மதுரையில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு பெற்றோருடன் விவசாயம் பார்க்கும் இளம்பெண், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்காக 4 காளைகளை தயார்ப்படுத்தி வருகிறார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரையின் கிராமப்புறங்களில் இந்த போட்டிக்கு காளைகளை, அதன் உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகவேப் பார்க்கப்படுகிறது. காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அவர்களை புறமுதுகு காட்டி ஓட வைக்கும் காளைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் பெருமைகளைச் சொல்லும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது.
அதுபோல், இந்த விளையாட்டை பார்க்க வரும் பார்வையாளர்களும், பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர். அதை மாற்றிக்காட்டும் விதமாக, மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கல்லம்பட்டி என்னும் சிற்றூரில், இளம்பெண் கனிமொழி இந்த ஆண்டு நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 4 காளைகளைத் தயார் செய்து வருகிறார். அதில், 2 காங்கேயம் மாடுகள், ஒரு தேனி மலைமாடு, ஒரு புளிக்குளம் மாடு உள்ளது.
தான் வளர்க்கும் ஒவ்வொரு காளைக்கும் செல்லப் பெயர் வைத்து, நண்பர்களைப் போல் வளர்ப்பதில் கனிமொழிக்கு நிகர் யாரும் இல்லை. இவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அந்த காளைகளே இவரது வளர்ப்பிற்கு சான்று. கனிமொழி இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றிருந்தாலும், வீட்டில் உள்ள காளைகளைப் பராமரிப்பது, பெற்றோருடன் சேரந்ந்து விவசாயப்பணிகள் செய்வதுமாக ஒவ்வொரு நாளையும் பரபரப்பாகக் கடக்கிறார்.
ஊருக்கு வெளியில் புல் வெளியில் கனிமொழி, அவரது ஜல்லிக்கட்டு காளை கருப்பனை மேய விட்டுக் கொண்டிருந்தார். அவரிடம், படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிச் செல்லாமல் விவசாயம், ஜல்லிக்கட்டு என்று சென்றுவிட்டீர்கள் என்று கேட்டோம்.
அதற்கு அவர் ‘‘சிறுவயதிலிருந்தே என்னோட வீட்டைச் சுற்றி காளைகள்தான் இருக்கும். படித்த நேரம் போக, மற்ற நேரங்களில் காளைகளோடுதான் நான் அதிகம் விளையாடுவேன். நாங்க வளர்க்கும் காளைகள் அனைத்தும் நான் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்படும். அந்தளவுக்கு பழக்கப்படுத்தி வைத்திருப்பேன்.
அப்படியிருக்கும்போது நாமும் ஏன், ஜல்லிக்கட்டுக்கு காளையை தயார் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக நான் வளர்க்கும் 4 காளைகளில் கருப்பனை கடந்த ஓராண்டாக தயார்ப்படுத்தி வருகிறேன். காலையில் எழுந்ததும் வயலுக்கு வேலைக்குபோகும்போது காளைகளை நடைப்பயிற்சி, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன்.
வீட்டிற்கு வந்தவுடன் நெல்லிக்காய், கடலை மிட்டாய், பருத்திக் கொட்டை உள்ளிட்ட ஊட்ட உணவுகள் வழங்குவது, குளிக்க வைப்பது எல்லாம் என்னுடைய வேலைதான். ஜல்லிக்கட்டில் பரிசு பெறுவதற்காக வளர்க்கவில்லை. அந்த போட்டியில் நான் வளர்த்த காளை பங்கேற்பதே ஒரு பெருமைதான்.
ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டு என்று மட்டும் சொல்லிட முடியாது. பெரும்பாலும் கிராமங்களில் காளைகளைப் பராமரிப்பதே பெண்கள்தான். அந்த பெண்கள் வளர்க்கும்காளைகள்தான், ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரியாது. அந்த காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லும் ஆண்களுக்கு அந்த பெருமையெல்லாம் சென்றுவிடுகிறது. இந்த முறை நானே ஜல்லிக்கட்டு போட்டிக்கு கருப்பனை அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளேன், ’’ என்றார்.
கடந்த 4 ஆண்டிற்கு முன்பு இதுபோல் ‘ஜோதிகா’ எனும் செவலைக்காளையை கனிமொழி ஆசையாக வளர்த்து வந்ததாகவும், அது இறந்து போனதால் குடியிருக்கும் வீட்டிற்குப் பக்கத்திலேயே அக்காளையை அடக்கம் செய்து, நாள்தோறும் மாலை வேளையில் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கனிமொழியின் தந்தை ராஜா கூறுகையில், ‘‘காளைகளை வாங்கி வீட்டில் கொண்டு வந்து விடுவதுதான் எங்கள் வேலை. அதனை உரிய முறையில் பராமரித்து, பாதுகாப்பது கனிமொழிதான். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதால் எங்களுக்கு எவ்வித வருமானமும் கிடையாது. நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு காக்கப்பட வேண்டும் என்பதற்காக வளர்க்கிறோம், ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago