எல்லீஸ் துரை கல்லறை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுமா?- திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து  தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேயர் 

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்

200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸின் கல்லறை மற்றும் கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாக பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தற்ப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

வள்ளுவர் உருவப்படம் குறித்த சர்ச்சைகள் எழும்பிவரும் நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா வந்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால்தான் சமயப்பணி செய்யமுடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இதற்காக 1812-ல் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் (The Madras College) நிறுவப்பட்டது.

இந்தக் கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis). தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு தன்னுடைய மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழின் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப் படுத்திக்கொண்டார்.

கி.பி.1796-ல் கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தராகச் சேர்ந்த எல்லீஸ் படிப்படியாக உயர்ந்து 1810 இல் சென்னையின் ஆட்சியர் ஆனார். சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லீஸ் நகர் இவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.

இதுகுறித்து, தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் ராஜகுரு கூறியதாவது:

இந்திய நாட்டு மொழிகளை ஆங்கிலேயருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் எல்லீஸ் பிரபுவால் 'சென்னைக் கல்விச் சங்கம்' நிறுவப்பட்டது.

இதுவே பின்னாளில் எல்லீஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியுள்ளது. இக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப் பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார்.

திருவள்ளுவர் உருவ தங்கக் காசு..

எல்லீஸ் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துடன் திருக்ககுறளின் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

திருக்குறளைப் படித்ததன் பயனாக 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது. சென்னையின் ஆட்சியராக இருந்தபோது மின்ட் சாலையின் தலைவராகவும் இருந்ததால் திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து அவருக்கு தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்திற்குத் தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார்.

வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன் முதலில் கூறியவரும் இவரே. எல்லீசுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி இராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தில் இறுதிக்காலம்

1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவினால் மூன்றுமாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது, தமிழாய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும் பின்னர் அங்கிருந்து ராமநாதபுரத்துக்கும் சென்றார். ராமநாதபுரத்தில் இருந்தபோது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.

கி.பி.1819, மார்ச் 6 அன்று ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார். மருந்துக்குப் பதிலாக விஷத்தை உட்கொண்டதால் இறந்ததாக இவர் இறக்கும் தறுவாயில் எழுதிய கடிதங்கள் மூலம் தெரியவருகிறது.

இவருடைய கல்லறை ராமநாதபுரம் வடக்குத்தெருவில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் உள்ளது. அவருடைய கல்லறைக் கல்வெட்டுக்கள் தமிழில் அழகிய கவிதை வடிவிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த செய்தி சொல்லப்படுகிறது. மேலும் வெள்ளைப் பளிங்குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் தற்போது ராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ளன.

திருக்குறளை முதன்முறையாக ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸின் கல்லறை உள்ளிட்ட கல்வெட்டுக்களை பாரம்பரிய சின்னமாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்