதற்கு கூகுளுக்கு மாற்று தேடியந்திரம் எனும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

'உங்களை பின்தொடராத தேடியந்திரம்' என டக்டக்கோ தன்னை கம்பீரமாக குறிப்பிடுகிறது. அதன் ஆதாரவாளர்களும் இணையவாசிகளின் தேடல் சுவட்டை பின்தொடராமல் இருக்கும் தன்மைக்காகவே டக்டக்கோவை தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகின்றனர். இதன் காரணமாக வருங்காலத்தில் மேலும் பலர் டக்டக்கோவிற்கு மாறலாம்.

எப்படிப் பார்த்தாலும் கூகுளால் டக்டக்கோ பெருமைப்பட்டுக்கொள்வதை தன்னால் செய்ய முடியும் என உறுதி அளிக்க முடியாது. ஏனெனில் கூகுளின் வர்த்தக சாம்ராஜ்யம் இணையவாசிகளின் தேடலை பின் தொடர்வதிலும் அதற்கேற்ப விளம்பரங்களை அளித்து ஈட்டும் வருவாய் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. எனவே கூகுள் இணையவாசிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குறித்து வைத்துக்கொள்கிறது. இணையவாசிகளின் சரித்திரமே கூகுளுக்கு தெரியும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற தேடல் முடிவுகளையும் சேவைகளையும் அளிக்க இது அவசியம் என்று கூகுள் இதற்கு காரணம் சொல்கிறது.

ஸ்னோடனுக்கு பின்..

ஆனால், இந்த விவரம் சேகரிப்பு இணையவாசிகளின் தனியுரிமையை மீறுவதாக இருக்கிறது என்பதும், இது கண்காணிப்புக்கு வித்திடலாம் என்பதும் இணைய உலகில் கவலையோடு விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.

இது கூகுள் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல; ஃபேஸ்புக் உள்ளிட்ட பல இணைய நிறுவனங்கள் மீதும் சொல்லப்படும் புகார் இது. உண்மையில் இது இணைய யுகத்தின் பிரச்சனை. இணையவாசிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதில் உள்ள கேள்விகள் மற்றும் பாதிப்பு குறித்து பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, இணையவாசிகள் தங்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை அறியாமல் இருக்கும் நிலையில் அவர்கள் என்ன தேடுகின்றனர்? எப்படி தேடுகின்றனர்? என்பது உள்ளிட்ட எல்லா விவரங்களும் திரட்டப்படுகின்றன என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.

ஒருவர் அறியாத நிலையில் அவரைப்பற்றிய தகவல்கள் குறிப்பெடுக்கப்படுவது சரியா? என்று யோசித்து பார்த்துக்கொள்ளுங்கள்!

ஆனால், தேட வருபவர்களின் எந்த ஒரு தகவலையும் சேமிப்பதோ, சேகரிப்பதோ இல்லை என்பது டக்டக்கோவின் கொள்கையாக இருக்கிறது. அதற்காக அது பாராட்டப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தனியுரிமை காவலராக அறியப்படும் அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்நோடன் இணையம் மூலம் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ அமைப்பு உளவு பார்ப்பதை அம்பலப்படுத்திய பிறகு டக்டக்கோவின் இந்த தன்மை பரவலாக கவனத்தை ஈர்த்தது. உண்மையில் ஸ்னோடன் விவகாரத்திற்கு பிறகு தான் டக்டக்கோ வெகுஜன நோக்கில் பிரபலமானது.

தேடல் எப்படி?

எல்லாம் சரி, டக்டக்கோவின் கொள்கை பாராட்டத்தக்கதாகவே இருக்கட்டும்- அதன் தேடல் எப்படி? இணையவாசிகளை பின் தொடர்வதில்லை என்று சொல்வதற்காக மட்டுமே அதை பயன்படுத்த முடியுமா? தேடியந்திரமாக அதன் தனித்தன்மை என்ன? அதன் தேடல் செயல்பாடுகள் எந்த அளவுக்கு பயனுள்ளது?

இந்தக் கேள்விகளுக்கான பதில் டக்டக்கோ தன்னளவில் சிறந்த தேடல் அனுபவத்தை தரக்கூடியது என்பதே. அதனால் தான் நிலைத்து நிற்கிறது. தனியுரிமை என்பது அதற்கு கவனத்தை ஏற்படுத்தி தரும் போனசாக இருக்கிறது. மேலும் கூகுளுக்கு மாற்று என்னும் அந்தஸ்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

ஆனால், தேடல் உத்தி திருப்திகரமாக இல்லை என்றால், இந்தக் கொள்கை அறிவிப்பு வெறும் கோஷமாக தான் இருந்திருக்கும்.

அவ்வாறு இல்லாமல் டக்டக்கோவிடம் கேட்டதை தேடித்தருவதற்கான அருமையான உத்தி இருக்கவே செய்தது.

டக் டக் கோ என்னும் சற்றே விநோதமான பெயருடனும் அதற்கேற்ற நகைச்சுவையான வாத்து லோகோவுடனும் 2008‍-ல் அறிமுகமான இந்த தேடிய‌ந்திரம், கூகுளை விட சிக்க‌ல் இல்லாத தேட‌ல் பக்க‌ம், விள‌ம்பர இடையூறு இல்லாத தேட‌ல் முடிவுக‌ள், சிற‌ப்பான குறுக்கு வ‌ழிக‌ள் என பல்வேறு அம்சங்களை தனது சிறப்புகளாக பட்டியலிட்டுக்கொண்டது. இவற்றோடு பூஜ்ய கிளிக் என்னும் நெத்திய‌டியான வ‌சதியையும் பெற்றிருந்தது. ஜீரோ கிளிக் என குறிப்பிட‌ப்ப‌டும் இந்த வ‌ச‌தியை கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து என வருணிக்கலாம். இந்த வசதி தான் இப்போது உடனடி பதில்களாக பரிணமித்திருக்கிறது.

உடனடி தேடல்

அதெப்ப‌டி கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து சாத்திய‌ம்?

வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம். கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என க‌ட்ட‌ளையிடுவ‌து போல என்ட‌ர் த‌ட்டுவோம் அல்ல‌வா? அத‌ன் பிற‌கு தேட‌ல் முடிவுக‌ள் வ‌ந்து நிற்கும் அல்ல‌வா? அதில் ஏதாவ‌து ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவையான த‌க‌வ‌ல்க‌ளை பெற முடியும். ஆனால் ட‌க்ட‌க்கோ தேடிய‌ந்திர‌மோ கிளிக் செய்த‌துமே தேட‌ப்ப‌டும் ப‌த‌ம் தொட‌ர்பான அறிமுக குறிப்புக‌ளாக சில த‌க‌வ‌ல்களை தானாகவே முன்வைக்கிறது.

இந்த குறிப்புக‌ள் மிக‌ச்ச‌ரியாக தேட‌ப்ப‌டும் பொருள் குறித்த ச‌ரியான அறிமுக‌மாக அமைந்து விடுகிற‌து. உதாரண‌த்திற்கு பிரெஞ்சு ஒப‌ன் என் தேடினால் பாரிசில் மே மாத‌ம் துவ‌ங்கி ந‌டைபெறும் டென்னிஸ் போட்டி என்ற அறிமுக‌ம் கிடைக்கிற‌து. பல நேர‌ஙக‌ளில் தேட‌ப்ப‌டும் பொருளை புரிந்துகொள்ள இந்த அறிமுக‌ம் உத‌வ‌லாம். சில நேர‌ங்க‌ளில் இந்த அறிமுக‌மே கூட போதுமாக இருக்க‌லாம். புதிய பொருள் குறித்து மிக அவ‌ச‌ர‌மாக தேடும்போது அறிமுக குறிப்புகள் நிச்ச‌ய‌ம் ப‌யனுள்ள‌தாக இருக்கும்.

விக்கிபீடியா போன்ற த‌ள‌ங்க‌ளில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்டாலும் கூட இந்த அறிமுக‌ம் ப‌ய‌னுள்ள‌தாக‌வே இருக்கிற‌து. விரிவான தேட‌ல் தேவை என்றால் ப‌க்க‌வாட்டில் உள்ள வ‌ச‌தியை துணைக்கு அழைத்து யூடியூப் உடபட பல இட‌ங்க‌ளில் தேட முடியும். அதோடு தேடல் பட்டியலில் பிரஞ்சு ஓபன் போட்டிக்கான அதிகாரபூர்வ தளமே முதலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரெஞ்சு ஓபன் போட்டி தொடர்பாக தகவலகளை தரக்கூடிய இணையதளங்கள் இடம் பெற்றுள்ளது. தேடியவரின் நோக்கம் பிரெஞ்சு ஓபன் என்றால், இந்த அறிமுகமும் தேடல் பட்டியலும் தகவல் விருந்தாக அமைந்திருக்கும்.

கூகுள் பற்றி...

இந்த அறிமுக வசதியை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இதில் கூகுள் என்ற பதத்தை டைப் செய்து பார்க்க வேண்டும். கூகுல் பற்றி தேடும்போது, கூகுள் என்றால் பல அந்த‌த‌ம் உண்டு உங்க‌ளுக்கு எது வேண்டும் என்று கேட்க‌ப்படும். அத‌ன் கீழேயே கூகுள் என்றால் தேடிய‌ந்திர‌ம் என்ற அறிமுக‌மும் இட‌ம் பெறுகிற‌து. அதேபோல கூகுள் என்றால் வினைச்சொல் என்ற அறிமுகமும் இடம் பெறுகிறது. இதன் விரிவாக்க பகுதியை கிளிக் செய்தால் கூகுள் தொடர்பான வேறு சில விளக்கங்களும் அதற்கான இணைப்புகளும் இடம் பெறுகிறது. கூகில்ஸ் என்றால் கண்ணாடி, இதே பெயரில் ஒரு சித்திரக்கதை தொடரும் உண்டு, கூக்லி என்பது கிரிக்கெட்டில் வரும் பந்து வீசும் உத்தி உள்ளிட்ட விளக்கங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

அதே போல் தமிழ் எனும் வார்த்தையை டைப் செய்து தேடினால், தமிழ் தொடர்பான தேடல் முடிவுகள் பட்டியலிடப்படுவதோடு அதற்கு மேல், தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழ் சினிமா, தமிழ் எழுத்துக்கள், தமிழ் மக்கள் என தலைப்புகளில் தகவல்கள் வரிசையாக இடம்பெறுகின்றன. தமிழ் ஈழம், வெளிநாட்டு வாழ் தமிழர்கள், தமிழ் நாட்காட்டி, தமிழ் இலக்கியம் என இந்தப் பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு குறிசொல் தொடர்பாகவும் இது போன்ற அறிமுக பட்டியலை பார்க்கலாம்.

ஆக, டக் டக் கோவின் அறிமுகம் இணைய தேடலை சுலபமாக்குவதோடு செழுமையாகவும் இருக்கிறது.வியக்க வைக்கும் இந்த வசதியை தான் சில சில ஆண்டுகள் கழித்து கூகுள் ‘நாலெட்ஜ் கிராப்' என்னும் பெயரில் தன் பங்கிற்கு அறிமுகம் செய்தது.

அறிமுக குறிப்பின் கீழ் இடம்பெறும் தேடல் பட்டியலில் கூகுள் தேடியந்திரத்துக்கான இணைப்பில் துவங்கி கூகிள் தொடர்பான இணையபக்கங்கள் வந்து நிற்கின்றன.முதல் பக்கத்திலேயே கிட்டத்தட்ட கூகுல் தொடர்பான பெரும்பாலான இணையபக்கங்களை ‘டக் டக் கோ' பட்டியலிட்டு விடுகிறது. சபாஷ் போட வைக்கும் அனுபவம் இது.

சச்சின் தேடல்

சச்சின் என தேடிப்பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் பெயரை முதலில் குறிப்பிட்டு, தொடர்ந்து சச்சின் பைலெட், சச்சின் நடிகர் ஆகியோர் பற்றிய அறிமுக குறிப்புகளை தருகிறது. உங்கள் தேவை சச்சின் டெண்டுல்கர் என்றால், அவரைப்பற்றிய தேடல் பட்டியலை பார்க்கலாம். சச்சினின் பேஸ்புக் பக்கம் ,ட்விட்டர் முகவரி, வீடியோக்கள், சாதனைகள் என எல்லாவற்றையும் இந்த பட்டியலில் காணலாம். அநேகமாக முதல் பக்கத்தை தாண்டி அடுத்த பக்கத்திற்கு போக வேண்டிய தேவையே இருக்காது. அந்த அளவுக்கு தேடல் பட்டியல் சிறந்ததாக இருக்கிறது.

இந்த அம்ச‌த்திற்காக நிச்ச‌ய‌ம் இதை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்க்க‌லாம். இதைத் த‌விர முகப்பு ப‌க்கமும் கூகுள் முகப்பு பக்கம் போலவே எளிமையாக இருக்கிறது. சொல்லப்போனால் கூகுளை விட இன்னும் தெளிவாக‌வே இருக்கிற‌து என சொல்லலாம். நடு நாயகமாக அழகான வாத்து லோகோ அதன் கிழே தேடல் கட்டம் என முகப்பு பக்கம் தெளிவான தேடலுக்கு அழைப்பு விடுக்கிறது.

ஒரு வளரும் தேடியந்திரத்திற்கு அடையாளமாக டக்டக்கோ,தனது சிறப்பம்சமான உடனடி வசதியை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தியிருக்கிறது. விக்கிபீடியா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மூல இடங்களில் இருந்து தகவல்களை தேடி இணையவாசிகளின் தேடலுக்கு ஏற்ப முன்வைக்கிறது.

இடங்கள், வரைபடங்கள், செய்திகள், சமையல் குறிப்புகள் என பலவகையான தகவல்களை இப்படி உடனடியாக பெற முடியும். கணக்குகள், விமான நேரங்கள், எதுகை மோனை வார்த்தைகள் என மேலும் பல தகவல்களையும் பெற முடியும்.

உடனடி பதில்கள் வசதியில் மேலும் சிறப்பு என்ன என்றால் இதில் இணையவாசிகளும் பங்கேற்று ஆலோசனை தெரிவிக்கலாம் என்பது தான். அந்த வகையில் ஓபன் சோர்ஸ் முறையில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வசதி தவிர, குறிப்பிட்ட எந்த இணையதளத்திலும் அந்த தளத்திற்கு செல்லாமலே டக்டக்கோ முகப்பு பக்கத்தில் இருந்தே தேடிப்பார்க்கலாம். இதற்காக தேடலுக்கான குறிச்சொல்லுக்கு அருகே ஆச்சர்யக்குறியை இடம்பெறச்செய்து தேவையான இணையதளத்தை டைப் செய்தால் போதும் அந்த தளத்தில் நேரடியாக தேடிப்பார்க்கலாம். உதாரணத்துக்கு புக்ஸ்! பிளிப்கார்ட் என டைப் செய்தால் நேரடியாக பிளிப்கார்ட் தளத்தில் தேடலாம்.

இந்த வசதிக்காகவே டக்டக்கோவுக்கு மாறலாம் என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

எல்லாம் சரி, டக்டக்கோ எந்த அளவுக்கு முழுமையான தேடியந்திரம்?

