"நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பெரிய எழுத்தாளர்களுடன் என் பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம்பெற்றிருப்பது, இத்தனை ஆண்டு கால என்னுடைய வலிகள், போராட்டம் இவற்றுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் தலைவர் அம்பேத்கர். அவர் பிறந்த தினத்தன்றுதான் நானும் பிறந்தேன். அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் என் பெயர் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது," என தன் உற்சாகமான வார்த்தைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளரும் அரங்கக் கலைஞருமான அ.ரேவதி.
பாலின அசமத்துவம் நிறைந்திருக்கும் இலக்கிய உலகில், மாற்றுப்பாலினத்தவர்கள் எழுதுவது மிக அரிது. அப்படி எழுதும் வெகு சில மாற்றுப்பாலினத்தவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குபவர் அ.ரேவதி. இவர் எழுதிய முதல் புத்தகம் 'உணர்வும் உருவமும்'. இந்தியாவில் திருநங்கைகள் குறித்து திருநங்கை ஒருவரே எழுதிய முதல் புத்தகம் என்ற பெருமைக்குரியது. அதன்பிறகு, தன் சுயசரிதை குறித்த புத்தகத்தையும், சமூக செயற்பாட்டு வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார் அ.ரேவதி.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரின் பெயர் இடம்பெற்றிருப்பது தான், ரேவதியின் மகிழ்ச்சிக்குக் காரணம்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முன்பு, அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர் என, ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர் ஒருவரின் பெயர் கூட இல்லை. அதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 1989-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழக மாணவிகள் சிலர், பிராண்டே, டிக்கின்சன், மேரி ஃபிரான்ஸே உள்ளிட்ட பெண் எழுத்தாளர்களின் பெயர்களை 140 அடி நீளமுள்ள பேனர்களில் எழுதி, ஆண் எழுத்தாளர்களின் பெயர்களுக்கு மேலே நிறுத்தினர். ஆனால், பெண் எழுத்தாளர்களின் பெயர்களைத் தாங்கி நின்றிருந்த அந்த பேனர் இறக்கப்பட்டு விட்டது.
இப்போது, 30 ஆண்டுகள் கழித்து, அப்போராட்டத்தின் நினைவைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி, அதே பட்லர் நூலகத்தில், ஆண் எழுத்தாளர்களின் பெயர்களுக்கு மேலே உலகப் புகழ்பெற்ற, பெரிதும் அறியப்படுகின்ற 8 பெண் எழுத்தாளர்களின் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன. மாயா ஏஞ்சலோ, குளோரியா அன்சால்டுவா, டயானா சாங், சோரா நீல் ஹர்ஸ்டன், டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே உள்ளிட்ட எழுத்தாளர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அ.ரேவதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பட்லர் நூலகத்தில் இடம்பெற்றுள்ள பெண் எழுத்தாளர்களின் பெயர்கள்
பெண்ணுரிமை, பாலின சமத்துவத்தைப் போற்றும் இத்தகைய எழுத்தாளர்களை படித்தறிய வேண்டும் என்பதற்காக, இவர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அப்பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்லர் நூலகத்தில் தன் பெயர் இடம் பெற்றுள்ளது இரண்டு நாட்கள் கழித்துதான் ரேவதிக்குத் தெரியவந்துள்ளது.
"கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படிக்கும் நண்பர் ஒருவர் தான் இந்த விஷயத்தை எனக்குத் தெரியப்படுத்தினார். நான் ஏதோ நூலகத்தில் சிறியதாக வைத்திருப்பார்கள் என நினைத்தேன். அதன் பிறகு புகைப்படங்களைப் பார்த்தவுடன்தான் தெரிந்தது. கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. நிதி குறைவாக இருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகம் நிதியுதவி செய்தால் நேரில் சென்று பார்க்கலாம்," என்று தன் விருப்பத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ரேவதி.
நாமக்கல் மாவட்டத்தில், துரைசாமி என்ற ஆண் பெயரில் சிறுவயதில் அறியப்பட்டவர் ரேவதி. 5-ம் வகுப்புப் படிக்கும் போதே தன்னுள் பாலின மாற்றத்தை உணர ஆரம்பித்தார். பள்ளியிலும், வசிக்கும் இடத்திலும் பல வித கேலிகளுக்கும் சீண்டல்களுக்கும் ஆளானார். பெற்றோராலும், சகோதரர்களாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். படிப்படியாக, குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி, மாற்றுப் பாலினத்தவரின் உரிமைக்காகச் செயல்பட்டுவரும் ‘சங்கமா’ அமைப்பில் 1999-ல் உதவியாளராகச் சேர்ந்து படிப்படியாகப் பல பொறுப்புகளை ஏற்று அதன் இயக்குநராகவும் சில காலம் பணியாற்றிவர் ரேவதி. அங்கு பணியாற்றும் போதுதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ரேவதிக்குத் தோன்றியுள்ளது.
"சங்கமா அமைப்பில் உள்ள நூலகத்தில், மாற்றுப்பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து வெளிநாட்டவர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களே அதிகம் இருந்தன. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எழுதிய புத்தகங்கள் கண்ணுக்குப் படவே இல்லை. அதிலும், உழைக்கும் வர்க்க மக்கள், ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள் மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்து புரிந்துகொள்ளும் வகையிலான புத்தகங்களே இல்லை," என்கிறார் ரேவதி.
அதிலிருந்து தான் ரேவதி எழுத ஆரம்பித்தார். திருநங்கைகள் பலரின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்தும் வகையில், 2004-ம் ஆண்டில் 'உணர்வும் உருவமும்' என்ற தொகுப்பு நூலை எழுதினார் ரேவதி. அந்தப் புத்தகம் தமிழ்நாடு முழுவதும் பரவலான விவாதத்தை எழுப்பியது. இந்தியாவில் திருநங்கைகள் குறித்து திருநங்கை ஒருவரே எழுதிய முதல் புத்தகம் என இதனைச் சொல்லலாம். இலக்கியக் கலை பெருமன்றங்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்டவற்றில் இப்புத்தகம் குறித்த மதிப்புரை, வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
"முதல் புத்தகம் வெளியான சமயத்தில்தான் நான் இன்னும் ஆழமாக எழுதவில்லையோ என்ற எண்ணம் வந்தது. அந்தப் புத்தகத்துக்குப் பிறகு, என்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், 'டெஹல்கா' பத்திரிகையில் 'உணர்வும் உருவமும்' புத்தகம் குறித்து கட்டுரை வெளிவந்தது. அதனைப் பார்த்துவிட்டு 'பெங்குவின்' பதிப்பகம், அப்புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட அனுமதி கேட்டனர். நான் என்னுடைய சுயசரிதையை நேரடியாக ஆங்கிலத்தில் வெளியிடுமாறு 'பெங்குவின்' பதிப்பகத்திடம் தெரிவித்தேன். அப்படி வெளிவந்தது தான் 'The Truth about me: A Hijra life story' என தான் கடந்து வந்த பாதையை நினைவூட்டுகிறார் ரேவதி.
'The Truth about me: A Hijra life story' புத்தகம், ரேவதி தமிழில் எழுத, எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான வ.கீதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியானது. தமிழ் புத்தகம் 'வெள்ளை மொழி' என்ற பெயரில் வெளியானது. தனக்கு ஆங்கிலம் எழுதவோ, பேசவோ தெரியாது என்பதில், எழுத்தாளர் ரேவதிக்கு எந்தவொரு தாழ்வு மனப்பான்மையும் இல்லை.
"இலங்கையில் உள்ள ஒருவர்தான் என்னுடைய சுயசரிதைக்கு 'வெள்ளை மொழி' என்ற பெயரைப் பரிந்துரைத்தார். அந்தப் பெயர், என் சுயசரிதைக்கு 100 சதவீதம் பொருத்தமானது என கருதுகிறேன். மனதைத் திறந்து பொய் இல்லாமல் அந்தப் புத்தகத்தை நான் எழுதியிருந்தேன்" எனக்கூறும் ரேவதி, 2016-ல் 'A life in trans activism' என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை, ரேவதியின் சுயசரிதையின் நீட்சி என்றே சொல்லலாம். தான் ஒரு சமூகச் செயற்பாட்டாளராக மாறியது எப்படி, திருநம்பிகளின் வாழ்க்கை, தன் தற்போதைய நிலை என பலவற்றை அப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழில் சொல்லச்சொல்ல நந்தினி முரளி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க 'சுபன்' பதிப்பகம் அப்புத்தகத்தை வெளியிட்டது.
தன் எழுத்துப் பயணம், அதன் தாக்கம், இலக்கிய உலகில் அவருக்கான அங்கீகாரம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டார் ரேவதி.
"எழுத வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பத்தில் எனக்கு இல்லை. ஏனென்றால் எனக்கு நிறைய அச்சங்கள் இருந்தன. இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்ற பயம் இருந்தது. ஆரம்பத்தில் சிறுசிறு கவிதைகள் எழுதினேன். பல நிகழ்ச்சிகளில் பேசுவதற்காக எழுதிக்கொண்டு செல்வேன். அப்படி எழுத ஆரம்பித்ததுதான். அந்த சமயம், எழுத்தாளர் பாமாவின் 'கருக்கு' நாவலைப் படித்தேன். பாமாதான் என் எழுத்துக்கான ஊக்கம்.
என்னுடைய எழுத்தை பலரும் புது இலக்கணம் என்கின்றனர். வெகுசிலர் "இப்படியெல்லாம் எழுதுவாங்களா?" என்று கேட்டனர். எப்படி உங்களிடம் பேசுகிறேனோ அப்படித்தான் என்னுடைய எழுத்தும் இருக்கும். "ஆலமரம் இருந்தது, அதில் இரண்டு கிளிகள் இருந்தன, பலத்த காற்று வீசியது", என நாவல் மாதிரியெல்லாம் எனக்கு எழுத வராது.
என்னுடைய எழுத்தில் எழுத்துப் பிழைகள் இருக்கும். பெருமாள் முருகன், வ.கீதா போன்ற எழுத்தாளர்கள் சரிசெய்து கொடுப்பார்கள். பெருமாள் முருகன் என்னுடைய இரு புத்தகங்களுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்திருக்கின்றனர்.
பல பல்கலைக்கழகங்களில் என்னுடைய புத்தகங்களை ஆய்வு நூலாகப் பயன்படுத்துகின்றனர். மாணவர்களிடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம்" என்கிறார் ரேவதி.
தன் சுயசரிதையை பல மேடைகளில் ஓரங்க நாடகமாகவும் அரங்கேற்றியிருக்கிறார் ரேவதி. அரங்கக் கலைஞரும் பயிற்சியாளருமான மங்கை, ரேவதிக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
அரங்கக் கலைஞராக அ.ரேவதி
"தமிழ்நாட்டில் ஆண், பெண் எழுத்தாளர்களுக்குத்தான் விருதுகள் வழங்குகின்றனர். திருநங்கைகளைக் கவுரவிக்க வேண்டும். எங்கேயோ உள்ள கனடாவில் எனக்கு விருது வழங்குகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் என்னுடைய பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் அங்கீகரிப்பதில்லை" என மாற்றுப்பாலினத்தவர்கள் இலக்கிய உலகுக்கு வருவதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் ரேவதி.
மாற்றுப்பாலினத்தவர்களுக்கான நீதிக்காக மட்டுமல்லாமல், சாதிய அநீதிகளுக்காகவும் போராடும் சமூகச் செயற்பாட்டாளராகக் களமாடுகிறார் ரேவதி.
"தன் எழுத்தை ஆயுதமாகக் கருதுவதாகக் கூறும் ரேவதி, "சமூக மாற்றத்திற்காகவும், திருநங்கைகள் குறித்த புரிதல் ஏற்படுவதற்காகவும் என் எழுத்தை சமூக மாற்றத்துக்கான பிரச்சாரமாக நினைக்கிறேன்," என்று முடிக்கிறார் ரேவதி.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago