2 லட்சம் மக்கள் திரண்ட ‘தமிழர் தெருவிழா’: கனடா நாட்டில் 5-வது ஆண்டாக மாபெரும் ஒன்றுகூடல்!

By ஆர்.சி.ஜெயந்தன்

கனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக கனடாவின் டோரண்டோவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் டோரண்டோ மாநகரின் பிராதான வீதியான மார்க்கம் வீதியின் இருபக்கமும் அடைத்து நடந்த இவ்விழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கனடா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இதனை கனடா நாட்டின் நாளிதழ்கள் ‘வரலாற்று நிகழ்வு’என்று வர்ணித்துள்ளன. விழாவில் கனடாவின் முதன்மை அரசியல் தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் கல்வியாளர்களும், கலைஞர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது சிறப்பான அம்சமாகும்.

உலக அரங்கில் தமிழர்களின் கலையும் கலாச்சாரமும்

தமிழர்களின் இருப்பினை கனடா தேசத்தின் மைய நீரோட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ‘தமிழர் தெருவிழா’. எதிர்காலத் தமிழ் சந்ததியினருக்கு ஒரு வலுவான அடித்தளத்தினை அமைக்க வேண்டிய கடமையை இந்த விழா ஆண்டுதோறும் செய்கிறது. கனடாவில் வசித்துவரும் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் ஆற்றலையும் சக கனடா வாசிகளுக்கு எடுத்துக்காட்டவும் தமிழ் சமூகம் கனடாவின் பல்கலாச்சாரத்தில் ஒன்றிவிட்ட சான்றை வெளிக்கொணரவும் இந்தக் கொண்டாட்டம் உதவுகிறது.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில், தமிழ் பாரம்பரிய நடனங்கள், இசை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலைகள் இடம்பெற்று முக்கியத்துவம் பெற்றன. அத்துடன் வேற்றின மக்களின் கலை நிகழ்ச்சிகளையும் காணக்கூடியதாக இருந்தது. கனடா போன்ற உலகம் வியக்கும் ஜனநாயகக் குடியரசு தேசத்தில் வாழும் மக்களுக்கு தமிழர்களின் கலையும் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தும் மாபெரும் விழாவாக ஆண்டுக்கு ஆண்டு இது வளர்ச்சி பெற்று வருகிறது.

2019-ல் சாதனை படைக்கும் கனடா வாழ் தமிழர்கள்

‘தமிழர் தெருவிழா’பெருமைப்படுவதற்குக் காரணமாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சாதனைகள் இவ்வருடம் அமைந்திருந்தன. கனடா நாட்டின் ஒன்ராறியோ மாகாணத்தின் பீல் பிராந்தியத்தின் போலீஸ் அதிபராக நிஷ் துரையப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவி வகிக்கும் முதல் தென் ஆசியாக்காரர் இவர்தான். வாராவாரம் பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்து மகிழும் ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் ‘அமேசிங் ரேஸ்’தொலைக்காட்சித் தொடரில் முதல் இடத்தில் இருப்பவர் ஒரு தமிழ் இளைஞர். பெயர் தினேஷ் நடராஜா.

பிரபல அமெரிக்க நடிகையும் எழுத்தாளருமான மிண்டி காலிங் ஹாலிவுட்டில் நெட்ஃபிலிக்சுக்காக தயாரிக்கும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிப்பதற்கு மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்னும் 17 வயது கனடிய தமிழ்ப் பெண் தேர்வாகியுள்ளார். இவர்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி வாழும் மக்களின் சாதனை முகங்களாகி இருக்கிறார்கள். இவைபோன்ற புலம்பெயர் தமிழ் மக்களின் சாதனைகள் தமிழர் தெருவிழாவை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது.

போரில் இறந்தவர்களின் அசலான பதிவு

சிவன் இளங்கோ தலைமையில் இவ்வருடம் நடந்த ‘தமிழர் தெருவிழா’ பல விதங்களில் முன்மாதிரியாக அமைந்திருந்தது. மனித உரிமைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இலங்கைப் போரில் இறந்தவர்களின் கணக்கெடுப்பு முயற்சி, உலக அளவில் கவனத்தைப் பெற்றது. விழாவில் அமைக்கப்பட்டிருந்த போரில் இறந்தவர்களின் கணக்கெடுப்பு மையத்துக்கு பலதரப்பான மக்களும் வந்து, இறந்து போனவர்களின் பெயர், வயது, தேதி , இடம் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மனித உரிமைத் தரவுகள் ஆய்வு மையம் (HRDAG) மேற்கொண்ட இந்த முயற்சியின் நோக்கம், 1983 – 2009 காலகட்டத்தில் போரில் இறந்தவர்களின் சரியான, நம்பிக்கையான கணக்கெடுப்பை உலக மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிப்பதுதான்.

இன்னொரு முக்கியமான செயல்பாடு தமிழரின் வரலாற்றை காலவரிசைப்படி காட்சிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடந்த தமிழறிவுப் போட்டியும் தமிழர் பண்பாட்டு ஊர்வலமும் மக்களால் உற்சாகத்தோடு வரவேற்கப்பட்டன. டோரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டுவதும் வெற்றிகரமாக நடந்தது. டோரண்டோ பல்கலைக்கழக நிறைவேற்று இயக்குநர் லிசா லெமன் மக்களின் நன்கொடை காசோலையை மேடையிலே பெற்றுக்கொண்டார்.

ஒரு காலத்தில் உலக நாடுகள் கைவிட்ட நிலையில் தங்கள் உடைமைகளை இழந்த ஈழமக்கள் தெருவில் நின்றனர். இன்று, கனடாவில் வேற்று இனத்தினர் வியக்கும் வண்ணம் தெருவிழா கொண்டாடுகின்றனர். இவர்களது அமோக வளர்ச்சி உலகத்தினரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதற்கிடையில் கனடா வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கனடா வாழ் தமிழர்கள் அன்புடன் வரவேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்