நூல் அறிமுகம்: மொபைல் ஜர்னலிசம் - நவீன இதழியல் கையேடு 

By க.நாகப்பன்

ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்து விடலாம்? என்பது சாதாரண கேள்வி. ஆனால், இந்த உலகத்தையே நீங்கள் திரும்பிப் பார்க்க வைக்கலாம். அதை ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார் சைபர் சிம்மன். செல்போனை எப்படிக் கையாளுவது என்பது குறித்தும் மொபைல் ஜர்னலிசம் நூல் வழியாக அஆவில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்.

25க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்கள்

இதழியலில் செல்போனால் ஏற்பட்ட தாக்கம்தான் செல்போன் இதழியலின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. அதுதான் மொபைல் ஜர்னலிசம். சுருக்கமாக மோஜோ என்று அடிப்படையில் இருந்து விளக்கும் சைபர் சிம்மன், செல்பேசி இதழியலின் தேவை என்ன? உடனடிச் செய்திகளை படம் பிடிப்பது எப்படி? ஸ்மார்ட்போனில் எடிட் செய்வது எப்படி? மோஜோ முன்னோடிகள், கதை சொல்லுதலின் ஐந்து அடிப்படை அம்சங்கள் என்பன உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தலைப்புகளில் செல்பேசி இதழியலின் அம்சங்களை விவரிக்கிறார். செல்போன் மூலம் முழுநீளத் திரைப்படங்களே எடுக்கப்பட்டுவிட்டன என்பதற்கான உதாரணங்களையும் இணைப்புகளையும் தந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

செல்போன் என்கிற ஒற்றை சாதனத்தை வைத்துக்கொண்டு டைப் செய்யலாம், படம் எடுக்கலாம், ஒலிப்பதிவு செய்யலாம், வீடியோ எடுக்கலாம். சேகரித்த செய்தியை அதே இடத்தில் இருந்து ஒளிபரப்பலாம். இதற்கு லேப்டாப், டிஜிட்டல் கேமரா, மைக், டிவி கேமரா போன்ற எதுவும் தேவையில்லை. செல்போன் மட்டுமே போதும். அதை ஊடகமாகப் பயன்படுத்திய முன்னோடிகள் குறித்து உதாரணங்கள் வழியாக அவர் விளக்குவது செல்போன் இதழியல் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

இதழியலும் தொழில்நுட்பமும் நெருக்கமாக இல்லாதபோது என்ன நடந்தது?

1776-ல் நிகழ்ந்த அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் 48 நாட்களுக்குப் பிறகே லண்டன் மக்களுக்குத் தெரியவந்தது. ஆனால், இன்று நொடிப்பொழுதில் ஒரு செய்தியை செல்போன் வழியாக தெரிவிக்க முடிகிறது. இத்தனைக்கும் செல்போன் வழி செய்தி சேகரிப்பது 10 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது என்று வரலாற்றில் இருந்து குறிப்புகள் தந்து வியக்க வைக்கிறார் சைபர் சிம்மன்.

2008-ம் ஆண்டில் அல்ஜஸிரா ஒளிப்பதிவாளரான லைத் முஷ்டாக் ஆப்பிரிக்க நாடான சாட் சென்றிருந்தார். அப்போது அவர் ஓட்டல் அறையில் கேமரா உள்ளிட்ட பொருட்களை உள்ளே வைத்துவிட்டு வெளியில் வந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உடனே தன் செல்போனில் குண்டுவெடிப்புக் காட்சிகளைப் படம் பிடித்து செய்தி சேகரித்தார். இந்தக் காணொலி அல்ஜஸிரா தொலைக்காட்சியில் 20 நிமிடங்கள் ஒளிபரப்பானது. இப்படி நிறைய உதாரணங்களை ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

பஸ் விபத்து, போலீஸ் தடியடிக் காட்சி, துணிக்கடையில் தீ விபத்து ஆகியவை செல்போனில் படம் பிடிக்கப்பட்டு அவை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இணையவெளி முழுவதும் வைரலாகப் பரவுவதையும் சைபர் சிம்மன் சுட்டிக்காட்டுகிறார்.