இந்த கேள்விக்கான பதிலை புரிந்து கொள்ள இதன் தோற்றம் பற்றியும் அதன் நிறுவனர் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

டக்டக்கோ நதி மூலம்

டக்டக்கோ 2008 ம் ஆண்டு கேபிரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg) எனும் தனிமனிதரால் சிறிய அளவில் நிறுவப்பட்டது. இதை நிறுவிய போது வெயின்பர்கிற்கு கூகுளுக்கு மாற்று தேடியந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருக்கவில்லை. சொல்லப்போனால் அவர் ஒரு தேடியந்திரத்தை உருவாக்கவும் எண்ணியிருக்கவில்லை. இணைய தொழில்முனைவோரான அவர் அதற்கு முன்னர் தான் நேம்ஸ் டேட்டாபேஸ் எனும் தனது முந்தைய நிறுவனத்தை விற்றிருந்தார். அதன் பிறகு அவர் தனிப்பட்ட ஆர்வத்திலான திட்டங்களில் லயித்திருந்தார்.

தேடியந்திர முடிவுகளில் ஸ்பேம் என குறிப்பிடப்படும் பயனில்லாத முடிவுகளை நீக்குவது, விக்கிபீடியா சேவையை மேலும் சிறப்பாக பயன்படுத்துவது மற்றும் குறிப்பிட்ட பொருளை இணையத்தில் தேடும் போது அதற்கு பொருத்தமான முடிவுகளை பெறுவது ஆகிய மூன்று வெவ்வேறு முயற்சிகளில அவரது திட்டங்கள் அமைந்திருந்தன. இவற்றின் விளையாக மேம்பட்ட தேடல் முடிவுகளை உருவாக்கித்தருவதற்கான தேடியந்திரம் உருவானது. சிறுவயதில் தன்னை ஈர்த்த கதை பாத்திரம் பெயரை அதற்கு சூட்டினார். அது தான் டக்டக்கோ.

தேடல் நுட்பத்தை மேம்படுத்தி தரக்கூடிய தேடல் நுட்பம் இதன் பின்னே இருக்கிறது என்றாலும் இதனிடம் இணையத்தில் தேடல் மேற்கொள்வதற்கான தரவு பட்டியல் சொந்தமாக கிடையாது. இணையத்தில் உள்ள பல்வேறு தேடல் தரவு பட்டியலை பயன்படுத்தியே அது தனது சேவையை வழங்குகிறது. அந்த வகையில் இதை மூல தேடியந்திரம் என்று கூற முடியாது. இது ஹைப்ரீட் தேடியந்திரம் என வர்ணிக்கப்படுகிறது.

ஆனால், வளர்ச்சி அடைந்த நிலையில் இணையத்தில் உலாவி தரவுகளை சேகரிப்பதற்கான சொந்த சிலந்தியையும் இது உருவாக்கி உலாவ விட்டுருப்பதாக அதன் அறிமுக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தேடியந்திர சிலந்தியின் பெயர் டக்டக்பாட்.

மிக சிறிய அளவில் தனிமனித முயற்சியாக துவக்கப்பட்ட இந்த தேடியந்திரம் மாற்றுத் தேடியந்திரங்களில் குறிப்பிடத்தக்கதாக உருவானது. டக்டக்கோ அதனளவில் சிறந்த தேடியந்திரம் தான் என்றாலும் இணையவாசிகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதில்லை எனும் தனியுரிமை காக்கும் அம்சமே அதன் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அதுவே அதன் வளர்சிக்கும் வித்திட்டுள்ளது.

தேடியந்திர முகவரி:>https://duckduckgo.com/

தனியுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டக்டக்கோ அமைத்துள்ள இணையதளங்கள்:

>http://donttrack.us

>http://dontbubble.us

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 9 - 'ஒலி'மயமான தேடியந்திரம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

மேலும்