மனமே நலமா: 2- எங்கே செல்லும் இந்த போதை?

By பாரதி ஆனந்த்

(இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன. அவர்களின் கதைகளும் முழு ஒப்புதலுடனேயே பதிவு செய்யப்பட்டுள்ளன)

அது ஒரு போதை மறுவாழ்வு மையம். அங்கு செல்லும்போது பகல் 12 மணி இருக்கும். இரும்புப் பூட்டை நீக்கி காவலர் உள்ளே அழைத்துச் செல்ல ஓர் அறையில் போதனை வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அவர்களுக்கு ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால் எனது திடீர் வருகையை அவர்கள் அசவுகரியமாக உணரவில்லை. ஆனால், அங்கு சிறுவர்கள் 4 பேர் அமர்ந்திருந்ததைப் பார்த்து எனக்கு தூக்கிவாரிப் போட்டது. போதையில் இருந்து விடுபட முடியாமல் அந்த பிஞ்சுக் கண்கள் கிறங்குவதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அந்த வேதனைக் கதைகளில் சில..

"என் பெயர் எக்ஸ். என் வயசு 15. அப்பா இல்ல. அம்மா, ஒரு அண்ணன், ஒரு தம்பி. நான் 8 வயசில் இருந்தே ஃபர்னிச்சர் கடையில் வேலை செய்றேன். அங்குதான் எனக்கு சொல்யூஷன் பழக்கமாச்சு. அப்புறம் கஞ்சா, சிகரெட், தண்ணி எல்லாம் வந்துடுச்சு" என்று காதுகள் கூட ஆச்சர்யப்படும் அளவுக்கு போதைப் பழக்கங்களை அடுக்கினான் அச்சிறுவன்.

ஒயிட்னர், தின்னர் போன்ற சொல்யூஷன் முகர்தல் என்பது தமிழகத்தில் தற்போது சிறார் மத்தியில் பரவலாக இருக்கும் போதைப்பழக்கம். விலை குறைவு என்பதால் பள்ளிக்குச் செல்லாத சிறார், வேலைக்குச் செல்லும் சிறார் இதற்கு அதிகம் அடிமையாகிவிடுகின்றனர்.

வசதியற்ற சிறுவர்கள் மட்டும்தான் இரையாகிறார்களா என்றால்? இல்லை. எல்லாச் சிறுவர்களும் இதற்கு அடிமையாகத்தான் செய்கின்றனர். போதைக்கு பாலினம், வாழ்விடம், வசதி வாய்ப்பு, வயது வித்தியாசம், கல்வியறிவு என எதுவுமே கிடையாது என்பதற்கு சாட்சி 18 வயதான ராஜா.

மெரைன் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவருக்கு விடுதி வாசம் கூடவே கெட்ட சகவாசம். விளைவு, வீக் எண்ட் பார்ட்டியில் ஆரம்பித்து அடிக்கடி மதுக்கடைக்குச் செல்ல வைத்திருக்கிறது. இதனால் நண்பர்களுடன் தகராறு, அடிதடி சிறார் நீதிமன்றம் என வாழ்க்கையில் புயல் வீச இங்கிருந்து செல்லும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு புது ஆளாகச் செல்வேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

ராஜ்குமாருக்கு 50 வயது. நல்ல வேலை. ஆனால், அவரின் போதை 'விரல்வழி பூதம்'. இதுவரை இதற்குக்கூட மறுவாழ்வு மையத்துக்கு வருவார்களா என நாம் அதிரும் அளவுக்கு இருந்தது. ஆன்லைன் ரம்மி போதையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கில் கடன்பட்டு அதனால் மன அழுத்தம் என அடுக்கடுக்கான பிரச்சினைகளுடன் அதிலிருந்து விடுபடுவதற்காக வந்திருந்த அவரின் கதை

"இந்த ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய உங்களால் ஏதாவது செய்ய முடியுமா? இன்னிக்கு என் குடும்பம் இப்படி நிற்க ஆன்லைன் ரம்மி தான் காரணம். இன்னொரு குடும்பம் இப்படி ஆகிவிடக் கூடாது" என கண்களில் கண்ணீர் மல்க, கட்டுப்படுத்த முடியாமல் பேசிய அவருக்கு மன அழுத்தத்துக்கான மாத்திரைகளும் சேர்த்தே வழங்கப்படுகின்றன.

தையல் தொழிலாளி ராமுவோ மருத்துவரிடம் எனக்கு இன்னும் காதில் குரல் கேட்கிறது என்றார். அவர் தீவிர குடிநோயாளி. அவருக்கு ஆடிட்டரி ஹேலூஷினேசன் (Auditory Hallucination- காதில் பேச்சுக்குரல் கேட்டல்) ஏற்பட்டிருக்கிறது.

முற்றிய குடி நோயாளிகளுக்கு மனச்சிதைவு ஏற்படும்போது விஷுவல் ஹேலுசினேஷன் (Visual Hallucination- ஏதேனும் உருவம் கண்ணுக்குத் தெரிதல்), ஆல்ஃபேக்டரி ஹேலுசினேஷன் (Olfactory Hallucination- நல்ல அல்லது அருவருப்பான வாசனைகளை உணர்தல்), டேக்டைல் ஹேலுசினேஷன் (Tactile Hallucination- யாரோ தன்னைத் தொடுவதுபோலவோ அல்லது ஏதோ தன் மீது ஊர்வது போலவோ ஏற்படும் மாயத் தோற்றம்) ஏற்படும் என்றார் மருத்துவர்.

இவர்கள் எல்லோரும் போதை, குடி நோயாளிகள் என்றால் இவர்களுடன் எல்லாம் சரியாகிவிடாதா என்ற ஏக்கத்தில் அட்டண்டராக அமர்ந்திருந்த பலரும் 'சக நோயாளிகள்' என்றார் மருத்துவர். சக நோயாளிகளா? என்ற கேள்விக்கு குடி நோயாளிகள் இருக்கும் வீட்டில் அவரின் பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகள் நிச்சயமாக மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பர். சமூக நெருக்கடி, பொருளாதாரச் சூழல் போன்றவை அவர்களைத் தூக்கம் தொலைக்க வைத்து மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் தான் சகநோயாளிகள் என்று விளக்கமளித்தார்.

அந்த மையத்தில், 26 வயதே ஆன முல்லை தனது கணவர் எப்படியும் குடி நோயில் இருந்து மீள்வார் என்ற நம்பிக்கையை தெரிவித்தபோதே இங்கு வந்த பிறகுதான் நான் நிம்மதியா தூங்குகிறேன் என்றார். முல்லைக்கு, மன அழுத்தத்தக்கான மாத்திரைகளை மருத்துவர்கள் அவர்கள் கண்காணிப்பில் கொடுத்துவருகின்றனர்.

போதைவாசிகள், குடிநோயாளிகள், ஆன்லைன் சூதாட்டக்காரர்கள், சக நோயாளிகள் என நான் மேலே சொன்ன அனைவரும் இருந்த இடம் 'திரிசூல்' - மது மற்றும் போதை நோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் (Trishul – Integrated Rehabilitation Centre for Addicts,).

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் இது அமைந்துள்ளது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்த மையத்தை நடத்தி வருகிறது. மனநல மருத்துவர் சி.ராமசுப்ரமணியம் தலைமையில் இந்த மையம் இயங்குகிறது.

போதை வஸ்துக்களின் தாக்கத்தை மாற்று மருந்துகளால் குறைத்தல், (Medically assisted withdrawal detoxification programme), அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive behavioural therapy- CBT), குடும்ப மனநல ஆலோசனை (Family therapy), மனநல மருந்துகள் (Anti-psychotic medication), போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம், அனுபவமிக்க மருத்துவர்களின் சேவை, மதுபோதை பாதிப்பிலிருந்து வெளிவர சிறப்பு மனநல ஆலோசனை, திறமைமிக்க செவிலியர்கள் சேவை, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை, இரண்டு ஆண்டுகள் தொடர் சிகிச்சை, குடியிலிருந்து மீண்டோருக்கான வாராந்திர (AA கூட்டம்) ஆகியன கிடைக்கின்றன.

குடிநோயை அல்லது எந்தவிதமான போதைப் பழக்கமோ (Substance abuse) தவிர்க்கக் கூடியது. ஒருவேளை பழக்கமாகிவிட்டால் சிகிச்சை கொடுக்கக்கூடியது, குணப்படுத்தக் கூடியது என மருத்துவர் சி.ராமசுப்ரமணியன் கூறுகிறார்.

தலை முதல் பாதம் வரை.. எலும்பு முதல் தோல் வரை.. ! எச்சரிக்கை

குடி மற்றும் போதைப் பழக்கங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி பேசிய மருத்துவர் சி.ராமசுப்ரமணியன் கூறும்போது, இத்தகைய பழக்கங்கள் ஒரு மனிதனின் தலை முதல் பாதம் வரை, தோல் முதல் எலும்பு வரை பதம்பார்த்துவிடும் என்றார். இதைவிட எச்சரிக்கை வாசகம் வேறென்ன தேவைப்பட்டுவிடும். இந்த எச்சரிக்கை வாசகத்தோடு சில ஆலோசனைகளைப் பெறுவோம்.

"குடி மற்றும் போதைப் பழக்கங்கள் ஒரு செயற்கையான மகிழ்ச்சியைக் கொடுத்தே ஒரு மனிதனை தன்வசம் ஈர்க்கிறது. அந்த செயற்கை மகிழ்ச்சியில் சிக்கும் ஒரு நபர் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகிறார்.

என்னதான் இருக்கிறது என்ற சோதனை அடிப்படையிலான பயன்பாடு, (Experimental Use), விழாக்கால பயன்பாடு, (Recreational Use), என மாறி பின்னர் தினசரி பயன்பாடு (Regular Use), அதன் பின்னர் போதை இல்லாமல் இருக்க முடியாத கட்டாயப் பயன்பாட்டு நிலை (Compulsive Use) என்றாகிவிடுகிறது.

(பட விளக்கம்: மருத்துவர் சி.ராமசுப்ரமணியன்)

இப்படி போதைக்கு அடிமையான பின்னர் அந்த நபரின் சுயத்தைத் தீர்மானிக்கும் வஸ்துவாக போதைப் பொருட்கள் மாறிவிடுகின்றன. போதைப் பொருட்களை பசியைத் தின்று, சிவப்பு ரத்த அணுக்களைக் குடித்து, நுரையீரல், கல்லீரல், கணையத்தைப் பாதிக்கிறது. உடல் உறுப்புகள் இப்படி பாதிக்கப்பட்ட பின்னர் நரம்பு மண்டலம் சீரழியத் தொடங்குகிறது. மூளை போதையில் மூழ்க ஆரம்பிக்கும்போது திட்டமிடுதல், ஒழுங்குமுறை போன்ற பண்புகள் தொலைகின்றன, சிலருக்கு ஞாபகமறதி, சிலருக்கு பக்கவாதம், இன்னும் சிலருக்கு கண் பார்வையே போகிறது. உடல் முழுக்க இப்படி செயலிழந்து கிட்டத்தட்ட தாவரநிலைக்குச் சென்றுவிடும் அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்.

மன ரீதியாக மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த காலத்தை மறந்து, நிகழ் காலத்தில் போதையைப் பற்றி மட்டுமே சிந்தித்து எதிர்காலத்தை மறந்து நிற்பர். மனச்சோர்வு, மனப்பதற்றம், மனச்சிதைவு ஆட்கொள்கிறது. சந்தேகம் என்ற நோய் பிடிக்கிறது. சிலர் அக்கம்பக்கத்து வீட்டார் தொடங்கி மனைவி, குழந்தைகள் வரை சந்தேகப்பட்டு பின்னர் தன் மீதே சந்தேகம் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். பைபோலார் டிஸார்டர் (bipolar disorder), மனச்சிதைவு (Schizophrenia) போன்ற மனநோய்கள் ஏற்படுகின்றன.

குடி, போதைப் பழக்கங்கள் அந்த தனிநபரை மட்டுமல்ல அவர் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பத்தையுமே பாதித்துவிடுகிறது. எப்படி பொருளாதாரத்தில் ஒரு அஸட் (assett) சுமையாக (Liability) மாறும்போது சிக்கல் ஏற்படுகிறதோ அதேபோல் ஒரு குடும்பத்தலைவர் போதையில் மூழ்கினால் அந்தக் குடும்பத்துக்கு அவர் சுமையாகிவிடுகிறார். அந்தக் குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிறது. அந்த வீட்டுப் பெண் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அந்த வீட்டுக் குழந்தைகள் சமுதாயத்தை கூனிக் குறுகி எதிர்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களும் இத்தகைய போதைப் பழக்கத்திற்கோ அல்லது மனநோய்களுக்கு ஆளாகும் சூழல் உருவாகிறது.

ஒரு தனிப்பட்ட மனிதனின் திறமைகள் வீணாகும்போது ஒரு தனிப்பட்ட குடும்பம் பாதிக்கப்படுகிறது. அந்தக் குடும்பம் போல் பல குடும்பங்கள் வீழ்ச்சி காணும்போது சமுதாயம் பாதிக்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. அதனால் தான் குடி, போதை பிரச்சினை தனிப்பட்ட பிரச்சினை அல்ல சமுதாய பிரச்சினை, தேசியப் பிரச்சினை. இதை ஒழிப்பதில் அரசாங்கத்துக்கும் கடமை இருக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு நிறைய பெண்களும் வருகின்றனர். அவர்களில் பலர் சோஷியல் ட்ரிங்கிங் என்று ஆரம்பித்தவர்களாகவே இருக்கின்றனர். போதைக்கு பாலின பேதம் அல்ல. அது இருபாலரையும் சமமாகவே தாக்குகிறது. அதனால் பெண்கள் சமத்துவத்தை போதையில் நிரூபிக்கத் தேவையில்லை. போதைப் பழக்கத்தோடு ஒரு குழந்தையை ஈன்றெடுத்தால் அந்தக் குழந்தையும் நோயுடனேயே பிறக்கும். குழந்தையை ஈன்றெடுப்பது மட்டுமே நிச்சயமாக ஒரு பெண்ணின் கடமை அல்ல. ஆனால், ஆணோ, பெண்ணோ தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மனிதராகப் பிறந்ததற்காக ஆற்றும் கடமை. ஆரோக்கியமாக இருந்து ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும்.

குடி மற்றும் போதை நோயாளிகள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்களை மீட்டெடுக்க முடியும்.

அப்படிப்பட்ட மறுவாழ்வு சிகிச்சையைத்தான் நாங்கள் திரிசூல் மையத்தில் அளிக்கிறோம். சுகாதாரத் துறை உதவியுடனும் மதுரை மாநகராட்சி உதவியுடனும் மதுரை ஆரப்பாளையத்தில் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 15 படுக்கைகள் வசதி உள்ளது. அதுவும் தங்குமிடம், உணவு என முற்றிலும் இலவசமாகச் செயல்படும் மையம். 21 நாட்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தங்களுக்கோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களோ மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படுவோர் இந்த இலவச மையங்களை அணுகி பலன்பெறலாம்.

போதை மறுவாழ்வை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து ஆன்லைனில் தாமாகவே மருந்து வாங்கி சாப்பிட்டு சிகிச்சை செய்வது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். ஒவ்வொரு நபருக்கும் சிகிச்சை மாறுபடும் என்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவதே சரியானதாக இருக்கும். போதைக்குத் தீர்வு மருந்து மட்டுமே அதனால் மந்திரம் தந்திரம் என்று பணத்தையும், நேரத்தையும் வீணடிக்காதீர்கள்" என்றார்.

13, 19-ல் கவனம் தேவை..

இளைஞர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் போதைப் பழக்கங்கள் தொடர்பாக, போதைப் பொருட்கள் தடுப்பு மையம் சென்னை மண்டல இயக்குநர் ப்ரூனோவிடம் பேசியபோது பல திடுக்கிடும் உண்மைகளைத் தெரிவித்தார்.

இளைஞர்களிடம் பொதுவாக பிரபலமாக இருக்கும் போதை வஸ்துக்கள் மெத்தாம்ஃபீட்டமைன் (methamphetamine), கீட்டமைன் (Ketamine), கஞ்சா, எல்.எஸ்.பி., (LSB) எம்.பி.எம்.ஏ (MBMA) என்று பட்டியலிட்டார்.

அவர் கூறியதாவது:

"புள்ளிவிவரங்களின்படி போதை வஸ்துக்களுக்கு வளர் இளம்பருவத்தினரே அதிகமாக அடிமையாகின்றனர். ஆரம்ப வயது என்று பார்த்தால் பதின்ம வயதின் தொடக்கம் 13 ஆக இருக்கிறது. 25 வயது வரையில் போதை வஸ்துக்களுக்கு அடிமையாவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன.

ஆரம்பத்தில் கஞ்சா பொட்டலங்கள் தான் இவர்களின் கேட்வே ட்ரக் (Gateway Drug) ஆக இருக்கிறது. மேலும், அவர்கள் செலவுக்கு கட்டுப்படியாகும் விலையிலும் கஞ்சா கிடைப்பதால் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

(பட விளக்கம்: போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு மையம் சென்னை மண்டல இயக்குநர் ப்ரூனோ. வலது: புள்ளிவிவரம் )

சில நாட்களிலேயே கஞ்சா போதை பற்றாமல் போய்விடும். அப்போதுதான் மெத், ஹெராயின் என அடுத்தடுத்த போதை வஸ்துக்களை நாடிச் செல்கின்றனர். மெத் என்பது பள்ளிகளில் ஐஸ் (ICE) என்ற பெயரில் விற்பனையாகிறது. நாக்குக்கு கீழே வைத்துக்கொள்ளும் க்ரிஸ்ட்டல், பவுடர் வகையிலான இந்த போதை வஸ்து மிக மிக ஆபத்தானது.

இதுதவிர நாங்கள் கீட்டமைனும் பறிமுதல் செய்கிறோம். இது பெண்களை வசப்படுத்தவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் சென்னையில் மட்டும் நாங்கள் 10 கிலோ கீட்டமைன் பறிமுதல் செய்துள்ளோம். அப்படி என்றால் அவ்வளவு பெண்கள் இங்கே போதைக்கு பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்றே அர்த்தம்.

இதுதவிர எஃபிட்ரைன் (ephedrine), ஹாஷிஷ் (Hashish), அல்ப்ராஜோலம் (alprazolam) மாத்திரைகள், ட்ரமடால் (tramadol) ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகமான நகரமாக சென்னை இருக்கிறது. எல்லா நகரங்களிலும், மற்ற போதை மருந்துகளுடன் ஒப்பீட்டு அளவில் விலை குறைவு என்பதால் கஞ்சா சற்றே பிரபலமாக இருக்கிறது. சில மணிநேரம் இன்பம் தரும் இத்தகைய போதை வஸ்துக்கள் நிரந்தரமாக ஒரு மனிதரை முடக்கி பித்துநிலைக்கு தள்ளக் கூடியவை.

பொதுவாகவே 13 வயது மற்றும் 19 வயதில் ஒரு இளைஞரோ யுவதியோ போதை வஸ்துவை சோதனை முயற்சியாகக் கூட தொடாவிட்டால் பின்பு அவற்றில் வீழ்வதற்காக சாத்தியம் மிக மிக சொற்பம். அதனால், குடும்பங்கள் எப்போதும் தனது உணர்வுபூர்வ பிணைப்பில் சிறு சமரசம் கூட செய்துகொள்வது கூடாது. குழந்தைகளிடத்தில் இளம் பிராயய பிள்ளைகளிடத்தில் மனம் விட்டுப்பேசி அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, அவர்களுக்காக நேரம் செலவழிப்பதை மதிப்பவராக நாம் நடந்து கொண்டால் பள்ளிக் குழந்தைகளை, இளம் வயதினரை போதைக்கு அடிமையாகாமல் தடுக்கலாம்.

(பட விளக்கம்: பள்ளியில் நடக்கும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..)

நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட ரேவ் பார்ட்டீஸ் (Rave Parties) எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் போதைக்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது. இளைஞர்கள் தங்கள் நேரத்தை ஊக்கசக்தியாக மாற்றி புதுமைகளைப் படைக்க வேண்டுமே தவிர ஊக்க மருந்துக்காக செலவிடக் கூடாது. போதை நோயாளியின் மரபணுவே மாறிவிடும். அவரின் சந்ததி பித்துநோய்க்கு வாய்ப்புள்ள சந்ததியாகவே இருக்கும்.

நமக்கான தூண்டில் எப்போதுமே நம்மைச் சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றில் சிக்காமல் இருக்க பரீட்சார்த்த முறையில் கூட போதை பக்கம் செல்லாமல் இருப்பதே சிறந்த வழி ஒரே வழி" என்றார்.

போதைப் பழக்கங்களால் ஏற்படும் உடல் அசவுகரியங்களுக்காக ஈடாக ட்ரக் இன்ஃப்யூஸ்ட் சைக்காஸிஸ் (drug induced psychosis) எனப்படும் போதையினால் ஏற்படும் மனச்சிதைவு நோய்களும் பெருகி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் இளம் பிராயயத்தினரின் போதை சோதனை முயற்சி பீடி, சிகரெட்டாக இருந்தது. இப்போது இது பீர், கஞ்சாவாக மாறியிருக்கிறது. இது மிகப்பெரிய அவலம். உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தித் தடுக்கப்பட வேண்டிய சமூகச் சீரழிவு. இதை உடனே சரிசெய்யாவிட்டால் இளம் சமூகம் ஊசலாடும். நம் தேசத்தின் வலிமையே இளைஞர்கள்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் அந்தச் சொத்தை சுமையாக சுமக்க நேரிடும். போதை இல்லாத பாதையில் பயணிப்போம்.

மது அருந்துதல் குற்றம் என்பதை விட நோய் என்றே நான் சொல்வேன் ('Drink is more a disease than a vice’') இது மகாத்மா காந்தியின் வார்த்தை. குடி, போதை நோயாளிகளை சமூகத்திலிருந்து புறக்கணிக்காமல் அவர்களை மீட்டெடுத்து சமூகத்துக்கு பங்களிப்பவர்களாக மாற்றுவோம்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

முந்தைய பாகம்: மனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா? ஏமாற்றமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 hour ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்