மதுரை
பரபரப்பான இந்த வாழ்க்கையில் சாலையில் யாருக்கேனும் விபத்து நேர்ந்துவிட்டால் நம்மில் பலரும் கண்டும் காணாமல் போய்விடுகிறோம். அதிகபட்சமாக உச்சு கொட்டிவிட்டோ அல்லது இறைவா அவரைக் காப்பாற்று எனப் பிரார்த்தனையில் பரிந்துரை செய்துவிட்டோ பறந்து விடுகிறோம்.
மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் விலங்குகள் மீது நமக்கென்ன பெரிய அக்கறை இருந்துவிடப்போகிறது. அதனாலேயே பூனை, நாய், எலி என சிறுசிறு விலங்குகள் தார் சலையில் அடிபட்டுக் கிடப்பதை பெரும்பாலானோர் மிக எளிதாக நாம் கடந்து சென்று விடுகின்றனர்.
ஆனால், எல்லா மனிதர்களும் அப்படியில்லை. மனிதமும் இன்னும் முற்றிலுமாக வறண்டுவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது வழிப்போக்கரின் அக்கறையும், கால்நடை பராமரிப்புத் துறையின் உடனடி நடவடிக்கையும்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே நேற்றிரவு சுமார் 11 மணியளவில் காளை மாடு ஒன்று மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது. அம்மா என்ற அலறலோடு கீழே சரிந்த காளையின் காலில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. வலியும் கண்களில் மிரட்சியுமாக இருந்த காளையைப் பார்த்த அவ்வழியே சென்ற ஹரிஷ் என்ற இளைஞர் கால்நடைத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்த தல்லாகுளம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் முத்துராம் மற்றும் தெற்குவாசல் கால்நடை மருந்தக மருத்துவர் கங்காசுதன் ஆகிய இருவரும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதன்பிறகு நடந்ததை அரசு மருத்துவர் கங்காசுதன் விளக்கினார்.
"எங்களுக்கு 11 மணியளவில் தகவல் வந்தது. உடனே விபத்து நடந்த பகுதிக்கு மருந்து, மருத்துவ உபகரணங்களுடன் சென்றோம். காளை மாடு வலியில் அலறிக் கொண்டிருந்தது. அதன் அருகே சென்றோம். மிகவும் பயந்துபோய் இருந்தது. அதன் உரிமையாளர் அங்கு இல்லை. இருந்தாலும் யாருக்காகவும் காத்திருக்காமல் முதலுதவியை ஆரம்பித்தோம். அந்தக் காளைக்கு 2 வயது. விபத்தில், அதன் வலது பின்னங்காலின் குளம்பு பகுதி முழுவதுமாக சேதமடைந்து இருந்தது. எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியானதும் காயத்தை சுத்தம் செய்து கட்டுப்போட்டோம். மாட்டுக்கு வலி நிவாரண ஊசி அளித்ததோடு குளுக்கோஸ் ட்ரிப்ஸ் மூலம் ஏற்றினோம். ரத்தப்போக்கு நிற்பதற்காகவும் ஊசி அளித்தோம். மாடு ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும் அங்கிருந்து கிளம்பினோம்.
குளம்பு பகுதி என்பது மனிதர்களின் நகம் போன்றது சேதமடைந்தாலும் மீண்டும் வளர்ந்துவிடும். மாட்டிற்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை.
இதில் சோகம் என்னவென்றால் நாங்கள் இன்று (அக்.15) காலையில் மீண்டும் மாட்டைப் பார்க்கச் சென்ற பிறகுதான் மாட்டின் உரிமையாளர் அதைத் தேடி வருகிறார்.
பொதுவாகவே பசு, காளை வளர்ப்பவர்களுக்கு அஜாக்கிரதை அதிகமாக இருக்கிறது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலில் முந்தைய காலம்போல் கால்நடைகள் சாலையில் திரிய இயலாது. அதற்காக அவற்றை எந்நேரமும் தொழுவத்தில் கட்டிவைக்கவும் கூடாது. பசு, காளைகள், ஆடுகள், எருமைகள் என கால்நடை எதுவாக இருந்தாலும் அவற்றை உரிமையாளர் மேய்ச்சலுக்கு பாதுகாப்பான இடத்துக்கு தினமும் சில மணி நேரமாவது அழைத்துச் செல்ல வேண்டும். மாறாக தெருவில் கால்நடைகளைத் திரியவிடுவதால் அவற்றிற்கும் ஆபத்து அவற்றால் சில நேரங்களில் மனிதர்களுக்கும் ஆபத்து. கால்நடைகளை லாபம் தரும் தொழில் முதலீடாக மற்றும் பார்க்காமல் உயிரினமாகப் பார்த்தாலே இந்த சிக்கல் வராது".
இவ்வாறு மருத்துவர் கங்காசுதன் தெரிவித்தார்.
காளை அடிபட்டிருந்தது குறித்து முதன்முதலில் தகவல் சொன்ன இளைஞர் ஹரீஷ் இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளார். மாட்டின் உரிமையாளரை போலீஸார் மூலம் எச்சரித்து அனுப்புவதற்காக புகார் அளிக்கவிருப்பதாக அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago