அன்னம் பகிர்ந்திடும் காந்திமதி அம்மா: மகளிர் தினத்தில் அறிய வேண்டிய மதுரை நகரின் சக்தி  

போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு..

பட்டினி ஒழிப்பு நாடுகளின் பட்டியலில் 102-வது இடம். 117 நாடுகளுக்கான பட்டினி தரவரிசையில் இந்தியாவின் இடம் இது.

5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.350 லட்சம் கோடி) மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றியமைக்கும் கனவுப் பயணத்தில் நாம் இதை சரிசெய்வதும் அவசியம்.

அந்த மாபெரும் கனவுப் பயணத்தை சாத்தியப்பட வைக்க நாட்டின் தென்கோடியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். இந்த மகளிர் தினத்தில் நாம் அவரைப் பற்றி அறிவது மிக மிக அவசியமாகிறது.

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளுடன் காந்திமதி அம்மாளை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்... பசியினால் இளைத்தே வீடு தோறும் இரந்து பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.. என்று உருகிய வள்ளலாரால் ஈர்க்கப்பட்டவர் தான் காந்திமதி அம்மா. வள்ளலார் வழியில் இன்று பசி போக்கும் சேவையைச் செய்கிறார்.

மதுரை கீழமாசி வீதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக காந்தி அம்மாள், சிவா அன்பானந்ததைச் சந்தித்தார். சன்மார்க்க அன்பர்கள் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார் அன்பானந்தம். ஆதரவற்றோருக்கு ஒரு வேளை பசிப்பிணியாவது போக்கும் நோக்கில் அவர் ஆற்றிய தொண்டு காந்திமதி அம்மாவின் அகத்தில் ஒளியேற்றியது. அப்போது தொட்டு அவரும் அந்த அருட்பணியில் தன்னை இணைந்து கொண்டார்.

இன்று அவருக்கு 67 வயதாகிறது. இன்றும் காலை 9 மணிக்கெல்லாம் சமைத்த உணவுடன் கீழமாசிவீதி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சென்றுவிடுகிறார். தினமும் 70 பேர் உணவு அருந்துகின்றனர். வள்ளலார் ஜோதி ஏற்றப்பட்டு உணவு பறிமாறப்படுகிறது. பசியாறிச் செல்லும் மனிதர்கள் தான் காந்திமதி அம்மாளின் உயிர்நாடி.

அம்மாவுடனான உரையாடலில் இருந்து..

சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது எது?

நான் எளிய குடும்பத்தில் பிறந்தவள். கட்டிடத் தொழிலாளியாகத் தான் பணியாற்றி வந்தேன். தற்செயலாகவே அன்பானந்தம் அய்யாவின் சேவையைத் தெரிந்து கொண்டேன். என்னால் பணமோ, பொருளோ கொடுக்க இயலாது ஆனால் சமையல் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலும் என்பதால் இணைத்துக் கொண்டேன். வள்ளலார் ஒளி அப்படித்தான் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும்.

இப்போது தனியாக இந்தச் சேவையை செய்வதில் ஏதாவது சவால் இருக்கிறதா?

அன்பானந்தம் அய்யா 85 வயதில் இறைவனடி சேர்ந்தார். கடைசி நாளில் கூட, நம்மை வழக்கமாக நாடி வருபவர்கள் யாரும் பட்டினியாகக் கிடக்கக் கூடாது. அவர்களுக்கு உணவு அளித்துவிட்டு வாருங்கள் என்றார். அவர் போன பிறகு இதை எப்படிச் செய்யப்போகிறோம் என்று பயமாக இருந்தது. ஆனால், அதுநாள் வரை உணவுப் பொருட்களும், உதவிகளும் செய்துவந்தவர்கள் நீங்கள் ஏற்று நடத்துங்கள் நாங்கள் உதவியைத் தொடர்கிறோம் என்றார்கள். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூட எங்களின் பசி போக்கும் சேவையைப் பாராட்டினார்.

ஆதரவற்றோருக்கான உணவு தானே என்று ஏனோதானோ என்று சமைப்பதில்லை. உணவைப் பறிமாற வாழை இலைகளையே பயன்படுத்துகிறோம். நிலக்கோட்டையைச் சேர்ந்த புரவலர் ஒருவர் இலைகளை தானமாகக் கொடுத்து உதவி வருகிறார். இது போன்று மறைமுகமாக எண்ணற்றோர் இந்தப் பணியில் இணைந்துள்ளனர். நான் இந்த சேவையைத் தொடர முடியுமா என்று தயங்கி நின்றபோது மணிகண்டன் (மதுரையைச் சேர்ந்த சமூக சேவகர்) ஊக்கமளித்தார். அவர் மூலம் நிறைய பேர் இச்சேவையைத் தொடர உதவி வருகின்றனர்.

நீங்கள் குடிகாரர்களுக்கு உணவளிப்பதில்லை என்று சொன்னார்களே..

ஆமாம், எங்களது பந்தியில் முதல் உரிமை மனநலம் குன்றியோர், முதியோர், ஆதரவற்றோருக்கே. உழைத்து உண்ண இயலாதவர்களின் பசியைத் தான் போக்க வேண்டும். இருக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு செலவில்லாமல் உணவு உண்ண விரும்புபவர்களுக்கு இது இடம் அல்ல.

உங்களின் சேவையை அங்கீகரித்து இந்த ஆண்டு மகளிர் தின சிறப்பு விருது அளித்துள்ளனர். எப்படி உணர்கிறீர்கள்?

நான் எதையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. இந்த அங்கீகாரங்கள் மூலம் இச்சேவைக்கு வெளிச்சம் வந்தால் யாரேனும் ஒரு சிலராவது ஊக்கம் பெறலாம். சக மனிதனின் பசியைக் கடந்து செல்லாமல் இருப்பதே மிகப்பெரிய மனித நேயம்.

இந்த மகளிர் தினத்தில் நீங்கள் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..

"இன்று பெண்கள் பலரும் வேலை பார்க்கின்றனர். சம்பாதிக்கின்றனர். பொருளாதார தன்னிறைவைப் பெற்றிருக்கும் அவர்கள் பெருமளவில் பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.
பிறருக்கு உதவி செய்யவே இறைவன் நம்மை அனுப்பியிருக்கிறார். பசியோடு இருப்பவர்களுக்கு ஒரு டீ, வடை, வாழைப்பழமாவது வாங்கிக் கொடுத்து பசி அமர்த்துங்கள். பசி நீங்கிய உயிரின் கண்ணில் இருந்து ஓர் ஒளி வரும். அந்த ஒளியைப் பார்த்து ரசிக்கும் போது நம் கண்ணில் ஓர் ஒளி தோன்றும். அந்த இரண்டும் சேர்ந்தது தான் இறைவன். அந்த இறைவனாக நாம் ஒவ்வொருவரும் இருப்போம்" என்றார்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்று இருகரம் கூப்பி வாழை இலை முன் அமர்ந்திருந்த உள்ளங்கள் துதிபாட அவர்களின் பசிபோக்க தயாரானார் காந்திமதி அம்மாள்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE