சர்வதேச பெண்கள் தினம் ஒவ்வோராண்டும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள பெண்களால் கொண்டாடப்படுகிறது.
கொண்டாட்டம் என்ற வார்த்தைக்குப் பிறகு நூற்றாண்டுக்கு முந்தைய போராட்டங்கள் நிறைந்த வரலாறு இருக்கிறது.
பெண்கள் தின வரலாறு
கி.பி. 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸ் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். பெண்களுக்கும் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், உழைப்புக்கேற்ற ஊதியம், 16 மணி நேர வேலையைக் குறைக்க வேண்டும், வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1900-ம் ஆண்டு. பெண்கள் வாரிசு விருத்திக்காகவும் வீட்டு வேலைக்காகவும் மட்டுமே இருப்பதாக உணர வைக்கப்பட்டிருந்த காலம்.
மெல்ல மெல்ல பெண்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. 1907-க்குப் பிறகு போராட்டம் தீவிரமானது. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், 1910-ம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்னும் பெண், அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து மகளிர் தினம் என்ற ஒன்றை உருவாக்கி அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆவணப்படுத்த வேண்டும், ஆண்களைப் போல பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும், எல்லாவற்றிலும் சம உரிமை கேட்டுப் போராட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்.
எனினும் அவர் மார்ச் 8 போன்ற எந்தவொரு தனி தினத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. என்றாலும் அவரின் சொல்லைப் பின்பற்றி உலக மகளிர் தினத்தைக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிப்ரவரி 28-ம் தேதியும் பிறகு ஒவ்வொரு பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1975-ம் ஆண்டு சர்வதேச பெண்கள் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ஐ.நா. மார்ச் 8-ஐ உலக மகளிர் தினமாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ல் இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஏன் மார்ச் 8?
பெண்கள் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன. ஆனால், உண்மையான காரணம் ரஷ்யப் பெண் புரட்சி அன்று தொடங்கியதுதான். உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917-ம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தது.
அதற்கு முன்னோடியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டார்கள் என்றாலும் பெண்களே பிரதான பங்கு வகித்தனர்.
இந்தப் புரட்சிதான் ஜார் மன்னர் தனது அரியணையை விட்டிறங்கக் காரணமாக அமைந்தது. அதை நினைவுகூரும் விதமாக மார்ச் 8 தேர்ந்தெடுக்கப்பட்டது.
விடுமுறை விட்டுக் கொண்டாடும் ரஷ்யா
ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் சர்வதேச பெண்கள் தினத்தைக் கவுரவிக்கும் விதமாக தேசிய விடுமுறை விடப்படுகிறது. சீனாவின் பல்வேறு இடங்களில் மார்ச் 8-க்காக, பெண் ஊழியர்களுக்கு மட்டும் அரை நாள் விடுப்பு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில், உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் பாதிப் பேர் மட்டுமே, வேலைக்குச் செல்கின்றனர் என்கிறது ஐ.நா. உழைப்புக்கான உடல் தகுதி, திறன், அறிவுக்கூர்மை இருந்தும் குடும்ப சூழல்களால் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இப்போது உழைக்கும் பெண்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் பாலினச் சமத்துவம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.
என் மகளுக்கு/ மனைவிக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன், வேலைக்குப் போவதை அனுமதித்திருக்கிறேன் என்பது ஆண் மைய சமூகத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. சமூக நீதி பேசும் பலரே, பாலினச் சமத்துவத்தை உணர்வதில்லை அல்லது உணர முயற்சிப்பதில்லை. இதை முன்னிட்டே நான் பாலினச் சமத்துவம் பேணுபவர்: பெண்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளுதல் என்ற மையக்கருத்து இந்த ஆண்டின் கருப்பொருளாக இருக்கிறது.
இது பெண்களின் உரிமை, இதை எந்த ஆணும் தூக்கித் தர வேண்டியதில்லை. இதை ஆண்களும், பெண்களும் புரிந்துகொண்டாலே போதும். பாலினச் சமத்துவம் தழைக்கும், பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் தானாய்க் கிடைக்கும்.
க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago