மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்!

By க.நாகப்பன்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான்.

''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான்.

என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல் வெளியான அமெரிக்கன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் 'இன் டைம்'.

'இன் டைம்' திரைப்படம் காட்டும் உலகம் வித்தியாசமானது. அங்கு எல்லோரும் 25 வயது வரை இயல்பாக வளர முடியும். 25 வயது முடிந்த பிறகு ஒரு வருடம் மட்டுமே ஆயுள் தரப்படும். அதற்குப் பிறகு வாழ விரும்புவர்கள் தன்னுடைய வாழ்நாளை உழைத்து சம்பாதிக்கலாம். பிறரிடம் இருந்து கடன் வாங்கலாம். கொஞ்சம் குறுக்குப்புத்தியோடு அடித்துப் பிழைப்பவர்கள் பிறரிடம் திருடலாம். இது எதுவுமே செய்யாவிட்டால் அவர்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் செத்துவிடுவார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் சமூகத்தில் பணத்தை கடன் வாங்குகிறார்கள். திருடுகிறார்கள். வங்கியில் சேமிக்கிறார்கள். அந்த உலகத்தில் வாழ்பவர்கள் பணத்துக்குப் பதிலாக நேரத்தை சம்பாதிக்கிறார்கள். நேரத்தைக் கடனாக கொடுத்து காபி குடிக்கிறார்கள். கார் வாங்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் நேரம்தான் முதலீடு.

அதிக நேரம் வைத்திருப்பவர்தான் பணக்காரர். அவர்தான் ஹீரோ. அப்படி ஹீரோவுக்கு ஒருத்தர் 100 வருஷம் கொடுத்து செத்துப்போய்டறார். அப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் த்ரில்.

கெளதமுடன் உரையாடல் தொடர்ந்தது.

''இன் டைம் பார்த்திருக்கியாடா?''

''பார்க்கலைடா. ஏன்?''

''செம படம்டா. ஒருத்தன் நெனைச்சா இன்னொருத்தனுக்கு எவ்ளோ நாள் வேணும்னாலும் வாழ டைம் கொடுக்கலாம். அதே சமயம் அதைப் பிடுங்குறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கும்.''

''இப்போ எதுக்கு இவ்ளோ டீட்டெயில்?''

''இதை நம்ம தமிழ் இலக்கியத்துல ஒரு வரியில சொல்லிட்டாங்க''

''என்னடா சொல்ற?''

'' 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய.' புறநானூற்றுப் பாடல். என்னுடைய வாழ்நாளை எல்லாம் எடுத்துக்கொண்டு பண்ணன் வாழட்டும்னு அரசன் கிள்ளிவளவன் நில ஊர்கள் தலைவன் பண்ணனை வாழ்த்துறாரே... அதனோட அடுத்த டைமன்ஷன் தான் இந்தப் படம். அதை இப்ப கலைச்சு போட்டாலும் வேற ஒரு கான்செப்ட் கிடைக்கும்.

''ம்ம்ம்... ஆனா, எனக்கு ஒரு யோசனை....''

''தாராளமா சொல்லு.''

''பெரும்பாலும் பசங்களோ, பொண்ணுங்களோ காதல்ல தோத்துப் போய்டறாங்க... அவங்களுக்கு அது காலம் முழுக்க அழியாத வடுவா, தொட்டால் நோகும் தழும்பா மாறிடுது. அவங்களுக்கு அந்த தப்பை சரி செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும்?

வாழ்க்கை ஒரு முறைதான். ஆனா, வாய்ப்பு ஒரு முறைதான்னு இருக்குறதை இரண்டு முறைன்னு மாத்தினா... தப்பு செஞ்சவங்க சரிசெய்துக்குவாங்க. பிரிஞ்சவங்க சேர்ந்துடுவாங்க. இதுவும் ஒரு ஃபேன்டஸி கான்செப்ட் தானே. இதையே கூட அட்லீஸ்ட் குறும்படமா பண்ண யோசிக்கலாம்.''

''இது செட்டாகுமா?''

''யோசிப்போம். முடியும்னு முயற்சிப்போம். ஐடியாவுக்கா பஞ்சம். செட்டாகலைன்னா பரவாயில்லை. பிராசஸ் பண்ணவரைக்கும் நமக்கு திருப்தி இருக்குமே.''

''சூப்பர் டா. இதுல ஏதோ உன் அனுபவம் இருக்கா கௌதம்?''

''எப்படி சொல்ற?''

''இவ்ளோ அளவுக்கு விட்டுக்கொடுக்காம பேசுறன்னா... அதுக்கான நதிமூலம், ரிஷிமூலம் உன்கிட்ட இருந்துதானே ஆரம்பிச்சிருக்கும்.''

ஆமாம் என்று தலையசக்கும் அந்த நொடியில் வெட்கம் கலந்த புன்னகை கௌதமை ஆட்கொண்டிருந்தது.

''நான் செய்த தப்பும், சரி செய்ய வேண்டிய வாய்ப்பும்... ப்ரீத்திதான்.''

கௌதம் பேச ஆரம்பித்தான்.

''கொஞ்சம் டீட்டெயிலா சொல்லு மச்சி.''

''உனக்கு சொல்லி புரிய வைக்குறதை விட படிக்குற இவங்க கிட்டயே நேரடியா சொல்லிடறேன்...''

''பார்த்தியா! எனக்கு புரியாதுன்னு நீயே முடிவு பண்ணிட்டே...''

''அதில்லை மச்சி. நீ குறுக்கே குறுக்கே பேசி நிறைய கேள்வி கேட்ப. நானா சொன்னா ஒரு ஃபுளோவுல போய்ட்டே இருப்பேன். அதான். தப்பா நினைச்சுக்காதே. சரியா?''

''அப்போ நான்?''

''உன்னை விட நான் நல்லாவே சொல்வேன். இப்போதைக்கு கிளம்பு'' என்று என்னை விரட்டிவிட்டான்.

இதோ இப்போது உங்கள் முன் கௌதமே பேசுகிறான்.

ஹாய்! நான் கௌதம். சிவில் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். ராமநாதபுரத்துக்காரன். என் எதிர்வீட்டு தேவதை ப்ரீத்தி.

என் அப்பாவும், ப்ரீத்தி அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ். அதனால என் வீட்டுக்கு அவளும், அவ வீட்டுக்கு நானும் சாதாரணமா போய் வருவோம். சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளை தெரியும். அப்போலாம் ப்ரீத்தி பத்தி எனக்கு பெருசா எதுவும் தோணலை. அம்மா தான் ப்ரீத்தியைப் பத்தி புகழ்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்க.

எங்க வீட்ல அண்ணன், நான்னு ரெண்டு பேருமே பசங்க. அம்மாவுக்கு பொண்ணுன்னா அவ்ளோ பிடிக்கும். 'பொண்ணுங்கதான்டா வீட்டுக்கு அழகு. அவங்க அலங்காரமும், கொலுசு சத்தமும் வீட்டையே நிறைக்கும்'னு சொல்வாங்க.

இன்னும் வெளிப்படையா சொல்லணும்னா நான் ப்ரீத்தியை லவ் பண்ண காரணமே என் அம்மாதான்.

'ப்ரீத்தி எவ்ளோ அழகு பாருடா. அவ சிரிப்பும், நடக்குற ஸ்டைலும் எப்படி இருக்கு?'ன்னு என்னை சைட் அடிக்க என் அம்மாதான் தூண்டினாங்கன்னு கூட சொல்லலாம்.

'நானே கண்ணு வெச்சுடறேன்'னு ப்ரீத்திக்கு சுத்தி போடும்போதெல்லாம் இமைக்காமல் அப்படியே ப்ரீத்தியைப் பார்த்து உறைந்துபோய் நின்னிருக்கேன்.

காலேஜ் சேர்ந்த்தும் ப்ரீத்தி இன்னும் அழகா தெரிஞ்சா. ஒரு நாள்... பிங்க் கலர் லேடி பேர்ட் சைக்கிளைத் துடைத்தபடி ஷர்ட்டும், லெக்கின்ஸும் அணிந்த் ப்ரீத்தியை நான் தற்செயலா பார்த்தபோது அப்படியே க்ளீன் போல்ட்.

என்னாச்சுன்னு எனக்கே தெரியல. அவள் அருகிருப்பு எனக்குள் இன்ப அவஸ்தையைக் கொடுத்தது.

லூஸூப் பெண்ணே லூஸுப் பெண்ணே பாடல் அப்போ பேய் ஹிட். அவளை பார்க்கும்போதெல்லாம் அந்தப் பாடலை ஒலிக்க விட்டு செல்போனை அதிரச் செய்தேன்.

என்னாச்சு இவனுக்குன்னு கலவரமாய் பார்த்துக்கிட்டே என் நிலவரம் புரியாமல் கடந்து போனா.

ஒரு கட்டத்தில் அவள் அம்மாவிடமே நான் இப்படில்லாம் பண்றேன்னு சொல்லிட்டா.

'கௌதம் நல்ல பையன். உன்னை டீஸ் பண்ணமாட்டான்'னு அத்தை எனக்கு கான்டக்ட் சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்கன்னா அதை விட என்ன சந்தோஷம் இருக்க முடியும்?

அத்தைன்னு ப்ரீத்தி அம்மாவைதான் சொல்றேன்.

அப்புறம் 'செஸ் கற்றுக்கொடு கௌதம்'னு என் முன்னாடி வந்து நின்னா.

நட்ட நடு ஹாலில் செஸ் போர்டு வைத்தபடி அரட்டையும் சிரிப்புமாய் விளையாடினோம். அவளும் மாவட்ட, மாநில அளவில் பரிசுகளைக் குவிச்சா.

இதுக்கு கௌதம் தான் காரணம்னு அவ வீட்ல சொல்லி சந்தோஷப்பட்டாங்க.

நான் இன்ஜினீயரிங் படிச்சு வேலைக்குப் போகும்போது ஏற்பட்ட பரவசத்தைக் காட்டிலும். அவளுக்கு அந்த வயதில் கோச் ஆன பரவசம்தான் அதிகம்.

நாளுக்கு நாள் எங்கள் சிநேகம் வளர்ந்தது. இந்த தருணத்தில்தான் நான் நொய்டாவில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போ வரை இது டபுள் சைட் காதலா மாறும்னு சத்தியமா நம்பல நான்.

''நீ போறப்ப சொல்லிக்காம போய்டு. கடைசி நேரத்துல நீ போறதை என்னால பார்க்க முடியாது''னு ப்ரீத்தி சொல்லிட்டா.

நானும் சொல்லிக்காம நொய்டா வந்துவிட்டேன்.

இரண்டு நாள் பயணக் களைப்பில் அசந்து தூங்கி மறுநாள் காலை அம்மாவிடம் பேசினேன்.

அம்மாதான் பேசிக்கொண்டே ப்ரீத்தி வீட்டுக்கு போனாங்க.

ப்ரீத்தி அப்பா பேசினார். 'என்ன கௌதம். ப்ரீத்திகிட்ட சொல்லிக்காம போய்ட்ட? ரெண்டு நாளா அழுதழுது காய்ச்சலே வந்துடுச்சு. இந்தா பேசு' என்றார்.

அவர் அப்படி பேசியதும் கேரக்டர் ஆர்டிஸ்ட் நரேன் முகம் அனிச்சையாய் மனசுக்குள் வந்துபோனது. ஏன் என்று தெரியவில்லை.

அவள் பேசினாள்.

'என் கிட்ட சொல்லாம, என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டல்ல'... சிணுங்கினாள். சமாதானம் செய்தேன்.

வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய காசில் அவசரத்துக்கு ஒரு சிம் கார்டு வாங்கினேன். அவள் அக்கா மொபைலில் இருந்து அழைத்தாள். விடிய விடிய பேசினோம்.

'நான் ஏன் உனக்கு அவ்வளவு முக்கியம்?' நடுநிசியில் இப்படி ஒரு கேள்வி கேட்டேன்.

இரவுகள் எப்போதும் சுகமானவை. அதில் பொய், பூச்சு, வெறும் ஜம்பம் செய்யாமல் உள்ளதை சொல்லிவிடுவோம். போக்கு காட்டுவது, அலைய வைப்பது, சீன் போடுவது எதுவும் இரவுகளில் நடப்பதில்லை.

அவள் 'உன்னை பிடிக்கும்' என்றாள். 'ஐ ---- யூ' என்று மெசேஜ் தட்டினாள். நான் அந்த இடத்தை லவ் யூ என்று நிரப்பி ரிப்ளை தட்டினேன். அவளும் லவ் யூ சொன்னாள்.