செல்போன் வானொலி

சுப்ரன்ஷு சவுத்ரி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். கோரியா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் படித்த பிறகு இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற சவுத்ரி பத்திரிகையாளர் ஆனார். மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 76 காவலர்கள் கொல்லப்பட்டபோது மாவோயிஸப் பிரச்சினை பற்றி செய்தி சேகரித்தார். அவர்களின் கதைகளைக் கேட்ட சவுத்ரி பிபிசி வேலையை உதறி எறிந்துவிட்டு உள்ளூர் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான வழிகளை ஆராய்ந்தார். செய்தி குக்கிராமங்களுக்குச் சென்றடைய வேண்டும், பழங்குடியினரின் மொழியில் செய்தி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர் வானொலிதான் இதற்கான ஊடகம் என்பதைக் கண்டுகொண்டார். அதிகம் புழங்கிய செல்போனை தனக்கான ஊடக மேடையாகப் பயன்படுத்தினார். இந்த செல்போன் வானொலி மூலம் பழங்குடியினர் தெரிவித்த பிரச்சினைகளுக்கு அரசுத் தரப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஒருமுறை இந்த வானொலியில் பகிரப்பட்ட பிரச்சினையைக் கேள்விப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர் அங்கிருந்து இந்தியாவில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி பிரச்சினைக்கான நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளார். சத்தீஸ்கர் மாநில மக்களின் வாழ்வில் சிஜிநெட் ஸ்வரா என்ற செல்போன் வானொலி பெரும் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

ஊடக விருதுகளை வென்ற செல்போன் இதழியலாளர்

செல்பேசி இதழியலில் முக்கியமானவர், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சியான் மெக்கோமார்க். இவர் தான் பணியாற்றும் ஆர்.டி.இ. ரேடியோ-1 வானொலிக்காக ஆண்டுதோறும் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு மக்களின் கதைகளைக் கேட்க வைத்து வருகிறார். மலைப்பகுதி மீது வாஷிங் மெஷினை சுமந்து செல்பவர், உள்ளூர் நிகழ்ச்சிக்காக நிதி திரட்டும் இரட்டையர்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பதின் பருவ நினைவுகள் என அவர் பகிர்ந்துகொள்ளும் கதைகள் உயிர்த்துடிப்புடன் உள்ளன. சியான் பல்வேறு ஊடக விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுத்ரி, சியான் போல செல்போன் இதழியலாளர்கள் பலரை சிம்மன் சுவாரஸ்யத்துடன் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அறம் பழகு

அப்படியென்றால் நல்ல இதழியலாளருக்கு செல்போன் மட்டும் போதுமா என்றால், அதுதான் இல்லை. செல்போன் ஒரு கருவி மட்டுமே. செல்போனில் படம் எடுப்பது எளிதானது. ஆனால், நல்ல படம் எடுப்பது எளிதானதல்ல, அதற்கு பயிற்சியும் காட்சி மொழி குறித்த புரிதலும் தேவை. கதை சொல்லும் ஆற்றலும் வேண்டும். மற்றபடி இதழியலுக்கான அடிப்படை நெறிமுறைகள், விதிகள், செய்முறைகள் இதற்கும் பொருந்தும். இதழியலுக்கான அறம் இதிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். இதழியல் என்பது பொதுநலனுக்கான செய்தி வெளியீடு என்றும் ஆசிரியர் சைபர் சிம்மன் அறிவுறுத்துகிறார்.

செல்போன் திரையில் ஆடியோ மற்றும் வீடியோவை எடிட் செய்யக் கற்றுக்கொள்ள அரை நாள் போதும் என்று செல்பேசி இதழியல் முன்னோடி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் குவின் குறிப்பிட்டதை சைபர் சிம்மன் கூறி நம்பிக்கை விதைக்கிறார். அதே சமயம் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்பட்ட இதழியலை அளிக்க கதை சொல்லும் கலையில் தேர்ந்து விளங்க வேண்டும் என்கிறார்.

