| மாற்று தேடியந்திரமாக நிலைபெற விரும்பும் தேடியந்திரம். முடிவுகளை வழங்கும் விதத்தில் புதிய அணுகுமுறையுடன் பயனாளிகளை பின் தொடராமல் இருப்பது இதன் பலம் |
ஆசிய தேடியந்திரம் தேவையா? சாத்தியமா? இந்தக் கேள்வியே தேவையா என்று கூட இணையவாசிகளுக்கு தோன்றலாம். ஆனால் தேடியந்திர உலகுக்கு புதிய வரவான குவான்ட்-ஐ அறிமுகம் செய்து கொள்ளும்போது இதுபோன்ற கேள்விகள் தானாக எழும்.
குவான்ட்... பிரெஞ்சு தேடியந்திரம். அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பொது தேடியந்திரம். கூகுளில் தேடுவது போல இதிலும் தேடலாம். அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களால் கூகுளுக்கு மாற்றாக விளங்க முயற்சிக்கும் தேடியந்திரம் என குவான்ட் வர்ணிக்கப்பட்டு அறிமுக நிலையிலேயே கவனத்தை ஈர்த்தது.
தேடியந்திர உலகில் எளிதாக கவனத்தை ஈர்ப்பதற்கான வழி கூகுளுக்கு மாற்றாக விளங்க கூடிய போட்டி தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்வதுதான். ஆனால் தேடியந்திர உலகில் மண்ணை கவ்வுவதற்கும் இதைவிட எளிதான வழி இருக்க முடியாது. அடுத்த கூகுள் என வர்ணிக்கப்பட்ட எண்ணற்ற தேடியந்திரங்கள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன.
தேடியந்திர உலகில் கூகுள் இடத்தை குறி வைப்பது எளிது. ஆனால், அதை வெற்றிக்கொள்வது கடினம். ஆனால் குவான்ட் கூகுளை வெல்லும் நோக்கம் கொண்டிருக்கவில்லை. கூகுளுக்கான மாற்று வாய்ப்பை வழங்குவதற்காக உருவெடுத்துள்ள தேடியந்திரம்.
தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் தேவை என்கிறார் குவான்ட் நிறுவனர்களில் ஒருவரான ழான் மானுவல் ரோசன் Jean Manuel Rozan).
உலகிலேயே ஐரோப்பாவில்தான் இணையம் என்றால் கூகுள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தேடியந்திர சந்தையில் 85 சதவீதம் கூகுள் வசம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவரது கவலை நியாயமானது. எனவே தான் கூகுளுக்கு மாற்றாக விளங்க கூடிய வகையில் குவான்ட் தேடியந்திரம் உருவாக்கப்பட்டது. நிதித்துறையை சேர்ந்தவரான ரோசன், கம்ப்யூட்டர் துறையை சேர்ந்த எரிக் லியாண்டிரி (Éric Léandri ) இணைந்து இந்த தேடியந்திரத்தை துவக்கினர்.
2013-ம் ஆண்டின் துவக்கத்தில் முன்னோட்ட வடிவில் அறிமுகமாகி அடுத்த சில மாதங்களில் முழு அளவில் அறிமுகமானது. 2014-ல் ஜெர்மனியில் அறிமுகமானது.
அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் கணிசமாகவே கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகவே இணைய உலகில் அதிலும் குறிப்பாக தேடலில் கூகுளின் ஆதிக்கம் தொடர்பாக ஐரோப்பாவில் அதிருப்தி நிலவுகிறது. கூகுள் பயனாளிகள் தேடும் விதம் தொடர்பான தகவல்களை கூகுள் சேகரிப்பது குறித்த அதிருப்தி மற்றும் தனியுரிமை பாதிக்கப்படுவது தொடர்பான அச்சம் எல்லாமும் சேர்ந்து மாற்று தேடியந்திரத்துக்கான அவசியத்தை உணர வைத்துள்ளது.
இந்த உணர்வை சாதகமாக்கி கொள்ள முடியும் என்பது குவான்ட் குழுவின் நம்பிக்கை. அதன் தேடல் கொள்கை மற்றும் தேடல்நுட்பம் இரண்டுமே இதற்கு கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறது. தேடல் கொள்கையை பொறுத்தவரை இணையவாசிகள் தனி உரிமையை மதிக்கும் வகையில் அவர்கள் தேடல் தொடர்பான தகவல்களை திரட்டுவதில்லை என்று குவான்ட் சொல்கிறது. எனவே, குவான்டை பயன்படுத்தும் நபர் தேடல் குமிழுக்குள் சிக்கி கொள்ள நேராது என்றும் உறுதி அளிக்கிறது. அதாவது, ஒருவரின் தேடல் வரலாறு குறிப்பெடுக்கப்பட்டு அவரது விருப்பம் என கணிக்கப்பட்டதன் அடிப்படையில் தேடல் முடிவுகள் பட்டியலிடப்படாமல் எல்லோருக்கும் தோன்றும் தேடல் முடிவுகளே குறிப்பிட்ட ஒவ்வொருவருக்கும் தோன்றும் என பொருள். (தேடல் குமிழ் பற்றி விரிவான பார்வை தனியே).