தமிழ்ப் புத்தாண்டு சமயம் வீட்டுக்கு வந்தேன். புதிதாய் ஒரு மொபைல் வாங்கி அவள் கையில் திணித்தேன். பத்து நாட்கள் நெருக்கமும், கிறக்குமாய் பார்வையால் காதலித்தோம்.

தினமும் தலையணைக்குள் மொபைல் புதைத்து தூங்குபவள் அன்றைக்கு அலட்சியமாய் இருந்துவிட்டாள். அவள் அம்மா பார்த்துவிட்டார்.

யாருக்கும் தெரியாமல் ப்ரீத்தி மொபைல் பயன்படுத்துவது தெரிந்துவிட்டது. அதைக் கையில் எடுப்பதற்குள் சுதாரித்து எழுந்த ப்ரீத்தி மெசேஜை டெலீட் செய்தாள்.

அவள் அப்பாவுக்கு விஷயம் தெரிந்தது. மொபைல் கால் ரிஜிஸ்டர் பார்த்தார். செல்லம் என்று இருந்த நம்பருக்கு கால் செய்தார்.

இது எதுவும் தெரியாமல் நான் காலையிலேயே குட் மார்னிங் செல்லம் என்று சொல்லி வாசலை நோக்கி ஓடிவந்தேன்.

மாடியில் இருந்த ப்ரீத்தியின் அப்பா நான்தான் அவளின் செல்லம் என்பதைக் கண்டுகொண்டார். கான்டாக்ட் சர்டிஃபிகேட் கொடுத்த அவள் அம்மா இப்போது என்னை இலக்கணமே இல்லாமல் திட்ட ஆரம்பித்தார்.

இரு வீட்டுக்கும் பஞ்சாயத்து நடந்தது.

நான் கண்டுகொள்ளாமல் சத்தமில்லாமல் ப்ரீத்தியைப் பார்த்து பேசினேன். ப்ரீத்தியின் அம்மா தான் ஒரு டீச்சர் என்பதை அவளுக்கு பிரம்படி கொடுத்துதான் நிரூபிக்க வேண்டுமா? என்று நொந்துகொண்டேன்.

கட்டிலுக்கடியில் இரண்டு பிரம்புகள் உடைந்து கிடந்தன.

'ரொம்ப அடிச்சுட்டாங்களாடா' என்றேன்.

'இல்லை' என்று எனக்காக சொல்வான்னு எதிர்பார்த்தேன்.

'முடியலைடா' என அழுதுவிட்டாள்.

அதற்குப் பிறகு ப்ரீத்தியை மாமா வீட்டுக்கு அனுப்பினார்கள். நான் விடுமுறை முடிந்து நொய்டா சென்றேன். அடுத்த ஆறு மாதத்தில் ஊருக்கு வந்தேன். வீட்டை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.

ஒருவழியாக 10 நாட்கள் அலைந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் அன்புக்கரசியை அனுப்பி அட்ரஸ் கண்டுபிடிக்கச் செய்தேன். தூது அனுப்பினேன்.

ஆனால், அவள் அங்கு இல்லை. தூரமாய் இருக்க வேண்டும் என்று மாமா வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மாமா வீட்டைக் கண்டுபிடித்து நேரில் போய் நின்றேன்.

''இது செட்டாகாது கௌதம். நாம விட்டுடலாம்.''

''ஏன்?''

''என் அப்பா, அம்மாவுக்கு உன்னை பார்க்கமாட்டேன், உன் கூட பேசமாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.''

''உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சொன்னியே... நான் நொய்டாவுல இருக்கும்போது இப்பவே என்னையே கூட்டிட்டு போய்டு சொன்ன?''

''நான் சொன்ன நேரத்துல நீ வரலை.''

''இப்போ வந்துட்டேனே?''

''வேணாம் கௌதம். இப்போ அது சரியாபடல.. என் அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எந்த அவமானத்தையும் தேடிக் கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.''

''நாம பழகினது?''

''கெட்ட கனவா நெனைச்சு மறந்துடுறேன்.''

''ப்ரீத்தி.''

''ஸாரி கௌதம்...''

இதுதான் எங்கள் கடைசி உரையாடல்.

ப்ரீத்தி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அவள் எப்படி இருப்பாள்? இதற்கு நீங்கள் 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்க்க வேண்டும்.

ஜெஸ்ஸி தான் ப்ரீத்தி. ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் த்ரிஷா சிம்புவின் வீட்டு மாடியில் இருப்பார்... என் தேவதை எதிர்வீடு.

என் பொணத்தை பார்த்துட்டு நீ வேணா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கோ என்று ஜெஸ்ஸியின் அப்பா சொல்வார். ப்ரீத்தியின் அப்பாவும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான் சொன்னார்.

என் ஜெஸ்ஸியும் அப்படிதான். என்னை மறந்துவிடுவதாக பெற்றோரிடம் சொல்லியிருக்கிறாள். அப்படி என்ன காரணம்? எதுவும் இல்லைதான். ஆனால், அவள் பிரச்சினையில் இருக்கும்போது என்னால் ஓடிவர முடியவில்லை. அதுதான்... பெண்களால் எப்படி இப்படி பெத்தவங்களுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிய முடிகிறது? என்று யோசித்திருக்கிறேன்.

திரும்பத் திரும்ப, அப்பாவுக்குப் பிடிக்கலை என்று காரணம் சொல்லும் ப்ரீத்தி ஏன் சிக்கலான மனநிலையுடன் குழப்பமாக செயல்படுகிறாள்? ஜெஸ்ஸிக்கு நடந்தது என் ப்ரீத்திக்கு நடந்துவிடக்கூடாது. இதுதான் என் வேண்டுதலும்... பிரார்த்தனையும்...

மனமுருகிப் பேசிய கௌதமுக்கு ஆதரவாய் தோள் தட்டினேன்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் பிரிந்துபோன, சேர்ந்து வாழ்கிற எல்லா காதலர்களுக்குள்ளும் பல எண்ண அலைகளை எழுப்பியதை மறுக்க முடியாது.

கார்த்தியாக சிம்புவும், ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் இப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். அது கௌதம் மேனன் செய்த மேஜிக்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமா இயக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறார் சிம்பு. மாடியில் வசிக்கும் ஜெஸ்ஸியைப் பார்க்கிறார். வீட்டு ஓனர் மகள்தான் ஜெஸ்ஸி என்று தெரிகிறது. காதலில் விழுகிறார். ஃபாலோ செய்கிறார். ஆலப்புழா வரைக்கும் சென்று தேடுதல் படலம் நடத்துகிறார்.

ரயிலில் முத்தம் கொடுக்கிறார். த்ரிஷாவும் காதலில் விழுந்ததை ஒப்புக் கொள்கிறார். இருவர் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை வெடிக்கிறது. அவசர அவசரமாக த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சிம்புவிடம் அழுதபடி த்ரிஷா பேசுகிறார். இப்போது வருவது சரியா இருக்காது என்று சிம்பு சொல்கிறார். பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து சிம்பு த்ரிஷாவைத் தேடி வருகிறார்.

அப்போது த்ரிஷா - சிம்பு பேசும் கான்வர்சேஷன் இங்கு ஏராளமான காதலர்களுக்கு நடந்திருக்கும்.

''ஏன் வந்தே கார்த்திக்?''

''என்னது இந்த எஸ்எம்எஸ்?''

''நீ அங்கே இருக்குறதாலதான் அந்த எஸ்எம்எஸ் அனுப்பிச்சேன். நீ திடீர்னு வரமுடியாதுன்னு நினைச்சேன்.''

''நான் வந்துட்டேன்ல சொல்லு, எங்கே போகணும். என்ன பிரச்சினைன்னு சொல்லேன்.''

''நான் தான் உன் பிரச்சினை கார்த்திக். நான் வர்றேன்னு தப்பான டைம்ல சொல்லிட்டேன்ல. உன்னால ஒண்ணும் பண்ண முடியலைல்ல. ஒரு பத்து நிமிஷமாவது என்ன பண்றது? முடியுமான்னு யோசிச்சிருப்பல்ல? அது இருக்கக்கூடாது கார்த்திக்.

என்னால உனக்கு எந்த கஷ்டமும் இருக்ககூடாது இது எப்பவுமே இப்படிதான் இருக்கும்னு தெரியுது எனக்கு. இது மாறாது.

அன்னைக்கு வரணும்னுதான் தோணுச்சு. ஆனா, அந்த ஒரு நொடி போய்டுச்சு கார்த்திக்.

தட் மொமண்ட் இஸ் கான்.

இன்னைக்கு இதை விட்டுடலாம்னு தோணுது. இல்லை நிச்சயமா சொல்றேன். இது முடிஞ்சு போச்சு கார்த்திக்."

நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். ஆனா நீ சீரியஸாவே எடுத்துக்கலை. ஐ டெட் ஃபாலின் லவ் வித் யூ. ஆனா வேண்டாம்னு சொன்னேன்ல…

நீ என் பின்னாடி சுத்தலைன்னா நான் என் பாட்டுக்கு சும்மா உக்காந்திருப்பேன். அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கேயாவது போயிருப்பேன்.

நீ ஏன் பிடிச்சுருக்குன்னு சொன்ன?

ஏன் என்னை விரட்டி விரட்டி லவ் பண்ண கார்த்திக்?

இது பீஸ்ஃபுல்லா இல்லை. வேணாம் கார்த்திக். மறந்திடு. நானும் மறந்திடுறேன்.''



''ஜெஸ்ஸி... பைத்தியமா உனக்கு?

என்னாச்சுன்னு இந்த முடிவு? ஒண்ணுமே நடக்கலையே?''



''நீ எனக்காக வெயிட் பண்ணாதே. அவங்க என்னை வெறுக்குறதை விட நீ என்னை வெறுக்குறது பெட்டர்னு நினைக்குறேன். விட்டுடு கார்த்தி. என்னை விட்டுடு ப்ளீஸ்.

சத்தியமா சொல்றேன் என்னை விட்டுடு கார்த்திக்.''

''உன்னை விடவே முடியாது ஜெஸ்ஸி.''

''நான் இப்படிதான், எனக்கு என்ன வேணும்னு எனக்கே தெரியாது. இந்த வலி எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.''



சிம்பு - த்ரிஷா பிரிவுக்குப் பிறகு... அமெரிக்காவில் படம் இயக்கும் சிம்பு யதேச்ச்சையாக த்ரிஷாவைப் பார்க்கிறார்.

பார்க் காட்சியில் சிம்பு - த்ரிஷா பேசுவது அவ்வளவு அழகு.

''உன் லைஃப்ல இன்னொரு பொண்ணு இருக்கால்ல... அவளைப் பத்தி சொல்லு கார்த்திக்...''

''அவ நல்ல ஹைட் ஜெஸ்ஸி... கர்லி ஹேர். ஃபுல்லா இல்ல. கொஞ்சம் இங்க இருந்து மட்டும்..

ஒரு மாதிரி சிரிப்பா இருக்கும், அவ நடக்கும்போது.. நல்ல வாய்ஸ் அவளுக்கு.

கெட்ட வார்த்தை பேசினா அவளுக்கு புடிக்காது..

சேரிதான் நிறைய கட்டுவா..

அதுவே ஒரு வித்தியாசம்தான்.. ஸ்லிம். சிம்பிள். மேக்கப்லாம் போடமாட்டா... வெரி பியூட்டிஃபுல்.

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்...

என்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும்..

ம்..பைக்ல என்கூட நிறைய சுத்தி இருக்கா..

(இதுவரைக்கும் சிம்புவை மட்டுமே க்ளோஸ் அப்பில் காட்டுவார்கள்.)

படம் பாக்க அவளுக்கு புடிக்காது...( சிம்பு சொல்லும் போது த்ரிஷாவை க்ளோஸ் அப்-ல காட்டுவாங்க.)





நான் கிஸ் பண்ணியிருக்கேன் அவளை..

நிறைய பேசுவா..

ஒரு மலையாள வாசம் அப்படியே வீசும் அவ பேச்சில..

அதுக்கே காலி நான்..

வெறுமனே கட்டிபுடிச்சிட்டு மூணு மணிநேரம் உட்கார்ந்திருக்கேன்..

அவ கால தொட்டிருக்கேன்...

அவ பேரு... ஜெஸ்ஸி...ஜெஸ்ஸி..

அவதான் இருக்கா இன்னும் என் வாழ்க்கையில..

உன்கிட்ட இருந்து போனதுக்கப்புறம் அவதான் எல்லாம்..

ஃபர்ஸ்ட் லவ் ஜெஸ்ஸி

அவ்ளோ ஈஸியா போகாது..

ஆனா அவளுக்கு நான் இல்ல..

அவளுக்கு அவ அப்பானா ரொம்ப புடிக்கும்..

தப்பா சொல்லல.. நல்ல விஷயம்தான்..

எவ்ளோ பேர் அந்தமாதிரி இந்த காலத்தில இருக்கான்...

அவர் என்ன ஒத்துக்கமாட்டர்னு தெரிஞ்சே என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..

கல்யாணம் பண்ணிகிட்டானு நினைக்கிறேன்..

அப்படி இருந்தாலும் என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..''



இந்த காட்சி இப்போதும் பிரிந்த காதலர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

ஃபீலிங்கில் பியானோ வாசிக்க வைத்துவிட்டேனா?



'உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உன்னை லவ் பண்றேன். ஆனா, நீ எனக்கு வேண்டாம்’ என்று சொல்லும் எத்தனை ஜெஸ்ஸிகள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்?

அப்பா, அம்மா தன்னை வெறுப்பதை விட காதலன் தன்னை வெறுத்தால் பரவாயில்லை என்று நினைத்து வெறுக்க வேண்டும் என்பதற்காகவே அலட்சியம் செய்யும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?

சம கால காதல் பதிவை அப்படியே அச்சு அசலாய் பதிவு செய்த விதத்தில் கௌதம் மேனன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஜீவனுள்ள காதல் காட்சிகளில் மனதை லயிக்கச் செய்கிறார்.

ஆனால், 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ஆகப் பெரிய சிக்கல் கிளைமாக்ஸ்தான். மூணு விதமான கிளைமாக்ஸ் பாதி ரசிகர்களுக்குப் புரியாமலே போய்விட்டது. அதற்காகவே இரண்டாம் முறையாக படம் பார்த்து புரிந்துகொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்தியில் பிளாப் ஆனதற்கு சொல்லப்படும் மிக முக்கிய காரணம் கிளைமாக்ஸ் தான் என சொல்லப்படுகிறது.

கேரளா வீடு, தென்னை மரங்கள், போட் ஹவுஸ், பாடல் காட்சிகள், லொக்கேஷன்கள் என மனோஜ் பரமஹம்சாவின் கேமரா எல்லா அழகையும் அள்ளி வந்திருக்கும்.

மன்னிப்பாயா பாடல் உருக வைத்தது. ரஹ்மான் இசை மூலம் ரசிகர்களுக்கு காதலைக் கடத்தினார்.

சிம்பு, த்ரிஷா ஏற்கெனவே அலை படத்தில் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படத்தில் ஹிட் ஜோடி ஆனார்கள். விரல் வித்தைக்காரர் சிம்பு இவ்வளவு அடக்கமாக அழகாக கிளாஸிக் நடிப்பை எந்த படத்திலும் கொடுத்ததில்லை.

காட்டன் சேலையில் படுபாந்தமாக த்ரிஷாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சிரிப்பும், தவிப்புமாக த்ரிஷா நடிப்பில் ஸ்கோர் செய்த படம். விடிவி கணேஷுக்கு அப்ளாஸ் அள்ளிய படம்.

சிம்புவின் தங்கையாக நடித்த தீப்தி 'துப்பாக்கி'யில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். பிறகு ஹீரோயினாக சின்ன சின்ன படங்களில் தெறமை காட்டியிருக்கிறார்.

சிம்பு - த்ரிஷா - கௌதம் மேனன் கெரியரில் மிக முக்கியமான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா.'

ஆனால், நம்ம கௌதம் இப்போது உற்சாகமாக இருக்கிறான்.

காரணம், சமீபத்தில் ஓர் அதிசயம் நடந்தது.

திருமண வைபவ நிகழ்வில் கௌதமின் அம்மாவிடம் ப்ரீத்தி பேசியிருக்கிறாள். கௌதம் நம்பர் கேட்டிருக்கிறாள்.

கௌதம் அம்மாவுக்கு அவன் நம்பர் தெரியவில்லை. இதை அறிந்த கௌதம் ஃபேஸ்புக்கில் நம்பரை மெசேஜ் அனுப்பினான்.

அடுத்த நிமிடமே கால் செய்தாள்.

காதலர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கௌதம் ஃபேன்டஸி கான்செப்ட்டில் சொன்ன அந்த செகண்ட் சான்ஸ் கிடைத்தே விட்டது.

இந்த காதலர்கள் இனிதாய் இல்லறத்தில் நுழைய நான் முதல் ஆளாய் வாழ்த்து சொல்லிவிட்டேன். நீங்கள்?

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்