செல்பேசியைக் கையாளுவது எப்படி?- டிப்ஸ்

செல்பேசி படங்கள் பல நேரங்களில் அமெச்சூர்த்தனமாக இருக்கக் காரணம் கேமராவின் தரம் அல்ல. மாறாக, செல்பேசியை முறையாக கையாளத் தவறியதுதான் என்று சொல்லும் ஆசிரியர், செல்பேசியை பக்கவாட்டில் வைத்து படம் எடுக்க வேண்டும், படம் எடுக்கும்போது அழைப்புகள் வருவதைத் தவிர்க்க ஏரோப்பிளேன் மோடில் போனை இயக்க வேண்டும், செல்போனை அசையாமல் நிலையாகப் பிடித்திருக்க வேண்டும், மைக் பகுதியை கை மறைக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று டிப்ஸ்களையும் அள்ளித் தருகிறார்.

செயலிகளின் உதவி

செய்தியின் நடுவே ஒருவரின் கருத்து ஆடியோ பதிவாகக் கேட்கும் வசதியை ஏற்படுத்த சவுண்ட் கிளவுட், ஆடியோபூம், ஸ்கைப், பர்ஸ்ட் வீடியோ, வாயுஸ்மெமோ, வேவ்பேட் ஆகிய செயலிகள் உதவும். நேரலைக்கு பேஸ்புக் லைவ்பூசர், பெரிஸ்கோப் செயலிகள் உதவும் என்று செயலிகளின் பெயரைக் குறிப்பிடும் சைபர் சிம்மன், எடிட் செய்வற்கு உதவும் கேமரா செயலிகள், துணைத் தலைப்புகளைச் சேர்க்க வழி செய்யும் செயலிகள் என அனைத்தையும் பட்டியல் போட்டு பரிமாறுகிறார்.

செல்போனில் பேட்டி என்றால் பிரபலங்களை எளிதாகப் பேச வைக்க முடிகிறது. பெரிய கேமராக்களைக் கண்டால் பயமும் தயக்கமும் வந்துவிடுவதால் சரியாகப்பேசுவதில்லை. செல்போன் என்பதால் சிலர் உற்சாகத்துடன் பேசுகின்றனர் என்று சில செல்போன் இதழாளர்கள் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், டிஜிட்டல் கேமராவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் செல்போன் இதழியலாளர்கள் அனுமதிக்கப்பட சுவாரஸ்யமான சம்பவங்களையும் குறிப்பிடுகின்றார்.

உடனடித்தன்மைக்காக, செய்திப் பசிக்காக மற்றவர்கள் அறியாமல் அவர்களின் அனுமதி இல்லாமல் படம் பிடிக்கக்கூடாது. தனி நபரின் உரிமையை மீறா வண்ணம்படம்பிடித்து அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று இதழியலாளர்களை அறம் பழகச் சொல்வதின் மூலம், 20 ஆண்டுகளுக்கும் மேலான இதழியல் அனுபவத்தை தேர்ந்த எழுத்துகளில் வடித்துள்ளார் சைபர் சிம்மன். டிஜிட்டல் உலகத்தைத் தொடர்ந்து கவனித்து வருவதோடு அதன் வளர்ச்சியை அப்படியே எழுத்தில் வடிக்கும் திறன் கைவரப் பெற்றிருப்பதால் மொபைல் ஜர்னலிசம் குறித்து துல்லியமாகவும் ஆழமாகவும் எழுதியுள்ளார்.

இதழியல் மாணவர்கள், இதழியல் துறையில் இருப்பவர்கள், வாசகர்கள், செல்போனில் புதுமை செய்ய நினைப்பவர்கள், சமூக அக்கறையுள்ள விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் இதழியல் கையேடாக மொபைல் ஜர்னலிசம் உள்ளது.

புத்தகத்தைப் பெற:
கிழக்கு பதிப்பக வெளியீடு,
177/103, முதல் தளம், அம்பால் பில்டிங்,
லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
விலை: ரூ.225 / போன்: +91 44 4200 9603

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்