அதோடு ஒவ்வொரு நாட்டுக்கும் என குவான்ட் தனியான தேடல் முடிவுகளை வழங்குகிறது. ஒரு நாட்டில் இருக்கும் எல்லோரும் ஒரே தேடல் முடிவுகளை பார்க்கலாம். ஸ்னோடன் அம்பலத்திற்கு பிறகு இணையத்தில் தனி உரிமை பற்றிய கவலை மற்றும் அக்கறை அதிகரித்துள்ள நிலையில், இந்த தன்மை மிகவும் முக்கியமானது.
குவான்டின் ஜனனத்தை நியாயப்படுத்த இவை போதுமானது. ஆனால் அதன் இருப்பை நியாயப்படுத்த அதனிடம் உள்ள அம்சங்கள் இருக்கின்றனவா? அதன் தேடல் நுட்பம் எந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்தது. அது மேம்பட்டதா? பயன் தரக்கூடியதா?
குவான்ட் தன்னை முழுமையான தேடியந்திரம் என கூறிக்கொள்ளவில்லை. ஆனால் 360 கோணத்தில் தேடல் முடிவுகளை வழங்குவதாக சொல்கிறது. டிஜிட்டல் பிரபஞ்சத்தை அப்படியே தனித்தன்மையுடன் விரிவாக அப்படியே ஒரே பக்கத்தில் கொண்டு வந்துவிடுவதாகவும் சொல்கிறது.
இந்த வார்த்தை வர்னணைக்கு பொருள் என்ன என்றால், தேடல் முடிவுகளை அதன் அனைத்து முக்கியமான அம்சங்களுடனும் ஒரே பக்கத்தில் பட்டியலிட்டு தருகிறது என்பதுதான். வலைப்பக்கங்கள், செய்திகள், சமூக ஊடக தகவல், புகைப்படங்கள் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களையும் ஒரே பக்கத்தில் அளிக்கிறது. இணையதளங்கள், செய்திகள், புகைப்படங்கள் ஆகிய வகைகளை கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான தேடியந்திரங்கள் அளித்தாலும் கூட டிவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தகவல்களையும் இணைத்து அளிப்பது என்பது கவனிக்க வேண்டிய அம்சம்தான். சமூக ஊடகங்கள் செல்வாக்கு பெற்ற நிலையில், சமூக ஊடகம் சார்ந்த தேடியந்திரங்கள் சில தோன்றினாலும் அவற்றில் பெரும்பாலானவை மறைந்துவிட்ட நிலையில், குவான்ட் தேடல் முடிவுகளில் சமூக ஊடக தகவல்களுக்கும் இடம் அளிப்பது நல்ல விஷயம். இதையே 360 கோண முடிவுகள் என்று குவான்ட் வர்ணித்துக்கொள்கிறது.
இந்த ஐந்து வகையான முடிவுகளை குவான்ட் தேடல் பக்கத்தில் முன்வைக்கும் விதம் காட்சிரீதியாக ஈர்க்ககூடியதாக சற்றே வண்ணமயமாக இருப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது.
குவான்டில் தகவல்களை தேடும்போது முடிவுகள் ஒற்றை பட்டியலாக அல்லாமல், ஐந்து பத்திகளாக வரிசையாக தோன்றுகின்றன. பச்சை வண்ணத்தில் தோன்றும் முதல் பத்தி இணையதளங்களுக்கானது. ஆரஞ்சு வண்ணத்திலான இரண்டாம் பத்தி செய்திகளுக்கானது. சிவப்பு வண்ணத்திலான 3-ம் பத்தி தேடப்படும் தகவல் தொடர்பான பொதுவான அறிமுகத்திற்கானது. இதை குவான்ட்நாலெட்ஜ் என குறிப்பிடுகிறது. இது பெரும்பாலும் விக்கிபீடியா அறிமுகங்கள்தான். நான்காவது சமூக ஊடக தகவல்களுடன் நீல நிறத்தில் தோன்றுகிறது. மஞ்சல் வண்ணத்தில் அடையாளம் காட்டப்படும் 5-வது பத்தி ஷாப்பிங்கிற்கானது.
