காளைகள் எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கும் ஒருபடி மேலதான்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற காளையின் உரிமையாளர் நெகிழ்ச்சி

By பாரதி ஆனந்த்

எங்க வீட்டுப் பிள்ளைகளுக்கும் ஒருபடி மேலதான் நாங்கள் வளர்க்கும் காளைகள் என்கிறார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற காளையின் உரிமையாளர் மாரநாடு.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குலமங்களத்தைச் சேர்ந்த மாரநாடு என்பவர் வளர்த்த கருப்பு என்ற காளை முதல் பரிசைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சான்ட்ரோ காரை சென்னையில் பரிசாக வழங்குகிறார்.

தனது கருப்பன் காளை பரிசைப் பெற்றுத் தந்த மகிழ்ச்சியில் இருந்த உரிமையாளர் மாரநாடுவை 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகத் தொடர்பு கொண்டோம்.

காளை வளர்ப்பில் எப்படி ஆர்வம் வந்தது? எத்தனை ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு காளைகளை அழைத்துச் செல்கிறீர்கள்?

பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவது கிராமம்தான். அதனாலேயே சிறு வயதிலிருந்தே மாடு வளர்ப்பில் ஆர்வம் இருந்தது. கடந்த 13 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டுக்குக் காளைகளை அழைத்துச் செல்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர்தான் காளைகளை வளர்ப்பதில் கூடுதல் வேகம் வந்தது. அதுவும் நாட்டு இனக் காளைகள் மீது ஆர்வம் வந்தது. இதுவரை பல காளைகளை வளர்த்திருக்கிறேன். ஆனால், கருப்பன்தான் எனக்கு இப்படியொரு பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கிறான். இப்போது என்னிடம் உள்ள 4 காளைகளும் புளிக்குளம், உம்பளச்சேரி வகைகளைச் சேர்ந்தவை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெற்று வரும் போட்டிகள் எப்படி இருக்கின்றன? ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?

அதை நான் பெரிய புரட்சியாகத்தான் பார்க்கிறேன். அதன் பின்னரே, தனிப்பட்ட முறையில் நாட்டு இன மாடுகள் மீது எனக்குப் பெரிய அளவில் ஆர்வம் வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீது இளைஞர்களின் ஆர்வம் அதுவும் படித்த இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக ஜல்லிக்கட்டு விளையாட்டைக் காண வருவது உற்சாகமாக, பெருமையாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு இப்போதுதான் ஒரு வரையறைக்குள் வந்துள்ளது. காளைகளுக்கும் பாதிப்பில்லாமல் காளையர்க்கும் பரவசம் குறையாமல் நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால், ஒரு சின்ன விஷயம் உறுத்தலா இருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி மீட்டுக் கொடுத்து தமிழர் அடையாளத்தை, சிலர் சாதி சர்ச்சைகளுக்குள் சிக்கவைக்கப் பார்க்குறாங்க. சாதி, மதங்களைக் கடந்து தமிழராக இணைந்து நின்று ஜல்லிக்கட்டை முன்னெடுப்பதுதான் அந்த இளைஞர்களுக்கு செய்யும் நன்றி.

பொதுவாக ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்க எவ்வளவு செலவாகும்?

பிள்ளைகள் வளர்ப்புக்கு கணக்கு பார்த்தா செலவு செய்றோம். 4 காளைகளுக்கும் தீவனம், மருத்துவம், பராமரிப்பு என 60,000 ரூபாய்கிட்ட வந்துவிடும். ஆனாலும் சுமையாகத் தெரியவில்லை.

அடிப்படையில் நான் ஒரு விவசாயி. அதுபோக ஒரு சிறுதொழிலையும் செய்து வருகிறேன். என் வருமானத்தில் ஒரு பகுதியை இந்தக் காளைகள் பராமரிப்புக்காகச் செலவிடுகிறேன். ஆனால் இந்தக் காளைகளையோ அல்லது அவற்றிற்கான செலவையோ எனது குடும்பத்தினர் குறிப்பாக என் மனைவி குறையாகச் சொன்னதில்லை.

இன்னும் சொல்லப்போனால் கருப்பனுக்கும் மற்ற காளைகளுக்கும் என் மனைவி மீதுதான் பாசம் அதிகம். மைதானத்தில் திமிறும் காளைகள் என் மனைவியின் வார்த்தைக்குப் பெட்டிப் பாம்பாகக் கட்டுப்பட்டுக் கிடக்கும். அவர்தான் காளைகளுக்கு அன்றாடம் தண்ணீர் வைப்பது, உணவு வைப்பது, புல்கட்டு அளிப்பது என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார். எங்க பிள்ளைகளுக்கும் ஒருபடி மேலதான் இந்தக் காளைகளைப் பார்க்கிறோம். களத்துக்குப் போகும் பரிசு வாங்கும் என்று வளர்க்கவில்லை. பாசத்தில் வளர்க்கிறோம்.

ஜல்லிக்கட்டு காளைக்கான பயிற்சி பற்றி சொல்லுங்களேன்..

பயிற்சியைப் பொறுத்தவரை வாரத்தில் 3 நாட்கள் 5 கி.மீ. நடைப்பயிற்சி, வாரத்தில் ஒரு நாள் நீச்சல் பயிற்சி கொடுப்போம். மற்றபடி ஜல்லிக்கட்டுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக உணவின் அளவை அதிகரிப்பதோடு சில பிரத்யேகப் பயிற்சிகளைக் கொடுப்போம்.

ஜல்லிக்கட்டு பணக்காரர்களுக்கான விளையாட்டு என்ற விமர்சனம் குறித்து உங்களின் பார்வை?

ஜல்லிக்கட்டு அப்படி பணக்காரர்களின் விளையாட்டு ஆகாது. ஆகவும்கூடாது. சாதாரண விவசாயிகள் கூட காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுத் தீவனம் வாங்கிப் போட்டு வளர்க்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வாங்குவதே வசதியானவர்களால்தான் முடியும் என்பது போன்ற போக்குக்குள் சென்று கொண்டிருப்பதால்தான் இப்படியான விமர்சனங்கள் வருகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற புகார்கள் வருகின்றன. அது தொடராமல் ஜல்லிக்கட்டு எல்லோருக்குமானது என்ற பழைய நிலை தொடர வேண்டும். 10 வருடத்திற்கு முன்பெல்லாம் என்னைப் போன்ற விவசாயிகள், காளை வளர்ப்போர் ஒன்றாகச் செல்வோம். எந்த கெடுபிடியும் இல்லாமல் டோக்கன் வாங்கிக் கொண்டு வருவோம். இப்போது அந்த நிலை இல்லை. அதுபோன்றதொரு எளிமையான நடைமுறை அரசுக் கண்காணிப்பில் வழக்கத்திற்கு வர வேண்டும்.

ஜல்லிக்கட்டை மேம்படுத்த உங்களின் ஆசை, கோரிக்கை என்று ஏதாவது பட்டியலிட முடியுமா?

இந்த ஆண்டு காங்கேயம் பசுக்கள் பரிசாக வழங்கப்பட்டன. அது ஊக்கமளிப்பதாக இருந்தது. ஜல்லிக்கட்டின் நோக்கமே நமது காளைகளைப் போற்றிப் பேணுவதன் அவசியத்தை உணர்த்துவதே. அந்த வகையில் இத்தகைய பரிசுகள் ஊக்கமளிக்கும். வாழ்வாதாரமாகவும் அமையும். எலக்ட்ரானிக் பொருட்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் இது போன்ற நாட்டின மாடுகளைப் பரிசாக வழங்குவதும் வாங்குவதும் தனிச்சிறப்பானது. இதை மென்மேலும் ஊக்குவித்து வருங்காலங்களில் இவற்றையே முதல் பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு விழா குழுக்களுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

காளைகளைப் பற்றி ஜல்லிக்கட்டு பற்றி உணர்வுபூர்வமாக பேசிய மாரநாடு, தன் கருப்பனுக்கு தண்ணீர் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகச் சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.

சுழற்சி முறையில் பார்வையாளர்களுக்கு அனுமதி

ஜல்லிக்கட்டுக்குச் சென்றுவந்த மதுரை நகர்ப்புற இளைஞர் இளங்கோவன் கூறும்போது, "ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்பை விட சிறப்பாகவே உள்ளன. ஆனால், கேலரியில் அமரும் பார்வையாளர்கள் அங்கேயே இருந்துவிடுகின்றனர். இதனால் குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்களால் மட்டுமே ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க முடிகிறது. காளைகளை அடக்க வீரர்களை எப்படி சுழற்சி முறையில் அனுமதிக்கிறார்களோ அதேபோல் ஜல்லிக்கட்டைப் பார்க்கவரும் பார்வையாளர்களையும் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அனுமதித்தால் இன்னும் நிறையப் பேர் போட்டியைக் காணலாம். இதனால், ஜல்லிக்கட்டைப் பார்க்க விஐபிக்களால் மட்டுமே முடியும் என்ற நிலை மாறும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்