சமூக வலைப்பின்னல் சார்ந்த தகவல்களை தனியே தேடாமல் ஒரே தேடலில் அவற்றை பெறுவதை குவான்ட் பெரிதாக சொல்கிறது.
ஆனால் ஒன்று... முடிவுகளை தேடிப்பார்க்கும்போது, இப்படி ஒரே பக்கத்தில் ஐந்து வகையான தகவல்களையும் பார்க்க முடிவது இணையவாசிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இந்த ஐந்து வண்ணங்களை குறிக்கும் வகையில் குவான்ட் லோகோவும் அழகாக இருக்கிறது.
முடிவுகள் காட்சிரீதியாக தோன்றுவதை விரும்புகிறவர்கள் நிச்சயம் இதை ரசிக்கவே செய்வார்கள். ஆனால் முடிவுகள் வழக்கமான பட்டியலில் தோன்றுவதே சரியானது என நினைப்பவர்கள் பட்டியல் பாணியில் முடிவுகளை தேர்வு செய்யும் வசதியும் இருக்கிறது. இவை தவிர வீடியோக்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். நபர்கள் பற்றிய தேடல் வசதியும் இருக்கிறது. கருத்து பரிமாற்றத்துக்கான விவாத பலகை வசதியும் இருக்கிறது. விவாத பலகை வசதியை பயன்படுத்த உறுப்பினராக சேர வேண்டும்!
முகப்பு பக்கத்தில் தேடல் கட்டத்திற்கு கீழே செய்திகளில் முக்கிய போக்குகளும் அடையாளம் காட்டப்படுகிறது. குவான்டின் தேடல் முடிவுகள் ஒரு மாற்று முயற்சிக்கு உரியதாகவே இருக்கிறது. தேடப்படும் குறிச்சொற்களை புரிந்து கொண்டு அதற்கேற்ற முடிவுகளை முன் வைக்கிறது. இந்தியாவில் இருந்து தேடும் போது கிரிக்கெட் கேப்டன் தோனி, ஜாம்பவான் சச்சின், பிரதமர் மோடி உள்ளிட்ட பதங்களுக்கு பொருத்தமான முடிவுகளை அளிக்கிறது. இந்த முடிவுகள் எந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்கிறது என்பதை அவரவர் தங்கள் தேவை மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப பரிசிலித்துக்கொள்ளலாம். ஆனால் வாங்க பரிசோதித்து பாருங்கள் என அழைப்பு விடுக்கும் வகையில் தான் இருக்கிறது.
குவான்டின் தேடல் முடிவுகளை சீர்தூக்கி பார்க்க முற்படும்போது, அது இணையத்தில் தேடித்தருவதற்கான சொந்தமான இணைய தரவு பட்டியலை வைத்திருக்கிறதா எனும் கேள்வி முக்கியமானது. அறிமுகமான காலத்தில் குவான்ட், மைக்ரோசாப்டின் பிங் தேடல் தரவு பட்டியலையே அடிப்படையாக பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சை உண்டானது. பிங் தேடலை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி மாற்று தேடியந்திரம் என்று சொல்லலாம் என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அறிமுக நிலையிலேயே இவ்வாறு செய்யப்பட்டது, குவான்ட்டுக்கான சொந்த தேடல் நுட்பம் மற்றும் அதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையிலேயே பிங் தேடல் பயன்படுத்தப்பட்டதாக குவான்ட் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து தேடும் போது வலது மூளையில் இந்திய தேசியக்கொடி மற்றும் ஆங்கில வழி தேடல் அடையாளம் காட்டப்படுகிறது. குவான்ட் நிறுவனர்களுக்கான பாதுகாப்பு தேடல் வசதி மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரில் நீட்டிப்பாக பயன்படுத்தக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.
பொது தேடியந்திர பிரிவில் மிகவும் தாமதமான வரவு என்றாலும் கூட, பிரான்ஸ்சில் இருந்து கூகுளுக்கு போட்டியாக உருவாகி இருப்பது குவான்ட்டை கவனிக்க வைத்துள்ளது. அது ஒரு பிரெஞ்சு தேடியந்திரம் மட்டும் அல்ல; ஓர் ஐரோப்பிய தேடியந்திரமும் கூட!
ஆனால் குவான்ட்டிற்கு முன்பே எக்ஸாலீட் பிரான்சில் இருந்து அறிமுகமானது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தேடியந்திர முகவரி>https://www.qwant.com
சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 6 - ஆதிகால கையேடு டி.எம்.ஓ.இசட்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
49 mins ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
25 days ago